Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

திருத்தக்க தேவர் இயற்றிய
சீவகசிந்தாமணி - மூலமும்
பொ. வே. சோமசுந்தரனார் உரையும்
பாகம் 6 (பூமகள் இலம்பகம் 2327- 2377) &
(இலக்கணையார் இலம்பகம் 2378 - 2598)

cIvaka cintAmani - part 6 (verses 2327-2598)
of tiruttakka tEvar with commentaries
of M.P. cOmacuntaranAr
In tamil script, unicode/utf-8 format




    Acknowledgements:
    Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a soft copy of this work.
    Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

    © Project Madurai, 1998-2019.
    to preparation
    of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
    are
    http://www.projectmadurai.org/

திருத்தக்க தேவர் இயற்றிய
சீவகசிந்தாமணி - மூலமும் பொ. வே. சோமசுந்தரனார் உரையும்
பாகம் 6 (பூமகள் இலம்பகம் 2327- 2377) &
(இலக்கணையார் இலம்பகம் 2378 - 2598)

    Source:
    திருத்தக்க தேவர் இயற்றிய "சீவகசிந்தாமணி" மூலமும்
    புலவர் 'அரசு' பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார்
    ஆகியோர் எழுதிய உரையும்
    திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1961

    உள்ளடக்கம்
      பதிப்புரை
      அணிந்துரை
      நூலாசிரியர் வரலாறு
      I. கடவுள் வாழ்த்து, பதிகம் 1-29 (29)
      II. நூல்
      1. நாமகள் இலம்பகம் 30-408 (379)
      2. கோவிந்தையார் இலம்பகம் 409- 492 (84)
      3. காந்தருவதத்தையார் இலம்பகம் 493- 850 (358)
      4. குணமாலையார் இலம்பகம் 851- 1165 (315)
      5. பதுமையார் இலம்பகம் 1166- 1411
      6. கேமசரியார் இலம்பகம் 1412- 1556
      7. கனகமாலையார் இலம்பகம் 1557 - 1888
      8. விமலையார் இலம்பகம் 1889 - 1994
      9. சுரமஞ்சரியார் இலம்பகம் 1995 - 2101
      10. மண்மகள் இலம்பகம் 2102 - 2326
      11. பூமகள் இலம்பகம் 2327 - 2377
      12. இலக்கணையார் இலம்பகம் 2378 - 2598
      13. முத்தி இலம்பகம் 2599 - 3145
      செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை
      அருஞ்சொற்களின் அகரவரிசை
    -----------

    11. பூமகள் இலம்பகம் (2327-2377)

    கதைச் சுருக்கம்: இவ்வாறு பகைவரை வென்றுயர்ந்த சீவகன் முருகனைப் போன்று வாகைசூடித் தன் அரண்மனையிற் புகுந்தான். கட்டியங்காரன் மனைவிமாருள் ஒருத்தி கணவன் பட்டமையுணர்ந்து ஆருயிர் நீத்தனள். ஏனை மகளிர் சீவகனைக் காண அஞ்சினர். அவர்க்கெல்லாம் சீவகன் அபயமளித்துப் பெருநிதி வழங்கினன். நீவிர் விரும்பியவிடத்தே சென்று விரும்பிய வண்ணம் வாழ்மின் என்று விடுத்தனன். போரில் இறந்ததொழிந்த மறவர் மக்கட்கு வரிசை பல வழங்கினன். பின்னர்ச் சீவகன் துயில் கொண்டான். மறுநாள் சீவகன் நீத்தெழுந்தவுடன் மங்கல நீராடி அணிகலன் அணிந்து அருகன் திருக்கோயிலை வழிபட்டனன். பின்னர் அரிமான் சுமந்த அரசுகட்டிலேறி அழகுற வீற்றிருந்தனன். தோழரும் உறவினரும் பிறரும் அரண்மனையில் வந்து குழுமினர். சீவகனுக்கு நன்முழுத்தத்தே மணிமுடி கவிக்க எண்ணினர். சுதஞ்சணன் என்னுந் தேவன் வானின்றிழிந்து வந்தனன். நன்முழுத்தத்தில் சீவகனுக்கு மணிமுடி சூட்டி வாழ்த்திச் சென்றான்.

    கொற்ற வெண்குடை நிழற்ற அரியணைமிசை அரசுவீற்றிருந்த சீவகன், தன்னாட்டில் பதினாறாண்டு அரசிறை தவிர்த்தனன். இறைவன் கோயிலுக்கும் மறையோர்க்கும் கணி கட்கும் இறையிலியாக நன்னிலங்களை வழங்கினன். கட்டியங்காரனால் இன்னலுற்றோர்க்கெல்லாம் நிலமுதலிய ஈந்து இன்ப முறுவித்தான். நாட்டின்கண் பகையும் பசியுங் கெட்டன ; யாண்டும் மாந்தர் ஒருவனும் ஒருத்தியும் போன்று இன்புற்று வாழ்ந்தனர்.
    ------------

      2327. கண்ணாடி யன்ன கடிமார்பன் சிவந்து நீண்ட
      கண்ணாடி வென்று களங்கண்டு நியம முற்றிக்
      கண்ணாடி வண்டு பருகுங்கமழ் மாலை மூதூர்க்
      கண்ணாடி யானை யவர்கைதொழச் சென்று புக்கான்.

    பொருள் : கண்ணாடி அன்ன கடிமார்பன் - கண்ணாடி போன்ற வரைவினையுடைய மார்பனான சீவகன்; சிவந்து நீண்ட கண் ஆடி வென்று - சிவந்து நீண்ட கண்கள் எல்லோரிடமும் உலவி வென்றி கொண்டு; களம் கண்டு - போர்க்களத்தைப் பார்வையிட்டு; நியமம் முற்றி - களவேள்வி முதலியன முடித்து; கள்நாடி வண்டு பருகும் கமழ் மாலை - தேனையாராய்ந்து வண்டுகள் பருகும் மணங்கமழ் மாலை தூக்கப் பெற்ற; மூதூர்க்கண் ஆடு யானையவர் - பழம்பதியிலே வெற்றியையுடைய யானையையுடையவர்; கைதொழச் சென்று புக்கான் - கைகுவித்து வணங்கப் போய்ச் சேர்ந்தான்.

    விளக்கம் : கண்ணாடி, தன்னைச் சேர்ந்தவர் செயலாலே இருக்கு மாறுபோல, இம் மார்பும் தன்னைச் சேர்ந்த மகளிர் செயலாயே இருத்தலின், கண்ணாடி அன்ன மார்பன் என்று இன்பச் சிறப்புக் கூறினார்; கையும் காலும் தூக்கத் தூக்கும் - ஆடிப்பாவை போல - மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே என்றாற்போல; கண்ணாடிபோல முதுகு காட்டாத மார்பன் என்பாரும் உளர்; பகைவர் வீரத்தின் அழகை விளக்கும் மார்புமாம். ( 1 )
    ------------

      2328. கூடார் புலியு முழைக்கோளரி யேறு மன்ன
      கூடார் மெலியக் கொலைவேனினைந் தானை யேத்திக்
      கூடார மாலைக் குவிமென்முலைக் கோதை நல்லார்
      கூடார மாட மயில்போலக் குழீயி னாரே.

    பொருள் : கூடுஆர் புலியும் முழைக் கோளரி ஏறும் அன்ன - கூட்டிற் பொருந்திய புலியும் குகையில் விளங்கிய சிங்க வேறும் போன்ற; கூடார் மெலியக் கொலைவேல் நினைந்தானை ஏத்தி - பகைவர் தேயக் கொல்லுதற்குரிய வேலை ஏந்த எண்ணிய சீவகனைப் பாராட்டி; கூடு ஆரம் மாலைக் குவி மென்முலைக் கோதை நல்லார் - பொருந்திய முத்துமாலையை அணிந்த குவிந்த மென்முலையையும் கோதையையும் உடைய மகளிர்; கூடாரம் மாடம் மயில்போலக் குழீஇயினார் - கூடாங்களிலும் மாடங்களிலும் மயில்போலத் திரண்டனர்.

    விளக்கம் : கூட்டுப் புலியும் முழைக் கோளரியும் போன்ற பகைவர் என்றது சூரபன்மனையும் ஒழிந்த அவுணரையும் என்றும், வேல் நினைந்தான் முருகன் என்றும், ஈண்டு அம் முருகனைப் போன்ற சீவகனைக் குறிப்பதாகவும் கூறுவர் நச்சினார்க்கினியர். இவ்வுவமை கட்டியங்காரன் முதலியோர்க்குத் தகாதென்றெண்ணி மேலும், முருகன் என்று சீவகனுக்கு ஒருபெயர் கூறினார், திருமால் போந்தான் (சீவக. 2369) என்று மேலும் கூறுவர் என்பர். கூடாரம் - கூடகாரம்; நெற்கூடுகள். ( 2 )
    ------------

      வேறு
      2329. மாலைச் செற்றான் மக்களொ டெல்லா முடனேயிம்
      மாலைச் செற்றான் வைந்நுனை யம்பின் னிவனென்பார்
      மாலைக் கின்றே மாய்ந்தது மாயாப் பழியென்பார்
      மாலைக் கேற்ற வார்குழல் வேய்த்தோண் மடநல்லார்.

    பொருள் : மாலைச் செற்றான் மக்களொடு எல்லாம் - சச்சந்தனைக் கொன்ற கட்டியங்காரனையும் அவன் மக்களையும் எல்லோரையும்; உடனே இம்மாலை வைந்நுனை அம்பின் இவன் செற்றான் என்பார் - சேர இம்மாலைக் காலத்தே கூரிய முனையையுடைய அம்பினாலே இவன் கொன்றான் என்பார்; இன்றே மாலைக்கு மாயாப் பழி மாய்ந்தது என்பார். இன்றைக்கே குணமாலைக்கு இதுவரை மாயாத பழி மாய்ந்தது என்பார்; மாலைக்கு ஏற்ற வார்குழல் வேய்த்தோள் மடநல்லார் - மலர்மாலைக்குத் தகுந்த நீண்ட குழலையும் வேயனைய தோளையும் உடைய மங்கையர்.

    விளக்கம் : நல்லார் என்பார் என்க. மால்; சச்சந்தன். குணமாலைக்குற்ற பழி சீவகன் அவளைத் தீண்டியதனால் - துன்பமுற்றான் என்பது. ( 3 )
    ------------

      2330. நாகந் நெற்றி நன்மணி சிந்தும் மருவிபோ
      னாகந் நெற்றிந் நன்மணி யோடை நறவிம்மு
      நாகந் நெற்றிந் நன்மலர் சிந்நி நளிர்செம்பொ
      னாகந் நெற்றி மங்கைய ரொத்தார் மடநல்லார்.

    பொருள் : நாகம் நெற்றி நன்மணி சிந்தும் அருவிபோல் - மலையின் உச்சியிலிருந்து அழகிய மணிகளைச் சிந்தி வீழும் அருவியைப்போல; நன்மணி ஓடை நாகம் நெற்றி - அழகிய மணிகளிழைத்த பட்டத்தையுடைய யானையின் நெற்றியிலே; நறவு விம்மும் நாகம் நெற்றி நன்மலர் சிந்தி - தேன் சொரியும் சுரபுன்னையின் உச்சியிலிருந்த அழகிய மலர்களைச் சிந்துவதால்; மடநல்லார் - மாடங்களின்மேல் நின்ற மங்கையர்; நளிர் செம்பொன் நாகம் நெற்றி மங்கையர் ஒத்தார் - விளங்கும் பொன்னிரைந்த சுவர்க்கத்திலிருந்து மலரைச் சொரிகின்ற மங்கையரைப் போன்றனர்.

    விளக்கம் : நாகம் நான்கும் நிரலே, மலை, யானை, சுரபுன்னை, வானுலகம் என்க. ஓடை - முகபடாம். நற - தேன். நன்மலர் சிந்தி என்புழி செய்தெனெச்சத்தைச் செய என்னெச்சமாக்குக. ( 4 )
    ------------

      2331. கோடிக் கொடுங் கூம்புயர் நாவாய் நெடுமாடங்
      கோடிப் பட்டிற் கொள்கொடி கூடப் புனைவாருங்
      கோடித் தானைக் கொற்றவற் காண்பா னிழைமின்னக்
      கோடிச் செம்பொற் கொம்பரின் முன்முன் றொழுவாரும்.

    பொருள் : கோள் திக்கு ஓடும் கூம்பு உயர் நாவாய் - கோள்களாலே திக்குகளில் ஓடுகின்ற, கூம்பு உயர்ந்த மரக்கலம் தந்த; கோடிப் பட்டின் கொள்கொடி நெடுமாடம் கூடப் புனைவாரும் - புதிய பட்டினால் தைத்த கொடிகளை மாடங்களிலே சேரக் கட்டுவாரும்; கோடித்தானைக் கொற்றவற் காண்பான் - கோடிப் படையையுடைய அரசனைக் காண்பதற்கு; செம்பொன் கொம்பரின் கோடி இழை மின்ன - பொற்கொம்புபோல வளைந்து பூண்ஒளிர; முன்முன் தொழுவாரும் -முன்முன் வந்து தொழுவாருமாயினர்.

    விளக்கம் : இருபது பட்டிற்குக் கோடி என்பதைப் பெயராக்கியும் உரைப்பர். கோடிக்கோடும் + கோள்திக்கு ஓடும் எனக் கண்ணழிக்க. கூம்பு பாய்மரம். நாவாய் - ஓடம். கோடித்தானை என்புழிக் கோடி - எண்ணுப் பெயர்; கொம்பரிற் கோடி என மாறுக, கோடி - வளைந்து.
    ------------

      2332. அம்புகை வல்லில் லார்கழன் மள்ளர் திறலேத்த
      வம்புகைக் கொண்டா லாரிவற் கீண்டு நிகராவா
      ரம்புகை யார்ந்த வந்துகி லல்குல் லவிர்கோதா
      யம்புகைக் காணா மையனைக் கையிற் றொழுதென்பார்.

    பொருள் : அம்பு உகை வல்வில் ஆர்கழல் மள்ளர் திறல் ஏத்த - அம்பைச் செலுத்தும் வலிய வில்லேந்திய, செறிந்த கழலையுடைய வீரர்கள் தன் ஆற்றலைப் புகழ; அம்பு கைக்கொண்டால் ஈண்டு இவற்கு நிகராவார் ஆர் - உலகைக் கைபற்றினால் இங்கு இவனுக்குச் சமமானவர் யார்; அம் புகை ஆர்ந்த அம் துகில் அல்குல் அவிர் கோதாய்! - அழகிய புகை ஊட்டப் பெற்ற துகிலை அணிந்த அல்குலையுடைய கோதையே!; ஐயனைக் கையால் தொழுது - சீவகனைக் கையால் தொழுததால்; அம்பு கைக் காணாம் என்பார் - வளையைக் கையில் காணோம் என்பார்.

    விளக்கம் : இரண்டாம் அடியில் அம்பு என்பது நீர். அது நீர் சூழ்ந்த உலகிற்கு ஆகுபெயராயிற்று. உகை - உகைக்கின்ற; செலுத்துகின்ற மள்ளர் - வீரர். அம்புகை - அழகிய புகை. ஈற்றடியில் அம்பு - வளையல். ( 6 )
    ------------

      2333. மைத்துன நீண்ட மாமணி மாடம் மிசையேறி
      மைத்துன நீண்ட வாட்டடங் கண்ணார் மலர்தூவ
      மைத்துன மன்னர் மால்களி றேறிப் புடைசூழ
      மைத்துன நீண்ட மாமணி வண்ண னவனொத்தான்.

    பொருள் : மைதுன நீண்ட மாமணி மாடம் மிசை ஏறி - முகில் நெருங்க உயர்ந்த பெரிய மணிமாடங்களின்மேல் ஏறி ; வாள் மைத்து உன் நீண்ட தடங்கண்ணார் மலர் தூவ - வாள் ஒளி மழுங்கி நினைக்கும்படி நீண்ட பெரிய கண்களையுடைய மகளிர் மலர் சொரிய; மைத்துன மன்னர் மால்களிறு ஏறிப் புடைசூழ - மைத்துன வேந்தர்கள் பெரிய களிறுகளில் ஏறி அருகிற் சூழ; மை துன நீண்ட மாமணி வண்ணன் அவன் ஒத்தான் - கருமை பொருந்த உயர்ந்த நீலமணி வண்ணனைச் சீவகன் ஒத்தான்.

    (விளக்கம்.) துன்ன என்பன துன என்றும், உன்ன என்பது உன என்றும் வந்தமை விகாரங்கள். மைத்தல் - ஒளி கெடுதல்; மைம் மைப்பினன்று குருடு (பழ. 188) என்றாற் போல. மணி வண்ணன் : திருமால். ( 7 )
    ------------

      வேறு
      2334. ஊது வண்டரற் றும்முயர் தாமரைப்
      போது பூங்கழு நீரொடு பூத்துடன்
      வீதி மல்கின போன்மிளிர் வேற்கணு
      மாத ரார்முகப் பூவு மலர்ந்தவே.

    பொருள் : ஊது வண்டு அரற்றும் உயர் தாமரைப் போது - தாதை ஊதுகின்ற வண்டுகள் முரலும் உயர்ந்த தாமரை அரும்புகள்; பூங்கழுநீரொடு பூத்து - அழகிய கழுநீருடன் மலர்ந்து; உடன் வீதி மல்கினபோல் - சேர. தெருவெங்கும் நிறைந்தன போல; மாதரார் முகப்பூவும் மிளிர் வேல்கணும் மலர்ந்த - பெண்களின் முகப்பொலிவும் விளங்கும் வேலனைய கண்களும் பரந்தன.

    விளக்கம் : தாதூதுவண்டென்க. கழுநீர் - ஒரு நீர்ப்பூ. முகப்பூ - முகப்பொலிவு. தாமரைப்பூ மகளிர் முகத்திற்கும் கழுநீர் கண்களுக்கும் உவமை. ( 8 )
    ------------

      2335. வீணை வித்தகன் வேந்தடு வீங்குதோள்
      காணுங் காரிகை யார்கதிர் வெம்முலைப்
      பூணு மாரமு மீன்றுபொன் பூத்தலர்ந்
      தியாண ரூரம ராபதி போன்றதே.

    பொருள் : வீணை வித்தகன் வேந்து அடுவீங்கு தோள் - யாழ் வல்லனாகிய சீவகனின், பகை மன்னரை வெல்லும் பருத்த தோள்களை; காணும் காரிகையார் கதிர் வெம்முலைப் பூணும் ஆரமும் ஈன்று - காணும் மகளிரையும் ஒளிவிடும் வெம்முலையில் அவர்கள் பூண்ட பூணையும் ஆரத்தையும் ஈன்று; பொன் பூத்து அலர்ந்து - வேய்ந்த பொன்னால் அழகுற்றுப் பரத்தலின் ; யாணரூர் அமராபதி போன்றது - புத்தழகு பெற்ற இராசமாபுரம் அமராவதியைப் போன்றது.

    விளக்கம் : அமராவதி : வானவர் நாட்டின் தலைநகர். வீணை வித்தகன் என்றது சீவகனை. வேந்தடுதோள், வீங்குதோள் என இயைக்க. காரிகையார் - அழகியர். யாணர்ஊர் - புதுவருவாயினையுடைய இராசமாபுரம். ( 9 )
    ------------

      2336. தேம்பெய் கற்பகத் தாரவன் சேர்தலும்
      பூம்பெய் கோதைப் புரிசைக் குழாநல
      மோம்பு திங்க ளுலந்து சுடர்கண்ட
      வாம்ப லாய்மலர்க் காடொத் தழிந்ததே.

    பொருள் : தேன்பெய் கற்பகத் தாரவன் சேர்தலும் - தேன் சொரியும் கற்பக மாலையான் அரண்மனையை அடைந்தவுடன்; பூபெய் கோதைப் புரிசைக்குழாம் நலம் - மலர் பெய்த மாலை அணிந்த, மதிலிடத்திருந்த மகளிரின் அழகு; ஓம்பு திங்கள் உலந்து - இரவை ஓம்பிய திங்கள் மறைந்து; சுடர்கண்ட ஆம்பல் ஆய்மலர்க் காடு ஒத்து அழிந்தது - ஞாயிற்றைக் கண்ட ஆம்பலின் குவிந்த மலர்க் காட்டைப் போன்று கெட்டது.

    விளக்கம் : தாரவன் : சீவகன், பூங்கோதை, பெய்கோதை எனத் தனித்தனி கூட்டுக. புரிசை - மதில், சுடர் - சிறப்பால் ஞாயிற்றை உணர்த்திற்று. ( 10 )
    ------------

      வேறு
      2337. மாகம் முழக்கின் மணிநாகம் பதைப்ப வேபோ
      லாகம் மறவ ரகன்கோயில்புக் கம்பொன் மாலைத்
      தோகைம் மடவார் துவர்வாய் துடித் தஞ்ச வெம்பா
      வேகம் முடைத்தாய் விழியாத்தொழித் தேகுகென்றார்.

    பொருள் : மறவர் அகன் கோயில் புக்கு - அப்போது வீரர்கள் பெரிய அரண்மனையிலே நுழைந்து; மாகம் முழக்கின் மணிநாகம் பதைப்பவே போல் ஆக - முகில் முழக்கினால் மணியையுடைய பாம்புகள் துடிப்பன போல் ஆம்படி; அம் பொன் மாலைத் தோகை மடவார் துவர்வாய் துடித்து வெம்பா அஞ்ச - அழகிய பொன்மாலை அணிந்த மயிலனைய மங்கையர், தம் சிவந்த வாய் துடித்து வெம்பி நடுங்க; வேகம் உடைத்தாய் விழியா - விரைவுடனே விழித்துப் பார்த்து; தொழித்து ஏகுக என்றார் - சினந்து இவ்விடத்தினின்றும் ஏகுக என்றனர்.

    விளக்கம் : அழாமற் பொருமுதலின் வாய்துடித்தது. மாகம் - முகிலுக்கு ஆகுபெயர்; மணிணையுடைய பாம்பென்க. ஆக மறவர், ஆகம்மறவர் என வண்ணத்தால் மகரவொற்று விரிந்து நின்றது, தோகை - மயில் : ஆகுபெயர். வெம்பா - வெம்பி. விழியா - விழித்து. ( 11 )
    ------------

      2338. செய்பாவை யன்னார் சிலம்பார்க்கு மென் சீற டியார்
      செய்பூந் தவிசின் மிசையல்லது சேற லில்லார்
      மையார்ந்த கண்ணீர் மணிப்பூண்முலை பாய விம்மா
      வெய்தா மடவார் வெறுவெந்நிலத் தேகி னாரே.

    பொருள் : செய் பாவை அன்னார் - செய்த பாவை போல் வார்; சிலம்பு ஆர்க்கும் மென் சீறடியார் - சிலம்புகள் ஒலிக்கும் மெல்லிய சிற்றடியார்; செய் பூந்தவிசின் மிசை அல்லது சேறல் இல்லார் - புனையப் பெற்ற மலரணையின் மேலன்றிச் சென்றறியாதவர் ஆகிய; மடவார் - பெண்கள்; மைஆர்ந்த கண்ணீர் மணிப் பூண்முலை பாய வெய்துஆ விம்மா - மை தோய்ந்த கண்களிலிருந்து பெருகும் நீர் மணிக்கலன் அணிந்த முலைகளிற் பாய வெய்தாக அழுது; வெறுவெந் நிலத்து ஏகினார் - வெறுமையான கொடிய தரையிலே நடந்து சென்றனர்.

    விளக்கம் : செய்பாவை : வினைத்தொகை. சிற்பிகளாலியற்றப் பட்ட பாவை என்க; திருமகள் என்பர் நச்சினார்க்கினியர். விம்மா - விம்மி. ( 12 )
    ------------

      2339. நெருப்புற்ற போல நிலமோந்துழிச் செய்ய வாகிப்
      பருக்கென்ற கோல மரற்பல்பழம் போன்று கொப்புள்
      வருத்தம் மிழற்றிப் பசும்பொற்சிலம் போசை செய்யச்
      செருக்கற்ற பஞ்சி மலர்ச்சீறடி நோவச் சென்றார்.

    பொருள் : நிலம் மோந்துழி நெருப்பு உற்றபோலச் செய்ய ஆகி - (அப்போது) தரையிற் பதிந்தபோது நெருப்பை மிதித்தன போலச் சிவந்தன வாகுதலால்; செருக்கு அற்ற மலர் பஞ்சி சீறடி - வாடின இலவமலரைப்போன்ற பஞ்சியூட்டின சிற்றடிகளில்; பருக்கென்ற கோல மரல் பல் பழம் போன்று - பருத்துக் காட்டின அழகிய மரலின் பல பழங்களைப்போன்று; கொப்புள் வருத்த - கொப்புளங்கள் வருத்தலால்; மிழற்றிப் பசும்பொன் சிலம்பு ஓசை செய்ய - அவ்வருத்தத்தைக் கூறிப் பொற்சிலம்பு ஒலி செய்ய; நோவச் சென்றார் - அவ்வடி நோம்படி சென்றனர்.

    விளக்கம் : பருக்கென்ற எனவே கொப்புளித்தன ஆயின. நிலமோந்துழி - நிலத்திற் பட்டவிடத்து. நெருப்புற்றபோலச் செய்யவாகி என இயைக்க. மரலினது பழம் கொப்புளுக்குவமை, மரற்பழுத்தன்ன மறுகுநீர் மொக்குள் (பொருந, 45) என்றார் பிறரும். செருக்கற்ற என்றது வாடின என்றவாறு.
    ------------

      2340. பொற்பூண் சுமந்து பொருகோட்டை யழித்து வெம்போர்
      கற்பா னெழுந்த முலையார்களங் கண்டு நீங்கி
      நற்பூ ணணிந்த முலையார்நிலை கால்ச ரிந்து
      நெற்றிந் நிறுத்து வடம்வைத்த முலையி னாரும்.

    பொருள் : பொன் பூண் சுமந்து பொரு கோட்டை அழித்து - பொன் அணி சுமந்து (யானையின்) பொருதற்குரிய கொம்பைக் கெடுத்து; வெம்போர் கற்பான் எழுந்த முலையார் - கொடிய போரைக் கற்பனவாக எழுந்த முலையினாரும்; களம் கண்டு நீங்கி நற்பூண் அணிந்த முலையார் - போர்க்களத்திலே போர்செய்து நீங்கிப் பேரணி புனைந்த முலையாரும்; நிலைகால் சரிந்து நெற்றி நிறுத்து வடம் வைத்த முலையினாரும் - நிலை தளர்ந்து உச்சியிலே நிறுத்திய வடம் கிடந்த முலையாரும்,

    விளக்கம் : அழித்தென்பது, எதிர்காலம் நோக்கிய இறந்த காலச் சொல்; அழித்துப் கற்பான் என்க. இப்பாட்டுக் குளகம்.
    ------------

      2341. செங்காற் குழவி தழீயினார்திங்கள் புக்க நீரா
      ரங்கான் முலையி னரும்பால்வரப் பாயினாரும்
      பைங்காசு முத்தும் பவழத்தொடு பைம்பொ னார்ந்த
      பொங்கார் முலையார் திருமுற்ற நிறைந்து புக்கார்.

    பொருள் : செங்கால் குழவி தழீஇயினார் -சிவந்த அடிகளையுடைய குழவிகளைத் தழுவியவரும்; திங்கள் புக்க நீரார் - திங்கள் கடந்த சூலுடையாரும்; அம் கான் முலையின் அரும்பால் வரப் பாயினாரும் - அழகிய மணமுடைய முலையிலே அரிய பால் வரும் படி சூல் முற்றியவருமாகிய; பைங்காசும் முத்தும் பவழத்தொடு பைம்பொன் ஆர்ந்த பொங்குஆர் முலையார் - புதிய காசும் முத்தும் பவழமும் பொன்னணியும் நிறைந்த பருத்த முலையுடைய மகளிர்; திருமுற்றம் நிறைந்து புக்கார் - முற்றத்தே நிறையச் சென்றனர்.

    விளக்கம் : நிறைந்து - நிறைய. சீவகன், இவர் பெறும் புதல்வர் அரசகுல மன்மையின், தன் குலத்திற்குப் பகையன்மையுணர்ந்து, அருளால் தீங்கு செய்யாது அவரைப் போக விடுகின்றானென்று மேற் கூறுகின்றார். கட்டியங்காரன் அருளின்மையாற் பகையென்றும், பெண் கொலை புரிந்து குலத்தெடுங்கோறல் (சீவக.261) எண்ணினான் என்றும் ஆண்டுக் கூறினார். எதிர் வந்து பொருதலின், முன்பு அவன் புதல்வரைக் கொன்றான் என்க.
    ------------

      2342. பெய்யார் முகிலிற் பிறழ்பூங்கொடி மின்னின் மின்னா
      நெய்யார்ந்த கூந்த னிழற்பொன்னரி மாலை சோரக்
      கையார் வளையார் புலிகண்ணுறக் கண்டு சோரா
      நையாத் துயரா நடுங்கும்பிணை மான்க ளொத்தார்.

    பொருள் : பெய்ஆர் முகிலின் பிறழ் பூங்கொடி மின்னின் மின்னா - பெய்தல் நிறைந்த முகிலிலே பிறழும் அழகிய கொடி மின்போல மின்னி; நெய் ஆர்ந்த கூந்தல் நிழல் பொன் அரிமலை சோர - நெய்ப்புப் பொருந்திய கூந்தலிலிருந்து ஒளிவிடும் பொன்னரிமாலை சோரும்படி; கைஆர் வளையார் - கையிற் பொருந்திய வளையினாராகிய அம் மகளிர்; நையாத் துயராச் சோரா - நைந்து துயருற்றுச் சோர்ந்து; புலி கண்ணுறக் கண்டு நடுங்கும் - புலியைக் கண்ணிற்கண்டு நடுங்குகின்ற; பிணை மான்கள் ஒத்தார் - பெண்மான்களைப் போன்றனர்.

    விளக்கம் : பெய் - பெய்தல். பூங்கொடிமின் - அழகிய கொடி மின்னல். மின்னா - மின்னி. பொன்னரிமாலை - ஒரு கூந்தலணி. வளையார் : மகளிர். சோரா - சோர்ந்து. நையா - நைந்து, துயரா - துயர்உற்று. பிணைமான் - பெண்மான். சீவகனுக்குப் புலியும் மகளிர்க்கு மானும் உவமைகள். (16)
    ------------

      2343. வட்டம் மலர்த்தா ரவனாலருள் பெற்று வான்பொற்
      பட்டம் மணிந்தா ளிவர்தங்களுள் யாவ னென்ன
      மட்டா ரலங்க லவன்மக்களுந் தானு மாதோ
      பட்டா ரமருட் பசும்பொன்முடி சூழ வென்றார்.

    பொருள் : வட்டம் மலர்த்தாரவனால் அருள் பெற்று - வட்டமாகிய தாரை அணிந்த கட்டியங்காரனாலே அருளைப் பெற்று; வான் பொன் பட்டம் அணிந்தாள் - சிறந்த பட்டம் அணிந்தவள்; இவர் தங்களுள் யாவள் என்ன - இவர்களிலே எவள் என்று (சீவகன் தன் பணியாளரை) வினவ; (நீ கேட்டவளுக்குக் களத்தின் செய்தி கூறுகின்றவர்); மட்டுஆர் அலங்கலவன் மக்களும் தானும் - தேனார்ந்த மாலையவனின் மக்களும் தானுமாக; பசும்பொன் முடிசூழ அமருள் பட்டார் என்றார் - பசிய பொன்முடி சூழப் போரிலே பட்டனர் என்று கூறினர்.

    விளக்கம் : அடுத்த செய்யுளும் இஃதும் ஒருதொடர். வட்டத்தார். மலர்த்தார் என இயைக்க. தாரவன் : கட்டியங்காரன். பட்டம் அணிந்தாள் - பட்டத்தரசி, என்று சீவகன் வினவ என்க. களத்தின் செய்தி அவட்குக் கூறுகின்றுவர் பட்டார் என்றார் என்க. ( 17 )
    ------------

      2344. மாலே றனையா னொடுமக்களுக் கஃதோ வென்னா
      வேலேறு பெற்ற பிணையின்னனி மாழ்கி வீழ்ந்து
      சேலேறு சின்னீ ரிடைச்செல்வன போன்று செங்கண்
      மேலேறி மூழ்கிப் பிறழ்ந்தாழ்ந்த விறந்து பட்டாள்.

    பொருள் : மால்ஏறு அனையானொடு மக்களுக்கு அஃதோ என்னா - மயங்கிய ஏறுபோன்றானுக்கும் அவன் மக்களுக்கும் அஃதோ நோர்ந்தது என்று; வேல் ஏறு பெற்ற பிணையின் நனி மாழ்கி வீழ்ந்து - வேலால் தாக்கப்பெற்ற பெண்மான்போல மிகவும் வருந்தி வீழ்ந்து; சேல் ஏறு சின்னீரிடைச் செல்வன போன்று - சேல்மீன் வற்றிய சின்னீரிலே (கடிதிற் செல்லாமல்) மெல்லச் செல்வனபோல; செங்கண் மேல் ஏறி மூழ்கிப் பிறழ்ந்து ஆழ்ந்த - சிவந்த கண்கள் மெல்ல மேலே ஏறி மறிந்து கீழ்மேலாய் வீழ்ந்தன; இறந்து பட்டாள் - உடனே அவளும் இறந்து விட்டாள்.

    விளக்கம் : யாவள் என்று வினாவ இறந்து பட்டாள் என்று விடையிறுத்தனர். அஃதோ என்றது. மன்னர் தீ ஈண்டு தம் கிளையோடு எரித்திடும் (சீவக. 250) என்று அமைச்சர் கூற, அவன் கேளாதிருந்தமை தான் கேட்டிருத்தலின், அது பின்பு பயந்தபடியோ என்றான். மால் - பெருமையுமாம். ( 18 )
    ------------

      2345. ஐவா யரவி னவிராரழல் போன்று சீறி
      வெய்யோ னுயிர்ப்பின் விடுத்தேனென் வெகுளி வெந்தீ
      மையா ரணல மணிநாகங் கலுழன் வாய்ப்பட்
      டுய்யா வெனநீ ருடன்றுள்ள முருகல் வேண்டா.

    பொருள் : ஐவாய் அரவின் அவிர் ஆரழல் போன்று - ஐந்தலை நாகத்தின் விளங்கும் நிறைந்த நஞ்சுபோல; சீறி வெய்யோன் உயிர்ப்பின் என் வெகுளி வெந்தீ விடுத்தேன் - (யானும்) முதலிற் சீறிக் கட்டியங்காரன் இறந்த பின்னர் என் சீற்றமாகிய தீயையும் போகவிட்டேன்; மை ஆர் அணல மணி நாகம் கலுழன் வாய்ப் பட்டு உய்யா என - கருமை நிறைந்த கழுத்தையுடைய, மணியுடைய பாம்பு கலுழனின் வாய்ப்பட்டுப் பிழையாதன போன்று; நீர் உடன்று உள்ளம் உருக வேண்டா - (நாமும் இனி உய்ய மாட்டோம் என்று) நீர் வருந்தி மனம் உருகுதல் வேண்டா.

    விளக்கம் : பாம்பினது நஞ்சு ஒன்றற்கு உயிருள்ளளவும் வெகுண்டு, அவ்வுயிர் போய பின்பு அவ் வெகுட்சி நீங்குமாறுபோல, யானும் கட்டியங்காரன் உயிர்போமளவும் வெகுண்டு, அவனுயீர் போய பின்னர் அவ் வெகுளியை விட்டேன் என்றாள்.
    ------------

      2346. மண்கேழ் மணியி னுழையுந்துகி னூலின் வாய்த்த
      நுண்கேழ் நுசுப்பின் மடவீர்நம்மை நோவ செய்யே
      னொண்கேழ்க் கழுநீ ரொளிமுத்த முமிழ்வ தேபோற்
      பண்கேழ் மொழியீர் நெடுங்கண்பனி வீழ்த்தல் வேண்டா.

    பொருள் : துகில் நுழையும் மண்கேழ் மணியின் - ஆடையினுள்ளே மறையும் தூய ஒளிபொருந்திய மணிபோன்ற; நூலின் வாய்த்த நுண்கேழ் நுசுப்பின் மடவீர்! - நூலினும் பொருந்திய நுண்ணிய நிறமுடைய இடையினைக்கொண்ட மங்கையரே! நும்மை நோவ செய்யேன் - யான் நும்மை வருந்துவன செய்யேன். ஒண்கேழ் கழுநீர் ஒளி முத்தம் உமிழ்வதேபோல் - (இனி) ஒள்ளிய நிறமுடைய கழுநீர்மலர் ஒளியையுடைய முத்துக்களைச் சொரிதல் போல; பண்கேழ் மொழியீர்! - இசைபோல விளங்கும் மொழியினீர்!; நெடுங்கண் பனி வீழ்த்தல் வேண்டா - நீண்ட கண்கள் பனித்துளியைச் சிந்துதல் வேண்டா.

    விளக்கம் : மண் - மண்ணுதல்; கழுவுதல், கேழ் - ஒளி. ஆடை போர்த்து நின்றமையால் துகிலின் நுழையும் மண்கேழ் மணியின் மடவீர் என்றான். துகிலின் நுழையும் மணியின் மடவீர் என்க. நோவ : பலவறிசொல். கழுநீர் - கண்ணுக்கும், முத்தம் - கண்ணீர்த்துளிக்கும் உவமை. ( 20 )
    ------------

      2347. என்னுங்கட் குள்ள மிலங்கீர்வளைக் கையி னீரே
      மன்னிங்கு வாழ்வு தருதும்மவற் றானும் வாழ்மின்
      பொன்னிங்குக் கொண்டு புறம்போகியும் வாழ்மின்னென்றான்
      வின்னுங்க வீங்கி விழுக்கந்தென நீண்ட தோளான்.

    பொருள் : இலங்கு ஈர்வளைக் கையினீரே! - விளங்கும், அறுக்கப்பட்ட வளையணிந்த கையை உடையீர்; மன் இங்கு வாழ்வு தருதும் - நும் மன்னன் நுமக்குத் தந்த வாழ்வுக்குரிய பொருளை யாமும் இங்கு நல்குவோம்; அவற்றானும் வாழ்மின் - அவற்றைக்கொண்டு ஈண்டிருந்தும் உயிர் வாழ்மின்; பொன் இங்குக் கொண்டு புறம்போகியும் வாழ்மின் உங்கட்கு உள்ளம் என்? என்றான் - பொன்னை இங்கிருந்து கொண்டு சென்று சென்று வெளியில் நுமக்கேற்ற இடங்களிலும் வாழுங்கோள்; உங்கள் கருத்து என்ன? என்றான்; வில்நுங்க வீங்கி விழுக் கந்து என நீண்ட தோளான் - வில்லை வலிக்கப் பருத்துச் சிறந்த தூண் என்னுமாறு நீண்ட தோளையுடையான்.

    விளக்கம் : வாழ்வு - வாழ்தற்குரிய பொருள். மன் என்றது கட்டியங்காரனை. இங்கு மன் வாழ்வு தருதும் என மாறுக. மன்தந்த பொருள் என்பது கருத்து. இங்குப் பொன்கொண்டு என மாறுக. (21)
    ------------

      2348. தீத்தும்மும் வேலான் றிருவாய்மொழி வான்மு ழக்கம்
      வாய்த்தங்குக் கேட்டு மடமஞ்ஞைக் குழாத்தி னேகிக்
      காய்த்தெங்கு சூழ்ந்த கரும்பார்தம் பதிகள் புக்கார்
      சேய்ச்செந் தவிசி நெருப்பென்றெழுஞ் சீற டியார்.

    பொருள் : தீத் தும்மும் வேலான் திருவாய் மொழி - தீயைச் சொரியும் வேலானுடைய அழகிய வாய்மொழியாகிய; வான் முழக்கம் அங்கு வாய்த்துக் கேட்டு - முகில் முழக்கத்தை அவ்விடத்தே வாய்ப்பக் கேட்டு; சேய்ச் செந்தவிசு நெருப்பென்று எழும் சீறடியார் - மிகச் சிவந்த இருக்கையையும் நெருப்பு என்று நீங்கும் சிற்றடியினார்; மடமஞ்ஞைக் குழாத்தின் ஏகி - இளமயிற் குழுவைப்போலச் சென்று; காய்த் தெங்கு சூழ்ந்த கரும்பு ஆர்தம் பதிகள் புக்கார் - காய்த்த தென்னை சூழ்ந்தனவும், கரும்பு நிறைந்தனவுமான தங்கள் நகரங்களை அடைந்தனர்.

    விளக்கம் : மயில் மழைக்கு மகிழ்தலின் மயில்போல் என்றார். தும்மும் என்றது - காலும் என்பதுபட நின்றது. வேலான் : சீவகன். வாய்த்து - வாய்ப்ப. கேட்ட மஞ்ஞை என இயைப்பினுமாம் ( 22 )
    ------------

      2349. காதார் குழையுங் கடற்சங்கமுங் குங்கு மமும்
      போதா ரலங்கற் பொறையும்பொறை யென்று நீக்கித்
      தாதார் குவளைத் தடங்கண்முத் துருட்டி விம்மா
      மாதார் மயிலன் னவர்சண்பகச் சாம்பலொத்தார்.

    பொருள் : மாது ஆர் மயில் அன்னவர் - காதல் நிறைந்த மயிலைப்போன்றவர்; காதுஆர் குழையும் - காதிலணிந்த குழையையும்; கடல் சங்கமும் - கடலிற் கிடைத்த சங்கினால் ஆகிய அணியையும்; குங்குமமும் - குங்குமத்தையும்; போது ஆர் அலங்கல் பொறையும் - மலராலாகிய மாலைச் சுமையையும்; பொறை என்று நீக்கி - சுமை என்று களைந்துவிட்டு; தாது ஆர் குவளைத் தடங்கண் முத்து உருட்டி விம்மா - தேன் பொருந்திய குவளைபோன்ற தடங்கண்களினின்றும் முத்தனைய நீர்த்துளியை உருட்டி விம்மி; சண்பகச் சாம்பல் ஒத்தார் - சண்பகப்பூ வாடலைப் போன்றனர்.

    விளக்கம் : கணவனை யிழத்தலின் இவற்றை நீங்கி, உணவைச் சுருக்கியவராய் நோன்பை மேற்கொண்டனர். ( 23 )
    ------------

      2350. ஆய்பொற் புரிசை யணியாரகன் கோயி லெல்லாங்
      காய்பொற் கடிகைக் கதிர்க்கைவிளக் கேந்தி மள்ளர்
      வேய்பொன் னறையும் பிறவும்விரைந் தாய்ந்த பின்றைச்
      சேய்பொற் கமல மகள்கைதொழுச் சென்று புக்கான்.

    பொருள் : மள்ளர் - வீரர்கள்; காய் பொன் கடிகைக் கதிர்க்கை விளக்கு ஏந்தி - காய்ந்த பொன் துண்டங்களாலாகிய ஒளிருங் கைவிளக்கை ஏந்தி; ஆய் பொன் புரிசை அணி ஆர் அகன் கோயில் - ஆராய்ந்த பொன் மதில் சூழ்ந்த அழகிய பரவிய அரண்மனையும்; மேய் பொன் அறையும் - மேவிய பொன்னறையும்; பிறவும் எல்லாம் - பிற இடங்களும் ஆகிய எல்லாவற்றையும்; விரைந்து ஆய்ந்த பின்றை - விரைவாக ஆராய்ந்து காவலிட்டபின்; பொன் கமல மகள் கைதொழச் சேய் சென்று புக்கான் - சிவந்த பொற்றாமரையில் வாழும் திருமகள் வணங்க முருகனனையான் அக் கோயிலுட் புகுந்தான்.

    விளக்கம் : கடிகை - துணித்தது; என்றது பொன்போர்த்த மூங்கிற் குழாயை. புரிசைக் கோயில், அணியார் கோயில், அகன் கோயில் என இயைக்க. கடிகை - துண்டம். கடிகைக்கைவிளக்கு, கதிர்க் கைவிளக்கு என இயைக்க. பொன்னறை - கருவூலம். சேய் : உவமவாகுபெயர்; சீவகன். கமலமகள் - திருமகள். ( 24 )
    ------------

      2351. முலையீன்ற பெண்ணைத் திரடாமங்க டாழ்ந்து முற்று
      மலையீன்ற மஞ்சின் மணிப்பூம்புகை மல்கி விம்மக்
      கலையீன்ற சொல்லார் கமழ்பூவணைக் காவல் கொண்டார்
      கொலையீன்ற வேற்கண் ணவர்கூடிய மார்பற் கன்றே.

    பொருள் : முலை ஈன்ற பெண்ணைத் திரள் தாமங்கள் தாழ்ந்து - முலைபோலுங் காயை யீன்ற பனை போலுந் திரண்ட மாலைகள் தாழ; முற்றும் மலை ஈன்ற மஞ்சின் மணிப் பூம்புகை மல்கி விம்ம - மாடமெங்கும் மலை தந்த முகில்போல அழகிய புகை நிறைந்து புறம் போக; கொலை ஈன்ற வேல்கண்ணவர் கூடிய மார்பற்கு - கொலையை நல்கிய வேலனைய கண்ணவர் சேர்ந்த மார்பனாகிய சீவகனுக்கு; அன்றே - அப்பொழுதே; கலை ஈன்ற சொல்லார் கமழ் பூஅணை காவல் கொண்டார் - கலைகளை நல்கிய மொழி மகளிர் மணங்கமழும் மலரணைக் காவலை மேற்கொண்டனர்.

    விளக்கம் : முலைபோன்ற காயையீன்ற பெண்ணை என்க. பெண்ணை - பனை; இது தாமத்திற்குவமை. முலை பனைக்குவமமன்மையின் அடுத்து வரலுவமம் அன்றென்க. மஞ்சின் - முகில்போல. ( 25 )
    ------------

      2352. போர்க்கோல நீக்கிப் புகழ்ப்பொன்னி னெழுதப் பட்ட
      வார்க்கோல மாலை முலையார்மண் ணுறுப்ப வாடி
      நீர்க்கோலஞ் செய்து நிழல்விட்டுமிழ் மாலை மார்பன்
      றார்க்கோல மான்றேர்த் தொகைமாமற் றொழுது சொன்னான்.

    பொருள் : நிழல் விட்டு உமிழ் மாலை மார்பன் - ஒளியை வீசிச் சொரியும் முத்த மாலை அணிந்த மார்பன்; போர்க் கோலம் நீக்கி - போர்க் கோலத்தைப் போக்கி; புகழ்ப் பொன்னின் எழுதப்பட்ட வார்க் கோல மாலை முலையார் - புகழும் பொன்னாலே எழுதப்பட்ட கச்சையும் கோலத்தையும் மாலையையும் உடைய முலையார்; மண்ணுறுப்ப ஆடி - நீராட்ட ஆடி; நீர்க்கோலஞ் செய்து - அதற்குத் தக்க கோலத்தைச் செய்து; தார்க்கோலம் - தூசிப் படையின் அழகையும்; மான் தேர்த் தொகை - குதிரை பூட்டிய தேர்த்திரளையும் உடைய; மாமன் தொழுது சொன்னான் - மாமனை வணங்கிக் கூறினான்.

    விளக்கம் : முன்னர் 2326 ஆஞ் செய்யுளிற் சீவகனை அரசர் நீராட்டியதாகப் பொருள்கூறிய நச்சினார்க்கினியர் ஈண்டுச் சீவகன் நீராடியதனைக், கள வேள்வி முடித்துக் களத்தினின்றும் வருதலின், பின்னும் மஞ்சனம் ஆடினான் என்பர். ( 26 )
    ------------

      2353. எண்கொண்ட ஞாட்பி னிரும்பெச்சிற் படுத்த மார்பர்
      புண்கொண்டு போற்றிப் புறஞ்செய்கெனப் பொற்ப நோக்கிப்
      பண்கொண்ட சொல்லார் தொழப்பாம்பணை யண்ணல் போல
      மண்கொண்ட வேலா னடிதைவர வைகி னானே.

    பொருள் : எண் கொண்ட ஞாட்பின் - நினைக்கத்தக்க இப்போரிலே; இரும்பு எச்சில் படுத்த மார்பர் - படைகளாலே புண் பட்ட மார்பினரின்; புண் போற்றிக்கொண்டு புறம் செய்க என - புண்ணைப் போற்றிக்கொண்டு காத்தருளுவீராக என்று கூறி; பொற்ப நோக்கி - (தானும் அவர்களை) அன்புடன் பார்த்து (வேண்டுவன செய்து) ; மண் கொண்ட வேலான் - நிலங்காவல் கொண்ட சீவகன்; பாம்பு அணை அண்ணல் போல - திருமாலைப் போல; பண்கொண்ட சொல்லார் தொழ - பண்போன்ற மொழி மகளிர் வணங்கவும்; அடி தைவர - அடிகளைத் தடவவும்; வைகினான் - துயில் கொண்டான்.

    விளக்கம் : எண் கொண்ட ஞாட்பின் என்பதற்குத் தேவாசுரம், இராமாயணம், மாபாரதம்என்ற போரில் வீரர் புண்படுமாறுபோல என அப் போர்களோடு எண்ணுதல் கொண்ட போரில் என்று ஆசிரியர் கூற்றாகவும் கூறலாமென்றும் நச்சினார்க்கினியர் பொருள் கூறுவர். பலர் புண்களையும் அறிந்து பரிகரித்தாற்கோவிந்தனைக் கூறினான். செய்க: வேண்டிக் கோடற்கண் வந்த வியங்கோள். முன்னர், மண் கருதும் வேலான் (சீவக. 1225) என்றதற்கேற்ப, ஈண்டு, மண்கொண்ட வேலான் என்றார். ( 27 )
    ------------

      வேறு
      2354. வாள்க ளாலே துகைப்புண்டு
              வரைபுண் கூர்ந்த போல்வேழ
      நீள்கால் விசைய நேமித்தே
              ரிமைத்தார் நிலத்திற் காண்கலாத்
      தாள்வல் புரவி பண்ணவிழ்த்த
              யானை யாவித் தாங்கன்ன
      கோள்வா யெஃக மிடம்படுத்த
              கொழும்புண் மார்ப ரயாவுயிர்த்தார்.

    பொருள் : வாள்களாலே துகைப்பு உண்டு வரைபுண் கூர்ந்த போல் வேழம் - வாள்களாலே வெட்டுண்டதனால், மலை புண் மிகுந்தது போன்ற யானையும்; நீள் கால் விசைய நேமித்தேர் - பெருங் காற்றைப் போலும் விரைந்து செல்லும் உருளுடைய தேரும்; இமைத்தார் நிலத்தில் காண்கலாத் தாள் வல் புரவி - கண்ணை இமைத்தவர் பின்பு நிலத்திற் காணவியலாத வலிய கால்களையுடைய புரவியும்; பண் அவிழ்த்த யானை ஆவித்தாங்கு அன்ன கோள்வாய்எஃகம் இடம்படுத்த - பண்ணவிழ்த்த யானை கொட்டாவி கொண்டாற் போன்றதாம்படி, கொலை வல்ல வாள் பிளந்த; கொழும் புண் மார்பர் - பெரும் புண்களையுடைய மார்பரும்; அயா வுயிர்த்தார் - இளைப்பாறினார்.

    விளக்கம் : அஃறிணையும் உயர்திணையும் எண்ணிச் சிறப்பினால் அயாவுயிர்த்தார் என உயர்திணை முடிபைப் பெற்றன. ( 28 )
    ------------

      2355. கொழுவாய் விழுப்புண் குரைப்பொலியுங்
              கூந்தன் மகளிர் குழைசிதறி
      யழுவா ரழுகைக் குரலொலியு
              மதிர்கண் முரசின் முழக்கொலியுங்
      குழவாய்ச் சங்கின் குரலொலியுங்
              கொலைவல் யானைச் செவிப்புடையு
      மெழுவார் யாழு மேத்தொலியு
              மிறைவன் கேளாத் துயிலேற்றான்.

    பொருள் : கொழுவாய் விழுப்புண் குரைப் பொலியும் - அழகிய இடும்பை தரும் புண்வாய் காற்றைப் புறப்பட விடும் ஒலியையும்; கூந்தல் மகளிர் குழை சிதறி அழுவார் அழுகைக் குரல் ஒலியும் - இறந்தவர்க்குக் கூந்தலையுடைய மகளிர் குழையை வீசிவிட்டு அழுவாருடைய அழுகைக் குரலிற் பிறந்த ஒலியையும்; அதிர்கண் முரசின் முழக்கு ஒலியும் - அதிரும் கண்ணையுடைய முரசு முழக்குதலால் உண்டாம் ஒலியையும்; குழுவாய்ச் சங்கின் குரல் ஒலியும் திரண்ட வாயையுடைய சங்கின் முழக்கால் எழுந்த ஒலியையும்; கொலை வல்யானைச் செவிப் புடையும் - நொந்த யானையின் காதடிப்பினால், எழும் ஒலியையும்; எழுவார் யாழும் - யாழிசைப்பாரின் யாழொலியையும்; ஏதது ஒலியும் - வாழ்த்தும் ஒலியையும்; இறைவன் கேளாத் துயில் ஏற்றான் - அரசன் கேட்டவாறு துயில் நீங்கினான்.

    விளக்கம் : விழுப்புண் - முகத்திலும் மார்பிலும் பட்டபுண் - இடும்பை தரும்புண் என்பர் நச்சினார்க்கினியர். விழுமம் - இடும்பை. குரைப்பொளி: இருபெயரொட்டு. அழுவார் : வினையாலணையும் பெயர். குழுவாய்ச் சங்கென்புழி, குழு - திரட்சி, செவிப்புடை - காதடித்தலால் எழும் ஒலி. எழுவார் . எழுப்புவோர். இறைவன் : சீவகன். ( 29 )
    ------------

      2356. தொடித்தோண் மகளி ரொருசாரார்
              துயரக் கடலு ளவர்நீந்த
      வடிக்கண் மகளி ரொருசாரார்
              வரம்பி லின்பக் கடனீந்தப்
      பொடித்தான் கதிரோன் றிரைநெற்றிப்
              புகழ்முப் பழநீர்ப் பளிங்களைஇக்
      கடிப்பூ மாலை யவரேந்தக்
              கமழ்தா மரைக்கண் கழீஇயினான்.

    பொருள் : ஒரு சாரார் தொடித் தோள் மகளிர் அவர் துயரக் கடலுள் நீந்த - பட்டவருடைய மகளிராகிய தொடியணிந்த தோளையுடைய அவர்கள் துயரக் கடலிலே நீந்தவும்; ஒரு சாரார் வடிக்கண் மகளிர் வரம்பில் இன்பக் கடல் நீந்த - வென்று மீண்டவருடைய மகளிராகிய மாவடுவனைய கண்களை யுடையவர் எல்லையில்லாத இன்பக் கடலிலே நீந்தவும்; திரை நெற்றிக் கதிரோன் பொடித்தான் - கடலின் முகட்டிலே கதிரவன் தோன்றினான்; புகழ் முப்பழநீர்ப் பளிங்கு அளைஇ - புகழ் பெற்ற முப்பழங்கள் ஊறின நீரிலே கருப்பூரத்தைக் கலந்து; கடிப்பூ மாலையவர் ஏந்தக் கமழ் தாமரைக்கண் கழீஇயினான் - மணமலாமாலை மகளிர் ஏந்தத் தாமரை மலரனைய தன் கண்களைச் சீவகன் கழுவிக் கொண்டான்.

    விளக்கம் : ஒரு சாராராகிய மகளிர் துயரக் கடலுள் நீத்த ஒரு சாராராகிய மகளிர் இன்பக் கடல் நீக்க என இயைக்க. தோற்றோரும் வென்றோருமாகிய இருசாராருள் ஒருசாரார் என்க. பொடித்தான் - தோன்றினான். முப்பழம் - கடு, நெல்லி, தான்றி என்பன. பளிங்கு - கருப்பூரம். ( 30 )
    ------------

      2357. முனைவற் றொழுது முடிதுளக்கி
              முகந்து செம்பொன் கொளவீசி
      நினைய லாகா நெடுவாழ்க்கை
              வென்றிக் கோல விளக்காகப்
      புனையப் பட்ட வஞ்சனத்தைப்
              புகழ வெழுதிப் புனைபூணான்
      கனைவண் டார்க்கு மலங்கலுங்
              கலனு மேற்பத் தாங்கினான்.

    பொருள் : நினையல் ஆகா நெடு வாழ்க்கை - பிறராற் கருதற்கரிய பெருஞ் செல்வத்திற்கும்; வென்றிக் கோலம் - வெற்றிக் கோலத்திற்கும்; விளக்காக - விளக்க மாகும்படி; முனைவன் தொழுது - அருகனை அஞ்சலி செய்து; முடிதுளக்கி - தலைதாழ்த்து; செம்பொன் முகந்து கொள வீசி - சிறந்த பொன்னை யாவரும் வாரிக் கொள்ளுமாறு கொடுத்து; புனையப்பட்ட அஞ்சனத்தைப் புகழ எழுதி - கை செய்த மையைப் புகழுமாறு கண்ணில் எழுதி; கனை வண்டு ஆர்க்கும் அலங்கலும் கலனும் - வண்டுகள் முரலும் மாலையும் அணிகளும்; புனை பூணான் ஏற்பத் தாங்கினான் - புனைந்த பூணான் பொருந்தத் தாங்கினான்.

    விளக்கம் : முனைவன் என்றது அருகக்கடவுளை. பிறராற் பெறலாமென்று நினையலாகா என்றவாறு. கண்டோர் புகழ எழுதி என்க. கனை வண்டு - மிக்கவண்டு. அலங்கல் - மாலை. ( 31 )
    ------------

      2358. முறிந்த கோல முகிழ்முலையார்
              பரவ மொய்யார் மணிச்செப்பி
      லுறைந்த வெண்பட் டுடுத்தொளிசேர்
              பஞ்ச வாசங் கவுட்கொண்டு
      செறிந்த கமுநீர்ப் பூப்பிடித்துச்
              சேக்கை மரீஇய சிங்கம்போ
      லறிந்தார் தமக்கு மநங்கனா
              யண்ணல் செம்மாந் திருந்தானே.

    பொருள் : முறிந்த கோலம் முகிழ் முலையார் பரவ - தளிர்த்த கோலத்தை யுடைய முகிழ்த்த முலையார் வணங்க; மொய்ஆர் மணிச் செப்பில் - மணிகள் இழைத்த செப்பில்; உறைந்த வெண்பட்டு உடுத்து - இருந்த வெண்பட்டை அணிந்து; ஒளிசேர் பஞ்ச வாசம் கவுள் கொண்டு - ஒளி பொருந்திய ஐந்து முகவாசத்தையும் கவுளிலடக்கி; செறிந்த கழுநீர்ப் பூப்பிடித்து - இதழ் நெருங்கிய கழுநீர் மலரைக் கையில் ஏந்தி; அறிந்தார் தமக்கும் அநங்கனாய் - (இக் கோலத்தாலே) அறிந்தவர்களுக்கும் காமனாகத் தோற்றி; சேக்கை மெரீஇய சிங்கம்போல் - (ஆண்மையினாலே) சேக்கையைப் பொருந்திய சிங்கம் போல; அண்ணல் செம்மாந்து இருந்தான் - சீவகன் வீறுடன் அச் சேக்கையிலே இருந்தான்.

    விளக்கம் : முலையார் மெலிய என்றும் பாடம். இது மற்றை நாளிலே சமய மண்டபமிருந்த காட்சி. ( 32 )
    ------------

      2359. வார்மீ தாடி வடஞ்சூடிப்
              பொற்பார்ந் திருந்த வனமுலையா
      ரேர்மீ தாடிச் சாந்தெழுதி
              யிலங்கு முந்நீர் வலம்புரிபோற்
      கார்மீ தாடிக் கலம்பொழியுங்
              கடகத் தடக்கைக் கழலோனைப்
      போர்மீ தாடிப் புறங்கண்ட
              புலால்வேன் மன்னர் புடைசூழ்ந்தார்.

    பொருள் : வார் மீது ஆடி - கச்சை அறுத்து; வடம்சூடி - முத்துமாலை அணிந்து; பொற்பு ஆர்ந்திருந்த வனமுலையார் - பொலிவு நிறைந்திருந்த ஒப்பனையுடைய முலையார்; ஏர்மீது ஆடிச் சாந்தெழுதி - அழகு மேலாகச் சாந்தையும் எழுதி; இலங்கும் முந்நீர் வலம்புரிபோல் - விளங்கும் பாற்கடலிலிருந்தெழுந்த சங்கநிதிபோல; கார்மீது ஆடிக் கலம்பொழியும் - காரை வென்று கலன்களைப் பொழிகிற; கடகத் தடக்கைக் கழலோனை - கடகமணிந்த தடக்கையையும் கழலையும் உடையவனை; போர்மீது ஆடிப் புறம் கண்ட புலால் வேல் மன்னர் புடை சூழ்ந்தார் - போரை வென்று பகைவரைப் புறங்கண்ட புலவு நாறும் வேலணிந்த மன்னர் சூழ்ந்தனர்.

    (விளக்கம்.) வார் - கச்சு. வடம் - முத்துவடம். பொற்பு - பொலிவு. கார்மீதாடி - மேகத்தை வென்று. கலம் - அணிகலன். கழலோன்: சீவகன். ( 33 )
    ------------

      வேறு
      2360. தொல்லை நால்வகைத் தோழருந்
              தூமணி நெடுந்தேர்
      மல்லற் றம்பியு மாமனு
              மதுவிரி கமழ்தார்ச்
      செல்வன் றாதையுஞ் செழுநக
              ரொடுவள நாடும்
      வல்லைத் தொக்கது வளங்கெழு
              கோயிலு ளொருங்கே.

    பொருள் : தொல்லை நால்வகைத் தோழரும் - பழைமையான நான்கு தோழர்களும்; தூமணிநெடுந்தேர் மல்லல் தம்பியும் - தூய மணிகள் இழைத்த பெரிய தேரையுடைய வளமிகு தம்பியும்; மாமனும் - கோவிந்தனும்; கமழ்தார்ச் செல்வன் தாதையும் - மணமிகுந்தாரணிந்த சீவகனுக்குத் தந்தையான கந்துக்கடனும்; செழுநகரொடு வளநாடும் - பழைய ஊரும் வள நாடும்; வளம் கெழு கோயிலுள் - செல்வம் நிறைந்த அரண்மனையிலே; ஒருங்கே வல்லை தொக்கது ஒன்று சேர விரைந்து கூடின.

    விளக்கம் : நந்தட்டன் சிறந்தமையிற் கூறினாரென்பர் நச்சினார்க்கினியர். பின்னரும் நபுல விபுலரைப் பேசாது விட்டதனால் அவர்கள் போரில் இறந்திருத்தல் வேண்டும். திணை விராய் எண்ணி அஃறிணையினால் முடிந்தது. தொக்கது என்பதனாற் பன்மையொருமை மயக்கமுமாம். ( 34 )
    ------------

      2361. துளங்கு வெண்மதி யுகுந்தவெண்
              கதிர்தொகுத் ததுபோல்
      விளங்கு வெள்ளியம் பெருமலை
              யொழியலந் தெழிலார்
      வளங்கொண் மாநகர் மழகதிர்
              குழீஇயின போலக்
      களங்கொண் டீண்டினர் கதிர்முடி
              விஞ்சையர் பொலிந்தே.

    பொருள் : துளங்கு வெண்மதி உகுத்த வெண்கதிர் தொகுத்ததுபோல் - அசைவினையுடைய வெண்மதி சொரிந்த வெண் கதிரைக் குவித்த தன்மை போல; விளங்கு வெள்ளிஅம் பெருமலை ஒழிய வந்து - விளங்கும் பெரிய வெள்ளி மலையை விட்டுவந்து; எழில் ஆர் வளங்கொள் மாநகர் மழகதிர் குழீஇயின போல - அழகிய வளமிகும் இராசமா புரத்திலே இளங்கதிர் திரண்டாற் போல; பொலிந்து கதிர்முடி விஞ்சையர் களம் கொண்டு ஈண்டினர் - பொலிவுற்று, ஒளிவீசும் முடீயணிந்த விஞ்சையர் யாவரும் இடங்கொண்டு திரண்டனர்.

    விளக்கம் : ஒழிய என்பதற்குக், கலுழவேகன் தங்க என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். ( 35 )
    ------------

      2362. எண்ண மென்னினி யெழின்முடி
              யணிவது துணிமின்
      கண்ண னாரொடு கடிகையும்
              வருகென வரலும்
      பண்ணி னார்முடி பழிச்சிய
              மணிபொனிற் குயிற்றி
      யண்ண லாய்கதி ரலமவரப்
              புலமக ணகவே.

    பொருள் : இனி எண்ணம் என் ? - இனியும் நினைவுகூர்தல் ஏன் ?; எழில் முடி அணிவது துணிமின் - அழகிய முடியை அணிவதை நினைமின் (என்று முன் வந்தோர் அமைச்சரை நோக்கிக் கூற அவர்கள்); கண்ணனாரொடு கடிகையும் - புரோகிதருடன் முழுத்தம் வைப்பவனும்; அண்ணல் ஆய்கதிர் அலம் வரப்புலமகள் நக - தலைமைபெற்ற சிறந்த கதிர்கள் அசையவும் நாமகன் மகிழவும்; பழிச்சிய மணிபொனில் குயிற்றி - புகழ்ந்த மணிகளைப் பொன்னிலே அழுத்தி; முடி பண்ணினார் - மடியமைத்த வரும்; வருக என வரலும் - வருக என்றவுடன் அவர்களும் வரவும்;

    விளக்கம் : இப் பாட்டுக் குளகம். இனி யென்றார் காலங்கழிக்குமது தகாது என்றற்கு. என்றதனாலே புரோகிதன் முதலாகத் துறைதோறும் அழைக்க வேண்டுவாரை அழைத்ததும், அங்குரார்ப்பணம் அதிவாசம் முதலியசடங்குகள் யாவும் நடத்தி முழுத்தம் பார்த்திருந்ததுவும் தோன்றக் கூறினார். முடியமைத்தற்குரிய நூல்கள் எல்லாம் முற்ற முடித்தலின், நாமகள் மகிழ என்றார். புலமகள் நகப் புண்ணினாரும் என்க. ( 36 )
    ------------

      2363. விரியு மாலையன் விளங்கொளி முடியினன் றுளங்கித்
      திருவின் மால்வரைக் குலவிய தனையதோர் தேந்தா
      ரகுலி போல்வதோ ராரமு மார்பிடைத் துயல
      வெரியும் வார்குழை யிமையவ னொருவன்வந் திழிந்தான்.

    பொருள் : திருவில் துளங்கி மால்வரைக் குலவியது அனையது ஓர் தேன் தார் - வானவில் அசைந்து பெரிய மலை ஒன்றிலே விளங்கிய தன்மை போல்வதொரு தேன்சொரியும் தாரும்; அருவி போல்வது ஓர் ஆரமும்-(அம் மலைமிசை) அருவி போல்வதாகிய ஒரு முத்துவடமும்; மார்பிடைத் துயல - மார்பிலே அசைய; விளங்கு ஒளி விரியும் மாலையன் - விளங்கும் ஒளி பரவும் இயல்பினனாய்; முடியினன் - முடியினனாய்; எரியும் வார்குழை இமையவன் ஒருவன் வந்து இழிந்தான் - ஒளிவிடும் நீண்ட குழையணிந்த வானவன் ஒருவன் வந்து இறங்கினான்.

    விளக்கம் : வந்தவன் சுதஞ்சணன், திருவில் - வானவில் இமையவன் - தேவன்; என்றது சுதஞ்சணனை, இழிந்தான் - இறங்கினன்.
    ( 37 )
    ------------

      2364. கொம்மை யார்ந்தன கொடிபட வெழுதின குவிந்த
      வம்மை யார்ந்தன வழகிய மணிவட முடைய
      வெம்மை செய்வன விழுத்தகு முலைத்திட முடைய
      பொம்மெ லோதியர் பொழிமின்னுக் கொடியென விழிந்தார்.

    பொருள் : கொம்மை ஆர்ந்தன் - பெருமை நிறைந்தன கொடிபட, எழுதின - கொடியமைய எழுதப்பட்டன; குவிந்த - குவிந்தன; அம்மை ஆர்ந்தன - அழகிய கருமை நிறைந்தன அழகிய மணிவடம் உடைய - அழகிய முத்துவடம் உடையன ; வெம்மை செய்வன - விருப்பூட்டுவனவாகிய; முலைத்தடம் உடைய - முலைகளையுடைய; பொம்மெல் ஓதியர் - பொங்கிமெத்தென்ற கூந்தலையுடையர்; பொழிமின்னுக்கொடி என இழிந்தார் - ஒளியைப் பெய்யும் மின்னொழுங்கென இறங்கினர்.

    விளக்கம் : கொம்மை - பெருமை; வட்டமுமாம். கொடி - தொய்யிற் கொடி. அம்மை - அழகிய மை. வெம்மை - விருப்பம், இவர்கள் - சுதஞ்சணன் மனைவிமார் என்க. ( 38 )
    ------------

      2365. மையல் யானையின் படுமதங்
              கெடப்பகட் டரசன்
      செய்த மும்மதம் போற்றிசை
              திசைதொறுங் கமழுந்
      தெய்வ வாசத்துத் திருநகர்
              வாசங்கொண் டொழிய
      வெய்யர் தோன்றினர் விசும்பிடைச்
              சிறப்பொடும் பொலிந்தே.

    பொருள் : மையல் யானையின் படுமதம் கெட - மயக்கம் பொருந்திய யானையின் மதம் கெடுமாறு; பகட்டரசன் செய்த மும்மதம் போல் - களிற்று வேந்தன் உண்டாக்கின மதம்போல ; திசை திசைதொறும் கமழும் தெய்வ வாசத்து - எல்லாத் திசையினும் சென்று மணக்கின்ற தெய்வ மணத்தாலே; திருநகர் வாசம் கொண்டு ஒழிய - அவ்வழகிய நகரின் மணம் அடங்க; விசும்பிடைச் சிறப்பொடும் பொலிந்து - வானிலே சிறப்பொடும் பொலிவுற்று; வெய்யர் தோன்றினர் - விரைந்து தோன்றினர்.

    விளக்கம் : சிறப்பென்றார் சீவகன் மணிமுடி விழாவிற்குச் சிறப்புறக் கொண்டு வந்த பொருள்களை. மையல் - மயக்கம். படுமதம் : வினைத்தொகை. பகட்டரசன் - யானைகட்குத் தலைவனாகிய களிறு. இதனை யூதநாதன் என்ப. வெய்யர் - விரைந்தனராய் : முற்றெச்சம். ( 39 )
    ------------

      2366. வெருவி மாநகர் மாந்தர்கள் வியந்துகை விதிர்ப்பப்
      பருதி போல்வன பாற்கட னூற்றெட்டுக் குடத்தாற்
      பொருவில் பூமழை பொன்மழை யொடுசொரிந் தாட்டி
      யெரிபொ னீண்முடி கவித்தனன் பலித்திரற் றொழுதே.

    பொருள் : மாநகர் மாந்தர்கள் வெருவி வியந்து கைவிதிர்ப்ப - பெருநகரிலுள்ள மக்கள் அஞ்சி வியந்து கைவிதிர்க்கும்படி; பொருஇல் பூமழை பொன் மழையொடு சொரிந்து - ஒப்பற்ற மலர்மழையைப் பொன்மழையுடன் சொரிய; பருதி போல்வன நூற்றெட்டுக் குடத்தால் ஞாயிறு போன்றனவாகிய நூற்றெட்டுக் குடங்களால்; பாற்கடல் சொரிந்து ஆட்டி - பாற்கடலிலே முகந்து ஆட்டி; பவித்திரன் தொழுது - தூய்வனாகிய சீவகனை வணங்கி; எரிபொன் நீளமுடி கலித்தனன் - ஒளிவிடும் நீண்ட பொன்முடியைக் கவித்தான்.

    விளக்கம் : பவித்திரன் என்றார் நெஞ்சின் தூய்மை தோன்ற. சீவகன் மந்திரமோதி நாய்ப்பிறப்பை நீக்கிய ஆசிரியனாதலின் சுதஞ்சணன் தொழுதான். ( 40 )
    ------------

      2367. தேவ துந்துபி தேவர்கட் கோகையுய்த் துரைப்பா
      னாவி யம்புகை யணிகிளர் சுண்ணமோ டெழுந்த
      நாவி னேத்தின ரரம்பையர் நரம்பொலி யுளர்ந்த
      காவன் மன்னருங் கடிகையுங் கடவது நிறைத்தார்.

    பொருள் : ஆவி அம்புகை அணிகிளர் சுண்ணமோடு - ஓமப் புகையொடும் அழகு விளங்கும் சுண்ணத்தோடும்; தேவர்கட்கு ஓகை உய்த்து உரைப்பான் - வானவர்கட்கு இம் மகிழ்ச்சியைக் கொண்டு சென்று கூறுவதற்கு; தேவதுந்துபி எழுந்த - தெய்வ வாச்சியங்கள் எழுந்தன; அரம்பையர் நாவின் ஏத்தினர் - வான மங்கையர் நாவினாற் போற்றினர்; நரம்பு ஒலி உளர்ந்த - நரம்பொலி பாட்டுடன் வாசிக்கப்பட்டன; காவல் மன்னரும் கடிகையும் கடவது நிறைத்தார் - காவலுடைய வேந்தரும் கடிகை வரும் தம் கடமையை நிரப்பினர்.

    விளக்கம் : ஆவி : அவியென்பதன் விகாரம் மன்னர் கைக் காணிக்கை இட்டு வணங்கினார். கடிகையர் மங்கலம் பாடினர். நாவின் ஏத்துநர் பாடமாயின், ஏத்துநராகிய அரம்பைய ரென்க. ( 41 )
    ------------

      2368. திருவ மாமணிக் காம்பொடு
              திரள்வடந் திளைக்கு
      முருவ வெண்மதி யிதுவென
              வெண்குடை யோங்கிப்
      பரவை மாநில மளித்தது
              களிக்கயன் மழைக்கட்
      பொருவில் பூமகட் புணர்ந்தன
              னிமையவ னெழுந்தான்.

    பொருள் : திருவ மாமணிக் காம்பொடு திரள்வடம் திளைக்கும் உருவ வெண்மதி இது என - அழகிய பெரிய மணிக்காம்புடன் திரண்ட முத்துவடமும் பயின்ற உருவினையுடைய வெண்திங்கள் இது வென்னுமாறு; வெண்குடை ஓங்கி - வெண்கொற்றக்குடை உயர்ந்து; பரவை மாநிலம் அளித்தது - கடல் சூழ்ந்த பெருநிலத்தைக் காத்தது; களிக்கயல் மழைக்கண் பொருஇல் பூமகள் புணர்ந்தனன் - மகிழ்ந்த கயல்போலும் மழைக்கண்களையுடைய ஒப்பற்ற நிலமகளைச் சீவகன் தழுவினான்; இமையவன் எழுந்தான் - சுதஞ்சணனும் தன்னுலகு செல்லப் போயினான்.

    விளக்கம் : திருவ : அ : அசை. காம்பும் வடமும் திளைக்கும் மதி : இல்பொருளுவமை. குடையும் முடிபுனை மங்கலப் பொருள்களில் ஒன்று. ( 42 )
    ------------

      வேறு
      2369. மின்னுங் கடற்றிரையின் மாமணிக்கை
              வெண்கவரி விரிந்து வீசப்
      பொன்னங் குடைநிழற்றப் பொன்மயமா
              முழைக்கலங்கள் பொலிந்து தோன்ற
      மன்னர் முடியிறைஞ்சி மாமணியங்
              கழலேந்தி யடியீ டேத்தச்
      சின்ன மலர்க்கோதைத் தீஞ்சொலார்
              போற்றிசைப்பத் திருமால் போந்தான்.

    பொருள் : மின்னும் கடல் திரையின் மாமணிக்கை வெண்கவரி விரிந்து வீச - ஒளிரும் பாற்கடலலைபோல மணிகளிழைத்த கைப்பிடியையுடைய வெண்கவரி பரவி வீச; பொன் அம்குடை நிழற்ற - அழகிய பொற்குடை நிழல் செய்ய; பொன்மயம் ஆம் உழைக்கலங்கள் பொலிந்து தோன்ற - பொன்னாலாகிய உழைக்கலங்கள் விளக்கித் தோன்ற; மன்னர் முடி இறைஞ்சி மாமணி அம் கழல் ஏந்தி அடியீடு ஏத்த - அரசர்கள் முடியைத் தாழ்த்தி மணிக்கழலையேந்தி அடியிடுதலை ஏத்த; சின்ன மலர்கோதைத் தீஞ்சொலார் போற்றிசைப்ப - விடு பூவையும் கோதையையும் அணிந்த இனிய மொழியார் போற்றிக் கூற; திருமால் போந்தான் - சீவகன் (நன்னிலம் மிதிக்கப்) போந்தன்.

    விளக்கம் : பொன்னங்குடை : பொன் அழகுமாம் இது உலாக் குடையாதலிற் பொற்குடை என்றலே தகவுடைத்து. காத்தல் தொழிலாலும் வடிவாலும் திருமால் என்றே கூறினார். அடுத்து இரண்டு உலா அரசர்க்காகாமையின் மணத்திற்குப் பின் உலாக் கூறுவார் ஈண்டு கன்னிலம்மிதித்தற்கு மண்டபத்தே புகுந்தமைதோன்ற, அடியீடேத்த என்றார். ( 43 )
    ------------

      2370. மந்தார மாமாலை மேற்றொடர்ந்து
              தழுவவராத் தாம மல்கி
      யந்தோவென் றஞ்சிறைவண் டேக்கறவின்
              புகைபோய்க் கழுமி யாய்பொற்
      செந்தா மரைமகளே யல்லதுபெண்
              சாராத திருவின் மிக்க
      சிந்தா மணியேய்ந்த சித்திரமா
              மண்டபத்துச் செல்வன் புக்கான்.

    பொருள் : மந்தார மாமாலை மேல் தொடர்ந்து - மந்தார மலர்மாலை மேலே தொடுக்கப் பெற்று; தழுவ வராத் தாமம் மல்கி - தழுவவியலாத மாலைகள் நிறைந்து; அந்தோ என்று அம் சிறை வண்டு ஏக்கற - அந்தோ! என்று அழகிய சிறகிசனையுடைய வண்டு (தேனையுண்ணப் பெறாமல்) ஏக்கம் அடையும் படி; இன் புகைபோய்க் கழுமி - இனிய புகை சென்று பொருந்தி; ஆய்பொன் செந்தாமரை மகளே அல்லது - ஆய்ந்த பொன்னாலாகிய செந்தாமரையிலுள்ள திருமகள் அல்லாமல்; பெண் சாராத - வேறு பெண் சாராத; திருவின் மிக்க - செல்வத்தாற் சிறந்த; சிந்தாமணி ஏய்ந்த - சிந்தாமணியின் தன்மை பொருந்திய; சித்திரமா மண்டபத்துச் செல்வன் புக்கான் - ஓவியம் எழுதிய மண்டபத்திலே சீவகன் புகுந்தான்;

    விளக்கம் : தழுவ வாராத் தாமங்களில் தேனையுண்ண முடியாமல் வண்டுகள் ஏக்கற்றன. திருவல்லது பெண்சாராத எனவே சமய மண்டபமாம். மேல் நினைத்தன நல்குவான் சீவகனென்பதைக் கொண்டு, சிந்தாமணி ஏய்ந்த என்றார். ( 44 )
    ------------

      2371. பைங்க ணுளையெருத்திற் பன்மணி
              வாளெயிற்றுப் பவள நாவிற்
      சிங்கா சனத்தின்மேற் சிங்கம்போற்
              றேர்மன்னர் முடிகள் சூழ
      மங்குன் மணிநிற வண்ணன்போல்
              வார்குழைகடிருவில் வீசச்
      செங்கட் கமழ்பைந்தார்ச் செஞ்சுடர்போற்
              றேர்மன்ன னிருந்தா னன்றே.

    பொருள் : சிங்கம்போல் தேர் மன்னர் முடிகள் சூழ - சிங்கம் போன்ற தேர் வேந்தரின் முடிகள் சூழ; வார்குழைகள் திருவில் வீச - நீண்ட குழைகள் அழகிய ஒளியை வீச; மங்குல் மணிநிற வண்ணன் போல் - முகிலைப் போலும் நீலமணியைப் போலும் நிறமுடைய திருமால் போலும்; செங்கண் கமழ் பைந்தார்ச் செஞ்சுடர் போல் - செங்கண்களையும் மணமுறும் பைந்தாரையும் உடைய செஞ்ஞாயிறு போலும்; பைங்கண் உளை எருத்தின் பன்மணி வாள் எயிற்றுப் பவள நாவின் - பைங்கண்களையும் உளையையுடைய கழுத்தையும் பலமணிகளாலான கூரிய பற்களையும் பவள நாவையும் உடைய; சிங்காசனத்தின்மேல் தேர்மன்னன் இருந்தான் - சிங்கம் சுமந்த அணையின் மேல் தேரையுடைய சீவக மன்னன் அமர்ந்தான்.

    விளக்கம் : மங்குல் - திசை என்பர் நச்சினார்க்கினியர். உளை - பிடரிமயிர். சிங்கம் மன்னர்கட்குவமை; மணிநிறவண்ணன்; திருமால். செஞ்சுடர் - ஞாயிறு. எனவே தந்தையைப்போலிருந்தான் என்றார் நச்சினார்க்கினியர். ( 45 )
    ------------

      வேறு
      2372. வார்பிணி முரச நாண
              வானதிர் முழக்க மேய்ப்பத்
      தார்பிணி தாம மார்பன்
              றம்பியை முகத்து ணோக்கி
      யூர்பிணி கோட்டஞ் சீப்பித்
              துறாதவ னாண்ட நாட்டைப்
      பார்பிணி கறையி னீங்கப்
              படாமுர சறைவி யென்றான்.

    பொருள் : தார்பிணி தாம மார்பன் தம்பியை முகத்துள் நோக்கி - மாலை பிணித்த ஒளியுறு மார்பன் நந்தட்டன் முகத்தைப் பார்த்து, வார்பிணி முரசம் நாண வான் அதிர் முழக்கம் ஏய்ப்ப - வாராற் கட்டப்பட்ட முரசம் வெள்கவும், முகில் அதிரும் முழக்கம் போலவும்; ஊர்பிணி கோட்டம் சீப்பித்து - ஊரிலுள்ளாரைப் பிணித்த சிறைக்கோட்டங்களை இடிப்பித்து; உறாதவன் ஆண்ட நாட்டைப் பார்பிணி கறையின் நீங்க - நம் பகைவன் ஆண்ட நாட்டினை உலகைப் பிணிக்கும் இறையிலிருந்து விலக; படாமுரசு அறைவி என்றான் - ஓய்விலாத முரசை அறையச் செய்க என்றான்.

    விளக்கம் : முகத்துள் : உள் உருபு மயக்கம். பாரிற்குக் கட்டின கடமையினின்றும் நீங்க என்றது ஆறில் ஒன்னையும் தவிர என்றவாறு. இது கடமை கொள்ளாமை என்னும் பொருட்டாய் நாட்டை, என்னும் இரண்டாவதற்கு முடிபு ஆயிற்று. ஐ : அசை எனினுமாம். ( 46 )
    ------------

      2373. கடவுள ரிடனுங் காசில்
              கணிபெறு நிலனுங் காமர்
      தடவளர் முழங்குஞ் செந்தீ
              நான்மறை யாளர் தங்க
      ளிடவிய நிலத்தோ டெல்லா
              மிழந்தவர்க் கிரட்டி யாக
      வுடனவை விடுமி னென்றா
              னொளிநிலா வுமிழும் பூணான்.

    பொருள் : ஒளிநிலா உமிழும் பூணான் - ஒளி நிலவைச் சொரியும் பூணினான்; கடவுளர் இடனும் - கடவுளருக்கு இறையிலியாக விட்ட நிலனும்; காசு இல் கணிபெறு நிலனும் - குற்றம் அற்ற கணிகள் பெற்ற நிலமும்; காமர் தடவளர் முழங்கும் செந்தீ நான்மறையாளர் தங்கள் இடவிய நிலத்தோடு - விருப்பூட்டும் ஓமகுண்டத்திலே வளர்ந்து ஒலிக்கும் செந்தீயையுடைய மறைவல்லாருக்களித்த இடம் பரவிய நிலத்துடன்; எல்லாம் - மற்றுமுள்ள இறையிலி நிலங்களையும்; இழந்தவர்க்கு இரட்டியாக - முன் அவனால் இழந்தவர்களுக்கு இருபங்காக; அவை உடன் விடுமின் என்றான் - அவற்றை உடனே விடுமின் என்று மந்திரிகளை நோக்கிக் கூறினான்.

    விளக்கம் : இவை இறையிலி நிலங்கள், தட என்பது தூபமுட்டி எனினும் ஈண்டு வேள்விக் குண்டத்தை உண்த்திதுகின்றது. இறையிலி நிலங்களை முன்போல விடுமின் எனவும், இழந்தவர்க்கு இரட்டியாக விடுமின் எனவும் இருமுறை கூட்டிக் கூறுக. (47)
    ------------

      2374. என்றலுந் தொழுது சென்னி
              நிலனுறீஇ யெழுந்து போகி
      வென்றதிர் முரசம் யானை
              வீங்கெருத் தேற்றிப் பைம்பொற்
      குன்றுகண் டனைய கோலக்
              கொடிநெடு மாட மூதூர்ச்
      சென்றிசை முழங்கச் செல்வன்
              றிருமுர சறைவிக் கின்றான்.

    பொருள் : என்றாலும் - என்று சீவகன் கூறியவுடன் செல்வன் தொழுது சென்னி நிலன் உறீஇ எழுந்து போகி - நந்தட்டன் சீவகனைத் தொழுது முடி நிலமுற வணங்கி எழுந்து சென்று; வென்று அதிர் முரசம் யானை வீங்கு எருத்து ஏற்றி - வென்று முழங்கும் முரசை யானையின் பருத்த பிடரிலே. அமைத்து; பைம்பொன் குன்று கண்டனைய கோலம் - புதிய பொன்னாலாகிய மலையைக் கண்டாற் போன்ற அழகினையுடைய; கொடி நெடுமாடம் - கொடியுடைய நீண்ட மாடங்களையுடைய; மூதூர் சென்று - மூதூரிலே போய்; இசை முழங்கத் திருமுரசு அறைவிக்கின்றான் - புகழ் முழங்க அழகிய முரசை (வள்ளுவனைக் கொண்டு) அறைவிக்கின்றவன்.

    விளக்கம் : நிலன் உறீஇ - நிலத்தைப் பொருந்தும்படி வணங்கி என்க. வீங்கெருத்து - பருத்த பிடரி. பொன்குன்றம் மாடத்திற்குவமை. அறைவிக்கின்றான் : வினையாலணையும் பெயர். இதுமுதல் மூன்று செய்யுள் ஒருதொடர். ( 48 )
    ------------

      2375. ஒன்றுடைப் பதிளை யாண்டைக்
              குறுகட னிறைவன் விட்டா
      னின்றுளீ ருலகத் தென்று
              முடனுளீ ராகி வாழ்மின்
      பொன்றுக பசியு நோயும்
              பொருந்தலில் பகையு மென்ன
      மன்றல மறுகு தோறு
              மணிமுர சார்ந்த தன்றே.

    பொருள் : பசியும் நோயும் பொருந்தல் இல் பகையும் பொன்றுக! - பசியும் பிணியும் பொருத்தமில்லாத பகையும் ஒழிக!; இன்று உளீர் உலகத்து என்றும் உடன் உளீராகி வாழ்மின்! - இப்போதுள்ள நீவிர் எப்போதும் உலகத்தில் உடனிருப்பீராகி வாழ்மின்!; ஒன்றுடைப் பதினையாண்டைக்கு உறு கடன் இறைவன் விட்டான் - பதினாறாண்டுகட்கு உரிய கடனை இறைவன் நீக்கிவிட்டான்; என்ன - என்று; அன்றே மன்றல் மறுகு தோறும் மணிமுரசு ஆர்த்தது - அப்போதே மணமுடைய தெருக்கள்தோறும் அழகிய முரசு ஒலித்தது.

    விளக்கம் : ஒன்றுடைப் பதினையாண்டு என்றது பதினாறாண்டு என்றவாறு. கடன் - அரசிறைப் பொருள். பசியும் நோயும் பொன்றுக என மாறுக. என்ன - என்று வள்ளுவன் கூறி முழக்க முரசு ஆர்த்தது என்க. ( 49 )
    ------------

      2376. நோக்கொழிந் தொடுங்கி னீர்க்கு
              நோய்கொளச் சாம்பி னீர்க்கும்
      பூக்குழன் மகளிர்க் கொண்டான்
              புறக்கணித் திடப்பட் டீர்க்கும்
      கோத்தரு நிதியம் வாழக்
              கொற்றவ னகரோ டென்ன
      வீக்குவார் முரசங் கொட்டி
              விழுநக ரறைவித் தானே.

    பொருள் : நோக்கு ஒழிந்து ஒடுங்கினீர்க்கும் - பார்வை யிழந்து மெலிந்திருக்கும்; நோய்கொளச் சாம்பினீர்க்கும் - நோய் கொண்டதால் மனமிடிந்தீர்க்கும்; பூக்குழல் மகளிர்க் கொண்டான் புறக்கணித்திடப் பட்டீர்க்கும் - பூவையணிந்த குழலையுடைய பரத்தையரிடத்து வேட்கையாலே கணவனாற் புறக்கணித்திடப் பட்டீர்க்கும் ; வாழ நகரோடு கோத்தரு நிதியம் கொற்றவன் (தரும்) என்ன - வாழ்வதற்கு மனையுடன் இடையறாத செல்வத்தையும் அரசன் நல்குவான் என்று; விழுநகர் வீக்குவார் முரசம் கொட்டி அறைவித்தான் - சிறந்த நகரிலே, கட்டப்பட்ட வாரையுடைய முரசினைக் கொட்டி அறைவித்தான்.

    விளக்கம் : கோ - பசுவுமாம். கொற்றவன் தரும் என ஒருசொல் வருவிக்க. அல்லது கோத்தரும் என்பதிலுள்ள தரும் என்பதைச் சேர்க்க. கோத்லைத் தரும் நிதியம் என்பது கோத்தரு நிதியம், என விகாரப்பட்டது. அரசன் கூறாதன தான் கூறினானல்லன்; அவன் அரசாட்சி பெற்றாற் செய்யும் அறங்களாகத் தனக்கு முற்கூறியவற்றைப் பின் தான் சாற்றுவித்தான் என்க. ( 50 )
    ------------

      2377. திருமக னருளப் பெற்றுத்
              திருநிலத் துறையு மாந்த
      ரொருவனுக் கொருத்தி போல
              வுளமகிழ்ந் தொளியின் வைகிப்
      பருவரு பகையு நோயும்
              பசியுங்கெட் டொழிய விப்பாற்
      பெருவிறல் வேந்தர் வேந்தற்
              குற்றது பேச லுற்றேன்.

    பொருள் : திருமகன் அருளப் பெற்று - (இவ்வாறு) அரசன் அருளப் பெறுதலின்; திருநிலத்து உறையும் மாந்தர் - அவனுடைய அழகிய நாட்டிலே வாழும் மக்கள்; ஒருவனுக்கு ஒருத்திபோல உளம் மகிழ்ந்து - ஒருவனுக்கு ஒருத்திபோல மனங்களித்து; ஒளியின் வைகி - புகழுடன் தங்குதலால்; பருவரு பகையும் நோயும் பசியும் கெட்டு ஒழிய - துன்புறுத்தும் பகையும் பிணியும் பசியும் கெட்டு விலக (அரசாளும் நாளிலே) இப்பால் - இனி; பெருவிறல் வேந்தர் வேந்தற்கு உற்றது பேசலுற்றேன் - பேராற்றலையுடைய மன்னர் மன்னனான சீவகனுக்கு நிகழ்ந்ததை இயம்பத் தொடங்கினேன்.

    விளக்கம் : திருமகன் : சீவகன், அன்பான் ஒத்த ஒருவனும் ஒருத்தியும் கூடிய வழி உளமகிழ்ந்திருத்தல் போன்று மகிழ்ந்து என்றவாறு. வைகி - வைக. ஒளி - புகழ். வேந்தர் வேந்தன் : சீவகன். ( 51 )

    பூமகள் இலம்பகம் முற்றிற்று.
    -------------

    சீவக சிந்தாமணி : 12. இலக்கணையார் இலம்பகம் (2378 -2598)

    கதைச் சுருக்கம்: சீவகன் ஏவலாலே அவன் தம்பியர் சென்று காந்தருவ தத்தை முதலிய தேவிமாரை அழைத்து வந்தனர். அம்மகளிரைச் சீவகன் அன்புகூர்ந்து வரவேற்றுத் தலையளி செய்தனன். அவரும் அளவிலா உவகை கொண்டனர். கோவிந்த மன்னன் தன் மகளாகிய இலக்கணைக்குத் திருமணம் நிகழ்த்த நனனாள் குறித்தான். நகரம் அணி செய்யப்பட்டது. மக்கள் இனியன உண்டும் உடுத்தும் இன்புற்றனர். சீவகன் வெள்ளி மணையில் வீற்றிருப்ப, மகளிர் அறுகம்புல்லை நறுநெய்யில் தோய்த்து நெய் யேற்றினர். யானைமிசை ஏற்றிக் கொணர்ந்த மங்கல நீரால் ஆட்டினர்; இலக்கணைக்கும் அங்ஙனமே மங்கல நீராட்டினர். இருவரையும் அணிகலன் முதலியவற்றாற் கோலம் செய்தனர். மாமுது பார்ப்பான் மறை வழிகாட்ட இருவரும் தீவலஞ் செய்தனர். அவ்வழி இன்னியங்கள் கடலென ஆர்த்தன. நல்ல முழுத்தத்திலே இருவரும் மணக்கட்டிலில் ஏறினர். மணப்பள்ளியில் இருவரும் ஊடியும் கூடியும் இன்பமுற்றனர். பின்னர் இருவரும் நகரமாந்தரெல்லாம் கண்டு மகிழும்படி நகர் வலஞ் செய்தனர். அருகண் திருக்கோயிலை அடைந்து மலர்ப்பலி முதலியன கொடுத்து ஆரா அன்புடன் வழிபாடியற்றினர். பின்னர்ச் சீவகன் அரியணையிலிருந்து செங்கோல் செலுத்தி மன்னுயிரைப் பாதுகாப்பானாயினன்.

    அவ்வாறு அருளாட்சி புரிகின்ற காலத்தே தன்னை அன்புடன் வளர்த்த தந்தையாகிய கந்துக்கடனுக்குப் புதுவதாக அரசுரிமையையும் தாயாகிய சுநந்தைக்குப் பெருந்தேவிப் பட்டத்தையும் வாங்கினன். நந்தட்டனுக்கு இளவுடையான் என்னும் இளவரசுப் பட்ட மீந்தான் நபுலவிபுலர்க்குக் குறுநில மன்னர் மகளை மணஞ் செய்வித்தான். அவர்க்கு நாடுகள் பலவு மீந்தான். தன் பொருட்டு இன்னலுற்ற மாந்தர்க்கு நிதியும் நாடும் நல்கினான். கைத்தாயர்க்கு வளமிக்க ஐந்தூர்களை வழங்கினன். கட்டியங்காரனுடைய பொருளை எல்லாம் மாமனாகிய கோவிந்த மன்னனுக்கு நல்கினான். சுதஞ்சணனுக்குக் கோயில் எடுப்பித்து அவன் வரலாற்றை நாடகமாக எழுதி நடிப்பித்தான். இளம்பருவத்தே தான் விளையாடுதற்கு இன்னிழலளித்தஆலமரத்திற்குப் பீடமமைத்து ஐந்தூரை அதற்கு இறையிலியாக விட்டான். இவ்வாறு நல்லறம் பலவு மியற்றி நாடின்புற அருளாட்சி செய்தனன்.
    ------------

      2378. அலங்க லேந்திய குங்கும வருவரை மார்பன்
      கலந்த காரிகை யவர்களைத் தருகென வருள
      விலங்கு மாலைவெள் ளருவிய வெழில்வரை மணந்த
      புலம்பு நீள்சுரம் போய்க்கொணர்ந் தருளொடுங் கொடுத்தார்.

    பொருள் : அலங்கல் ஏந்திய குங்கும அருவரை மார்பன் - மாலையை அணிந்த குங்கும மலைபோலும் மார்பன்; கலந்த காரிகையவர்களைத் தருக என அருள - தான் மணந்த மகளிரைத் தருவீராக என்று அருளிச் செய்ய; இலங்கும் மாலை வெள்அருவிய எழில்வரை மணந்த - விளங்கும் மாலை போன்ற வெள்ளிய அருவியை உடையனவாகிய அழகிய மலைகள் கலந்த; புலம்பு நீள்சுரம் அருளொடும் போய்க் கொணர்ந்து கொடுத்தார் - வருத்தமூட்டும் நீண்ட காட்டு வழியிலே அரசன் அருளுடன் சென்று கொணர்ந்து விடுத்தனர்.

    விளக்கம் : அலங்கல் - மாலை. அருவரை - கடத்தற்கரிய மலை. மார்பன் : சீவகன். கலந்தகாரிகையர் என்றது - மனைவிமாரை. நீள்சுரம் - நெடிய பாலைவழி. அருளொடும் போய்க் கொணர்ந்து கொடுத்தார் என மாறுக. ( 1 )
    ------------

      2379. மோடு கொண்ணிலா முளைத்தெழு பருதிகண் டறியாப்
      பாடு வண்டொடு பறவையு நடுக்குறுங் காப்பின்
      மாட மாமணிச் சிவிகையின் மயிலென விழிந்தார்
      வீடு கண்டவர் போன்றுமின் னிடுகொடி யனையார்.

    பொருள் : மோடுகொள் நிலா முளைத்து எழு பருதி கண்டு அறியா - பெருமை கொண்ட நிலவையும் கடலிடைத் தோன்றி எழும் ஞாயிற்றையும் கண்டறியாத; பாடு வண்டொடு பறவையும் நடுக்குறும் காப்பின் - பாடுகின்ற வண்டும் பறவையும் அஞ்சுகின்ற காவலையுடைய; மாடம் மாமணிச் சிவிகையின் - மாடம் போன்ற பெரிய மணிகளாலாகிய பல்லக்கிலிருந்து; மின் இடு கொடி அனையார் - மின்னுக் கொடி போன்ற அம்மங்கையர்; வீடு கண்டவர் போன்று - பேரின்ப வீட்டைக் கண்டவரைப் போன்ற மகிழ்வுடன்; மயில் என இழிந்தார் - மயிலிழிந்தாற்போல இழிந்தனர்.

    விளக்கம் : திங்களும் ஞாயிறுங் கண்டறியாத மாடத்தின் கண்ணே, காப்பினையுடைய சிவிகையினின்றும் இழிந்தனர் என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். துன்புறுதற்கு ஒரு சாபம் பெற்று, அச் சாபம் வீடுகண்டவரைப் போல மகிழ்ந்து இழிந்தாரென்க; வீடுகண்டவர் பின் வருத்தம் நீங்கினாற் போல இருவரும் வருத்தம் நீங்கினார் என்றுமாம். ( 2 )
    ------------

      2380. அன்று சூடிய மாலைய ராடிய சாந்தர்
      பொன்றி வாடிய மேனியர் பொன்னிறை சுருங்கார்
      சென்று காதலன் றிருவிரி மரைமல ரடிமே
      லொன்றி வீழ்ந்தனர் குவளைக்க ணுவகைமுத் துகவே.

    பொருள் : அன்று சூடிய மாலையர் - (இவன் பிரிந்த) அன்று அணிந்த மாலையர்; ஆடிய சாந்தர் - பூசிய சாந்தினர்; பொன்றி வாடிய மேனியர் - கெட்டு வாடிய மேனியர்; பொன் நிறை சுருங்கார் - பொன் போன்ற கற்புக் கெடாதவர் ஆக; சென்று - போய்; காதலன் திருவிரி மரைமலர் அடிமேல் - தம் காதலனுடைய அழகுமிகும் தாமரை மலர் போன்ற டிகளிலே; குவளைக்கண் உவகை முத்து உக - குவளைமலர் போன்ற கண்களிலிருந்து உவகைக் கண்ணீர் முத்தென உகுமாறு; ஒன்றி வீழ்ந்தனர் - ஒன்றுபட்டு வீழ்ந்தனர்.

    விளக்கம் : அன்று என்றது இவன் பிரிந்த நாளிலே என்பதுபட நின்றது. பொன்றி - கெட்டு. பொன்போன்ற நிறை என்க. நிறை - கற்பு காதலரிருவரும் தம் நெஞ்சை ஒருவர் மற்றொருவர்பால் நிறுத்தலின் நிறை எனப்படும். அதுவே கற்பு. திரு - அழகு. மரைமலர் - தாமரை மலர். உவகைமுத்து - இன்பக் கண்ணீர்த்துளி. ( 3 )
    ------------

      2381. இலங்கு பூண்வரை மார்புற வெடுத்தவன் முயங்க
      மலங்கி வாட்கண்கள் வருபனி சுமந்துடன் வெருவிக்
      கலங்கு நீரிடைக் கலக்குறு கருங்கய லிணைபோற்
      புலம்பி யோடின செவியுற நெடியன பொலிந்தே.

    பொருள் : அவன் இலங்குபூண் வரை மார்புஉற எடுத்து முயங்க - (அவர்களைச்) சீவகன் விளங்கும் பூணணிந்த மலையனைய மார்பிலே பொருந்துமாறு எடுத்துத் தழுவுதலினால்; வாட்கண்கள் மலங்கி வருபனி சுமந்து உடன் வெருவி - (முதலில்) வாள் போன்ற கண்கள் கலங்கி, வரும் நீரைச் சுமந்து, அச்சுற்று; கலங்கும் நீரிடைக் கலக்குஉறு கருங்கயல் இணைபோல் - கலங்கிய சின்னீரிடைக் கலங்கல் உற்ற கரிய இணைக் கயல்கள் போல; புலம்பி ஓடின - வருந்திக் கெட்டனவாகி; பொலிந்து செவியுற நெடியன - (பிறகு) பொலிவுற்றுச் செவிவரை நீண்டனவாயின.

    விளக்கம் : முதலில் அவன் பிரிவைக் குறித்து வருந்தின; பிறகு தெளிந்துன. ஓடுதல் - கெடுதல்; ஓடிய துணர்தலும் (சிறுபாண். 214) என்றாற் போல. ( 4 )
    ------------

      2382. வேனல் வாய்ப்பட்டு விரிமுகை தளிரொடு கரிந்த
      கானக் கார்முல்லை கார்மழைக் கெதிர்ந்தன போல
      மான மங்கையர் வாட்டமும் பரிவுந்தங் கணவன்
      றேனெய் மார்பகந் தீண்டலுந் தீர்ந்தொளி சிறந்தார்.

    பொருள் : வேனல் வாய்ப்பட்டு விரிமுகை தளிரொடு கரிந்த - கோடையில் அகப்பட்டு விரியும் முகையொடுந் தளிரொடுங் கரிந்த; கானக் கார்முல்லை கார் மழைக்கு எதிர்ந்தன போல - காட்டிலுள்ள முல்லைகள் கார்கால மழையை ஏற்றுக் கொண்டன போல; மான மங்கையர் வாட்டமும் பரிவும் - புலவியுடைய அம் மாதரார் அடைந்த மெய் வாட்டமும் மனப்பரிவும்; தம் கணவன் தேன்எய் மார்பகம் தீண்டலும் தீர்ந்து - தம் கணவனுடைய தேன் போன்ற மார்பைத் தீண்டின அளவிலே தெளிந்து; ஒளி சிறந்தார் - ஒளிமிக்கார்.

    விளக்கம் : மழைக்கு : உருபு மயக்கம். தேனைப் போன்ற மார்பு என்றார், தேனுக்கு இன்சுவை நிகழ்ந்த காலத்தே புளிச்சுவை நிகழுமாறு போல, இம் மார்பும் இம் மகளிர்க்கு இன்பம் நிகழ்த்தின காலத்தே பிறர்க்கும் இவ்வாறாம் என்னும் கருத்தை அவர்க்குப் பிறப்பித்தலின். ( 5 )
    ------------

      2383. சேலுண் கண்ணியர் சிலம்பொடு திலகமுந் திருத்தி
      மாலை நல்லன மதுக்கமழ் தகையன மிலைச்சிக்
      கோல மென்முலைக் குங்கும மிடுகொடி யெழுதிச்
      சோலை வேய்மரு டோண்முத்துந் தொழுதக வணிந்தார்.

    பொருள் : சேல் உண் கண்ணியர் - சேலனைய மையுண்ட கண்களையுடைய பணிமகளிர்; சிலம்பொடு திலகமும் திருத்தி - (தேவியர்க்குச்) சிலம்பிலிருந்து திலகம்வரை திருத்தி; மதுக்கமழ் தகையன நல்லன மாலை மிலைச்சி - தேன் மணக்குந் தகைமையன ஆகிய நல்ல மாலைகளைப் புனைந்து; கோல மென்முலைக் குங்குமம் இடுகொடி எழுதி - அழகிய மென்முலைகளின்மேற் குங்குமத்தாலே கொடி எழுதி; சோலை வேய்மருள் தோள் முத்தும் தொழுதக அணிந்தார் - சோலையிலுள்ள மூங்கில் மருளுந்தோளிலே முத்துவடத்தையும் கணவன் தொழுமாறு அணிவித்தனர்.

    விளக்கம் : சேல் போன்ற கண். மையுண்கண் எனத் தனித்தனி கூட்டுக. சிலம்பு முதலாகத் திலக மீறாகவுள்ள எல்லா அணிகளையும் திருத்தி என்றவாறு. இடுகொடி - எழுதுங்கொடி; தொய்யில். ( 6 )
    ------------

      2384. நஞ்சு மேய்ந்திளங் களிக்கயன் மதர்ப்பன போல
      வஞ்சி வாட்கண்கண் மதர்த்தன வலர்ந்துடன் பிறழப்
      பஞ்சு சூழ்மணி மேகலை பரிந்தவை சொரிய
      வஞ்சி நுண்ணிடை கவின்பெற வைகினன் மாதோ.

    பொருள் : இளங் களிக்கயல் நஞ்சு மேய்ந்து மதர்ப்பன போல - இளைய, களிப்புடைய கயல்மீன்கள் நஞ்சினைப் பருகிச் செருக்குவனபோல; வாள் கண்கள் அஞ்சி மதர்த்தன - வாள் போன்ற கண்கள் அஞ்சிச் செருக்கியவாய்; உடன் அலர்ந்து பிறழ - எல்லாம் தெளிந்து பிறழ; பஞ்சுசூழ் மணிமேகலை பரிந்தவை சொரிய - ஆடையிற் சூழ்ந்த மணிமேகலையில் அற்ற காசுகள் சிந்த; வஞ்சி நுண்இடை கவின்பெற வைகினன் - கொடி போன்ற நுண்ணிடை அழகுபெற (அவர்களுடன்) கூடியிருந்தனன்.

    விளக்கம் : அவசத்தாற் பிறந்த அனந்தர் நோக்கினை நஞ்சு என்றார். உடன் - எல்லாம். பஞ்சு : ஆடைக்குக் கருவி ஆகுபெயர். தனது நுண்மையால் ஊற்றின்பம் பெறாத இடை, மெய் புகுந்தாலொத்த முயக்கத்தாலே (அகநா. 110 : 365 : 7) ஊற்றின்பம் பெறும்படி வைகுதலின், நுண்ணிடை கவின்பெற என்றார். ( 7 )
    ------------

      2385. அரிபொற் கிண்கிணி யணிகிளர் சிலம்பொடு சிலம்புந்
      திருவச் சீறடிச் செழுமலர்க் கொழுங்கயன் மழைக்க
      ணுருவ நுண்ணிடை யொளிமணி வருமுலை யுருவா
      ரெரிபொன் மேகலை யிலக்கணை கடிவினை நொடிவாம்.

    பொருள் : அரி பொன் கிண்கிணி அணிகிளர் சிலம்பொடு சிலம்பும் - பரல் அணிந்த பொன்னாலான கிண்கிணியும் அழகு பொருந்திய சிலம்பும் ஒலிக்கின்ற; திருசீறடிச் செழுமலர்க் கொழுங்கயல் மழைக்கண் - திருவையுடைய சிற்றடித் தாமரையையும், கொழுவிய கயலனைய மழைக் கண்களையும்; உருவ நுண்இடை - உருவத்தால் நுண்ணிய இடையையும்; ஒளிமணி வருமுலை - ஒளிரும் முத்தணிந்த வளரும் முலைகளையும்; உருஆர் எரிபொன் மேகலை - அழகுற்ற விளங்கும் பொன்னாலான மேகலையையும் உடைய; இலக்கணை கடிவினை மொழிவாம் - இலக்கணையின் மணவினையை இனி மொழிவோம்.

    விளக்கம் : திருவ : அ : அசை.அரி - பரல். “(அரி - ஐது) ஐதாகிய பொன்னாவது தகடு“ என்பர் நச்சினார்க்கினியர். திருவ : ஈற்றகரம் அசை. வருமுலை : வினைத்தொகை. உரு - அழகு. கடிவினை - மணத்தொழில். ( 8 )
    ------------

      2386. ஆழி மால்கட லகன்பெருங் கேள்விக டுறைபோ
      யூழி னன்றியு முறுவினை யோரையின் முடிப்பான்
      சூழி யானையுந் துளங்குபொற் சிவிகையு முடையான்
      வேழ வேந்தற்கு விழுப்பெருங் கணிவிரித் துரைத்தான்.

    பொருள் : ஆழி மால்கடல் அகன்பெருங் கேள்விகள் துறைபோய் - கரையையுடைய பெரிய கடல்போன்ற பெரிய நூல்களை முற்றக் கற்று; சூழி யானையும் துளங்கு பொன் சிவிகையும் உடையான் - முகபடாம் அணிந்த யானையையும் விளங்கும் பொற்சிவிகையையும் பெற்றவனாகிய; விழுப் பெருங்கணி. மிகச் சிறந்தவனாகிய கணி; ஊழின் அன்றியும் உறுவினை ஓரையின் முடிப்பான் - ஊழ்வினையால் தானே முடிதலே அன்றி இந் நல்வினையை நல்லோரையானும் முடித்தற்கு; வேழ் வேந்தற்கு விரித்து உரைத்தான் - களிற்றையுடைய மன்னற்கு நன்னானை விளக்கிக் கூறினான்.

    விளக்கம் : ஆழி - கரை. மால் - பெரிய. துறைபோதல் - முற்றக் கற்றல். யானை சிவிகை முதலியவற்றை விருதாகப் பெற்ற கணி என்றவாறு.

      “........................புரையோர் புகழ
      நிழற்பெருங் குடையும் நேராசனமும்
      செருப்பொடு புகுதலும் சேனை யெழுச்சியும்
    பெற்ற கணி என்பர் பெருங்கதையாசிரியர்; (2. 2 : 17 - 19). வேந்தன் : சீவகன். ( 9 )
    ------------

      2387. ஓங்கு கொற்றவற் கோதிய வுயர்பெரு நாளால்
      வீங்கு வெள்ளியங் குன்றென விளங்கொளி யுடைய
      தேங்கொண் மாலையுந் திலகமு மணிந்ததிண் குணத்த
      பாங்கிற் பண்ணின நூற்றெட்டுப் படுமதக் களிறே.

    பொருள் : ஓங்கு கொற்றவற்கு ஓதிய உயர்பெரு நாளால் - உயர்ந்த மன்னனுக்குக் கூறிய உயர்ந்த பெருநாளிலே; வீங்கு வெள்ளி அம் குன்றென - விளக்கு ஒளி உடைய பருத்த வெள்ளி மலைபோல விளங்கும் ஒளியுடையனவாய், தேன்கொள் மாலையும் திலகமும் அணிந்த திண்குணத்த - தேன் பொருந்திய மாலையும் பொட்டும் அணிந்த திண்ணிய பண்புடையனவாய் (உள்ள); நூற்றெட்டு மதம்படு களிறு - நூற்றெட்டு மதகளிறுகள்; பாங்கின் பண்ணின - பாங்குறப் பண்ணப்பட்டன.

    விளக்கம் : வெள்ளணி யணிந்தனவாதலின் வெள்ளிக்குன்று போன்றன; வெள்ளிக் குன்றெனப் பண்ணப்பட்டன. ( 10 )
    ------------

      2388. விளங்கு வெண்டுகி லுடுத்துவெண் சாந்துமெய் பூசித்
      துளங்கு மஞ்சிகை துளைச்சிறு காதினுட் டுளங்க
      வளங்கொண் மாலைகள் சூடிமுத் தணிந்துவண் முரசங்
      களங்கொள் வேழத்தி னேற்றினர் கடிமுர சறைவான்.

    பொருள் : விளங்கு வெண்துகில் உடுத்து - விளங்கும் வெண்மையான ஆடையை உடுத்து; வெண்சாந்து மெய்பூசி வெள்ளைச் சந்தனத்தை மெய்யில் அணிந்து; துளங்கும் மஞ்சிகை துளைச்சிறு காதினுள் துளங்க - அசையும் மஞ்சிகை எனும் காதணி சிறு துளையையுடைய காதினுள் அசைய; வளம்கொள் மாலைகள் சூடி - வளமிகும் மாலைகளைச்சூடி; முத்து அணிந்து - முத்து மாலை புனைந்து; கடிமுரசு அறைவான் - மணமுரசறைவதற்கு; களம்கொள் வேழத்தின் வண்முரசம் ஏற்றினர் - போர்க்களத்திலே தலைமை கொண்ட யானையின்மீது வண்முரசை ஏற்றினர்.

    விளக்கம் : மங்கலச் செயல்களை அறிவிக்கும் வள்ளுவன் வெண் மலர் வெள்ளாடை முதலியன அணிதல் மரபு. மஞ்சிகை - ஓரணிகலன். அறைவான் - அறைதற்கு. ( 11 )
    ------------

      2389. கேண்மின் கேண்மின்கள் யாவரு மினியன கேண்மின்
      பூண்மி னித்தில மணிவடம் பூசுமின் சாந்தம்
      வாண்மி னுண்ணிடை வருந்தினுஞ் சூட்டணிந் தழகா
      ராண மாகிய வருவிலை வண்ணப்பட் டுடுமின்.

    பொருள் : யாவரும் இனியன கேண்மின்! கேண்மின்! கேண்மின்கள்! - எல்லோரும் யான் கூறும் இனிய மொழிகளைக் கேண்மின்கள்! கேண்மின்கள்!! கேண்மின்கள்!!!; நித்திலம் மணிவடம் பூண்மின் - முத்து மாலையையும் மணிவடத்தையும் அணிமின்!; சாந்தம் பூசுமின்! - சந்தனம் பூசுமின்!; வாள்மின் நுண் இடை வருந்தினும் - ஒளிரும் மின்னனைய மெல்லிடை வருந்தினாலும்; சூட்டு அணிந்து - நெற்றிச் சூட்டை அணிந்து - அழகு ஆர் ஆணம் ஆகிய அருவிலை வண்ணப் பட்டு உடுமின் - அழகு பொருந்திய விருப்பமாகிய அரிய விலைபொருந்திய நிறமுடைய பட்டை அணிமின்!

    விளக்கம் : கேண்மின்; விரைசொல்லடுக்காதலின் மூன்றாயிற்று. வடம் பூண்மின், சாந்தம் பூசுமின் என மாறி இயைக்க. நித்தில மணி : பண்புத்தொகை. ஆணம் - நேயம். உடுமின் - உடுத்துங்கோள்.( 12 )
    ------------

      2390. பிள்ளை வெண்பிறைச் சிறுநுதற் பெரும்பிட்ட மணிமி
      னுள்ள மேனியு மொளிர்மணிக் கலங்களிற் புனைமின்
      வள்ளல் வாய்மொழி யான்படு பாலமிர் தல்லா
      லுள்ள மேவினும் பிறவுணப் பெறீரெழு நாளும்.

    பொருள் : வெண் பிள்ளைப் பிறைச் சிறுநுதல் பெரும் பட்டம் அணிமின்! - வெண்மையான, பிள்ளையாகிய பிறை போன்ற சிறு நுதலிலே பெரிய பட்டத்தைப் புனைமின்!; உள்ள மேனியும் ஒளிர்மணிக் கலங்களின் புனைமின்! - மெய்யெங்கும் விளங்கும் மணிக்கலன்களாலே அணிமின்!; வள்ளல் வாய்மொழி - அரசன் அருளிச் செயலாகையால்; ஆன்படு பால் அமிர்து அல்லால் பிற - பசுவின் பால் கலந்த சோற்றையல்லாமற் பிறவற்றை; எழுநாளும் உள்ளம் மேவினும் உணப்பெறீர் - ஏழு நாட்களும் உம் மனம் விரும்பினும் உண்ணாதிருப்பீராக!

    விளக்கம் : பிள்ளைப் பிறை என்றது, பிள்ளை குழவி (தொல். மரபு. 24) என்னுஞ் சூத்திரத்து உம்மையை எச்சப்படுத்தி அதனாற் கொள்க. பிள்ளைப் பிறை என்றது இளம்பிறையை. இது நெற்றிக்குவமை. முன்பு அணியணிந்த இடமொழிய உள்ள மேனி என்க. வள்ளல் வாய் மொழி - அரசன் கட்டளை. பாலமிர்து - பாற் சோறு; பாயசம். ( 13 )
    ------------

      2391. வாழை மல்கிய மணிக்குலைக் கமுகொடு நடுமின்
      றாழ நாற்றுமின் றாமங் ளகிற்குடம் பரப்பி
      யாழின் பாடலு மாடலு மாங்குதோ றியற்றிப்
      போழு மால்விசும் பெனப்பல பொலங்கொடி யெடுமின்.

    பொருள் : மல்கிய மணிக்குலைக் கமுகொடு வாழை நடுமின் - நிறைந்த மணிபோன்ற குலைகளையுடைய கமுகினுடன் வாழையை நடுமின்; தாமங்கள் தாழ நாற்றுமின் - மாலைகளைத் தாழத் தொங்கவிடுமின்!; அகில் குடம் பரப்பி - அகிற் புகையிட்ட குடங்களைப் பரப்பி; அரங்குதோறும் பாழின் பாடலும் ஆடலும் இயற்றி - அரங்குகளிலெல்லாம் யாழின் பாட்டையும் ஆடலையும் இயற்றி, மால் விசும்பு போழும் எனப் பல பொலங்கொடி எடுமின்! - பெரிய வானைப் பிளப்பபனபோலப் பல பொற்கொடிகளை எடுமின்!

    விளக்கம் : மல்கிய - நிறைந்த மணிக்குலை - நீலமணிபோன்ற குலை. நாற்றுதல் - தூங்கவிடுதல், தாமங்கள் நாற்றுமின் என மாறுக. மால் விசும்பு போழும் எனக் கண்டோர் கூறும்படி என்க. ( 14 )
    ------------

      2392. மாலை வாண்முடி மன்னவன் மணவினை யெழுநாட்
      சீல மில்லன சினக்களி றகற்றுகென் றணிந்த
      கோல மார்முர சிடியுமிழ் தழங்கென முழங்க
      நீல மாக்கட னெடுநகர் வாழ்கென வறைந்தார்.

    பொருள் : மாலைவாள் முடி மன்னவன் மணவினை எழுநாள் - மாலை அணிந்த ஒளிரும் முடியையுடைய அரசனுடைய மணவினை நிகழும் எழுநாளினும்; சீலம் இல்லன சினக்களிறு அகற்றுக என்று - ஒழுக்கமில்லனவாகிய கொலைக்களிறுகளை நீக்குக என்று கூறி; நீலமாக்கடல் நெடுநகர் வாழ்க என - நீலப் பெருங்கடல் சூழ்ந்த பெருநகர் வாழ்க என்று வாழ்த்தி; அணிந்த கோலம் ஆர்முரசு இடிஉமிழ் தழங்கு என முழங்க - அணிசெய்யப் பெற்ற ஒப்பனை நிறைந்த முரசை இடி உமிழ்ந்த ஓசைபோல முழங்கும்படி; அறைந்தார் - அறைந்தனர்.

    விளக்கம் : நச்சினார்க்கினியர், நெடுநகர் வாழ்கென என்பதைக் கேண்மின் என்பதன் முன் அமைப்பர். சீலம் - ஒழுக்கம். இல்லனவாகிய சினக்களிறு என்க. அவை திருமணவிழாவிற் குழுமும் மாந்தர்க்குத் தீங்கு செய்யும் என்பதுபற்றி அகற்றுக என்றவாறு.

      விழாக்கொள் கம்பலின் வெகுண்டுவெளின் முருக்கி
      எழாநிலை புகாஅ இனங்கடி சீற்றத்து
      ஆணை யிகக்கும் அடக்கருங் களிறு
      சேணிகந் துறைந்த சேனையிற் கடிகென.

    என்றார் கதையினும். ( 1 - 38; 90 - 3.) தழங்கு - முழக்கம். ( 15 )
    ------------

      வேறு
      2393. முரச மார்ந்தபின் மூவிரு நாள்கள்போய்
      விரைவொ டெங்கணும் வெள்வளை விம்மின
      புரையில் பொன்மணி யாழ்குழ றண்ணுமை
      வரவ வானி னதிர்ந்த வணிமுழா.

    பொருள் : முரசம் ஆர்ந்த பின் - முரசறைந்த பிறகு ; மூவிரு நாள்கள் போய் - ஆறு நாட்கள் கழிய; எங்கணும் விரை வொடு வெள்வளை விம்மின - எங்கும் பரபரப்புடன் வெண்சங்குகள் முழங்கின; புரைஇல் பொன்மணி யாழ்குழல் தண்ணுமை அணிமுழா - குற்றம் இல்லாத யாழும் குழலும் தண்ணுமையும் அழகிய முழாவும்; அரவ வானின் அதிர்ந்த - ஒலியுறும் முகில் முழக்கென முழங்கின.

    விளக்கம் : போய் - போக. போகா நிற்க இவையும் நிகழ்ந்தன என மேல் வருவனவற்றையும் உடனிகழ்ச்சியாக்குக. ஆர்த்த என்பது ஆர்ந்த என விகாரப்பட்டது என்பர் நச்சினார்க்கினியர். ( 16 )
    ------------

      2394. விண்வி ளக்குவ போல்விரி பூந்துகள்
      கண்வி ளக்கிக் கலந்தவெண் சாந்தினான்
      மண்வி ளக்கி மலர்ப்பலி சிந்தினார்
      பண்வி ளக்கிய பைங்கிளி யின்சொலார்.

    பொருள் : பண் விளங்கிய பைங்கிளி இன்சொலார் - பண்ணைத் தோற்றுவித்த இனிய கிளிமொழியார்; விண் விளக்குவ போல் - வானுலகத் துராலைத் துடைக்குமாறு போல; விரிபூந்துகள் கலந்த கண் விளக்கி - மிகுந்த பூந்துகளை அதனுடன் கலந்த மணி முதலியவற்றைப் போக்கி; வெண்சாந்தினால் மண் விளக்கி - வெண்மையான சாந்தினால் தரையை மெழுகி; மலர்ப்பலி சிந்தினார் - (இல்லுறை தெய்வத்திற்கு) மலர்ப் பலியையும் சிந்தினார்.

    விளக்கம் : விண் - ஆகுபெயர் விளக்குதல் - துடைத்துத் தூய்மை செய்தல் கண்விளக்கி - தகுதிபற்றிய வழக்கு. மண்விளக்கி - மண்ணைமெழுகி. மலர்ப்பலி - மலராகிய பலி. இல்லுறை தெய்வத்திற்குப் பலி சிந்தினார் என்க. ( 17 )
    ------------

      2395. ஆய்ந்த மோட்டின வான்படு பாலுலை
      போந்து பொங்கிய வாவியி னாற்பொலிந்
      தேந்து மாடங்க டாமிழி னென்பன
      பூந்து கில்புறம் போர்த்தன போன்றவே.

    பொருள் : இழின் என்பன ஏந்தும் மாடங்கள் தாம் - இழின் என்னும் ஓசையை உடைய உயர்ந்த மாடங்கள் தாம்; ஆய்ந்த மோட்டின ஆன்படு பால்உலை போந்து பொங்கிய ஆவியினால் பொலிந்து - அழகிய வயிற்றையுடையவாகிய ஆவினிடங் கிடைத்த பால்உலை பானையின் புறத்தே போந்து பொங்கிய ஆவியினாலே பொலிவுற்று; பூந்துகில் புறம் போர்த்தன போன்ற - அழகிய ஆடையைப் புறத்திலே போர்த்தன போன்றன.

    விளக்கம் : ஆய்ந்த - அழகிய. மோட்டின - வயிற்றை யுடையன. மாடங்கள் அகத்தேயிருந்து புறம்போந்து சுற்றிய பாலாவியினால் அம் மாடங்கள் துகில்போர்தத்ன போல் தோன்றும் என்பதாம். ( 18 )
    ------------

      2396. திருவி னல்லவர் செம்மலர்ச் சீறடி
      பரவி யூட்டிய பஞ்சரத் தக்களி
      விரவி மீநிலஞ் சேர்ந்தொளி பூத்துராய்க்
      குருதி வானிலங் கொண்டது போன்றதே.

    பொருள் : திருவின் நல்லவர் செம்மலர்ச் சீறடி - திருமகளினும் நல்லவர்களின் சிவந்த மலர்போலும் சிற்றடியை; பரவி ஊட்டிய அரத்தப் பஞ்சுக் களி - சேடியர் பரவி ஊட்டிய செம்பஞ்சியின் சேறு; மீநிலம் விரவிச் சேர்ந்து - நிலத்தின் மீது மிகுந்து சேர்தலின்; ஒளிபூத்து உராய் - அவ்வொளி பூத்துப் பரந்து; குருதிவான் நிலம் கொண்டது போன்றது - செக்கர்வான் நிலத்தைக் கொண்ட தன்மை போன்றது.

    விளக்கம் : திருவினும் நல்லவர் எனல் வேண்டிய சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. திரு - திருமகள். செம்மலர் - செந்தாமரை மலர். பஞ்சு அரத்தக் களி எனக் கண்ணழிக்க. அரத்தம் - செந்நிறம். உராய் - பரந்து. குருதிவான் - செக்கர் வானம்.(19)
    ------------

      2397. பால்வெண் டிங்கண் மணிக்கை படுத்தவை
      போலு மாடியி னோக்கிப் பொலங்கலக்
      கோலஞ் செய்பவர் கோல வெறிப்பினான்
      மாலை வண்டின மாலைக்கண் கொண்டவே.

    பொருள் : பல்வெண் திங்கள் மணிக்கை படுத்தவை போலும் ஆடியில் - பால் போன்ற வெண்மையான திங்கள் மணிக்காம்பு சேர்ந்தனவற்றை ஒக்கும் கண்ணாடியில்; நோக்கி - பார்த்துக் கொண்டு; பொலம்கலக் கோலம் செய்பவர் - பொற் கலத்தையுடைய ஒப்பனையைச் செய்பவர்; கோல வெறிப்பினால் - கோலத்தால் வரும் கண் வெறிப்பாலே; மாலை வண்டினம் மாலைக் கண் கொண்ட - ஒழுங்கினையுடைய வண்டினம் கண்தோன்றா வாயின.

    விளக்கம் : மணிக்கை - மணியாலியன்ற கைப்பிடி. ஆடி - கண்ணாடி. பொலங்கலம் - பொன் அணிகலன், வெறிப்பு - கண்வெறியோடல். மாலை வண்டினம் - ஒழுங்குடைய வண்டுத்திரள். மாலைக்கண் - ஒரு வகைக் கண்ணோய். ( 20 )
    ------------

      2398. போக மாமழை போழ்ந்து புதத்தொறு
      மாக மேந்துவ பொன்மணித் தோரண
      மாக நாற்றின தாம மணிக்குட
      மேக மாநகர் வீதி நிரைத்தவே.

    பொருள் : ஏக மாநகர் வீதி - தனக்கு நிகரில்லாத நகரின் தெருக்களிலே; புதத்தொறும் போக மாமழை போழ்ந்து - வாயில் தோறும் நுகர்ப்பொருளை நல்கும் மழையைப் பிளந்து; மாகம் ஏந்துவபோல் - வாளை ஏந்துவன போன்று; மணித்தோரணம் - மணித் தோரணங்களிலே; தாமம் ஆக நாற்றின - தாமங்கள் பொருந்தத் தூக்கப் பெற்றன; மணிக்குடம் நிரைத்த - மணிக்குடங்கள் வரிசையாக வைக்கப்பட்டன.

    விளக்கம் : போக மாமழை - நுகர் பொருளைத் தரும் பெரிய முகில். புதவு - புத என நின்றது; வாயில் மாகம் - வானம். ஏகமாநகர் - ஒப்பற்ற நகர். ( 21 )
    ------------

      2399. ஆடன் மங்கையர் கிண்கிணி யார்ப்பொலி
      பாட லின்னொலி பண்ணமை யாழொலி
      மோடு கொண்முழ விண்முழக் கீண்டிய
      மாட மாநகர் மாக்கட லொத்ததே.

    பொருள் : ஆடல் மங்கையர் கிண்கிணி ஆர்ப்பு ஒலி - ஆடுகின்ற மாதர்களின் கிண்கிணி யார்க்கும் ஒலியும்; பாடல் இன ஒலி - பாடலில் எழும் இனிய ஒலியும்; பண் அமை யாழ் ஒலி - பண்ணமைத்த யாழின் ஒலியும்; மோடுகொள் முழவின் முழக்கு - பெருமை கொண்ட முழவின் ஒலி; ஈண்டிய - ஈண்டியிசைத்தலால்; மாநகர் மாக்கடல் ஒத்தது - அப் பெருநகரம் பெரிய கடலைப் போன்றது.

    விளக்கம் : ஆடன் மங்கையர் - விறலியர். மோடு - பெருமை. மாநகர் - இராசமாபுரம். ( 22 )
    ------------

      2400. சுந்த ரத்துகள் பூந்துகள் பொற்றுக
      ளந்த ரத்தெழு மின்புகை யாலரோ
      விந்தி ரன்னகர் சாறயர்ந் திவ்வழி
      வந்தி ருந்தது போன்மலி வுற்றதே.

    பொருள் : சுந்தரத் துகள் பூந்துகள் பொன்துகள் அந்தரத்து எழும் இன் புகையால் - சிந்துரத் துகளாலும் பூந்துகளாலும் பொன்துகளாலும் வானில் எழும் இனிய புகையாலும்; இந்திரன் நகர் சாறு அயர்ந்து - அமராவதி நகரம் விழவு ஆற்றி; இவ்வழி வந்து இருந்தது போல் மலிவு உற்றது - ஈண்டு வந்து தங்கினாற்போல் இந் நகரம் பொலிவினால் மல்கியது.

    விளக்கம் : சுந்தரத்துகள் - சிந்துரப்பொடி. பூந்துகள் - மகரந்தப் பொடி. பொற்றுகள் - பொற்சுண்ணம். இன்புகை - மணப்புகை. சாறு - திருவிழா . ( 23 )
    ------------

      வேறு
      2401. நிரந்து கன்னலு நெய்யு நீந்தப்பெய்
      திரந்து பாலமிர் தெங்கு மூட்டுவார்
      பரந்து பூந்துகில் பன்ம ணிக்கலஞ்
      சுரந்து கொள்கெனச் சுமக்க நல்குவார்.

    பொருள் : எங்கும் நிரந்து கன்னலும் நெய்யும் நீந்தப் பெய்து பால் அமிர்து இரந்து ஊட்டுவார் - எங்கும் ஒழுங்காகக் கருப்பஞ் சாறும் நெய்யும் வெள்ளமெனப் பெய்து பாற்சோற்றை வேண்டிக் கொண்டு உண்பிப்பார்; பூந்துகில் பன்மணிக் கலம் சுரந்து கொள்க எனப் பரந்து சுமக்க நல்குவார் - அழகிய ஆடையையும் பல மணிக் கலன்களையும் தொலைவின்றிக் கொள்க என்று எங்கும் சென்று வேண்டி, அவர்கள் சுமக்கும் அளவு கொடுப்பார்.

    விளக்கம் : நிரந்து - பரவி. கன்னல் - கருப்பஞ்சாறு. கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று என்றார் பிறரும். ( 24 )
    ------------

      2402. வருக்கை யின்பழம் வாழை யின்கனி
      திருக்கொண் மாங்கனி தெளித்த தேறலைக்
      கருப்புச் சாற்றொடு கலந்து கைசெய்து
      புரித்த தெங்கிள நீரும்பூ ரிப்பார்.

    பொருள் : வருக்கை இன்பழம் வாழை இன்கனி திருக்கொள் மாங்கனி - பலவின் இனிய பழத்தையும் வாழையின் இனிய கனியையும் அழகுற்ற மாங்கனியையும்; தெளித்த தேறலைக் கருப்புச் சாற்றொடு கலந்து கைசெய்து - நீராக்கின தேறலை இனிய கருப்பஞ் சாற்றுடன் கலந்து சமைத்து (அதனையும்); புரித்த தெங்கு இளநீரும் பூரிப்பார் - விருப்புற்ற இளநீரையும் நிரப்பி வைப்பார்.

    விளக்கம் : வருக்கை - பலாமரம்; வருக்கை முக்கனியுளொன்று. ( 25 )
    ------------

      2403. கூந்த லேந்திய கமுகங் காய்க்குலை
      யாய்ந்த மெல்லிலை பளித மாதியா
      மாந்தர் கொள்ளைகொண் டுண்ண மாநில
      மேந்த லாம்படித் தன்றி யீட்டுவார்.

    பொருள் : கூந்தல் ஏந்திய கமுகங்காய்க் குலை - கமுக மரத்தின் உச்சியில் ஏந்திய பாக்குக் குலைகளையும்; ஆய்ந்த மெல்லிலை - சிறந்த வெற்றிலைகளையும்; பளிதம் ஆதிஆ - கருப்பூரம் முதலான முகவாசங்களையும்; மாந்தர் கொள்ளை கொண்டு உண்ண - மக்களெல்லோரும் மிகுதியாகக் கொண்டு தின்னும் படி; மாநிலம் ஏந்தலாம் படித்து அன்றி ஈட்டுவார் - நிலம் சுமக்க முடியாதபடி குவிப்பார்கள்.

    விளக்கம் : முற்செய்யுள்களில் பாலடிசில் முதலிய உணவுப் பொருள்களைக் கொடுத்ததாகக் கூறியவர் ஈண்டு வெற்றிலை முதலிய முகவாசப் பொருள்களைக் கூறினார். உண்ணுதல் தின்னுதல் என்னும் பொருட்டு. நச்சினார்க்கினியர் மாநிலம் உண்ண எனக் கூட்டுவர். அவர், வெற்றிலையை உண்ணவென்றல் மரபன்மையின், ஈண்டு மாநிலம் உண்ண எனவே மண்ணுண்ணும்படி என்னும் பொருட்டாம். அடகு புலால் பாகு பாளிதமும் உண்ணான் என்பது பன்மை பற்றிக் கூறிற்றெனல் வேண்டும்; பாகு பசிப்பிணி தீர நுகரும் பொருளன்மையின். இனி, மாந்தர் முற்கூறிய பாலடிசில் முதலியவற்றை உண்டலின், அவர் தின்றற்குப் பளித முதலியவற்றைக் கொள்ளை கொண்டு சுமக்கலாம் படித்தன்றாக ஈட்டுவா ரென்றலுமாம், என்பர். ( 26 )
    ------------

      2404. தூம மார்ந்தன துப்பு ரவ்வுக
      ளேம மாயின வேந்தி நிற்றலா
      னாம நன்னகர் நன்பொற் கற்பகங்
      காம வல்லியுங் களங்கொண் டிட்டதே.

    பொருள் : தூமம் - நறுமணப் புகைப் பொருள்களையும்; ஆர்ந்தன துப்புரவுகள் - நிறைந்தனவாகிய நுகர் பொருள்களையும்; ஏமம் ஆயின - பிற நலம்பயக்கும் பொருள்களையும்; ஏந்தி நிற்றலால் - (ஆடவரும் மகளிரும்) ஏந்தி நிற்பதால்; நாம நன்னகர் - புகழ் பெற்ற இந்த நல்ல நகரை; நன்பொன் கற்பகம் காம வல்லியும் களங்கொண்டிட்டது - அழகிய பொற் கற்பகமும் காமவல்லியும் இடங்கொண்டிட்டன போன்றன.

    விளக்கம் : இட்டது : ஒருமை பன்மை மயக்கம். தூமம் - புகை. துப்புரவ்வுகள் என்புழி வகரமெய் வண்ணத்தால் விரிந்தது. ஏமம் - இன்பம். கற்பகம். ஆடவர்க்கும் காமவல்லி மகளிர்க்கும் உவமை. ( 27 )
    ------------

      2405. வழுவின் மாந்தரு மாவு மல்கிய
      தொழுதி தன்னையான் சுமக்க லேனேனா
      முழுது மண்மகண் முற்றும் வாய்திறந்
      தழுதிட் டாணெயும் பாலு மாகவே.

    பொருள் : வழுஇல் மாந்தரும் மாவும் மல்கிய தொழுதி தன்னை யான் முழுதும் சுமக்கலேன் எனா - குற்றமற்ற மாந்தரும் விலங்கும் நிறைந்த தொகுதியை யான் முழுதும் சுமக்க ஆற்றலிலேன் என்று; மண்மகள் முற்றும் வாய்திறந்து - நிலமகள் வாய் முற்றும் திறந்து; நெய்யும் பாலுமாக; அழுதிட்டாள் - அழுது விட்டாள்.

    விளக்கம் : இஃது அரவம் கூறியது. நிலம் சுமக்கலாற்றாதபடி மாந்தர் குழுமினர், பொருள்கள் நிரம்பின, பேரொளி மிக்கது என்பது கருத்து. தொழுதிதொகுதி. ( 28 )
    ------------

      2406. கொடியெழுந் தலமருங் கோயில் வாயில்கண்
      மடலெழுந் தலமருங் கமுகும் வாழையு
      மடியிருந் துகிலுடை மாக்க ணாடியும்
      புடைதிரள் பூரண குடமும் பூத்தவே.

    பொருள் : கொடி எழுந்து அலமரும் கோயில் வாயில்கள் - துகிற் கொடிகளெழுந்தசையும் கோயிலின் வாயில்களெல்லாம் ; மடல் எழுந்து அலமரும் கமுகும் வாழையும் - மடல் தோன்றி அசையும் கமுக மரமும் வாழைமரமும்; மடி இருந் துகில் உடை மாக்கணாடியும்-பெரிய மடித்துகிலையுடைய பெரிய கண்ணாடியும்; புடைதிரள் பூரண குடமும் பூத்த - புடை திரண்ட நிறைகுடமும் மலர்ந்தன.

    விளக்கம் : கோயில் - அரண்மனை. மடல் - புல்லினத்தின் ஓர் உறுப்பு. இருந்துகில் - கரிய உறைத்துகில் எனினுமாம். மாக்கண்ணாடி - பெரிய கண்ணாடி. புடை - பக்கம். பூரணகுடம் - நிறைகுடம். பூத்த - பொலிவுபெற்றன. ( 29 )
    ------------

      2407. கடிமலர் மங்கையர் காய்பொற் கிண்கிணி
      யுடைமணி பொற்சிலம் பொலிக்குங் கோயிலுட்
      குடைநிழன் மன்னர்தங் கோதைத் தாதுவேய்க்
      தடிநிலம் பெறாததோர் செல்வ மார்ந்ததே.

    பொருள் : கடிமலர் மங்கையர் காய்பொன் கிண்கிணி - மணமலர் அணிந்த மாதர்களின் பொற் கிண்கிணியும்; உடை மணி பொன் சிலம்பு ஒலிக்கும் கோயிலுள் - அவர்களுடைய மணிமேகலையும் பொற்சிலம்பும் ஒலிக்கும் அரண்மனையிலே; குடைநிழல் மன்னர்தம் கோதைத் தாது வேய்ந்து - குடைநிழலையுடைய வேந்தரின் மலர்மாலையின் தாது வேய்தலின்; அடி நிலம் பெறாதது ஓர் செல்வம் ஆர்ந்தது - அடிகள் தாதின்மேலன்றி நிலத்தின்மேற் பதியாத செல்வம் மிக்கது.

    விளக்கம் : கடி - மணம். காய்பொன் : வினைத்தொகை. மணியுடைப் பொற்சிலம்பு என்க. கோதை - மாலை. தாது-பூந்துகள். (30)
    ------------

      2408. துளங்குபொற் குழைகளுந் தோடுஞ் சுண்ணமுங்
      கிளர்ந்தகில் சாந்துபூக் கமழ்ந்து கேழ்கிள
      ரிளங்கதி ரெறிமணிப் பூணு மாரமும்
      விளங்கிமே லுலகினை வெறுப்பித் திட்டதே.

    பொருள் : துளங்கு பொன் குழைகளும் தோடும் சுண்ணமும் கிளர்ந்து - ஒளியசையும் பொற் குழைகளும் தோடுகளும் பொற் சுண்ணமும் கிளரப் பெற்று; அகில் சாந்து பூக்கமழ்ந்து - அகிலும் சாந்தும் மலரும் மணங்கமழ்ந்து; கேழ்கிளர் இளங்கதிர்; எறிமணிப்பூணும் ஆரமும் விளங்கி - நிறம் கிளர்ந்து இளவெயில் வீசும் மணிக் கலனகளும் முத்தாரங்களும் விளங்கி; மேல் உலகினை வெறுப்பித்திட்டது - வானுலகினை இகழப் பண்ணியது.

    விளக்கம் : துளங்கும் - அசையும். கிளர்ந்து - கிளரப்பட்டு. கமழ்ந்து . கமழப்பட்டு. விளங்கி விளங்கப்பட்டு. ( 31 )
    ------------

      2409. விரிந்துவான் பூத்தென விதானித் தாய்கதி
      ரருங்கலப் பொடியினா லாபொற் பூமகண்
      மருங்குல்போற் குயிற்றிய நகரின் மங்கலப்
      பெருந்தவி சடுத்தனர் பிணையன் மாலையார்.

    பொருள் : வான் விரிந்து பூத்தது என விதானித்து - வானம் பரவி மீனை மலர்வித்தது என்னுமாறு மேற்காட்டியைக் கட்டி; ஆய்கதிர் அருங்கலப் பொடியினால் - சிறந்த ஒளியையுடைய அருங்கலன்களின் பொடியாலே; ஆய்பொன் பூமகள் மருங்குல் குயிற்றிய நகரில் - பொன்னணிந்த நிலமகளின் இடைபோலே நுடங்கும்படி கோலம் இட்ட இடத்திலே; பிணையல் மாலையார் மங்கலப் பெருந்தவிசு அடுத்தனர் - பிணைந்த மாலையணிந்த மகளிர் மங்கலமாகிய பெரிய தவிசை இட்டனர்.

    விளக்கம் : பொன் பூமகள் - திருமகள் மணவறை நிலத்தைத் திருமகளின் இடைபோலப் புனைதல் வழக்கம், ஈண்டு நச்சினார்க்கினியர் பூமகள் என்பதற்கு நிலமகள் என்றே பொருள் கூறுகின்றனர். திருமகள் என்றலே சிறப்பென்பதனை.

      போரடு மன்னர்க்குப் புரையோர் புகழ்ந்த
      பாசடைத் தாமரைத் தாதகத் துறையும்
      மாசின் மடமகள் மருங்கின் வடிவாய்க்
      குலாஅய்க் கிடந்த கோலக் கோணத்துக்
      கலாஅய்க் கிடந்து கவ்விய கொழுந்தின்
      வள்ளியு மலரும் கொள்வழிக் கொளீஇ
      வலமுறை வகுத்த நலமுறை நன்னகர்

    எனவரும் பெருங்கதைப் பகுதியான் (2. 4 : 79 - 85) உணரலாம். ( 32 )
    ------------

      2410. நலங்கிளர் காணமு மணியு நன்பொனும்
      வலம்புரி முத்தமுங் குவித்த மங்கல
      மிலங்கின மணிவிளக் கெழுந்த தீம்புகை
      கலந்தவா யிரத்தெண்மர் கவரி யேந்தினார்.

    பொருள் : நலம் கிளர் காணமும் மணியும் நன்பொனும் வலம்புரி முத்தமும் குவித்த - அழகு விளங்கும் பொற்காசும் மணியும் பொன்னும் வலம்புரியிலிருந்து பிடைத்த முததும் குவிக்கப்பட்டன; மங்கலம் இலங்கின - என் மங்கலமும் விளங்கின; மணிவிளக்கு எழுந்த - மணிவிளக்குகள் எழுந்தன; தீ புகை கலந்த - இனிய புகைகள் கலந்தன; ஆயிரத்து எண்மர் கவரி ஏந்தினார் - ஆயிரத்தெட்டு மகளிர் கவரி ஏந்தினர்.

    விளக்கம் : காணம் - பொற்காசு. குவித்த : பலவறிசொல். குவிக்கப்பட்டன என்க. தீம்புகை - இனிய நறுமணப்புகை. கலந்த : பலவறி சொல். ( 33 )
    ------------

      2411. மங்கலப் பெருங்கணி வகுத்த வோரையான்
      மங்கல மன்னவன் வாழ்த்த வேறலு
      மங்கல வச்சுதந் தெளித்து வாய்மொழி
      மங்கலக் கருவிமுன் னுறுத்தி வாழ்த்தினார்.

    பொருள் : மங்கலப் பெருங்கணி வகுத்த ஓரையால் - மங்கலப் பொழுது கூறும் பெரிய கணி வகுத்த ஓரையிலே; மங்கலம் வாழ்த்த - மங்கல வாழ்த்துக் கூறாநிற்க; மன்னவன் ஏறலும் - வேந்தன் இருக்கையில் அமர்ந்தவுடனே; மங்கல அச்சுதம் தெளித்து - மங்கலமாகிய அறுகையும் அரிசியையும் இட்டு; வாய்மொழி மங்கலக் கருவிமுன் உறுத்தி வாழ்த்தினார் - மந்திரித்த மங்கலமாகிய பொன்கருவி மஞ்சிகன் சேர்த்தினானாக, வாழ்த்தினார்.

    விளக்கம் : உறுத்தி - உறுத்த. மங்கலப் பெருங்கணி - மங்கலப் பொழுதினை ஆராய்ந்து கூறும் அரசவைக் கணியன். ஓரை - முழுத்தம். மன்னவன் மங்கலம் வாழ்த்த என மாறுக. அச்சுதம் - அரிசி. கருவி - மயிர்க்கத்தி. நாவிதன் கருவி முன்னுறுத்த வாழ்த்தினார் என்க. ( 34 )
    ------------

      2412. முழங்கின வின்னிய மொய்த்த தேத்தொலி
      கொழுங்கயற் கண்ணினார் கொண்டு பொன்னக
      லிழிந்தனர் திருமயி ரேற்ப நீரதி
      னிழன்றன சாமரை நிரைசங் கார்த்தவே.

    பொருள் : இன் இயம் முழங்கின - இனிய இயங்கள் முழங்கின ; ஏத்து ஒலி மொய்த்தது - புகழொலி மிக்கது ; சாமரை நீரத்தில் நிழன்றன - சாமரைகள் நீர்மையுடன் நிழன்றன ; நிரை சங்கு ஆர்த்த - நிரையாகச் சங்குகள் முழங்கின; கொழுங்கயல் கண்ணினார் திருமயிர் பொன் அகல் ஏற்பக் கொண்டு இழிந்தனர் - செழுவிய கயலனைய கண்ணினார் திருமயிரைப் பொன்னகலிலே பொருந்தக் கொண்டு மண்டபத்தினின்றும் இழிந்தனர்.

    விளக்கம் : திருமயிர் : சீவகன் தலையிலிருந்து மஞ்சிகனாற் கழிக்கப் பட்டது. இன்னியம் - இனிய இசைக்கருவிகள், ஏத்து ஒலி : வினைத்தொகை கண்ணினார், திருமயிரைப் பொன்னகலிலே ஏற்பக்கொண்டு இழிந்தார் என்க. ( 35 )
    ------------

      2413. பாற்கடன் முளைத்ததோர் பவளப் பூங்கொடி
      போற்சுடர்ந் திலங்கொளிப் பொன்செய் கோதையை
      நாட்கடி மயிர்வினை நன்பொற் றாமரைப்
      பூக்கடி கோயிலாள் புலம்ப வாக்கினார்.

    பொருள் : பாற்கடல் முளைத்தது ஓர் பவளப் பூங்கொடி போல் - பாற்கடலிலே தோன்றியதாகிய ஒரு பவளக் கொடி போலே; சுடர்ந்து இலங்கு ஒளிப் பொன்செய் கோதையை - சுடர்விட்டு விளங்குகின்ற ஒளியினையுடைய, அழகுற்ற மாலை யணிந்த இலக்கணையை; நன்பொன் தாமரைப் பூக்கடி கோயிலாள் புலம்ப - சிறந்த பொற்றாமரைப் பூவாகிய மணமிகுங் கோயிலாளாகிய திருமகள் ஒவ்வேன் என வருந்த; நாள் மயிர்வினைக் கடி ஆக்கினார் - நல்ல நாளிலே மயிர்வினை மணத்தை ஆக்கினர்.

    விளக்கம் : கடிக்கோயில் என்றும் பாடம். மயிர்வினை மணம் என்பது புருவம் ஒதுக்குதல் என்பர். இங்ஙனம் மண மகட்குப் புருவமொதுக்கும் வாக்கத்தினை,

      எதிர்நோக் காற்றா இலங்கிழை முகத்தையும்
      மதிமாசு கழீஇய வண்ணம் போலக்
      கதிர்மே லிலங்கக் கைவினை முடித்தபின்

    எனவரும் கதையானும் உணர்க; (2 - 4 : 180 - 2) ( 36 )

    வேறு
    ------------

      2414. விரைத்தலை மாலை சூட்டி
              மின்னனா ரங்கை சேப்ப
      வரைத்தசாந் தணிந்த கோட்ட
              வாயிரத் தெட்டு வேழ
      நிரைத்தன மண்ணு நீர்க்கு
              முரசொடு முழவம் விம்ம
      வரைத்தலைத் துவலை போன்று
              மதநில நனைப்ப வன்றே.

    பொருள் : விரைத் தலைமாலை சூட்டி - மணமுற்ற தலைமாலையை அணிந்து; மின்னனைய மகளிர் தம் அகங்கை சிவப்ப அரைத்த சந்தனத்தை அணிந்த; கோட்ட - கொம்புகளையுடைய; ஆயிரத்து எட்டு வேழம் - ஆயிரத்தெட்டு யானைகள்; வரைத்தலைத் துவலை போன்று மதம் நிலம் நனைப்ப - மலையினிடத்து நீர்த்துளி போன்று பெய்யும் மதம் நிலத்தை நனைப்ப; முரசொடு முழவம் விம்ம - முரசும் முழவமும் முழங்க; மண்ணும் நீர்க்கு நிரைத்தன - மஞ்சனநீர் கொண்டுவா நிரையாக நின்றன.

    விளக்கம் : விரை - மணம். அங்கை - உள்ளங்கை. சேப்ப - சிவக்கும்படி, மண்ணுநீர் - மங்கல நீராடற்குரிய நீர். மண்ணுநீர் ஆயிரத்தெட்டு யானைகள் மேலேற்றி வருதலை கோல் யானை நாலிரண்டு மிகையா ஆயிரம் அணிந்தவை கோயிலுள் தரூஉம் எனவரும் கதை யானும் (2 - 2 :202, 4) உணர்க. எட்டுடன் கூடிய நூறு ஆயிரம் முதலிய எண்களே சிறப்புடைத்தாதல் தெய்வ அருச்சனை முறையாற் காண்க. ( 37 )
    ------------

      2415. கான்முகம் புதைத்த தெண்ணீர்
              கவர்ந்துபொற் குடங்க ளார்த்தி
      யூன்முகம் புதைத்த வேற்கண்
              ணவர்களிற் றுச்சி யேற்றி
      வான்முகம் புதைத்த பன்மீன்
              மதியென மருண்டு நோக்கத்
      தேன்முகம் புதைத்த மாலைக்
              குடைநிழற் றிருவிற் றந்தார்.

    பொருள் : ஊன்முகம் புதைத்த வேல் கண்ணவர் - நிணத்தை அழுத்திய வேல்போலும் கண்ணினார்; கான்முகம் புதைத்த தெண்ணீர் கவர்ந்து பொன்குடங்கள் ஆர்த்தி - பூமுகம் மறைத்த தெள்ளிய நீரை முகந்து பொற்குடங்களிலே நிறைத்து: வான்முகம் புதைத்த பன்மீன் மதியென மருண்டு நோக்க - (அவற்றை) வானிடத்தை மறைத்த பல மீன்களும் திங்களும் என மயங்கி நோக்கும்படி ; களிற்று உச்சி ஏற்றி - களிறுகளின் தலையிலே ஏற்றி; தேன்முகம் புதைத்த மாலைக் குடைநிழல் திருவில் தந்தார் - தேனினம் முகத்தை மறைத்த மாலையையுடைய குடையின் நிழலிலே செல்வத்துடன் தந்தனர்.

    விளக்கம் : குடங்கட்குப் பன்னிறமுடைமையானும், சிறுமை பெருமையானும் மீனும் திங்களும் உவமையாயின. ( 38 )
    ------------

      2416. இழைத்தபொன் னகரின் வெள்ளி
              யிடுமணை மன்ன ரேத்தக்
      குழைப்பொலிந் திலங்கு காதிற்
              கொற்றவ னிருந்த பின்றை
      மழைக்கலின் றெழுந்த வார்கொண்
              மணிநிற வறுகை நெய்தோய்த்
      தெழிற்குழை திருவில் வீச
              மகளிர்நெய் யேற்று கின்றார்.

    பொருள் : பொன் இழைத்த நகரின் - பொன்னால் இழைத்த மண்டபத்திலே; வெள்ளியிடு மணை - வெள்ளியாற் செய்த மணையிலே; மன்னர் ஏத்த - அரசர்கள் புகழ; குழைப்பொலிந்து இலங்கு காதின் கொற்றவன் இருந்த பின்ற - குழை பொலிவுற்று விளங்கும் காதினையுடைய அரசன் அமர்ந்த பின்னர் ; மழைக் கவின்று எழுந்த வார்கொள் மணிநிற அறுகை - மழைக்குக் கிளைத்து அழகுற்று எழுந்த நீண்ட நீலமணிபோலும் நிறமுடைய அறுகினை; நெய்தோய்த்து - நெய்யிலே தோய்த்து; எழில குழை திருவில் வீச மகளிர் நெய் ஏற்றுகின்றார் - அழகிய குழை வானவில்லென ஒளிவீச மகளிர் நெய்யேற்றத் தொடங்கினர்.

    விளக்கம் : பொன்னகர் என்றது மணவறையை. இடுமணை : வினைத்தொகை. கொற்றவன் : சீவகன். பின்றை - பின்பு. மழைக்குக் கவின் றெழுந்த என்க. மணி - நீலமணி. அறுகை - அறுகம்புல். நெய் யேற்றுதல் - ஒரு சடங்கு. ( 39 )
    ------------

      2417. மின்னுமிழ் வைரக் கோட்டு
              விளங்கொளி யிமய மென்னும்
      பொன்னெடுங் குன்றம் போலப்
              பூமிமே னிலவி வைய
      நின்னடி நிழலின் வைக
              நேமியஞ் செல்வ னாகி
      மன்னுவாய் திருவோ டென்று
              வாழ்த்திநெய் யேற்றி னாரே.

    பொருள் : மின்உமிழ் வைரக் கோட்டு - ஒளியை உமிழும் வைர உச்சியையுடைய; விளங்கு ஒளி இமயம் என்னும் பொன் நெடுங்குன்றம் போல - விளங்கும் ஒளியை உடைய இமயம் என்கிற நீண்ட பொன்மலை போல; பூமிமேல் நிலவி - நிலமிசை நிலைபெற்று; நின் அடி நிழலின் வையம் வைக - உன் அடி நிழலிலே உலகம் தங்க; நேமி அம் செல்வன் ஆகி - சக்கரவாளத்திற்குத் தலைவனாகி; திருவோடு மன்னுமாய் என்று - இலக்கணையுடன் நிலைபெற்று வாழ்க என்று; வாழ்த்தி நெய் ஏற்றினார் - வாழ்த்தி நெய்யை ஏற்றினார்.

    விளக்கம் : வயிரம் என்னும் மணி பிறத்தற்கிடமான கோடு என்க. வையம் - உலகம். நேமியஞ் செல்வன் - சக்கரவாளத்திற்குத் தலைவன். திரு - ஈண்டிலக்கணை. ( 40 )
    ------------

      2418. நீடு நீர்மணி நீரு மல்லவு
      மாடு நீரன வத்து மண்களு
      மூடு மின்னனா ருரிஞ்சி யாட்டினார்
      கூடி யின்னியங் குழுமி யார்த்தவே.

    பொருள் : ஊடு மின்னனார் - இடை மின்போன்ற மகளிர்; ஆடு நீரன அத்தும் மண்களும் அல்லவும் உரிஞ்சி - பூசும் நீரனவாகிய துவராலும் மண்ணாலும் அல்லனவற்றாலும் தேய்த்து; நீடுநீர் மணி நீரும் ஆட்டினார் - கங்கை முதலிய தூய நீராலும் சந்திரகாந்தக் கல்லின் நீராலும் ஆட்டினார் ; கூடும் இன் இயம் குழுமி ஆர்த்த - (அப்போது) தம்மில் அளவொத்த இனிய இயங்கள் கூடி ஒலித்தன.

    விளக்கம் : அல்ல என்றது துவரையும் மண்ணையும் ஒழிந்த ஐந்து விரையும் முப்பத்திருவகை ஓமாலிகையுமாம். பத்து மண் என்றும் பாடம்.

    மண்ணாவன:

      ஆனையே றேனக்கோ டாற்றங் கரைபுற்று
      வானவர்தங் கோயிலெழில் வான்கழனி - பானிலவு
      முத்தெரியும் வெண்டிரைநீர் மூதூர் வடதருவேர்
      பத்துமிதன் மண்ணாகப் பார்.

    ஒழிந்தவற்றிற்குக் கங்கையின் களிற்றின் உச்சி (சீவக. 623) என்ற கவியிற் கூறப்பட்டன. ( 41 )
    ------------

      2419. திருவ மன்னவன் சென்னித் தேர்மன்னர்
      பொருவெண் பொற்குட முமிழும் பொங்குநீர்
      பருதி தன்னொளி மறையப் பான்மதி
      சொரியுந் தீங்கதிர்த் தோற்ற மொத்தவே.

    பொருள் : திருவ மன்னவன் சென்னி - திருவையுடைய மன்னவனின் முடியிலே; தேர்மன்னர் பொருவெண் பொற்குடம் உமிழும் பொங்குநீர் - தேர் வேந்தர் எடுத்த வெள்ளிக்குடம் சொரியும் மிகுநீர்; பருதி தன் ஒளி மறைய - ஞாயிற்றின் ஒளி மறையும்படி; பால்மதி சொரியும் தீ கதிர்த் தோற்றம் ஒத்த - பால் போன்ற திங்கள் பொழியும் இனிய கதிரின் தோற்றம் போன்றன.

    விளக்கம் : திருவ : அ : அசை. வெண்பொன் : வெள்ளி. மன்னவன் : சீவகன். பருதி - ஞாயிறு; சீவகனுக்குவமை. மதி சொரியும் தீங்கதிர் - வெள்ளிக்குடத்து நீர்க்குவமை. ( 42 )
    ------------

      2420. துளங்கு மாமணித் தூண்க ணான்கினால்
      விளங்கு வெள்ளிவேய்ந் தாய்ந்த மாலைசூழ்
      வளங்கொண் மாமணிக் கூடஞ் சேர்த்தினா
      ரிளங்க திர்கொலோ விருந்த தென்னவே.

    பொருள் : துளங்கும் மாமணித் தூண்கள் நான்கினால் விளங்கு - ஒளி அசையும் பெரிய மணித் தூண்கள் நான்கினால் விளங்குகின்ற; வெள்ளி வேய்ந்து ஆய்ந்த மாலைசூழ் - வெள்ளியால் வேயப்பெற்று ஆராய்ந்த மாலை சூழ்ந்த; வளம்கொள் மாமணிக் கூடம் - வளம் கொண்ட மாமணிக் கூடத்திலே; இருந்தது இளங்கதிர் கொலோ என்ன சேர்த்தினார் - இருந்தது. இளஞாயிறோ என்னும்படி சென்றிருக்கப் பண்ணினார்.

    விளக்கம் : மணித்தூண் நான்கினால் விளங்கு கூடம், வெள்ளியால் வேய்ந்து மாலைசூழ் கூடம் என இயைக்க.( 43 )
    ------------

      2421. ஆய்ந்த பானிற மாய்பொற் கம்பலம்
      வேய்ந்த பொங்கணை வெண்பொற் கட்டின்மே
      னீந்து நித்தில விதான நீழலாற்
      கேந்தி னாரணி யேந்து நீர்மையாற்.

    பொருள் : ஆய்ந்த பால்நிறம் ஆய் பொன் கம்பலம் வேய்ந்த - தெரிந்த பால்நிறம் ஒளிகெட்ட பொலிவினையுடைய கம்பலம் வேய்ந்த; பொங்குஅணை வெண்பொன் கட்டில்மேல் - பொங்கும் அணையையுடைய வெள்ளிக் கட்டிலின்மேல் ; நீந்தும் நித்தில விதான நிழலாற்கு - வெள்ளத்தில் உண்டான முத்துப் பந்தரின் நிழலிலே இருந்தவனுக்கு; அணி ஏந்தும் நீர்மையார் ஏந்தினார் - ஒப்பனைக்குரிய மகளிர் அணியை ஏந்தினார்.

    விளக்கம் : ஆய்தல் - உள்ளதன் நுணுக்கம் (தொல். உரி. 52.) மானிற ஆய்பொன் என்றும் பாடம். ( 44 )
    ------------

      2422. ஈரங் கொன்றபி னிருண்ம ணிச்சுடர்
      நீர வாய்நிழ லுமிழுங் குஞ்சியை
      யார கிற்புகை வெறியி னாலமைத்
      தேர்ப டச்செய்தா ரெழுதிற் றென்னவே.

    பொருள் : இருள் மணிச்சுடர் நீரவாய் நிழல் உமிழும் குஞ்சியை - இருண்ட நீலமணியின் ஒளிபெற்ற இயல்பினவாய் ஒளி உமிழும் குஞ்சியை; ஈரம் கொன்றபின் - ஆற்றின பிறகு; ஆர்அகில் புகை வெறியினால் அமைத்து - நிறைந்த அகிற்புகையின் மணத்தாலே அமைத்து; எழுதிற்று என்ன ஏர்படச் செய்தார் - எழுதினது என்னும்படி அழகுபட முடித்தார்.

    விளக்கம் : ஈரம் கொன்று என்றது ஈரம் இல்லையாய் உணர்த்திய பின்னர் என்றவாறு. இருள் மணி - நீலமணி. நீரவாய் - இயல்புடையனவாக. நிழல் - ஒளி. குஞ்சி - ஆண்மயிர் வெறி - மணம். ஏர் - அழகு. ( 45 )
    ------------

      2423. ஈடில் சந்தன மேந்து தாமரைத்
      தோடின் பயில்வினாற் பூசித் தூமலர்
      வீடு பெற்றன வின்றொ டென்னவே
      சூடி னானரோ சுரும்புண் கண்ணியே.

    பொருள் : ஈடு இல் சந்தனம் - உவமையற்ற சந்தனத்தை: ஏந்து தாமரைத் தோடின் பயில்வினால் பூசி - ஏந்திய தாமரையிதழின் கனத்துடன் பூசி; தூமலர் இன்றொடு வீடு பெற்றன என்ன - தூய மலர்கள் இன்றுடன் வீடு பெற்றன என்னும்படி; சுரும்புஉண் கண்ணி சூடினான் - அம் மலரையுடைய வண்டுகள் தேனைப் பருகுங் கண்ணியைச் சூடினான்.

    விளக்கம் : ஈடு என்பது இடுதல் என்பதன் விகாரம் என்பர் நச்சினார்க்கினியர். வீடு பெற்றன என்றது, இவன் சூடிய மலர் பெற்ற அழகு தாம் குடுங்காலத்திற் பிறவாமை கண்டு, எல்லோரும் தம்மைச் சூடுந் தன்மையைக் கைவிடுதலை மலர் பெற்ற என்றவாறு என்று விளக்கங் கூறுவர் அவர். ( 46 )
    ------------

      2424. மற்ப கம்மலர்ந் தகன்ற மார்பின்மேல்
      விற்ப கக்குலா யாரம் வில்லிடக்
      கற்ப கம்மலர்ந் தகன்ற தோவெனப்
      பொற்ப கப்பொலங் கலங்க டாங்கினான்.

    பொருள் : மல்பக மலர்ந்து அகன்ற மார்பின் மேல் - மற்றொழில்தான், பிறரிடத்தினின்றும் போம்படி, தன்னிடத்தே பரக்கப்பட்டு அகன்ற மார்பின் மேலே; வில்பகக் குலாய் - வானவில் தோற்கும்படி குலாவி; ஆரம் வில் இட - முத்தாரம் ஒளியிடாநிற்க; கற்பகம் மலர்ந்து அகன்றதோ என - கற்பகம் பூத்துப் பரந்ததோ என்னும்படி; பொற்பு அகப் பொலங்கலங்கள் தாங்கினான் - அழகை அகத்தேயுடைய ஒழிந்த கலங்களை அணிந்தான்.

    விளக்கம் : பக மலர்ந்து எனற்பாலது வண்ணநோக்கி வருமொழி மகரம் விரிந்து நின்றது. பக - நீங்க. வில் - இந்திர வில். பொற்பை அகத்தேயுடைய என்க. ( 47 )
    ------------

      2425. உருவ மார்ந்தன வுரோமப் பட்டுடுத்
      தெரியும் வார்குழை சுடர விந்திர
      திருவி லன்னதார் திளைப்பத் தேங்குழ
      லரிபெய் கண்ணியர்க் கநங்க னாயினான்.

    பொருள் : உருவம் ஆர்ந்தன - செந்நிறம் பொருந்தியனவாகிய; உரோமப் பட்டு உடுத்து - எலிமயிர் முதலியவற்றாற் செய்த பட்டை உடையாக உடுத்து; எரியும் வார்குழை சுடர - ஒளிசெயும் குழை கதிர்வீச; இந்திர திருவில் அன்ன தார் திளைப்ப - வானவில் போலத் தார் மார்பில் பயில; தேன் குழல் அரிபெய் கண்ணியர்க்கு அநங்கன் ஆயினான் - தேனையுடைய குழலையும் செவ்வரி பொருந்திய கண்களையும் உடைய மகளிர்க்கு அநங்கனாயினன்.

    விளக்கம் : செயவென் எச்சங்கள் ஆன் வந்தியையும் வினை நிலையான் (தொல். வினை. 35) முடிந்தன. இவளை யொழிந்தார்க்கு அரியனாய் வருத்துதலின், அநங்கன் என்றார். ( 48 )
    ------------

      2426. தாவி றாழ்வடந் தயங்க நீருறீஇ
      மேலி யச்சுதந் தெளித்த பின்விரைந்
      தாவி யம்புகை சுழற்றி யாடியும்
      வீவில் வெஞ்சுடர் விளக்குங் காட்டினார்.

    பொருள் : தாஇல் தாழ்வடம் தயங்க - குற்றமற்ற நீண்ட வடம் விளங்க; விரைந்து மேவி அச்சுதம் நீர் உறீஇத் தெளித்த பின் - விரைந்து வந்து, அச்சுதத்தை நீரிலே உறுத்தித் தெளித்த பின்றை; ஆவி அம்புகை சுழற்றி - புகைக் கலத்திலே வாய் விட்ட புகையைச் சுழற்றி; ஆடியும் வீவுஇல் வெஞ்சுடர் விளக்கும் காட்டினார் - கண்ணாடியையும் கெடாத வெவ்விய சுடரையுடைய விளக்கையுங் காட்டினார்.

    விளக்கம் : ஆவி அம்புகை : வினைத்தொகை. இவை காட்டல் இயல்பு. தா - குற்றம். தயங்க - விளங்க. அச்சுதம் - அரிசி. ஆவி - ஆவித்த; வாய்விட்ட, ஆடி - கண்ணாடி. வீவு - அவிதல். ( 49 )
    ------------

      2427. உவரி மாக்கட லொல்லென் வெண்டிரை
      யிவரி யெழுவபோன் றிலங்கு வெண்மயிர்க்
      கவரித் தொகைபல வீசுங் காவல்
      ரிவரித் தொகையென்ப தின்றி யாயினார்.

    பொருள் : உவரி மாக்கடல் ஒல்லென் வெண்திரை இவரி எழுவ போன்று - உவர் நீரையுடைய பெரிய கடலில் ஒல்லென்றிசைக்கும் வெள்ளிய அலைகள் பரந்து எழுவன போன்று; இலங்கு வெண்மயிர்க் கவரித் தொகைபல வீசும் காவலர் - விளங்கும் வெண்மயிர்க் கவரியின் தொகை பல வீசுகின்ற காவலர்; இவர் இத்தொகை என்பது இன்றி ஆயினார் - இவர்கள் இத்தொகையர் என்பது இன்றித் திரண்டனர்.

    விளக்கம் : கவரி என்பது மானின் பெயராய் அதன் மயிரைக் குறித்தமையால் முதல் ஆகுபெயர்; வெண்மயிர் என்பது கவரிக்கு அடை ஆகையால் அடையெடுத்த ஆகுபெயர். இத் தொகையர் எனற்பாலது இத்தொகை என வந்தது செய்யுள் விகாரம். ( 50 )
    ------------

      2428. அறுகு வெண்மல ரளாய வாசநீ
      ரிறைவன் சேவடி கழுவி யேந்திய
      மறுவின் மங்கலங் காட்டி னார்மணக்
      குறைவில் கைவினைக் கோல மார்ந்ததே.

    பொருள் : அறுகு வெண்மலர் அளாய வாசநீர் - அறுகையும் மலரையும் கலந்த நறுமண நீராலே; இறைவன் சேவடி கழுவி - இறைவன் அடியைக் கழுவி; ஏந்திய மறுஇல் மங்கலம் காட்டினார் - எடுத்த எண் மங்கலங்களையும் காட்டினார்; குறைவு இல் கைவினை மணக்கோலம் ஆர்ந்தது - (அப்போது) குற்றமில்லாத கைவினையையுடைய மணக்கோலம் நிறைவேறியது.

    விளக்கம் : அளாய் - கலந்து, இறைவன்; அருகக்கடவுள் மங்கலம் - அட்டமங்கலம். குறைவில் கைவினை மணக்கோலம் என மாறுக. ( 51 )
    ------------

      வேறு
      2429. ஊனிமிர் கதிர்வெள்வே லுறைகழித் தனபோலுந்
      தேனிமிர் குவளைக்கட் டிருமக் ளனையாளைப்
      பானிமிர் கதிர்வெள்ளி மணைமிசைப் பலர்வாழ்த்தி
      வானிமிர் கொடியன்னார் மணியணை மிசைவைத்தார்.

    பொருள் : ஊன் நிமிர் கதிர் வெள்வேல் உறைகழித்தன் போலும் - ஊனிலே வளர்ந்த ஒளியுறு வேலை உறைகழித்தவற்றை ஒக்கும்; தேன் இமிர் குவளைக்கண் திருமகள் அனையாளை - வண்டுகள் முரலும் குவளைமலர் போன்ற கண்களையுடைய, திருமகள் போன்ற இலக்கணையை; வான்நிமிர் கொடி அன்னார் பலர் வாழ்த்தி - முகிலிலே பரந்த மின்னுக்கொடி போன்ற பலரும் வாழ்த்தி; பால்நிமிர் கதிர் வெள்ளி மணை மிசை மணியணை மிசை வைத்தார் - பால்போலப் பரந்த கதிர்களையுடைய வெள்ளி மணையின்மேல் இட்ட அழகிய அணையின்மேல் இருத்தினர்.

    விளக்கம் : உறை கழித்த வெள்வேல் என்றவாறு. வேல் கண், குவளைக்கண் என இயைக்க. திருமகள் அனையாள் - ஈண்டிலக்கணை. பால்போலப் பரந்த கதிரையுடைய என்க. வானிமிர்கொடி - காமவல்லி. மணைமிசை மணியணைமிசை என இயைக்க. ( 52 )
    ------------

      2430. வரைவிளை வளர்பொன்னே வலம்புரி யொருமணியே
      திரைவிளை யமிர்தம்மே திருவிழை யெனவேத்தி
      வரிவளை முழவிம்ம மணிகிள ரொலியைம்பா
      லரைவிளை கலைநல்லா ரறுகினெய் யணிந்தனரே.

    பொருள் : அரைவிளை கலைநல்லார் - அரசியல் முற்றுப் பெற்ற நூற்கலையை வல்ல மகளிர்; திருவிழை - அழகிய இழையணிந்த இவள்; வரைவிளை வளர் பொன்னே! - மலையில் விளைந்த வளர்ந்த பொன்னே!; வலம்புரி ஒரு மணியே! - வலம்புரி யீன்ற ஒப்பற்ற முத்தே!; திரைவிளை அமிர்தமே! - கடலில் விளைந்த அமிர்தமே!; என ஏத்தி - என்று புகழ்ந்து; வரைவிளை முழ விம்ம - மலையில் விளைந்த முழவு ஒலிக்க; மணிகிளர் ஒலி ஐம்பால் - நீலமணிபோல் விளங்கும் அவளுடைய ஐம்பாலிலே! அறுகின் நெய் அணிந்தனர் - அறுகம் புல்லால் நெய்யை அணிந்தனர்.

    விளக்கம் : ஏகாரம்: தேற்றம். திருவிழைக என்று பாடமாயின். ஏகாரங்களை விளியாக்கி நின்னைத் திருவிரும்புக என்க. அரசு என்னும் பண்புப் பெயர். அரை என்று பண்பு மாத்திரையை விளக்கிற்றென்பர் நச்சினார்க்கினியர். ( 53 )
    ------------

      2431. கள்ளவிழ் கமழ்கோதைக் காவலன் றிருமகளை
      வெள்ளணி மதயானை விழுமணிக் குடமேற்றித்
      தெள்ளறன் மண்ணுந்நீ ராட்டினர் தேமலர்மே
      லொள்ளிழை யவளொத்தா ளுருவநுண் ணுசுப்பின்னாள்.

    பொருள் : வெள்ளணி மதயானை விழுமணிக் குடம் ஏற்றி - வெள்ளணி அணிந்த மதயானைகள் இரண்டின்மேற் சிறந்த மணிக்குடங்களை ஏற்றி; தெள்அறல் மண்ணுநீர் - தெளிந்த அற்று வந்த மஞ்சன நீரைக் கொண்டு; கள் அவிழ் கமழ்கோதைக் காவலன் திருமகளை - தேன் விரிந்த மணமலர்க் கோதை அணிந்த காவலனின் திருமகளை; ஆட்டினர் - ஆட்டினர்; உருவநுண் நுசிப்பினாள் - அழகிய நுண்ணிடையாளாகிய அவள்; தேன் மலர்மேல் ஒள்ளிழையவள் ஒத்தாள் - தேனையுடைய மலர்மேல் வாழும் ஒள்ளிய அணிகளை அணிந்த திருமகளைப் போன்றாள்.

    விளக்கம் : இருபக்கமும் யானைகளை நிறுத்தி அவற்றின் மேலிருந்து நீராலே ஆட்டுதலின் திருமகளைப் போன்றாள். திருமகளின் இருபக்கமும் யானைகள் இருக்குமென்பர். ( 54 )
    ------------

      2432. வான்மலர் நுரைசூடி மணியணி கலன்சிந்தாத்
      தானிள மணலெக்கர்த் தவழ்கதிர் மணியார
      மேனைய நறுஞ்சுண்ணங் குங்கும மிடுங்களியாத்
      தேனின் மிசைபாடத் தீம்புன னடந்தஃதே.

    பொருள் : இள மணல் எக்கர்த் தவழ்கதிர் மணி ஆரம் - இளமணலால் இடும் எக்கராக ஒளி தவழும் மணியையும் ஆர்த்தையும் கொண்டு; ஏனைய நறுஞ்சுண்ணம் குங்குமம் இடும் களி ஆ - ஏனையவாகிய நறிய சுண்ணமும் குங்குமமும் வண்டலாகக் கொண்டு; வான்மலர் நுரைசூடி - சிறந்த மலராகிய நுரையைச் சூடி; அணிகலன் மணிசிந்தா - பூண்களிலுள்ள மணியை மணியாகச் சிந்தி; தேன் இனம் இசைபாட - தேன் கூட்டம் பண்ணிசைக்க; தீம்புனல் நடந்தது - (அவராட்டிய) நறுநீர் நடந்தது.

    விளக்கம் : தான் : அசை. வான் - சிறந்த. மலராகிய நுரையைச் சூடி என்க. சிந்தா - சிந்தி. இளமணலாலிடும் எக்கராக என்க. இடுங்களியர் - இடாநின்ற வண்டலாக. நடந்ததே என்பது நடந்தஃதே என விரித்தல் விகாரம் பெற்றது. ( 55 )
    ------------

      2433. நான்றபொன் மணிமாலை நகுகதிர்ப் பவளத்தூ
      ணூன்றின வொளிமுத்த மண்டபத் தொளிர்திங்கள்
      கான்றன கதிர்காய்த்தும் வட்டணைக் கதிர்முத்த
      மீன்றபொன் விதானத்தின் னீழலுய்த் திரீஇயினரே.

    பொருள் : பொன் மணிமாலை நான்ற - பொன் மாலையும் மணி மாலையும் தொங்கவிடப்பட்ட; நகுகதிர்ப் பவளத்தூண் ஊன்றின - விளங்கும் ஒளியையுடைய பவளத்தூண் நாட்டப்பட்ட; ஒளிமுத்த மண்டபத்து - ஒளி பொருந்திய முத்து மண்டபத்தே; ஒளிர் திங்கள் கான்றன கதிர் காய்த்தும் வட்டணை - விளங்குத் திங்கள் உமிழ்ந்தனவாகிய கதிரைத் தான் எறிக்கும் வட்ட அணையிலே; கதிர்முத்தம் ஈன்ற பொன் விதானத்தின் நீழல் - ஒளியுறும் முத்துக்களைப் பதித்த பொன் விதானத்தின் நீழலிலே; உய்த்து இரீ இயினர் - அவளைக் கொண்டு சென்று இருத்தினர்.

    விளக்கம் : மாலை நான்ற தூண்; பவளத்தூண் என இயைக்க ஊன்றின - ஊன்றப் பட்ட கான்றனவாகிய கதிர் என்க. ( 56 )
    ------------

      2434. மையணி மதயானை மத்தக வகலல்கு
      னெய்யணி குழன்மாலை நிழலுமிழ் குழைமங்கை
      மெய்யணி கலன்மாலை மின்னிருந் துகிலேந்திக்
      கையணி குழன்மாலைக் கதிர்முலை யவர்சூழ்ந்தார்.

    பொருள் : கைஅணி குழல்மாலைக் கதிர் முலையவர் - கையாலணிந்த குழலையும் மாலையையம் ஒளிரும் முலையையும் உடைய மகளிர்; மெய் அணிகலன் மாலைமின் இருந்துகில் ஏந்தி - மெய்யில் அணியும் கலன்களையும் ஒளிவீசும் துகிலையும் ஏந்தி; மைஅணி மதயானை மத்தக அகல் அல்குல் - அஞ்சனம் அணிந்த மதகளிற்றின் மத்தகம் போன்ற அகன்ற அல்குலையும்; நெய்அணி குழல் மாலைநிழல் உமிழ்குழை மங்கை - நெய்பூசிய குழலையும் மாலையையும் ஒளியுமிழுங் குழையையும் உடைய மங்கையை; சூழ்ந்தார் - சூழ்ந்தனர்.

    விளக்கம் : கையணி : கைசெய்யப்பட்ட என்றுமாம். மத்தகம் போலும் அகலல்குல் என்க. நிழல் - ஒளி. மங்கை : இலக்கணை. முலையவர் : பணிமகளிர். ( 57 )
    ------------

      2435. அவ்வளை யவிராழிக் கால்பொலிந் தழகார்ந்த
      மைவிளை கழுநீர்க்கண் விலாசியு மணியல்குற்
      கைவளை யலங்கார மாலையுங் கமழ்கோதை
      நைவள மிகுசாய னங்கையைப் புனைகின்றார்.

    பொருள் : அவ்வளை அவிர் ஆழிக் கால் பொலிந்து - அழகிய வளைந்த விளங்கும் விரல் மோதிரமுடைய கால் பொலிவுற்று; அழகு ஆர்ந்த மைவிளை கழுநீர்க்கண் விலாசியும் - அழகு பொருந்திய நீலோற்பலம் போலும் கண்களையுடைய விலாசியும்; மணி அல்குல் கைவளை அலங்கார மாலையும் - மணி புனைந்த அல்குலையும் கைவளையையும் உடைய அலங்கார மாலையும்; கமழ் கோதை நைவளம் மிகுசாயல் நங்கையைப் புனைகின்றார் - மணமுறும் கோதையையும் நட்ட பாடையினும் மிக்க மெல்லிய மொழியையும் உடைய இலக்கணையை ஒப்பனை செய்கின்றார்.

    விளக்கம் : மைவிளை கழுநீர் - நீலோற்பலம். அ + வளை - அழகிய வளையல். அவிராழி : வினைத்தொகை. மை - கருமை. விலாசி, அலங்காரமாலை என்போர் இலக்கணையின் தோழியர். நைவளம் - ஒரு பண். புனைதல் - ஒப்பனை செய்தல். ( 58 )
    ------------

      2436. யானையு ளரசன்றன் னணிகிளர் வலமருப்பீர்ந்
      தூனமி லொளிர்செம்பொன் பதித்தொளி மணியழுத்தி
      வான்மண முறச்செய்த மங்கல மணிச்சீப்புத்
      தான்முகில் கழிமதிபோற் றன்னுறை நீக்கினளே.

    பொருள் : யானையுள் அரசன் தன் அணிகிளர் வலமருப்பு ஈர்ந்து - களிறுகளில் அரசனுடைய அழகு பொருந்திய வலக்கொம்பை அறுத்து; ஊனம் இல் ஒளிர் செம்பொன் பதித்து - குற்றமற்ற ஒளிவிடும் செம்பொனைப் பதித்து; ஒளிமணி அழுத்தி - ஒளிவீசும் மணிகளை அழுத்தி; வான்மணம் உறச்செய்த மங்கல மணிச் சீப்பு - சிறந்த மணம் தங்கச் செய்த மங்கலம் பொருந்திய மணிச் சீப்பை; முகில்கழி மதிபோல் தன் உறை நீக்கினள் - முகிலின்றும் நீங்கும் மதிபோல் அதன் உறையினின்றும் விலாசி நீக்கினாள்.

    விளக்கம் : யானையுளரசன் - யூகநாதன், ஈர்ந்து அரிந்து. ஊனம் - குற்றம். உறைக்கு முகிலும், சீப்பிற்குத் திங்களும் உவமை. (59)
    ------------

      வேறு
      2437. மைந்நூற் றனைய மாவீ ழோதி
      வகுத்துந் தொகுத்தும் விரித்துங்
      கைந்நூற் றிறத்திற் கலப்ப வாரிக்
      கமழு நானக் கலவை
      யைந்நூற் றிறத்தின் னகிலின் னாவி
      யளைந்து கமழ வூட்டி
      யெந்நூற் றிறமு முணர்வா ளெழிலேற்
      றிமிலின் னேற்ப முடித்தாள்.

    பொருள் : எந் நூல் திறமும் உணர்வாள் - எந்த நூலின் திறனையும் உண்ர்வாளாகிய விலாசி;மைநூற்று அனைய மாவீழ் ஓதி - இருளை நூற்றாற் போன்ற வண்டுவீழ் ஓதியை; வகுத்தும் தொகுத்தும் விரித்தும் - வகுத்தும் தொகுத்தும் விரித்தும்; கைநூல் திறத்தின் கலப்ப வாரி - தன் கையாலே நூல் திறத்திலே கலப்ப வாரி; கமழும் நானக் கலவை மணக்குங் கத்தூரிக் கலவையையும்; ஆகிலின் ஆவி - அகிற் புகையையும்; கமழ - கமழும்படி; ஐந்நூல் திறத்தின் அளைந்து ஊட்டி - வியக்கத்தக்க நூல் முறைப்படி; ஐந்நூல் திறத்தின் அளைந்து ஊட்டி; எழில் ஏற்று இமிலின் ஏற்ப முடித்தாள் - அழகிய எருத்தினுடைய இமில்போல முகத்துக் கேற்ப முடித்தாள்.

    விளக்கம் : கையால் முடித்தாள். குழலையும் அளகத்தையும் வகுத்தும், கொண்டையைத் தொகுத்தும், பனிச்சையையும் துஞ்சையையும் விரித்தும் முடித்தாள். ( 60 )
    ------------

      2438. கரும்புந் தேனும் மமிழ்தும் பாலுங்
      கலந்த தீஞ்சொன் மடவாட்
      கரும்பும் மிலையு மயக்கி யாய்ந்த
      முல்லைச் சூட்டு மிலைச்சித்
      திருந்து திங்கள் சூழ்ந்த மின்னிற்
      செம்பொற் பட்டஞ் சேர்த்தி
      விரும்பும் முத்தம் மாலை நான்ற
      விழுப்பொன் மகரஞ் செறிந்தாள்.

    பொருள் : கரும்பும் தேனும் அமிழ்தும் பாலும் கலந்த தீஞ்சொல் மடவாட்கு - கரும்பையுந் தேனையும் அமிழ்தையும் பாலையும் கலந்த இனிய மொழியை உடைய இலக்கணைக்கு; திருந்து திங்கள் சூழ்ந்த மின்னின் செம்பொன் பட்டம் சேர்த்தி - திருந்திய திங்களை சூழ்ந்த மின்போல செம்பொன்னாலான பட்டத்தை அணிந்து; அரும்பும் இலையும் மயக்கி ஆய்ந்த முல்லைச் சூட்டு மிலைச்சி - அரும்பையும் இலையையும் இடையிட்டுக் கட்டின முல்லைச் சூட்டைக் கற்புக்குச் சூட்டி; விரும்பும் முத்தமாலை நான்ற விழுப்பொன் மகரம் செறித்தாள் - விரும்பக் கூடிய முத்தமாலையைத் தொங்கவிட்ட சிறந்த பொன்னாலான மகரவாயான பணியை அணிந்தாள்.

    விளக்கம் : மடவாள் : இலக்கணை. மயக்கி - இடையிடையே விரவி. முல்லைச்சூட்டு கற்பிற்கறிகுறியாகச் சூடுதல் மரபு. மிலைச்சி - சூட்டி. திங்கள் - நெற்றிக்குவமை. மின் - பட்டத்திற்குவமை. மகரம் - ஓரணிகலன். முல்லை சான்ற முல்லையும் என்றதனால் முல்லை மலர்மாலை கற்பின் சிறந்த அடையாளம் என்பது தெளியப்படும். ( 61 )
    ------------

      2439. கள்ளுந் தேனும் மொழுகுங் குவளைக்
      கமழ்பூ நெரித்து வாங்கிக்
      கிள்ளை வளைவா ருகிரிற் கிள்ளித்
      திலகந் திகழப் பொறித்துத்
      தெள்ளும் மணிசெய் சுண்ணம் மிலங்கத்
      திருநீர் நுதலின் னப்பி
      யுள்ளம் பருகி மதர்த்த வாட்கண்
      ணுருவம் மையிற் புனைந்தாள்.

    பொருள் : கள்ளும் தேனும் ஒழுகும் - மதுவும் வண்டும் சிந்துகின்ற; கமழ் குவளைப்பூ - மணமுறுங் குவளை மலரை; கிள்ளை வளைவாய் உகிரின் கிள்ளி - கிளியின் வளைந்தவாய்போலும் நகத்தாலே கிள்ளி; நெரித்து வாங்கி - (மயிரைக்) கோத்து வாங்கி (அதனுள்ளே); திகழப் பொறித்து - விளங்க வைத்து; தெள்ளும் மணிசெய் சுண்ணம் திலகம் - தெள்ளிய மணிச் சுண்ணத்தாலே அமைந்த பொட்டை; இலங்கத் திருநீர் நுதலின் அப்பி - விளங்குமாறு அழகிய தண்மையுடைய நுதலிலே அப்பி; உள்ளம் பருகி மதர்த்த வாள்கண் - கணவனுள்ளத்தைப் பருகிச் செருக்கிய வாள்னைய கண்ணை; உருவம் மையில் புனைந்தாள் - நிறமுடைய மையாலே புனைந்தாள்.

    விளக்கம் : பொறித்து - எழுதினாற் போல வைத்து. கள்ளும் என்பதற்கு - களவுகாணும் எனப் பொருள் கூறி கிள்ளையின் வளைவாய்தான் தன் றன்மையைக் கள்ளும் என்றார்; கமழ்தேனும் பொசியும் அளவன்றி ஒழுகும் குவளைப்பூ என்க என்றார் நச்சினார்க்கினியர். வண்டு ஒழுகும் என்றல் மரபன்று என்று கருதி இங்ஙனம் கூறினர். கணவனுள்ளத்தைப் பருகி என்க. ( 62 )
    ------------

      2440. நாகம் மருப்பி னியன்ற தோடுந்
      நலங்கொள் கறவுக் குழையும்
      போக நீக்கிப் பொருவிஃ றிருவில்
      லுமிழ்ந்து மின்னுப் பொழியு
      மேக மாகி யெரியும் மணியின்
      னியன்ற கடிப்பு வாங்கி
      மேக விசும்பிற் றேவர் விழைய
      விளங்கச் சேர்த்தி னாளே.

    பொருள் : நாகம் மருப்பின் இயன்ற தோடும் - யானைத் தந்தத்தால் ஆன தோட்டையும்; நலங்கொள் சுறவுக் குழையும் - அழகுறும் மகரக் குழையையும்; போக நீக்கி - காதினின்றும விலக எடுத்து; மின்னுப் பொழியும் - மின்னானது சொரிகின்ற; பொருஇல் திருவில் உமிழ்ந்து - ஒப்பற்ற திருவில்லைத் தான் உமிழ்ந்து; ஏகம் ஆகி எரியும் மணியின் இயன்ற கடிப்பு வாங்கி - ஒப்பற்றதாகி எரியும் மணியினாற் செய்யப்பட்ட குதம்பையை ஏந்தி; மேகவிசும்பின் தேவர் விழைய - முகிலையுடைய வானில் வாழும் வானவர் விரும்புமாறு; விளங்கச் சேர்த்தினாள் - அவள் விளங்குமாறு அணிந்தாள்.

    விளக்கம் : தேவர் : ஈண்டுப் பெண்பண்பை யென்பர் நச்சினார்க்கினியர். நாகம் மருப்பு - மகரவொற்று வண்ண நோக்கிக் கெடாது நின்றது. நாகம் - யானை. சுறவுக்குழை - மகரக்குழை. இல்திருவில் - லகரம் ஆய்தமாகத் திரிந்தது. மின்னு - மின்னல். கடிப்பு - ஒரு செவியணிகலன். தேவர் - தேவமகளிர். ( 63 )
    ------------

      வேறு
      2441. விலங்கரம் பொருத சங்கின்
      வெள்வளை தெளிர்க்கு முன்கை
      நலங்கிளர் பவள நன்பொன்
      விரன்மணி யாழி மின்னக்
      கலந்தின்று பணைத்த தோளுங்
      கவின்வளர் கழுத்து மார்ந்த
      வலம்புரி யீன்ற மூத்த
      மணிநிலா நக்க வன்றே.

    பொருள் : விலங்கு அரம் பொருத சங்கின் வெள்வளை தெளிர்க்கும் முன்கை - வளைந்த வாளரம் அறுத்த சங்கினாலாகிய வெள்ளை வளை ஒலிக்கும் முன்கையில்; நலம்கிளர் பவளம் விரல் நன்பொன் மணி ஆழி மின்ன - அழகு கிளரும் பவளம் போன்ற விரலில் அணிந்த நன்பொன் மணிமோதிரம் மின்ன; கலம் தின்று பணைத்த தோளும் - அணியை அடக்கிப் பருத்த தோளிலும் ; கவின்வளர் கழுத்தும் - அழகு வளரும் கழுத்திலும்; ஆர்ந்த வலம்புரி ஈன்ற முத்தம் அணிந்த, வலம்புரி முத்துக்கள்; மணிநிலா நக்க - அழகிய நிலனைக் கெடுத்தன.

    விளக்கம் : சங்கின் : இன் : அசை என்பர் நச்சினார்க்கினியர். விலங்கு - வளைந்த. அரம் - ஈர்வாள். தெளிர்க்கும் - ஒலிக்கும். பவளவிரல், நன்பொன் மணியாழி என மாறுக, கலம் - அணிகலம். கவின் - அழகு, நக்க - கெடுத்தன. ( 64 )
    ------------

      2442. மாமணி முகடு வேய்ந்த
      மரகத மணிச்செப் பன்ன
      தூமணி முலைக டம்மைத்
      தொழுதகக் கமழுஞ் சாந்திற்
      காமரு காம வல்லிக்
      கொடிகவின் கொண்டு பூத்துத்
      தூமணிக் கொழுந்து மென்றோட்
      டுயல்வர வெழுதி னாளே.

    பொருள் : மாமணி முகடு வேய்ந்த - சிறந்த மணிகளை உச்சியிலே அணிந்த; மரகத மணிச்செப்பு அன்ன - மரகதத்தை அழுத்திய மாணிக்கச் செப்பு போன்ற; தூமணி முலைகள் தம்மை - தூய மணிகளை அணிந்த முலைகளை; தொழுதகக் கமழும் சாந்தின் - தொழத் தகுமாறு மணக்கும் சாந்தினாலே; காமரு காம வல்லிக்கொடி கவின் கொண்டு பூத்து - விரப்பூட்டும் காமவல்லியாகிய கொடி அழகு கொண்டு மலர்ந்து; தூமணிக் கொழுந்து மென்தோள் துயல்வர எழுதினாள் - தூய அழகிய கொழுந்து மெல்லிய தோளிலே அசையும்படி எழுதினாள்.

    விளக்கம் : மாமணி : அணிகலன். மரகதம் - முலைக்கண்ணுக்கும் மணிச் செப்பு - முலைக்கும் உவமை. நச்சினார்க்கினியர், மரகதமணியைத் தலையிலே அழுத்திய பெரிய பவழச் செப்பு. இவள் நிறம் பவழத்தின் நிறமென்றார் பலவிடத்தும் என்பர். ( 65 )
    ------------

      2443. நாண்சுமக் கலாத நங்கை
      நகைமின்னு நுசுப்பு நோவப்
      பூண்சுமக் கலாத பொன்ஞாண்
      வடத்தொடு புரள நோக்கிப்
      பாண்குலாய் வண்டு பாடும்
      படுகணை மறந்து காமன்
      காண்கிலேன் கடிய வென்னா
      வுருகிமெய் கரந்திட் டானே.

    பொருள் : சுமக்கலாத நாண் நங்கை - பிறராற் சுமக்க லாகாத நாணினையுடைய நங்கையின்; நகை மின்னு நுசுப்பு நோவ - ஒளிதரும் மின்போன்ற இடை வருந்த; சுமக்கலாகாத பூண் பொன்ஞாண் வடத்தொடு புரள - சுமக்கவியலாத பூணும் பொன் நாணும் முத்து வடமும் புரளுமாறு அணிய; காமன் நோக்கி - அதனைக் காமன் பார்த்து; பாண்குலாய் வண்டு பாடும படுகணை மறந்து - இசையிற் குலவி வண்டு பாடும் தேன் உண்டாகும் மலர்க்கணையை எய்ய மறந்து; கடிய காண்கிலேன் என்னா - இங்ஙனம் கடியன பார்த்திலேன் என்று கருதி; உருகி மெய் கரந்திட்டான் - (மனம்) உருகி இவள் மெய்யிலே மறைந்து வேட்கையை விளைத்திட்டான்.

    விளக்கம் : மெய் கரந்திட்டான் என்றது அநங்கனானான் என்றபடி. சுமக்கலாத நாண் உடைய நங்கை என இயைக்க. பெண்மைப் பண்பு நான்கனுள் நாணமே சிறந்தமை பற்றி அதன் மிகுதி கூறுவார் இங்ஙனம் கூறினர். நகை - ஒளி. சுமக்கலாத பூண் பொன்ஞாண் வடத்தொடு புரள என மாறுக. ( 66 )
    ------------

      2444. அவாக்கிடந் தகன்ற வல்கு
      லணிகிளர் திருவிற் பூப்பத்
      தவாக்கதிர்க் காசு கண்டா
      ராவியைத் தளரச் சூட்டிக்
      கவாய்க்கிடந் தணங்கு நாறுங்
      கண்கொளாப் பட்டு டுத்தா
      ளுவாக்கதிர்க் திங்க ளம்மென்
      கதிர்விரித் துடுத்த தொத்தாள்.

    பொருள் : கண்டார் ஆவி தளர - பாபத்தவர் உயிர் சோர்வடைய ; தவாக்கதிர்க் காசு - கெடாத ஒளியையுடைய காசுகள்; அவாக் கிடந்து அகன்ற அல்குல் - அவாவின் தன்மை கிடந்து அகன்ற அல்குலிலே; அணிகிளர் திருவில் பூப்பச் சூட்டி - அழகு விளங்கும் வானவில் போலத் தோன்ற அணிந்து; கவாய்க் கிடந்து அணங்கு நாறும் கண்கொளாப் பட்டு உடுத்தாள் - கவ்விக் கிடந்து தெய்வத் தன்மை தோன்றும் இழைதெரியாத பட்டை உடுத்தவள்; உவாக்கதிர்த் திங்கள் அம் மென்கதிர் விரித்து உடுத்தது ஒத்தாள் - நிறைந்த கதிரையுடைய திங்கள் தன் அழகிய மெல்லிய கதிரை விரித்து உடுத்த தன்மையை ஒத்தாள்.

    விளக்கம் : ஆவியை : ஐ : அசை. கண்கொளா - இழை தெரியாத. இழை மருங்கறியா நுழைநூற் கலிங்கம் (மலைபடு. 561). அணிந்தாள் என்று பாடமாயின், விலாசி அணிந்தாள் என்க. ( 67 )
    ------------

      2445. இடைச்செறி குறங்கு கௌவிக்
      கிம்புரி யிளக மின்னும்
      புடைச்சிறு பரடு புல்லிக்
      கிண்கிணி சிலம்போ டார்ப்ப
      நடைச்சிறு பாதங் கோல
      மணிவிர லணிந்து நாகத்
      துடைச்சிறு நாவிற் றோகை
      யிரீஇயினண் மாலை சேர்ந்தாள்.

    பொருள் : புடைக் கிம்புரி இடைச்செறி குறங்கு கௌவி இளக - ஒருகூறு கிம்புரி வடிவான குறங்கு செறி என்னும் அணி குறங்கைக் கௌவி நெகிழவும்; சிறு பரடு புல்லிக் கிண்கிணி சிலம்பொடு ஆர்ப்ப - சிறுகணைக் காலைப் பற்றியவாறு கிண்கிணியும் சிலம்பும் ஆர்ப்பவும்; நடைச் சிறுபாதம் அணிவிரல் கோலம் அணிந்து - நடைக்குரிய சிற்றடியிலும் அழகிய விரலிலும் அணிவனவற்றையும் அணிந்து, நாகத்துடை சிறு நாவின் தோகை இரீஇயினள் - பாம்பினது சிறு நாவைப்போலும் முன்தானையை விலாசி இருத்திவிட்டான்; மாலை சேர்ந்தாள் - பிறகு அலங்கார மாலை வந்தாள்.

    விளக்கம் : குறங்குசெறி - துடையில் அணியும் ஓரணிகலன். குறங்கு - துடை. கிம்புரி இடைச்செறி என மாறுக. நாகத்தடை - நாகத்தினுடைய. தோகை - முன்றானை : உவமவாகுபெயர், இரீஇயினாள் - வைத்தாள். மாலை - அலங்காரமாலை; தோழி. ( 68 )
    ------------

      2446. அம்மல ரடியுங் கையு
      மணிகிளர் பவழ வாயுஞ்
      செம்மலர் நுதலு நாவுந்
      திருந்தொளி யுகிரோ டங்கேழ்
      விம்மிதப் பட்டு வீழ
      வலத்தக மெழுதி யிட்டா
      ளம்மலர்க் கண்ட முள்ளிட்
      டரிவையைத் தெரிவை தானே.

    பொருள் : அரிவையை - இலக்கணையை; அம் மலர்க் கண்டம் உள்ளிட்டு - அழகிய மலர்மாலை அணிந்த கழுத்தை யுள்ளிட்டு; அம் மலர் அடியும் கையும் அணிகிளர் பவழ வாயும் செம்மலர் நுதலும் நாவும் திருந்து ஒளி உகிரோடு - மலரனைய அடியும் கையும் அழகிய பவழமனைய வாயும் மாலை அணிந்த நெற்றியும் நாவும் அழகிய ஒளியையுடைய நகத்துடன்; விம்மிதப் பட்டு வீழ அம்கேழ் அலத்தகம் எழுதியிட்டான் - வியப்புற்று விரும்புபடி ஒளியுடைய செந்நிறத்தை எழுதினாள்.

    விளக்கம் : இக் கோலம் பிற்காலத்தில் வழங்கப் பெறாதாயிற் றென்பர். அ மலர் அடி - அழகிய மலர்போலும் அடி, அணி - அழகு, உகிர் - நகம், விம்மிதம் - வியப்பு, கண்டம் - கழுத்து. அரிவை என்றது இலக்கணையை தெரிவை - அலங்காராமாலை. செம்மலர் - நெற்றிமாலை என்பர் நச்சினார்க்கினியர். ( 69 )
    ------------

      2447. வாண்மதர் மழைக்க ணோக்கி
      வருமுலைத் தடமு நோக்கிக்
      காண்வர வகன்ற வல்குற்
      கண்விருப் புற்று நோக்கிப்
      பாணுவண் டாற்றுங் கோலச்
      சிகழிகைப் படியு நோக்கி
      யாண்விருப் புற்று நின்றா
      ரவ்வளைத் தோளி னாரே.

    பொருள் : வாள் மதர் மழைக்கண் நோக்கி - ஒளிபொருந்திய மதர்த்த மழைக்கண்களைப் பார்த்து; வருமுலைத் தடமும் நோக்கி - வளரும் முலைகளையும் பார்த்து; காண்வர அகன்ற அல்குல் கண் விருப்புற்று நோக்கி - அழகுவரப் பரந்த அல்குலைக் கண்ணால் விருப்புற்றுப் பார்த்து; பாணு வண்டு அரற்றும் கோலச் சிகழிகைப் படியும் நோக்கி - இசையுடைய வண்டுகள் முரலும் அழகிய மயிர் முடியின் அமைப்பையும் நோக்கி; அவ்வளைத் தோளினார் ஆண் விருப்புற்று நின்றார் - அழுகிய வளையணிந்த தொளையுடைய மகளிர் (அவளை நுகர்தற்குரிய) ஆண்மையை விருப்புற்று நின்றனர்.

    விளக்கம் : வாள்கண், மதர்க்கண், மழைக்கண் என்க. வருமுலை : வினைத்தொகை காண் - அழகு : காட்சி, பாணு - பண், சிகழிகை - மயிர்முடி. ( 70 )
    ------------

      வேறு
      2448. தெருள்கலான் படைத்தவன் காணிற் செவ்வனே
      மருள்கலா தவர்களு மருள்வர் மம்மர்நோ
      யிருளிலா ரெங்ஙன முய்வ ரின்னதா
      லருளிலா ரவணல மணிந்த வண்ணமே.

    பொருள் : அருள் இலார் அவள் நலம் அணிந்த வண்ணம் இன்னது - அருளில்லாத மகளிர் இலக்கணையின் அழகை அணிந்த வண்ணம் இவ்வாறு பெண்டிரும் ஆண்மையை விரும்பும் பெற்றியதாயிருந்தது; படைத்தவன் காணின் தெருள் கலான் - இனி, இவளைப் படைத்த நான்முகன் கண்டால் தான் படைத்த வடிவம் எனத் தெளியான்; மருள்கலாதவர்களும் செவ்வனே மருள்வர் - மயங்காத முனிவரும் நேரே மயங்குவர்; மம்மா நோய் இருளிலார் எங்ஙனம் உய்வர் - மயக்க நோயை உடைய, இருண்ட இல்வாழ்வார் எவ்வாறு பிழைப்பர்!

    விளக்கம் : மருள்கலாதவர் - துறவியர். இருளையுடைய இல்லார், என்க. இல்லார் - இல்லறத்தோர். வண்ணம் இன்னது என மாறுக. ( 71 )
    ------------

      2449. அலர்ந்தவந் தாமரை யல்லிப் பாவையைப்
      புலந்துகண் சிவந்தன போன்று நீர்பிரிந்
      திலங்கிமின் னுமிழ்ந்துலா மேனி யேந்துபொன்
      மலர்ந்ததோர் கற்பக மணிக்கொம் பாயினாள்.

    பொருள் : இலங்கி மின் உமிழ்ந்து உலாம் மேனி - பூண் விளங்கி ஒளிவீசி உலவும் மேனியினால்; ஏந்து பொன் மலர்ந்தது ஓர் கற்பக மணிக்கொம்பு - விளங்கிய பொன்னை மலர்ந்த ஒரு கற்பக மணிக்கொம்பு போன்றவள்; அலர்ந்த அம் தாமரை அல்லிப் பாவையைப் புலந்து - மலர்ந்த தாமரையின் அகவிதழில் இருக்கும் திருமகளைச் சினந்து நோக்கி; நீர் பிரிந்து சிவந்தன கண் போன்று ஆயினாள் - அன்பு மாறிக் கண்கள் சிவந்தன போன்றவள் ஆயினாள்.

    விளக்கம் : திருவை நிகராகக் கூறுதற்குப் புலந்து சீறினாள் போன்றிருந்தது என்றார், கண்கள் மையெழுதுதலாற் சிவந்துநீர் சொரிதலை. இது தற்குறிப்பேற்றம். கண்ணுக்குக் குளிர்ச்சியும் அழகும் தரும் மையாகிய அஞ்சனத்தைக் கண்ணில் அகமும் புறமும் எழுதுதலால் கண் கரித்து நீர் சிந்திச் சிவந்தது. ( 72 )
    ------------

      2450. மருடகு மல்லிகை மாலை வல்லவன்
      பொருடகத் தொடுத்தன் புனைந்த பூஞ்சிகை
      யிருடுணித் திடையிடை யியற்றி வெண்ணிலாச்
      சுருடுணித் தொருவழித் தொகுத்த தொத்ததே.

    பொருள் : வல்லவன் பொருள் தகத் தொடுத்தன - கை வல்லான் ஒருவன் எழுத்து வடிவுபடக் கட்டினவாகிய ; மருள் தகு மல்லிகைமாலை புனைந்த பூஞ்சிகை - மயக்குறுதற்குக் காரணமான மல்லிகை மாலையைப் புனைந்த அழகிய முடி; இருள் துணித்து வெண்ணிலாச் சுருள் துணித்து இடையிடை இயற்றி - இருளையுந் துணித்து, வெண்ணிலவின் சுருளையும் துணித்து ஒன்றைவிட டொன்றாகத் தொடுத்து; ஒருவழித் தொகுத்தது ஒத்தது - ஓரிடத்திலே குவித்த தன்மையை ஒத்தது.

    விளக்கம் : மருள் - மயக்கம். பொருள் எழுத்திற்கு ஆகுபெயர். கூந்தலுக்கு இருளும், மல்லிகைப்பூவிற்கு வெண்ணிலாவும் உவமை. ( 73 )
    ------------

      2451. கோமக ளுருவமாய்க் கூற்றம் போந்தது
      போமினும் முயிருயக் கொண்டு போய்மனங்
      காமின் மெனக்கலை சிலம்பு கிண்கிணி
      தாமனும் வாயினாற் சாற்று கின்றவே.

    பொருள் : கூற்றம் கோமகள் உருவமாய்ப் போந்தது - கூற்று அரசன் மகள் உருவமாய்க் கொல்ல வந்தது; உம் உயிர் உயப் போமின் - நும் உயிரைப் பிழைக்கக் கொண்டு சென்மின்; கொண்டுபோய் மனம் காமின் - கொண்டுபோனாலும் ஆண்டு மனம் வருந்துதலைக் காமின்; எனக் கலை சிலம்பு கிண்கிணி தாம் வாயினால் மனும் சாற்றுசின்ற - என்று கலையுஞ் சிலம்பும் கிண்கிணியும் தம் வாயினாலே மிகவும் சாற்றுகின்றன.

    விளக்கம் : காமினம் : அம் : அசை, மனும் : மன்னும் என்பதன் விகாரம். ( 74 )
    ------------

      2452. அருளிலா ரிவடம ரன்ன ராயினு
      முருடிரை யுலகெலா முருளு மின்றெனக்
      கருதின கவரிசாந் தாற்றி வெண்குடை
      யரிவையை மறைத்தன வால வட்டமே.

    பொருள் : இவள் தமர் அருள் இலார் - அணிந்துவிட்ட இவள் தமர் அருளிலாராயிருந்தார்; அன்னர் ஆயினும் - அவர்கள் அத்தன்மையராயினும்; உருள் திரை உலகெலாம் இன்று உருளும் என - உருளும் அலையையுடைய உலகம் எல்லாம் இன்று கெடுமே என்று; கருதின கவரி சாந்தாற்றி வெண்குடை ஆலவட்டம் அரிவையை மறைத்தன - கருதினவாய்க் கவரியும் சாந்தாற்றியும் வெண்குடையும் ஆலவட்டமும் நங்கையை மறைத்தன.

    விளக்கம் : உலகம் கெடுமென அறிந்தும் இவளை அணிந்துவிட்ட உறவினர் அருளிலராயிருந்தார் என்று கருதினபோல இவை மறைத்தன, இது தற்குறிப்பேற்ற அணி. ( 75 )
    ------------

      வேறு
      2453. கரும்பே தேனே யமிர்தே காமர் மணியாழே
      யரும்பார் மலர்மே லணங்கே மழலை யன்னம்மே
      சுரும்பார் சோலை மயிலே குயிலே சுடர்வீசும்
      பெரும்பூண் மன்னன் பாவாய் பூவாய் பிணைமானே.

    பொருள் : கரும்பே! -; தேனே!-; அமிர்தே!-; காமர் மணியாழே! - விருப்பூட்டும் அழகிய யாழே!; அரும்பு ஆர்மலர் மேல் அணங்க! - அரும்பி மலரும் மலர்மேல் வாழுந் திருவே !; மழலை அன்னமே! - மழலைமொழியும் அன்னமே!; சுரும்புஆர் சோலை மயிலே! வண்டுகள் பொருந்திய சோலையிலுள்ள மயிலே!; குயிலே !-; சுடர் வீசும் பெரும்பூண் மன்னன் பாவாய்! - ஒளி வீசும் பேரணிகலன் புனைந்த வேந்தற்கு மகளே!; பூவாய்! - பூவையே!; பிணைமானே! - பெண்மானே!

    விளக்கம் : அடுத்த செய்யுளுடன் இஃது ஒரு தொடர். கணவற்கு மெய்ம் முழுதும் இனிதாயிருத்தலின், கரும்பு. நல்லார் உறுப்பெல்லாம் கொண்டு இயற்றலின், தேன். இவ்வுலகில் இல்லாத மிக்க சுவையும் உறுதியுங் கொடுத்தலின், அமிர்து. காம வேட்கையை விளைவித்து இனிய பண் தோற்றுவித்தலின், யாழ். கணவற்குச் செல்வத்தைக் கொடுத்தலின், திரு. நடையால், அன்னம், சாயலால். மயில். காலமன்றியும் கேட்டோர்க்கு இன்பஞ் செய்தலின், குயில். மன்னன் மகளே யென்றல் புகழன்மையின், மன்னன் பாவாயென்றது. அவன் கண்மணிப் பாவை யென்பதுணர்த்திற்று : இனி, இவள் கொல்லிப் பாவையல்லள் மன்னன் பாவை என்றுமாம். சேடியர் கற்பித்த கட்டளை தப்பாமற் கூறலின், பூவை. நோக்கத்தால். மான். நச்சினார்க்கினியர் மழலை மணியாழ் என்று கூட்டுவர். ( 76 )
    ------------

      2454. அம்மெல் லனிச்சம் மலரு மன்னத் தூவியும்
      வெம்மை யாமென் றஞ்சி மெல்ல மிதியாத
      பொம்மென் னிலவப் பூம்போ தனநின் னடிபோற்றி
      இம்மென் கலையா ரிடுவென் றேத்த வொதுங்கினாள்.

    பொருள் : அம்மெல் அனிச்ச மலரும் அன்னத் தூவியும் - அழகிய மென்மையான அனிச்சமலரும் அன்னத்தின் தூவியும்; வெம்மை ஆம் என்று அஞ்சி மெல்ல மிதியாத - வெம்மை தரும் என்று அச்சுற்று மெல்லெனவும் மிதியாத ; பொன்என் இலவப்பூம்போது அனநின் பொன் அடி போற்றி இடு என்று - வண்டுகள் பொம்மென முரலும் இலவ மலர்போன்ற நின் அழகிய அடியைப் பேணி எடுத்து வைப்பாயாக என்று கூறி; இம்என் கலையார் ஏத்த - இன்என ஒலிக்கும் மணிமேகலை அணிந்த மகளிர் பலரும் போற்ற; ஒதுங்கினாள் - அவளும் நடந்தாள்.

    விளக்கம் : அனிச்சமு மன்னத்தின் தூவியு மாதர்
    அடிக்கு நெருஞ்சிப் பழம்

    என்றார் வள்ளுவனாரும் : (1120) இம் மென்னும் - ஒலிக்குறிப்பு. கலை - மேகலையணி. ஒதுங்கல் - நடத்தல். ( 77 )
    ------------

      2455. தூமாண் டுமக் குடமா யிரமாய்ச் சுடர்பொற்றூண்
      டாமாயிரமாய்த் தகையார் மணித்தூ ணொருநூறாய்ப்
      பூமாண் டாமத் தொகையாற் பொலிந்த குளிர்பந்தர்
      வேமா னியர்தம் மகளின் விரும்ப நனிசேர்ந்தாள்.

    பொருள் : தூமாண் தூமக்குடம் ஆயிரமாய் - தூய்மையிற் சிறந்த நறுமணப் புகைக்குடம் ஆயிரமாய்; சுடர் பொன் தூண்தாம் ஆயிரமாய் - விளங்கு பொற்றூண்கள் ஆயிரமாய்; தகையார் மணித்தூண் ஒரு நூறாய் - தகுதி நிறைந்த மணித் தூண்கள் நூறாய்; பூமாண் தாமத் தொகையால் பொலந்த குளிர்பந்தர் - பூக்களாற் சிறப்புற்ற மாலைத் தொகுதியால் விளக்கமுற்ற குளிர்ந்த பந்தரை; வேமானியர் தம் மகளின் விரும்ப நனிசேர்ந்தாள் - தெய்வமகளைப்போல விரும்புபடி சேர்ந்தாள்.

    விளக்கம் : தூமக்குடம் ஆயிரமாய்ப் பொற்றூண் ஆயிரமாய் விளங்கும் பந்தரிலே, மணித்தூண் நூறாய்த் தாமத்தாற் பொலிந்த வேள்விச்சாலை என்பர் நச்சினார்க்கினியர்; தாவிரி வேள்விச்சாலை எனப் பின்னர் 2490 ஆம் செய்யுளில் வருவது கொண்டு கூறினார். ( 78 )
    ------------

      2456. தேனார் காமன் சிலையுங் கணையுந் திறைகொண்ட
      வானார் மதிவாண் முகமும் மடமான் மதர்நேர்க்குங்
      கோனார் மகடன் வடிவு நோக்கிக் குடைமன்ன
      ரானார் கண்ணூ டழல்போ யமையா ரானாரே.

    பொருள் : காமன் சிலையும் தேன்ஆர் கணையும் திறை கொண்ட - காம்னுடைய வில்லையும் தேன் பொருந்திய கணையையும் வென்ற; வான் ஆர் மதிவாண் முகமும் - வானிற் பொருந்திய திங்களனைய ஒளிபொருந்திய முகமும்; மடமான் மதர்நோக்கும் - மடமானை வென்ற மதர்த்த நோக்கும்; கோனார் மகள் தன் வடிவும் - அரசன் மகளாகிய அவள் வடிவும்; நோக்கி - பார்த்து; மன்னரானார் கண்ஊடு அழல்போய் - அரசரானாரெல்லோரும் கண் பொறிபோய்; அமையார் ஆனார் - அமைதி யிழந்தவரானார்.

    விளக்கம் : காமன் வில்லையும் தேனார் கணையையும் வென்ற புருவமுங் கண்ணும் முகத்திற்கு அடை. ( 79 )
    ------------

      வேறு
      2457. வண்டலர் கோதை வாட்கண்
      வனமுலை வளர்த்த தாயர்
      கண்டுயி ருண்ணுங் கூற்றங்
      கயிறுரீஇக் காட்டி யிட்டா
      ருண்டுயிர் சிலர்கண் வாழ்கென்
      றுத்தரா சங்கம் வைத்தார்
      தெண்டிரை வேலி யெங்குந்
      தீதின தாக மாதோ.

    பொருள் : வண்டு அலர் கோதை வளர்த்த தாயர் - வண்டுகள் நிறைந்த கோதையாளை வளர்த்த தாயர்கள்; வாள்கண் வனமுலை உயிர் உண்ணும் கூற்றம் கண்டு - இவளுடைய வாட்கண்ணும் அழகிய முலையும் உயிர் உண்ணுங் கூற்றம் என்றே கண்டிருந்தும்; தெண் திரை வேலி எங்கும் தீதினது ஆக - தெளிந்த அலையையுடைய கடல் சூழ்ந்த நிலவுலகெங்குங் கெடுதியடையும்படி; கயிறு உரீஇக் காட்டியிட்டார் - (கொல்வதற்குக்) கயிற்றை உருவிவிடுத்துக் காட்டினார்; (பிறகு, சிறிது அருள் பிறந்து); கண் சிலர் உயிர் உண்டு வாழ்க என்று - கண்கள் மட்டும் சிலர் உயிரை உண்டு வாழ்க என்று விடுத்து; உத்தரா சங்கம் வைத்தார் - (முலைகள் அதனை ஒழிக என்றெண்ணி) மேலாடையை அணிந்தார்.

    விளக்கம் : கண்ணையும் முலையையும் கூற்றமென்றே கண்டிருந்தும் என்க. காட்டியிட்டார்; ஒருசொல். உத்தராசங்கம் - மேலாடை. உத்தராசங்கமிட் டொளிக்குங் கூற்றமே என்றார் கம்பநாடரும் (எழுச்சிப் - 17.) ( 80 )
    ------------

      2458. கண்ணினா லின்று கண்டாங்
      கூற்றினைக் காமர் செவ்வா
      யொண்ணுத லுருவக் கோலத்
      தொருபிடி நுசுப்பிற் றீஞ்சொல்
      வண்ணித்த லாவ தில்லா
      வருமுலை மதர்வை நோக்கிற்
      பெண்ணுடைப் பேதை நீர்மைப்
      பெருந்தடங் கண்ணிற் றம்மா.

    பொருள் : இன்று கூற்றினைக் கண்ணினால் கண்டாம் - இன்று கூற்றத்தைக் கண்ணாலே பார்த்தோம்; காமர் செவ்வாய் - விருப்பூட்டும் செவ்வாயையும்; ஒள்நுதல் - ஒள்ளிய நெற்றியையும்; உருவக்கோலத்து - அழகிய ஒப்பனையையும்; ஒருபிடி நுசுப்பின் - ஒரு பிடியில் அடங்கும் இடையையும்; தீ சொல் - இனிய மொழியையும்; வண்ணித்தல் ஆவது இல்லா - புனைந்துரைக்க முடியாத; வருமுலை - வளரும் முலைகளையும்; மதர்வை நோக்கின் - களிப்புடைய பார்வையையும்; பெண் உடைப் பேதை நீர்மை - பெண்ணியல்பையுடைய பேதை நீர்மையையும்; பெருந்தடங் கண்ணிற்று - பெரிய அகன்ற கண்களையும் உடையது.

    விளக்கம் : அம்மா : வியப்பிடைச்சொல்.
      பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன்
      பெண்டகையாற் பேரமர்க் கட்டு
    என்பது திருக்குறள் (1083). வண்ணித்தல் - புனைந்துரைத்தல். பெண் - பெண்மைத் தன்மை, கண்ணிற்று - கண்ணையுடையது.
    ( 81 )
    ------------

      2459. அரத்தக மருளிச் செய்த
      சீறடி யளிய தம்மாற்
      குரற்சிலம் பொலிப்பச் சென்னிக்
      குஞ்சிமேன் மிதிப்ப நோற்றான்
      றிருக்குவாய்க் கிடந்த மார்பிற்
      சீவக னாங்க ளெல்லாந்
      தரித்திலந் தவத்தை யென்று
      தார்மன்ன ரேமுற் றாரே.

    பொருள் : மருளி அரத்தகம் செய்த அளிய சீறடி தம்மால் - (பிறர்) மருளச் செம்பஞ்சி யூட்டிய அளியன வாகிய சிற்றடிகளாலே; சிலம்புக் குரல் ஒலிப்பச் சென்னிக் குஞ்சிமேல் மிதிப்ப நோற்றான் - சிலம்பிற் குரல் எழ முடியிற் குஞ்சியின்மேல் மிதிக்கும்படி நோற்றவன்; திருக்குலாய்க் கிடந்த மார்பின் சீவகன் - திருமகள் குல்விக் கிடந்த மார்பினையுடைய சீவகனே; நாங்கள் எல்லாம் தவத்தைத் தரித்திலம் என்று - யாங்கள் எல்லாம் அதற்குத் தவம் புரிந்திலேம் என்று; தார் மன்னர் ஏமுற்றார் - தாரணிந்த அரசர் மயக்குற்றார்.

    விளக்கம் : மருளி - மருள : எச்சத்திரிபு. அரத்தகம் - செம்பஞ்சுக் குழம்பு. அளிய - அளிக்கத்தக்கன. சென்னிக்குஞ்சி - தலைமயிர்.
    ( 82 )
    ------------

      2460. கோவிந்த னென்னுஞ் செம்பொற்
      குன்றின்மேற் பிறந்து கூர்வேற்
      சீவக னென்னுஞ் செந்நீர்ப்
      பவளமா கடலுட் பாய்வான்
      பூவுந்தி யமுத யாறு
      பூங்கொடி நுடங்கப் போந்து
      தாவிரி வேள்விச் சாலை
      மடுவினுட் டாழ்ந்த தன்றே.

    பொருள் : பூ உந்தி அமுத யாறு - மலர் உந்தியை உடைய அமுதமாகிய யாறு; கோவிந்தன் என்னும் செம்பொன் குன்றின்மேல் பிறந்து - கோவிந்தன் என்னும் பொன்மலையிலே பிறந்து; கூர்வேல் சீவகன் என்னும் செந்நீர்ப் பவளமா கடலுள் பாய்வான் - கூரிய வேலையுடைய சீவகன் என்கிற புதிய நீரையுடைய பவளப் பெருங் கடலிலே சேரவேண்டி; பூங்கொடி நுடங்கப் போந்து - மலர்க்கொடி அசைய வந்து; தாஇரி வேள்விச்சாலை மடுவினுள் தாழ்ந்தது - குற்றமற்ற வேள்விச்சாலையாகிய மடுவிலே (சிறிது பொழுது) தங்கிற்று.

    விளக்கம் : செந்நீர் - புதுநீர். உந்தி, கொப்பூழையும் ஆற்றிடைக் குறையையும்; கொடி, இடையையும் படர்கொடியையும் உணர்த்தும். பூவுந்தி : உவமமும் வேற்றுமையுந் தொக்கன என்பர் நச்சினார்க்கினியர். ( 83 )
    ------------

      2461. சாணிடை நெடிய வாட்கண்
      டளையவிழ் குவளை பூப்பப்
      பூணுடை முலையின் பாரம்
      பொறுக்கலாச் சுளிவின் மேலு
      நாணட நடுங்கிக் கையா
      னகைமுகம் புதைத்த தோற்றஞ்
      சேணிடை யரவு சேர்ந்த
      திங்களை யொத்த தன்றே.

    பொருள் : பூண் உடை முலையின் பாரம் பொறுக்கலாச் சுளிவின் மேலும் - பூணணிந்த முலைகளின் சுவையைச் சுமக்க முடியாத வருத்தத்தின் மேலும்; நாண் அட நடுங்கி - நாண் வருத்தலாலே நடுங்கி; சாணிடை நெடிய வாள்கண் தளை அவிழ் குவளை பூப்ப - நடுவு சாணளவாக நெடிய வாளனைய கண் அலர்கின்ற குவளை போலப் பொலிவுறும்படி; கையால் நகைமுகம் புதைத்த தோற்றம் - கையினால் முறுவலையுடைய முகத்தைப் புதைத்த காட்சி; சேணிடை அரவு சேர்ந்த திங்களை ஒத்தது - விசும்பிடையிலே பாம்பு பற்றிய திங்களைப் போன்றது.

    விளக்கம் : கையிடையே கண் தோன்றுதலின், அலர்கின்றாற் போன்றது என்றார். நாணத்தால் முகம் புதைத்தாள். ( 84 )
    ------------

      2462. முத்துமிழ் திரைக ளங்க
      மொய்கொள் பா தால முத்தீ
      யொத்தன வேலை வேள்வி
      யொலிகட னான்கு நாண
      வைத்தநான் மறையு நீந்தி
      வான் குண மென்னுஞ் சாலி
      வித்திமே லுலகத் தின்பம்
      விளைத்து மெய் கண்டநீரார்.

    பொருள் : முத்து உமிழ் திரைகள் அங்கம் - முத்துக்களைச் சிந்தும் அலைகள் அங்கமாகவும்; மொய் கொள் பாதாலம் முத்தீ - வலிகொண்ட பாதாலம் முத்தீ யாகவும்; ஒத்தன வேலை வேள்வி - ஒத்தனவாகிய கரைகள் வேள்வியாகவும்; ஒலிகடல் நான்கும் நாண வைத்த - ஒலிக்கின்ற கடல் நான்கும் நாணும்படி வைத்த; நான்மறையும் நீந்தி - நான்கு மறைகளையும் நீந்தி; வான்குணம் என்னும் சாலி - சிறந்த தொழிலாகிய சாலிநெல்லை; வித்தி - விதைத்து ; மேல் உலகத்து இன்பம் விளைத்து - துறக்க வின்பத்தை விளைவித்து; மெய்கண்ட நீரார் - வீடுகண்ட இயல்பினராகிய அந்தணர்,

    விளக்கம் : அடுத்த செய்யுட்களுடன் தொடரும். மொய்கொள் பாதாலம் என்றது வடவாமுகாக்கினி; கடலிடையிலே பாதாலத்தே செல்ல நீரைவாங்குதலின், அதற்குப் பாதாலமென்று பெயர் கூறினார். குணம் : ஆகுபெயர். ( 85 )
    ------------

      2463. தருமணற் றருப்பை யார்ந்த
      சமிதையிம் மூன்றி னானும்
      விரிமல ரணிந்த கோல
      வேதிகை யியற்றி யானெ
      யொருமணி யகலுட் பெய்தோர்
      பொன்னக லார்ந்த தூப
      மிருமணி யகலு ணீர்பெய்
      திடவயி னிரீஇயி னாரே.

    பொருள் : தருமணல் தருப்பை ஆர்ந்த சமிதை இம்மூன்றிரீனுலும் - கொண்டுவந்த மணலும் தருப்பையும் நிறைந்த சமிதையும் ஆகிய மூன்றினாலும்; விரிமலர் அணிந்த கோல வேதிகை இயற்றி - மிகுதியான மலரணிந்த ஒப்பனையுடைய திண்ணையை அமைத்து; ஒரு மணி அகலுள் ஆன் நெய் பெய்து-ஒரு மணி அகலிலே ஆவின் நெய்யை வார்த்து; இரு மணி அகலுள் நீர் பெய்து - இரண்டு மணி அகலிலே நீரை வார்த்து; ஓர் பொன் அகல் ஆர்ந்த தூபம் - ஒரு பொன் அகலிலே அகில் நெய் முதலிய மணம் நிறைந்த தூபத்தைப் (பெய்து); இடவயின் இரீ இயினார் - வைக்கவேண்டிய இடங்களிலே வைத்தார்.

    விளக்கம் : தருமணல்: தண்டிலார்த்தமாகக் கொண்டு வந்த மணல். தண்டிலமாவது தீயை வளர்க்குமிடத்தே சதுரமாகப் பரப்புகின்ற மணல். ஆர்ந்த சமிதை; சமிதைக்குக் கூறும் இலக்கணம் நிறைந்த சமிதை; என்றது பருதிகளையும் வேண்டும் சமிதைகளையும். வேதிகை : திருமணத்திற்கென விட்ட நான்கு தூண்களையுடைய திண்ணை. இயற்றுதலாவது : திண்ணையில் தீயை வளர்க்குமிடத்தே தண்டிலத்தைக் கற்பித்து அதிலே தீயை எழுப்பித் தருப்பையை நான்கு விளிம்பிலும் சூழவைத்துப் பருதிகளைக் கீழ்த்திசை ஒழிந்த திசைகளிலே வைத்தல் முதலியன. இருமணி அகல் என்றது பிரணீத பாத்திரமும் புரோட் சணீபாத்திரமும். ஒரு மணி அகல் ; ஆச்சியாஸ் தாலி. பொன் அகலார்ந்த தூபம் பெய்து என்றதுவும் மேற்செய்யுளில் ஆன்பாலவி யென்றதுவும் மதுபர்க்கார்த்தமாக வைத்தவை.

    சங்கதாய வராய சமர்ப்யதே சுவாமிகாது வதூர் ஜல பூர்வகம்!.
    ஸ்தாப்யதே விவாக மகீதலே பாவகோ விதிவத் மதுபர்க்க: !!

    என்று திருமணத் திண்ணையிலே தீயை வளர்த்து மதுபர்க்கங் கூறினார். ( 86 )
    ------------

      2464. நெற்பொரி நிறையப் பெய்து
      நிழலுமிழ் செம்பொன் மூழிக்
      கற்புரி கடவு ளான்பா
      லவியொடு கலப்ப வைத்து
      மூற்பெரி யானை யாகத்
      தருப்பையான் முடிந்து மூன்று
      பொற்புரி வரையும் பொய்தீர்
      சமிதைக ளிரண்டும் வைத்தார்.

    பொருள் : நிழல் உமிழ் செம்பொன் மூழி - ஒளியுமிழும் பொற்கலத்திலே; நெற்பொரி நிறையப் பெய்து - நெற்பொரியை மிகவும் பெய்து; கல்புரி கடவுள் ஆன்பால் அவியொடு கலப்ப வைத்து - கற்புரி கடவுளாகிய அம்மியையும் (பசுவின் பாலும் நெய்யும் கலந்த) ஆன்பாலாவியொடு கலக்கும்படி வைத்து; முன் பெரியானையாகத் தருப்பையான் முடிந்து - பிரமனை வேள்வித் தருப்பையாலே பிரமமுடியாக முடிந்து; மூன்று பொன் புரி வரையும் - மூன்று பொன் புரிவரையும் கீறி; சமிதைகள் இரண்டும் வைத்தார் - இரண்டு சமிதைகளையும் வைத்தார்.

    விளக்கம் : பொரி - இலாச ஹோமார்த்தமான பொரி. கற்புரி கடவுள் - அச்மா ரோபணார்த்தமான அம்மி. ஆன்பாலவி பாலும் நெய்யுங் கலந்தது. மூன்று பொற்புரிவரை யென்றது, தண்டிலத்தை மேற்கே தொடங்கிக் கிழக்கே முடியத் தெற்கில் விளிம்பிலம் நடுவிலும், வடக்கில் விளிம்பிலும் தெற்கே தொடங்கி வடக்கேமுடிய மேற்கே விளிம்பிலும் நடுவிலும், கிழக்கில் விளிம்பிலும் கீறின கீற்றுக்கள். தீயை எழுப்புவதற்கு முன்பே கீறுகின்றவற்றை ஈண்டுக் கூறினாரென்றுணர்க. முதன்மூன்று கீறிக் குறுக்கு மூன்று கீறுதல் தோன்றமுன் றென்றொழியாது பின்னரும் பொலிவு பெறப் புரிந்தவரை என்றார். மூன்று வரையைக்குண்டம் என்றல் பொருந்தாது. பொய்தீர் சமிதைகள் இரணடாவன : தென்கீழைக் கோடியிலும் வடகீறைக் கோடியிலும் வைக்கும் ஆகார சமிதைகள் இரண்டும். ( 87 )
    ------------

      2465. மந்திர விதியின் மாண்ட
      சிறுவிரற் றருப்பை சூழ்ந்து
      முந்துநா மொழிந்த நெய்யை
      முனைமுதிர் தருப்பை தன்னான்
      மந்திரித் தமைய முக்கான்
      மண்ணிமற் றதனை நீக்கிச்
      சிந்தித்து மறையிற் செந்தீத்
      தண்டிலத் தங்கண் வைத்தார்.

    பொருள் : சிறு விரல் தருப்பை சூழ்ந்து - சிறு விரலாலே தருப்பையைச் சூழ்ந்து; மந்திர விதியின் மாண்ட, முந்தும் நாம் மொழிந்த நெய்யை - மந்திர விதியினாலே சிறப்புற்ற, முன்னர் நாம் கூறிய நெய்யை; முனைமுதிர் தருப்பை தன்னால் மந்திரித்து - முனையாக உள்ள முதிர்ந்த தருப்பையினால் மந்திரித்து; அமைய முக்கால் மண்ணி - பொருந்த மும்முறை கழுவி; அதனை நீக்கி - அதனைச் செந்தீயிலே போகட்டு; மறையின் சிந்தித்து - மறைப்படியே சிந்தித்து; செந்தீத் தண்டிலத்து அங்கண் வைத்தார் - செந்தீக்கு அருகே தண்டிலத்தில் வைத்தார்.

    விளக்கம் : செந்தீக்கு அருகே நெய்யை வைத்தார். முனைமுதிர்ந்த நெய் என்பர் நச்சினார்க்கினியர். ( 88 )
    ------------

      2466. தண்டிலத் தகத்திற் சாண்மே
      லெண்விரற் சமிதை நானான்
      கெண்டிசை யவரு மேத்தத்
      துடுப்புநெய் சொரித லோடுங்
      கொண்டழற் கடவுள் பொங்கி
      வலஞ்சுழன் றெழுந்த தென்ப
      தெண்டிரை வேலி யெங்குந்
      திருவிளை யாட மாதோ.

    பொருள் : சமிதை நானான்கு - சமிதை பதினாறையும்; துடுப்பு நெய் - துடுப்பினால் நெய்யையும்; சோரித லோடும் - சொரிந்த அளவிலே; சாண்மேல் எண்விரல் தண்டிலத் தகத்தில் - சாண்மேல் எண்விரல் அகலமாகப் பரப்பிய தண்டிலத் திடையில்; அழற் கடவுள் கொண்டு - தீக்கடவுள் அவற்றைக் கொண்டு; எண் திசையவரும் ஏத்த - எட்டுத் திசையில் உள்ளவரும் புகழும்படி; தெண்திரை வேலி எங்கும் திருவிளையாட - தெள்ளிய கடல்சூழ்ந்த நிலவுலகம் எங்கும் செல்வம் விளையாட; வலம் சுழன்று எழுந்தது - வலத்தே சுழன்று எழுந்தது.

    விளக்கம் : என்ப : அசை. தண்டிலம் - ஓமம் பண்ணுதற்குக் குறிப்பிட்ட இடம். துடுப்பு - அகப்பை. தீ வலஞ்சுழன்று எழுந்தது உலகில் திருமிகுதற்கு ஏது வென்க. திரு - செல்வம். ( 89 )
    ------------

      2467. கரையுடைத் துகிலிற் றோன்றுங்
      காஞ்சன வட்டின் முந்நீர்த்
      திரையிடை வியாழந் தோன்றத்
      திண்பிணி முழுவுஞ் சங்கு
      முரசொடு முழங்கி யார்ப்ப
      மொய்கொள்வேன் மன்ன ரார்ப்ப
      வரசரு ளரச னாய்பொற்
      கலசநீ ரங்கை யேற்றான்.

    பொருள் : துகிலில் தோன்றும் காஞ்சன வட்டின் - வெண்துகிலில் தோன்றும் பொன் வட்டுப் போல; கரையுடை முந்நீர்த் திரையிடை வியாழம் தோன்ற - கரையையுடைய கடல் திரையிலே வியாழன் தோன்ற; திண்பிணி முழவும் சங்கும் முரசொடு முழங்கி ஆர்ப்ப - திண்ணிய கட்டுடைய முழவும் சங்கும் முரசும் முழங்கி ஒலிக்க; மொய் கொள்வேல் மன்னர் ஆர்ப்ப - ஒளி மொய்க்கும் வேலேந்திய மன்னர்கள் ஆரவாரிக்க; அரசருள் அரசன் ஆய்பொன் கலசநீர் அங்கை ஏற்றான் - அரசர்க்கரசனான சீவகன் சிறந்த பொற்கலச நீரை அகங்கையிலே ஏற்றான்.

    விளக்கம் : தீயை வளர்த்து நீர் விடுதலும் (உதகம் பண்ணுதலும்) உளதாதலின், இங்ஙனம் கூறினார்.( 90 )
    ------------

      2468. குளிர்மதி கொண்ட நாகங்
      கோளைவிடுக் கின்ற தேபோற்
      றளிர்புரை கோதை மாதர்
      தாமரை முகத்தைச் சேர்ந்த
      வொளிர்வளைக் கையைச் செல்வன்
      விடுத்தவ ளிடக்கை பற்றி
      வளரெரி வலங்கொண் டாய்பொற்
      கட்டிறா னேறி னானே.

    பொருள் : நாகம் குளிர் மதி கொண்ட கோளை - அரவு தான் திங்களைக் கொண்ட கோளை; விடுக்கின்றதே போல் - விடுக்கின்றாற் போல; தளிர் புரை கோதை மாதர் தாமரை முகத்தைச் சேர்ந்த - தளிரனைய இலக்கணையின் அழகிய தாமரை மலர் போன்ற முகத்தை மூடிய; ஒளிர் வளைக்கையைக் செல்வன் விடுத்து - ஒளிரும் வளைக்கையைச் சீவகன் நீக்கி, அவள் இடக்கை பற்றி - அவளுடைய இடக்கையைப் பற்றி; வளர் எரி வலம் கொண்டு - வளரும் தீயை வலம் கொண்டு; ஆய்பொன் கட்டில் ஏறினான் - அழகிய பொற்கட்டிலில் ஏறினான்.

    விளக்கம் : தளிர் புரை கை எனவும், மாதர் விடுத்து எனவும் பிரித்துக்கூட்டுவர் நச்சினார்க்கினியர். பின் செய்தற்குரிய ஓமங்களையும் பண்ணிக் கைப்பிடித்துத் தீயை வலங் கொண்டான்; எனவே, பொரியால் உள்ள ஓமமும் அம்மியில் கால் வைத்ததும் பெற்றாம். கட்டில் - திருமணம் பண்ணி எழுந்திருந்து சாந்தியான கூத்தும் ஆலத்தியும் கண்டு அருந்ததி காணப் போமளவும் இருக்கும் கட்டில், இஃது அரசியல். ( 91 )
    ------------

      2469. விளங்கொளி விசும்பிற் பூத்த
      வருந்ததி காட்டி யான்பால்
      வளங்கொளப் பூத்த கோல
      மலரடி கழீஇய பின்றை
      யிளங்கதிர்க் கலத்தி னேந்த
      வயினிகண் டமர்ந்தி ருந்தான்
      றுளங்கெயிற் றழுவை தொல்சீர்த்
      தோகையோ டிருந்த தொத்தான்.

    பொருள் : விளங்கு ஒளி விசும்பில் பூத்த அருந்ததி காட்டி - விளங்கும் ஒளியை யுடைய வானிலே தோன்றிய அருந்ததி மீனைக் காட்டி; வளம் கொளப் பூத்த கோல மலரடி ஆன்பால் கழீஇய பின்றை - வளமுற மலர்ந்த அழகிய மலரடியை ஆவின் பாலாற் கழீஇய பிறகு; இளங் கதிர்க் கலத்தின் அயினி ஏந்தக் கண்டு - இளவெளி வீசும் கலத்திற் பாவையர் உணவை ஏந்த அதனைக் கண்டு; அமர்ந்திருந்தான் - இலக்கணையுடன் வீற்றிருந்தவன்; துளங்கு எயிற்று உழுனை தொல்சீர்த் தோகையோடு இருந்தது ஒத்தான் - அசையும் ஒளியுறும் பற்களையுடைய புலி பழம் புகழுடைய மயிலுடன் இருந்தது போன்றான்.

    விளக்கம் : உண்ணாதிருத்தல் மரபு. உவமை : இல் பொருளுவமை. பூத்த - தோன்றிய. அருந்ததி - ஒரு விண்மீன். கழீஇய - கழுவிய. பின்றை - பின்னர். அயினி - அன்னம. உழுவை - புலி; சீவகனுக்குவமை. தோகை - மயில்; இலக்கணைக்குவமை. ( 92 )
    ------------

      2470. பொன்னங் காழிற் பொலிந்த
      முத்து விதானம் புணர்ந்துதேன்
      மன்னு மாலை பலதாழ்ந்து
      மணப்புகை விம்மி மல்கிய
      வன்னத் தூவி யடர்பஞ்சி
      யவிர்மயி ராதி யாகப்
      பன்னிச் சொன்ன பதினைந்தும்
      படுத்தார் பாவை மார்களே.

    பொருள் : பொன் அம் காழின் பொலிந்த முத்து விதானம் புணர்ந்து - அழகிய பொற் காழிலே விளங்கும் முத்தினால் மேற்கட்டி புணர்க்கப்பட்டு; தேன் மன்னும் மாலைபல தாழ்ந்து - தேன் பொருந்திய மாலைகள் பல தாழப்பட்டு; மணப்புகை விம்மி மல்கிய - நறுமணப்புகை மிகுந்து பெருகிய மணவறையிலே; அன்னத் தூவி அடர் பஞ்சி அவிர் மயிர் ஆதி ஆக - அன்னத்தின் தூவியும் நெருங்கிய பஞ்சியும் விளங்கும் மயிரும் முதலாக; பன்னிச் சொன்ன பதினைந்தும் பாவைமார் படுத்தார் - ஆராய்ந்து கூறிய பதினைந்தையும் பாவைமர் பரப்பினார்கள்.

    விளக்கம் : இது கட்டிலின் சிறப்புக் கூறியது. நச்சினார்க்கினியர் முற் செய்யுளையும் இதனையும் ஒரு தொடராக்கி, இப்படுக்கையிலே இலக்கணையோடு, மயிலுடன் புலி யிருந்தது போலச் சீவகன் இருந்தானெனக் காட்டுவர். ( 93 )
    ------------

      வேறு
      2471. பனிமயிர் குளிர்ப்பன பஞ்சின் மெல்லிய
      கனிமயிர் குளிர்ப்பன கண்கொ ளாதன
      வெலிமயிர் போர்வைவைத் தெழினி வாங்கினா
      ரொலிமயிரிச் சிகழிகை யுருவக் கொம்பனார்.

    பொருள் : ஒலி மயிர்ச் சிகழிகை உருவக் கொம்பனார் - தழைத்த மயிரால் முடிந்த முடியை உடைய அழகிய கொம்பனையார்; பனி மயிர் குளிர்ப்பன - பனித்தலாற் பிறர்க்கு மயிர் குளிர் செய்வன; பஞ்சின் மெல்லிய - பஞ்சினும் மெல்லியன; கனி மயிர் குளிர்ப்பன - நெருப்பின்கண் வேதற்குரிய மயிரை வேகாமற் குளிரச் செய்வன (ஆகிய) ; எலி மயிர்ப் போர்வை வைத்து எழினி வாங்கினார் - எலிமயிர்ப் போர்வையை வைத்து உருவு திரையை வளைத்தனர்.

    விளக்கம் : பனி - பனித்தல். கனிமயிர் - வேதற்குரிய மயிர். நுண்மையாற் கட்பொறி கதுவமாட்டாதன. எழினி - உருவுதிரை. ஒலிமயிர் : வினைத்தொகை. ஒலித்தல் - தழைத்தல். ( 94 )
    ------------

      2472. விழுத்தகு மணிச்செவி வெண்பொற் கைவினை
      யெழிற்பொலி படியக மிரண்டு பக்கமுந்
      தொழிற்பட வைத்தனர் துளும்பு மேகலைக்
      கழித்தவே லிரண்டுகண் டனைய கண்ணினார்.

    பொருள் : துளும்பும் மேகலை - ஒளி ததும்பும் மணிமேகலையையும்; கழித்த வேல் இரண்டு கண்ட அனைய கண்ணினார் - உறை கழித்த இரண்டு வேல் போன்ற கண்களையுமுடைய மகளிர்; விழுத்தகு மணிச் செவி - சிறப்புற்ற மணியாற் செய்த காதினையும்; வெண் பொன் கைவினை - வெள்ளியாற் செய்த தொழிற் பாட்டையும் உடைய; எழில் பொலி படியகம் இரண்டு பக்கமும் தொழில்பட வைத்தனர் - அழகினால் விளங்குகின்ற படிக்கத்தை (இருவர்க்கும்) தொழிற்பட இரண்டு பக்கமும் வைத்தனர்.

    விளக்கம் : செவி - படிக்கத்தின் உறுப்பு. வெண்பொன் - வெள்ளி. படியகம் - படிக்கம். இருவர்க்கும் தொழிற்பட என்க. துளும்பும் - அசையும். உறைகழித்த வேலென்க. ( 95 )
    ------------

      வேறு
      2473. அங்கருங் காலி சீவி
      யூறவைத் தமைக்கப் பட்ட
      செங்களி விராய காயுஞ்
      செம்பழுக் காயுந் தீந்தே
      னெங்கணுங் குளிர்த்த வின்னீ
      ரிளம்பசுங் காயு மூன்றுந்
      தங்களி செய்யக் கூட்டித்
      தையலார் கைசெய் தாரே.

    பொருள் : அம் கருங்காலி சீவி - அழகிய கருங்காலி மரத்தைச் சீவி; ஊற வைத்து அமைக்கப்பட்ட - ஊற வைத்துக் காய்ச்சிய; செங்களி விராய காயும் செம்பழுக் காயும் - செங்களியைக் கலந்த காயும் பழுக்காயும்; தீதேன் எங்கணும் குளிர்த்த இன்நீர் இளம் பசுங்காயும் - இனிய தேன் போலே மெய்ம் முழுதும் குளிரச் செய்த இனிய இயல்பையுடைய இளம் பசுங்காயும் ஆகிய; மூன்றும் - இம் மூன்றையும்; தம் களி செய்யக் கூட்டி - தமக்கு இயல்பாகிய களிப்பைச் செய்யும் முறையில் கூட்டி; தையலார் கை செய்தார் - பெண்கள் கலந்தனர்.

    விளக்கம் : கருங்காலி - ஒருவகை மரம். செங்களி - சிவந்த குழம்பு. காய் - ஈண்டுக் களிப்பாக்கு. பழுக்காய் - முதிர்ந்த பாக்கு. பசுங்காய் - பச்சைப்பாக்கு. கைசெய்தல் - கலத்தல். ( 96 )
    ------------

      2474. கைசெய்து கமழு நூறுங்
      காழ்க்கும்வெள் ளிலையுங் காம
      மெய்தநன் குணர்ந்த நீரா
      ரின்முக வாச மூட்டிப்
      பெய்தபொற் செப்பு மாலைப்
      பெருமணிச் செப்புஞ் சுண்ணந்
      தொய்யறப் பெய்த தூநீர்த்
      தொடுகடற் பவளச் செப்பும்.

    பொருள் : கை செய்து கமழும் நூறும் - ஒழுங்காக்கி மணக்கும் சுண்ணாம்பும்; காழ்க்கும் வெள்ளிலையும் - காழ்ப்புத்தரும் வெற்றிலையும்; காமம் எய்த நன்கு உணர்ந்த நீரார் - காம வேட்கை இவர்கட்குப் பொருந்த, நன்கறிந்த மகளிர்; இன் முகவாசம் ஊட்டிப் பெய்த பொன் செப்பும் - இனிய முகவாசப் பொருள்களைக் கூட்டி வைத்த பொற் செப்பும்; மாலைப் பெருமணிச் செப்பும் - மாலைகள் வைத்த பெரிய மணியாற் செய்த செப்பும்; சுண்ணம்தொய் அறப் பெய்த தூநீர்த் தொடுகடல் பவளச் செப்பும் - நறுமணப் பொடியைக் குற்றமறப் பெய்த, தூய நீரையுடைய கடலிலே தோன்றிய பவளத்தாற் செய்த செப்பும்;

    விளக்கம் : இஃது அடுத்த செய்யுளுடன் தொடர்ந்தது. நூறு - சுண்ணாம்பு. வெள்ளிலை - வெற்றிலை. நீரார் - தன்மையுடையோர். தொய் - குற்றம். தொடுகடல் : வினைத்தொகை. ( 97 )
    ------------

      2475. தாமணி நானச் செப்புஞ் சலஞ்சலக் கலன்பெய் செப்புந்
      தூமணித் துகில்க ளார்ந்த வலம்புரித் துலங்கு செப்புங்
      காமநீர்க் காம வல்லி கவின்கொண்டு வளர்ந்த தேபோ
      னாமவே னெடுங்கட் பாவை நயப்பன வேந்தி னாரே.

    பொருள் : தாமணி நானச் செப்பும் - மாலையணிந்த கத்தூரிச் செப்பும்; சலஞ்சலக் கலன்பெய் செப்பும் - சலஞ்சல வடிவாகச் செய்த அணிகலன் பெய்த செப்பும்; தூமணித் துகில்கள் ஆர்ந்த வலம்புரித் துலங்கு செப்பும் - தூய அழகிய ஆடைகள் நிறைந்த வலம்புரி வடிவாகத் துலங்கும் செப்பும்; காமநீர்க் காமவல்லி கவின்கொண்டு வளர்ந்ததே போல் - காம நீரிலே காமவல்லி அழகு கொண்டு வளர்ந்ததைப் போல; நாமம் வேல் நெடுங்கண் பாவை நயப்பன ஏந்தினார் - அச்சமூட்டும் வேலனைய நீண்ட கண்களையுடைய இலக்கணை விரும்பும் பிறவற்றையும் மகளிர் ஏந்தினர்.

    விளக்கம் : தாமம் - தாம் என ஈறு கெட்டது. சலஞ்சலம், வலம்புரி என்பன சங்கின் வகை. காமமாகிய நீர். காமவல்லி - ஒரு பூங்கொடி. கவின் - அழகு. நாமம் - அச்சம். பாவை : இலக்கணை. ( 98 )
    ------------

      2476. விரிகதி ரார மின்னித்
      தாரெனுந் திருவில் வீசிக்
      குரிசின்மா மேகம் பெய்த
      கொழும்புயற் காம மாரி
      யரிவைதன் னெஞ்ச மென்னு
      மகன்குள நிறைந்து வாட்கட்
      கரியமை சேறு சிந்திக்
      கலிங்குக டிறந்த வன்றே.

    பொருள் : குரிசில் மா மேகம் - சீவகனாகிய பெரிய முகில்; விரிகதிர் ஆரம் மின்னி - விரிந்த ஒளியையுடைய ஆரமாகிய மின்னை மின்னி; தார் எனும் திருவில் வீசி - மாலையாகிய வான வில்லையிட்டு; பெய்த கொழும்புயல் காமமாரி - பெய்த வளமிகு நீரையுடைய காமமாகிய மாரியாலே; அரிவைதன் நெஞ்சம் என்னும் அகன்குளம் நிறைந்து - இலக்கணையின் உள்ளம் என்கிற அகன்ற குளத்திலே நிறைந்து; வாள்கண் கலிங்குகள் கரி அமை சேறு சிந்தி - வாளனைய கண்ணாகிய கலிங்குகள் மையாகிய அமைந்த சேற்றினைச் சிந்தி; திறந்த - திறந்தன.

    விளக்கம் : என்றது, அவன் விளைத்த காம இன்பம் நிறைதலின், உவமைக் கண்ணீர் வீழ்த்தின என்றவாறு. புயல் - நீர். புயலன்றலர் சடை ஏற்றவன் (சிற் - 240) என்றார். ( 99 )
    ------------

      2477. தோக்கையந் துகிலி னாடன்
      றுணைமுலை பொருது சேந்த
      வேக்கொசி விலாத வில்லா
      னிடுகொடி யகல மின்றேன்
      றேக்கிவண் டிமிருங் கோதை
      செல்வன்றா ருழக்க நைந்து
      பூக்கொய்து துவண்ட கொம்பின்
      பொற்பின ளாயி னாளே.

    பொருள் : ஏக்கு ஒசிவு இலாத வில்லான் இடுகொடி அகலம் - எய்தற் றொழிலுக்குக் கெடுதலில்லாத வில்லையுடைய சீவகனது கொடி எழுதப்பட்ட மார்பாகிய மலையோடு; தோக்கை அம் துகிலினாள் தன் - கொய்சகமுடைய அழகிய ஆடையினையுடைய இலக்கணையினுடைய; துணைமுலை பொருது சேந்த - முலைகளாகிய யானைகள் முதலில் பொருது சிவந்தன; செல்வன் தார் உழக்க - அது பொறாமல் சீவகனுடைய தார் (தூசிப்படை) பின்பு பொருதலாலே; இன் தேன் தேக்கி வண்டு இமிரு கோதை - இனிய தேனை நிரம்பவுண்டு பண்பாடுதற் கிடமான கோதையினையுடைய இலக்கணை; பூ கொய்து துவண்ட கொம்பின் பொற்பினள் ஆயினாள் - தன்பாலுள்ள மலர்கள் கொய்யப்பட்டுத் துவண்டுபோன தொரு பூங்கொம்பின் தன்மையை உடையளாயினாள்.

    விளக்கம் : இதனால் இருவர் புணர்ச்சியும் கூறினார். தோக்கை - கொய்சகம். இடுகொடி - வினைத்தொகை. மார்பில் வரைந்திட்ட பூங்கொடி என்க. ஆடவர் மார்பில் பூங்கொடி வரையும் வழக்கத்தை, ஆடுகொடி அணிந்த வுயர் அலங்கல் வரை மார்பன் (2483) என்பதனானும் உணர்க. இடுகொடியை முலைக்கு அடையாக்குவர் நச்சினார்க்கினியர். பொருது என்னுந் தொழில்பற்றி யானை எனவும் மலை எனவும் உரைத்துக்கொள்க. ( 100 )
    ------------

      2478. அணித்தகு பவள மேற்பக்
      கடைந்துமுத் தழுத்தி யம்பொன்
      றுணித்தடி விளிம்பு சேர்த்தித்
      தொழுதகச் செய்த வண்கை
      மணிச்சிரற் சிறகு நாண
      வகுத்தசாந் தால வட்டம்
      பணித்தகு மகளிர் வீசிப்
      பாவையைக் குளிர்ப்பித் தாரே.

    பொருள் : அணித்தகு பவளம் ஏற்பக் கடைந்து - அழகிய பவளத்தை இயல்புறக் கடைந்து; முத்தழுத்தி - அடியிலே முத்தை அழுத்தி; தொழுதகச் செய்த வண்கை - தொழுதல் பொருந்தச் செய்த காம்பினையுடைய; அம்பொன் துணித்து விளிம்பு சேர்த்தி - அழகிய பொன்னை நறுக்கி, விளிம்பிலே சேர்த்துப் பீலியிட்ட; மணிச் சிரல் சிறகு நாண வகுத்த சாந்து ஆலவட்டம் - சிச்சிலியின் சிறகு நாணச் செய்த சந்தன ஆலவட்டத்தாலே; பணித்தகு மகளிர் வீசிப் பாவையைக் குளிர்ப்பித்தார் - வீசுதற் றொழிலுக்குத் தக்க மகளிர் வீசி இலக்கணையைக் குளிர்ப்பித்தனர்.

    விளக்கம் : அணித்தகு - அழகிய. ஏற்ப - பொருந்தும்படி. தொழு - தொழுதல். வண்கை - வளப்பமுடைய கைப்பிடி. மணிச்சிரல் - அழகிய சிச்சிலிப் பறவை. சாந்தாலவட்டம் - ஒருவகை விசிறி. பணித்தொழிலிலே தகுதிபெற்ற மகளிர் என்றவாறு. பாவை : இலக்கணை. ( 101 )
    ------------

      2479. சேந்து நீண்ட செழுந்தாமரைக் கண்களி
      னேந்தி மாண்ட முலைக்கண்களி னெழுதிச்
      சாந்த மாக மெழுதித்தகை மாமல
      ராய்ந்து சூட்டி யவனஞ்சலி செய்தான்.

    பொருள் : அவன் சாந்தம் ஆகம் எழுதி - (அப்போது) சீவகன் சந்தனத்தாலே அவள் மார்பிலே எழுதி; சேந்து நீண்ட செழுந்தாமரைக் கண்களின் - சிவந்து நீண்ட தன் செந்தாமரைக் கண்களாலே; ஏந்தி மாண்ட முலைக்கண்களின் எழுதி - நிமிர்ந்து சிறப்புற்ற முலைக்கண்களிலே எழுதி; தகை மாமலர் ஆய்ந்து சூட்டி - தகுதியையுடைய சிறந்த மலர்களைத் தெரிந்தணிந்து; அஞ்சலி செய்தான் - கைகுவித்து அவள் அடியிலே வணங்கினான்.

    விளக்கம் : கூட்டத்திற்கு இடையீடு செய்தான் எனக் கருதி அவள் ஊடியதால் அவன் அஞ்சலி செய்தான் ஊடல் தீர்க்க. ( 102 )
    ------------

      2480. மணிசெய் வீணை மழலைக்குழல் பாண்டிலோ
      டணிசெய் கோதை யவர்பாடிய கீதம்
      பணிவில் சாயல் பருகிப்பவ ளக்கொடி
      மணியு முத்துமலர்ந் திட்டதொத் தாளே.

    பொருள் : அணிசெய் கோதையவர் - அழகிய கோதையினை உடையார்; மணி செய் வீணை மழலைக் குழல் பாண்டிலொடு - மணியினாற் செய்த கோட்டையுடைய யாழும்; மழலைக் குழல் - மழலை போன்ற இனிய குழலும்; பாண்டிலொடு - தாளத்துடன்; பாடிய கீதம் - பாடிய பாட்டு; பணிவு இல் சாயல் பருகி - மேம்பட்ட சாயலையுடைய இலக்கணை பருகி; பவளக்கொடி மணியும் முத்தும் மலர்ந்திட்டது ஒத்தாள் - ஒரு பவளக்கொடி மணியையும் முத்தையும் பூத்திட்ட தன்மையை ஒத்தாள்.

    விளக்கம் : மணி - பவளம் : வாய்க்குவமை. இவர் பண்டு செய்த நிலைமை தோன்றப் பாடிய பாட்டினாற் சிறிது முறுவல் கொண்டாள் என்றார்; இவ்வாறு பாடுதல் மரபு. பாட்டுக்குப் பரிசில் கொடுத்தாள் என்றாற் போலவும் நின்றது. ( 103 )
    ------------

      2481. எய்த்து நீர்ச்சிலம் பின்குரன் மேகலை
      வித்தி மாதர் வருத்தம்விளைத் தாளெனத்
      தத்து நீர்த்தவ ளைக்குரற் கிண்கிணி
      யுய்த்தொர் பூசலுட னிட்டன வன்றே.

    பொருள் : வித்தி மாதர் வருத்தம் விளைத்தாள் என - காதலை வித்தி இவள் வருத்தம் விளைத்தாள் என்பன போல; எய்த்து உணர்ந்து; நீர்ச் - சிலம்பு - நீர்மையை உடைய சிலம்பும்; இன் குரல் மேகலை - இனிய குரலையுடைய மேகலையும்; நீர் தத்து தவளைக் குரல் கிண்கிணி - நீரிலே தத்தும் தவளையின் குரல் போல் ஒலிக்கும் கிண்கிணியும்; உடன் உய்த்து ஒர் பூசல் இட்டன - ஒன்றாகக் கொண்டு ஒரு பூசலை யிட்டன.

    விளக்கம் : அவன் புணர்தலால், கிண்கிணியும் சிலம்பும் உடனே பூசலிட்டன. அப்போது அவள் புணர்தலால் மேகலையும் வருத்தம் விளைத்தாள் என்பன÷ பால அவற்றுடனே பூசலிட்டன என்பர் நச்சினார்க்கினியர். ( 104 )
    ------------

      2482. ஏந்தி நாங்களுட னேயிடு பூசலை
      வேந்தர் வேந்தன் கொடுங்கோ லினனாகி
      யாய்ந்து கேட்டு மருளானென் றவிந்தன
      சாந்த மேந்துமுலை யாள்கலந் தாமே.

    பொருள் : நாங்கள் உடனே ஏந்தி இடு பூசலை - (இவள் வருந்துவாள் என்று) நாங்கள் உடனே எடுத்து இடும் பூசலை; வேந்தர் வேந்தன் கேட்டும் கொடுங் கோலினன் ஆகி ஆய்ந்து அருளான் - அரசர்க் கரசன் கேட்டும் கொடுங்கோலினனாகி, ஆராய்ந்து அருளான்; என்று - என்று கருதினாற் போல; சாந்தம் ஏந்தும் முலையாள் கலம் தாம் அவிந்தன - சந்தனம் ஏந்திய முலையாளின் கலங்கள் ஒலி அவிந்தன.

    விளக்கம் : இரண்டு காலத்தும் அவட்கே ஒலித்தலின் அவள்கலம் என்றார். நாங்கள் உடனே ஏந்தியிடு பூசலை என மாறுக. ஏந்தி - எடுத்து. வேந்தன் - சீவகன். கேட்டும் என்புழி - உம்மை இழிவு சிறப்பு. தாம். ஏ : அசைகள். ( 105 )
    ------------

      வேறு
      2483. வீடுமலி யுலகினவர் போலவிளை யாடுந்
      தோடுமலி கோதையொடு துதைந்தவரை மின்போ
      லாடுகொடி யணிந்தவுய ரலங்கல்வரை மார்பன்
      கூடுமயிர் களையும்வகை கூறலுறு கின்றேன்.

    பொருள் : வீடுமலி உலகினவர்போல - வீடு பெறுதற்குக் காரணமான துறக்கத்தினவர்போல; விளையாடும் - இன்ப விளையாட்டிலே ஈடுபட்ட; தோடுமலி கோதையொடு - இதழ் நிறைந்த கோதையணிந்த இலக்கணையுடன்; துதைந்த வரை மின்போல் ஆடுகொடி அணிந்த உயர் அலங்கல் வரை மார்பன் - நெருங்கிய மலையிலே மின்னற் கொடிபோல அசையும் கொடி யணிதற்குக் காரணமான, உயர்ந்த மாலையைத் தனக்கென வரைந்த மார்பன்; கூடு மயிர்களையும் வகை கூறல் உறுகின்றேன் - கூடுவதொரு மயிர் களையுஞ் சடங்கினைக் கூறலுறுகின்றேன்.

    விளக்கம் : அதிகார தேவர்கள் அதிகார முடிவிற் கற்பம் அறுதியாக இருந்து முத்தி எய்துவரென்பதனால், உலகமென்றது வீடுபெறுதற்குக் காரணமான துறக்கம் எனப்பட்டது. இனி, வீடுமலி உலகினவர் : சிவலோகம், பரமபதம் என்கிற உலகிலுள்ள அரனும் அரியும் என்றும் கூறலாம். இவர்கள் என்றும் பொன்றா நிறையின்பத்தினைத் தேனுண்ணும் வண்டென முறையுறத் துய்ப்பவராவர். நாலாம் நாள் அரசர்க்கு மயிர்களைதல் முறைமையென்று கூறுதலின் அது கூறுகின்றார். ( 106 )
    ------------

      2484. உச்சிவரை வளர்ந்திளமை யொழிந்தவுயர் திண்கா
      ழிச்சவிய வல்லவென வெழுதியவை யூன்றிக்
      கச்சுவிளிம் பணிந்ததொழிற் கம்பலவி தான
      நச்சுமணி நாகருறை நாகமென விரித்தார்.

    பொருள் : உச்சி வரை வளர்ந்து - மலையுச்சியிலே வளர்ந்து; இளமை ஒழிந்த உயர் திண்காழ் - இளமை நீக்கி முற்றின திண்ணிய காம்புகள்; இச் சவிய அல்ல என எழுதியவை - இப்படி அழகுடையன அல்ல என்னும்படி எழுதினவற்றை; ஊன்றி - நட்டு; கச்சு விளிம்பு அணிந்த தொழில் கம்பல விதானம் - கச்சினாலே விளிம்பை அழகு செய்த தொழிற்பாடுடைய கம்பலமாகிய மேற்கட்டியை; நச்சு மணி நாகர் உறை நாகம் என விரித்தார் - நஞ்சையும் மணியையும் உடைய நாகர்கள் உறைகின்ற உலகம் என்னும்படி விரித்தனர்.

    விளக்கம் : வரையுச்சி என மாறுக. இளமை ஒழிந்த என்றது முற்றிய என்றவாறு. காழ் - கழி. சவிய : பலவறி சொல் : அழகுடையன.விதானம் - மேற்கட்டி. நாகம் - நாகருலகம். ( 107 )
    ------------

      2485. முத்தக நிறைந்தமுளை யெயிற்றுமத யானை
      மத்தகமுந் திருமகடன் வடிவுபட மாதோ
      வொத்தகல மெண்முழமென் றோதிநக ரிழைத்தார்
      மொய்தெரிசெம் பொற்றுகளி னூன்முடிவு கண்டார்.

    பொருள் : நூல் முடிவு கண்டார் - நூலின் முடிவைக் கண்டவர்கள்; முத்து அகம் நிறைந்த முளை எயிற்று மதயானை - முத்தைத் தன்னிடத்தே நிறையக் கொண்ட முளை எயிற்றையுடைய மதயானைகளை; மத்தகமும் - மத்தகத்துடன்; (இரு புறத்திலும்) திருமகள் தன் வடிவும்பட - திருமகளின் உருவமும் அமைய; மொய்த்து எரிசெம்பொன் துகளின் - மிகுதியாக ஒளிர்கின்ற பொன் துகளாலே (ஆக்கி); ஒத்த அகலம் எண் முழம் என்று ஓதி - தன்னில் ஒத்த அகலம் எண் முழம் என்று ஆராய்ந்து; நகர் இழைத்தார் - மனையைக் கோலஞ்செய்தார்.

    விளக்கம் : இருபுறத்தும் மதயானைகளை நிற்ப இடையே திருமகளுருவம் அமையக் கோலஞ் செய்தார் என்க. முதிரிண ரூழ்கொண்ட முழவுத்தா ளெரிவேங்கை, வரிநுதல் எழில்வேழம் பூ நீர்மேற் சொரிதர, புரிநெகிழ் தாமரை மலரங்கண் வீறெய்தித், திருநயந் திருந்தன்ன, என்றார் கலியினும் (44 : 4 - 7) (108 )
    ------------

      2486. உழுந்துபய றுப்பரிசி யப்பமருங் கலங்கள்
      கொழுந்துபடக் கூப்பிநனி யாயிர மரக்கால்
      செழுந்துபடச் செந்நெனிறைத் தந்நுண்கொடி யறுகின்
      கொழுந்துகுறைத் தணிந்துகொலை வேற்கணவ ரமைத்தார்.

    பொருள் : உழுந்து பயறு உப்பு அரிசி அப்பம் அருங்கலங்கள் கொழுந்து படக் கூப்பி - உழுந்து முதலாகக் கூறப் பட்டவற்றைக் கொழுந்துபடக் கூப்பி; நனி ஆயிரம் மரக்கால் செழுந்துபடச் செந்நெல் நிறைத்து - நன்றாக, ஆயிரம் மரக்காலிலே வளமைப்படச் செந்நெல்லை நிறைத்து. அம் நுண்கொடி அறுகின் கொழுந்து குறைத்து அணிந்து - (அவற்றிலே) அழகிய நுண்ணிய கொடி அறுகம் புல்லின் கொழுந்தைக் கிள்ளி அணிந்து; கொலை வேல் கணவர் அமைத்தார் - கொலை புரியும் வேற்கண் மங்கையர் இவ்வாறு அமைத்தனர்.

    விளக்கம் : செழுந்து : உரிச்சொல் ஈறு திரிந்தது. இச் செய்யுளோடு கொழுங்களி உழுந்தும் செழுங்கதிர்ச் செந்நெலும், உப்பும் அரிசியும், கப்புரப் பளிதமொடு, ஐவகை வாசமும் கை புனைந்தியற்றிய, முக்கூட்டமிர்தும் அக்கூட்டமைத்து எனவரும் பெருங்கதைப் பகுதி (2-4 : 88-91) ஒப்புநோக்கற்பாலது. ( 109 )
    ------------

      2487. செங்கய லிரட்டைதிரு வார்சுடர்க ணாடி
      பொங்குகொடி வார்முரசந் தோட்டிபுணர் கும்ப
      மங்கலங்க ளெட்டுமிவை மணியிற்புனைந் தேந்தி
      யங்கயற்க ணரிவையர்க டென்கிழக்கி னின்றார்.

    பொருள் : அம்கயற் கண் அரிவையர்கள் மணியின் புனைந்து - அழகிய கயற்கண் மங்கையர்கள் தம்மை மணியாலே புனைந்து கொண்டு; செங்கயல் இரட்டை - சிவந்த இணைக்கயல்களும்; திருவார் - சாமரையும்; சுடர் - விளக்கும்; கணாடி - கண்ணாடியும்; பொங்கு கொடி - கிளருங்கொடியும்; வார் முரசம் - வாரால் இறுகிய முரசமும்; தோட்டி - அங்குசமும்; புணர் கும்பம் - இரட்டை (நீர் நிறை) குடமும்; மங்கலங்கள் இவை எட்டும் - மங்கலப் பொருள்களாகிய இவை எட்டையும்; ஏந்தித் தென் கிழக்கில் நின்றார் - சுமந்து தென் கிழக்கில் நின்றனர்.

    விளக்கம் : திருவாரென்றது சாமரை அடியை. இனி, கும்பத்தோடு புணர்ந்த மங்கலங்கள் எட்டுமெனவே சாமரை கூறிற்றென்றுமாம். ( 110 )
    ------------

      2488. வெள்ளுருவ மாலைவட கீழிருவர் மின்போ
      லொள்ளுருவ வாளுருவி நின்றனர்தென் மேல்பா
      லுள்ளுருக நோக்கியுய ருழுத்தகலு மேந்திக்
      கள்ளுருவ மாலையவர் கைதொழுது நின்றார்.

    பொருள் : வடகீழ் இருவர் - வடகீழ்த் திசையிலே இருவர்; மின்போல் வெள் உருவமாலை ஒள் உருவ வாள் உருவி நின்றனர் - மின்னுக் கொடிபோல வெள்ளிய வடிவையுடைய மாலையணிந்து, ஒள்ளிய வடிவுடைய வாளை உருவியவாறு நின்றனர்; தென்மேல் பால் - தென் மேற்றிசையிலே; கள் உருவ மாலையவர் - கள்ளை உடைய அழகிய மாலையையுடைய மகளிர்; உயர் உழுந்து அகலும் ஏந்தி - உயர்ந்த உழுந்தையுடைய அகலையும் ஏந்தி; உள் உருக நோக்கி - அன்பினால் நெஞ்சு குழையத் தெய்வத்தை நோக்கி; கைதொழுதுநின்றார் - கைகுவித்து நின்றார்.

    விளக்கம் : வடகீழ் - வடகீழ்த்திசை. தென்மேல் - தென்மேற்றிசை. அன்பினால் உள்ளுருக என்க; தெய்வத்தை நோக்கி என்க. உழுத்தகல் - உழுந்து பெய்த அகல். ( 111 )
    ------------

      2489. தோரைமலர் நீரறுகு துளும்புமணித் தால
      மாரவட மேற்றிசைக்க ணிருந்தவலிர் பஞ்சிச்
      சீர்நிறைய வரையகலந் திருத்தத்திரு நோக்கும்
      வாரமுறைக் கருவிவடக் கிருந்தனகண் மாதோ.

    பொருள் : தோரை மலர் நீர் அறுகு துளும்பும் மணித்தாலம் - மூங்கில் அரிசியும் மலரும் நீரும் அறுகும் மணித் தட்டிகன்கண்; வடமேல் திசைக்கண் ஆர இருந்த - வடமேல் திசையிலே பொருந்த இருந்தன; வரை அகலம் சீர் நிறையத் திருத்த வாரமுறை திருநோக்கும் - மலையனைய மார்பைச் சீர் முற்றுறத் திருத்த, பட்ச பாத முறையாகத் திருமகள் நோக்குகிற; அவிர் பஞ்சி வடக்கிருந்தன - விளங்கும் வெள்ளாடையின் மேலே வடக்கிலே இருந்தன.

    விளக்கம் : இருந்தன கள் : கள் : அசை. பஞ்சி : வெண்டுகிலுக்குக் கருவியாகுபெயர். உறை கருவி பாடமாயின் வாரம் உறைகின்ற கருவி என்க. தோரை - மூங்கிலரிசி. மணித்தாலம் - மணியாலியன்ற தாலம் (தட்டு) இதனைத் தாம்பாளம் என்பர். இருந்த : பலவறிசொல். வாரம் - நடுவின்மை. ( 112 )
    ------------

      2490. பானுரையி னெய்யவணைப் பைங்கதிர்கள் சிந்தித்
      தானிரவி திங்களொடு சார்ந்திருந்த தேபோல்
      வேனிரைச்செய் கண்ணியொடு மெல்லென விருந்தான்
      வானுயர வோங்குகுடை மன்னர்பெரு மானே.

    பொருள் : பால் நுரையின் நொய்ய அணை - பாலின் நுரை போல நொய்ய அணையிலே; இரவி தான் திங்களொடு பைங்கதிர்கள் சிந்திச் சார்ந்திருந்ததே போல் - ஞாயிறு தான் திங்களுடன் புத்தொளி வீசி அமர்ந்திருந்ததைப்போல; வான் உயர ஓங்கு குடை மன்னர் பெருமான் - வானிலே உயர்ந்தோங்கிய குடையையுடைய அரசர் பெருமான்; வேல் நிரைசெய் கண்ணியொடு மெல்லென இருந்தான் - வேலென ஒழுங்குறுங் கண்ணியோடு அமைந்திருந்தான்.

    விளக்கம் : செய் : உவமைச் சொல். நொய்ய - மெத்தென்ற. தான் - அசை. இரவி - ஞாயிறு. இது சீவகனுக்குவமை. திங்கள் - இலக்கணைக்குவமை - கண்ணி : இலக்கணை. மன்னர் பெருமான் : சீவகன். ( 113 )
    ------------

      வேறு
      2491. குளநென் முன்றிற்கனி தேன்சொரி
      சோலைக் குளிர்மணி
      வளமை மல்கியெரி யம்மட
      மந்திகை காய்த்துவா
      னிளமை யாடியிருக் கும்வனத்
      தீர்ஞ்சடை மாமுனி
      கிளையை நீங்கிக்கிளர் சாபத்தி
      னாவித னாயினான்.

    பொருள் : குளநெல் முன்றில் - குளநெல் உணங்கும் முன்றிலிலே; கனி தேன் சொரி சோலை - கனி தேனைப் பொழியும் சோலையினிடத்தே; குளிர் மணி வளமை மல்கி எரிய - தண்ணிய மணிகள் வளம் நிறைந்து ஒளிசெய்; மடமந்தி கை காய்த்துவான் - இளமந்தி (அதனைத் தீயென எண்ணி) கையைக் காய்ச்சுதற்கு; இளமை ஆடியிருக்கும் வனத்து - இளமை யாடி இருக்கும் வனத்திலுள்ள; ஈர்ஞ்சடை மாமுனி - தண்ணிய சடையையுடைய முனியொருவன் (தன்னை ஒருவன் சபித்தலின்); கிளையை நீங்கி - சுற்றத்தை நீங்கி; கிளர் சாபத்தின் - வந்து; தோன்றின சாபத்தாலே; நாவிதன் ஆயினான் - நாவிதன் ஆனான்.

    விளக்கம் : இளமையாடுதல் : ஒன்றை மற்றொன்றாக எண்ணி மயங்குதல். குளநெல் - ஒருவகை நெல். குளநெல் உணங்கும் முன்றில் என்க. எரியம்மடமந்தி என்புழி வண்ண நோக்கி மகரவொற்று விரிந்து நின்றது. காய்த்துவான் : வினையெச்சம். நாவிதன் - மயிர்வினைஞன். ( 114 )
    ------------

      2492. ஆய்ந்த கேள்வி யவன்கான்
      முளையாய்வழித் தோன்றினான்
      றோய்ந்த கேள்வித் துறைபோ
      யலங்காரமுந் தோற்றினான்.
      வேந்தன் றன்னாற் களிற்றூர்
      சிறப்பொடு மேயினான்
      வாய்ந்த கோல முடையான்
      பெருமஞ்சிகர்க் கேறனான்.

    பொருள் : ஆய்ந்த கேள்வி யவன் வழிகான் முளையாய் - சிறந்த கேள்வியை உடைய அம் முனிவன் மரபிலே பிள்ளையாக; தோன்றினான் - பிறந்தவன்; தோய்ந்த கேள்வித் துறைபோய் - தொக்க நுற்கேள்வி முற்றக் கற்று; அலங்காரமும் தோற்றினான் - அலங்காரம் என்பதொரு நூலையுங் கற்றவன்; வேந்தன் தன்னால் களிற்று ஊர்தி சிறப்பொடு மேயினான் - அரசனாலே யானையாகிய ஊர்தியையும் சிறப்பொடு பெற்றவன்; வாய்ந்த கோலம் உடையான் - பொருந்திய அழகுடையவன்; பெருமஞ்சிகர்க்கு ஏறனான் - (தன்தொழில் மிகுதியால்) பெரிய நாவிதர்களிற் சிங்கம் போன்றவன்.

    விளக்கம் : அடுத்த செய்யுளுடன் தொடரும். ஆய்ந்த கேள்வியவன் என்றது சாபத்தால் நாவிதனாயினான் என்ற அம் முனிவன் என்பதுபட நின்றது. கான்முளை - வழித்தோன்றல் - பிள்ளை. கல்வி கேள்விகளிற் றுறைபோய் என்க. அலங்காரம் - ஒரு நூல். அலங்காரம் என்னும் ஒரு நூலையுஞ் செய்தான். அதனாற் வேந்தனாற் சிறப்பொடு மேயினான் எனினுமாம். கோலம் - அழகு. மஞ்சிகர் - நாவிதர். ( 115 )
    ------------

      வேறு
      2493. நித்தில வடமும் பூணு
      மாரமு நிழன்று தாழ
      வொத்தொளிர் குழைகள் காதி
      னான்றுபொன் னூச லாடப்
      பைத்தர வல்குற் பாவை
      கரகநீர் சொரியப் பாங்கின்
      வித்தகன் பூசி வெள்வேல்
      வேந்தனுக் கிறைஞ்சி னானே.

    பொருள் : நித்தில வடமும் பூணும் ஆரமும் நிழன்று தாழ - முத்துமாலையும் பூண்களும் மாலையும் ஒளிவீசித் தொங்க; ஒத்து ஒளிர் குழைகள் காதில் நான்று பொன் ஊசல் ஆட - அளவு ஒத்து விளங்கும் குழைகள் காதிலே தொங்கிப் பொன்னூசலாட; பைத்து அரவு அல்குல் பாவை - படமுடைய அரவனைய அல்குலாள் ஒரு பாவையாள்; கரக நீர் சொரிய - கரகத்திலிருந்து நீரை வார்க்க; வித்தகன் பாங்கின்பூசி - அறிஞனாகிய அவன் பண்புற வாய்கழுவி; வெள்வேல் வேந்தனுக்கு இறைஞ்சினான் - வெள்ளிய வேலையேந்திய அரசனை வணங்கினான்.

    விளக்கம் : வேந்தனுக்கு : வேந்தனை : உருபுமயக்கம். நித்திலவடம் - முத்துவடம். நிழன்று - ஒளிர்ந்து. பைத்து - படத்தையுடைய : பாவை என்றது ஒரு பெண் என்பதுபட நின்றது. வித்தகன் என்றது - நாவிதனை. பூசி - வாய்பூசி. ( 116 )
    ------------

      2494. நச்செயிற் றரவி னோக்கின்
      யொளிமுடிச் சிதறி னானே.
      வச்சிர வண்ணன் காப்ப
      மன்னரை நடுங்க நோக்கி
      வச்சுதங் கொண்டு மன்ன
      வாழிய ரூழி யென்னா
      யுச்சிவண் டிமிரு மாலை
      னடிமுடித் தெளித்து நங்கை

    பொருள் : நஞ்சு எயிற்று அரவின் நோக்கின் மன்னரை நடுங்க நோக்கி - நஞ்சையுடைய பாம்பின் பார்வையைப்போல உன் பகை வேந்தரை நடுங்கும்படி பார்த்து; வச்சிர வண்ணன் காப்ப ஊழி வாழியர் என்னா - குபேரன் காக்க ஊழி காலம் வாழ்க என்று; அச்சுதம் கொண்டு மன்னன் அடிமுடித் தெளித்து - அறுகையும் அரிசியையுங் கொண்டு வேந்தனுடைய அடியிலும் முடியிலுந் தெளித்து; நங்கை வண்டு இமிரும் மாலை ஒளிமுடி உச்சிச் சிதறினான் - (அவற்றை) இலக்கணையின், வண்டுகள் முரலும் மாலையணிந்த ஒளியுறும் முடியின் உச்சியிலே தெளித்தான்.

    விளக்கம் : செல்வமுண்டாதற்கு வைச்சிர வண்ணனைக் கூறினான். நச்செயிற்று ........ ஊழி என்னுமளவும் நாவிதன் வாழ்த்தியது. வைச்சிரவணன் என்பது வச்சிரவண்ணன் எனப்பட்டது. அவன், குபேரன். அச்சுதன் - அரிசி. அடிமுடி - அடியினும் முடியினும். நங்கை : இலக்கணை. ( 117 )
    ------------

      2495. வாக்கினிற் செய்த பொன்வாண்
      மங்கல விதியி னேந்தி
      யாக்கிய மூர்த்தத் தண்ணல்
      வலக்கவு ளுறுத்தி யார்ந்த
      தேக்கணின் னகிலி னாவி
      தேக்கிடுங் குழலி னாளை
      நோக்கல னுனித்து நொய்தா
      விடக்கவு ளுறுத்தி னானே.

    பொருள் : வாக்கினில் செய்த பொன்வாள் - (நூல் விதியுடன்) வாக்குண்டாகப் பொன்னாற் செய்த கத்தியை; மங்கல விதியின் ஏந்தி - மங்கல விதிப்படி எடுத்து; ஆக்கிய மூர்த்தத்து அண்ணல் வலக்கவுள் உறுத்தி - அமைத்த முகூர்த்தத்திலே அண்ணலின் வலப்பக்கக் கவுகளிலே தொட்டு; தேன்கண் இன் அகிலின் ஆவி - தேன் கலந்த இனிய அகிற்புகை; தேக்கிடும் குழலினாளை - தங்கியு கூந்தலுடையாளை; நுனித்து நோக்கலன் - கூர்ந்து பார்க்காதவனாய்ச் (சிறிது பார்த்து); இடக்கவுள் நொய்தா உறுத்தினான் - இடக்கவுளிலே சிறிது தொட்டான்.

    விளக்கம் : ஆடவர்க்கு வலக்கவுளினும் மகளிர்க்கு இடக்கவுளினும் உறுத்துதல் மரபு. மின்வாள் அழித்த மேதகு கைவினைப் பொன்வாள் பற்றிப்பன்மாண் பொலிகென வலப்பாற் சென்னி வகைபெறத் தீட்டி என்றார் பெருங் கதையினும் (2 - 4 : 161 - 3).(118 )
    ------------

      2496. ஆய்ந்தபொன் வாளை நீக்கி
      யவிர்மதிப் பாகக் கன்மேற்
      காய்ந்தவாள் கலப்பத் தேய்த்துப்
      பூநிறீஇக் காமர் பொன்ஞாண்
      டோய்ந்ததன் குறங்கில் வைத்துத்
      துகிலினிற் றுடைத்துத் தூய்தா
      வாய்ந்தகைப் புரட்டி மாதோ
      மருடகப் பற்றி னானே.

    பொருள் : ஆய்ந்த பொன் வாளை நீக்கி - (உறுத்தின) பொற் கத்தியைப் போக்கி; காய்ந்த வாள் - (இரும்பும் எஃகும் ஒரு தன்மையாகக்) காய்ந்த மயிர்க்கத்தியை; அவிர் மதிப்பாகக் கல்மேல் கலப்பத் தேய்த்து - விளங்கும் அரைத் திங்கள்போலுங் கல்லின் மேல் நன்றாகத் தீட்டி; பூ நிறீஇ - பூவை அக் கல்லிலே நிறுத்தி; காமர் பொன்ஞாண் தோய்ந்த தன் குறங்கில் வைத்து - அழகிய பொன் கயிறு பொருந்திய தன் துடையிலே வைத்து; துகிலினில் துடைத்து - துகிலிலே துடைத்து; வாய்ந்த கை தூய் தாப் புரட்டி - பொருந்திய கையிலே தூய்தாகப் புரட்டி; மருள்தகப் பற்றினான் - உற்றது தெரியாமல் முகத்தைத் தீண்டினான்.

    விளக்கம் : பூவை நிறுத்தியிட்டு என்ப - குனிதலின் பொன்நாண் தோய்ந்த குறங் கென்றார். மாது ஓ : அசைகள். இச் செய்யுளோடு

      பொன் வாள் பற்றிப் பன்மாண் பொலிகென
      வலப்பாற் சென்னி வகைபெறத் தீட்டி
      இலக்கணம் பிழையா எஃகமை இருப்பின்
      நீரளந்தூட்டிய நிறையமை வாளினைப் பஞ்சிப் பட்டொடு துரூஉக்கிழி நீக்கிப்
      பைங்கதிர் அவிர்மதிப் பாகத் தன்ன
      அங்கேழ்க் கன்மிசை அறிந்துவாய் தீட்டி
      வெங்கேழ்த் துகின்மிசை விதியுளி புரட்டிச்
      செங்கேழ்க் கையிற் சிறந்துபா ராட்டி
      ஆசறு நறுநீர் பூசனை கொளீஇ.(2 4 : 164 71)

    எனவரும் பெருங்கதையினை ஒப்புநோக்குக. ( 119 )
    ------------

      வேறு
      2497. ஏற்றி யும்மிழித் தும்மிடை யொற்றியும்
      போற்றிச் சந்தனம் பூசுகின் றானெனக்
      கூற்ற னான்முகங் கோலஞ்செய் தான்கடற்
      றோற்றுஞ் செஞ்சுடர் போலச் சுடர்ந்ததே.

    பொருள் : ஏற்றியும் - ஏற ஒதுக்கியும்; இழித்தும் - இழிய ஒதுக்கியும்; இடை ஒற்றியும் - நடுவு திறந்தும்; சந்தனம் போற்றிப் பூசுகின்றான் என - சந்தனத்தைப் போற்றிப் பூசுகின்றவன்போல; கூற்றுஅனான் முகம் கோலம் செய்தான் - கூற்றுவனைப் போன்ற அரசன் முகத்தை அழகு செய்தான் ; கடல் தோற்றும் செஞ்சுடர் போலச் சுடர்ந்தது - அது கடலிலே தோன்றும் செஞ்ஞாயிறுபோல விளங்கிற்று.

    விளக்கம் : ஏற்றுதல் - ஏற வொதுக்குதல். இழித்தல் - மயிரைத் தாழ ஒதுக்குதல். கூற்றனான் : சீவகன். செஞ்சுடர் - ஞாயிற்று மண்டிலம். ( 120 )
    ------------

      2498. கோதைப் பாரத்தி னானுந்தன் னாணினு
      மேதி லான்முக நோக்கு மிளிவினும்
      பாத நோக்கிய பான்மதி வாண்முக
      மேதமின்றி யெடுத்தனள் மெல்லவே.

    பொருள் : கோதைப் பாரத்தினானும் - மாலையின் சுமையாலும்; தன் நாணினும் - (இயல்பாகவுள்ள) தன் நாணத்தினானும்; ஏதிலான் முகம் நோக்கும் இளிவினும் - அயலானான நாவிதன் முகத்தை நோக்குகின்ற இளிவினாலும்; பாதம் நோக்கிய பால்மதி வாள்முகம் - தன் அடியை நோக்கிக் கவிழ்ந்திருந்த வெள்ளிய திங்களனைய முகத்தை; ஏதம் இன்றி மெல்ல எடுத்தனள் - குற்றமில்லாதபடி மெல்ல அவள் எடுத்தாள்.

    விளக்கம் : கோதைப்பாரம் - மாலையாலாகிய சுமை. தன்னாண் - தனக்கியல்பாயுள்ள நாணம். ஏதிலான் - அயலான்; ஈண்டு நாவிதன். எடுத்தல் - நிமிர்த்துதல். ( 121 )
    ------------

      2499. உருவச் செங்கய லொண்ணிறப் புள்வெரீஇ
      யிரிய லுற்றன போன்றிணைக் கண்மலர்
      வெருவி யோட விசும்பிற குலாவிய
      திருவிற் போற்புரு வங்க டிருத்தினான்.

    பொருள் : ஒள் நிறப் புள் - ஒள்ளிய நிறமுடைய சிச்சிலிப் பறவைக்கு; உருவச் செங்கயல் வெரீஇ - அழகிய செங்கயல்கள் அஞ்சி; இரியல் உற்றன போன்று - ஓடுக்கலுற்றன போல; இணைக் கண்மலர் வெருவி ஓட - இரண்டு கண்மலர்களும் அஞ்சி ஓட; விசும்பின் குலாவிய திருவில்போல - வானில் வளைத்த வானவில் போல; புருவங்கள் திருத்தினான் - புருவங்களைத் திருத்தினான்

    விளக்கம் : கண்கள் அஞ்சி பார்க்க வானில் வளைத்த திருவில் என்பர் நச்சினார்க்கினியர். அவன் புருவந் திருத்தினபோது கண்கள் அஞ்சின என்றவே தக்கது. ( 122 )
    ------------

      2500. ஆர மின்ன வருங்குயந் தான்களைந்
      தோரு மொண்டிறற் கத்தரி கைத்தொழி
      னீரிற் செய்தடி யேத்துபு நீங்கினான்
      றாரன் மாலைத் தயங்கிணர்க் கண்ணியான்.

    பொருள் : தாரன மாலைத் தயங்கு இணாக் கண்ணியான் - தாரணிந்தவனும் மாலையாக விளங்கும், பூங்கொத்துக் கலந்த கண்ணியனும் ஆகிய நாவிதன்; ஆரம் மினன அருங்குளம்தான் களைந்து - மாலை ஒளிர, அரிய மயிர்க் கத்தியை நீக்கி ஒண்திறல் கத்தரிகைத் தொழில் நீரின் செய்து - ஒள்ளிய திறலையுடைய கத்தரிகையாற் செய்யுந் தொழிலை ஒழுங்குறச் செய்து; அடி ஏத்துபு நீங்கினான் அடியை வணங்கிச் சென்றான

    விளக்கம் : குயம் - ஈண்டு மயிர்க்கத்தி. ஓரும் : அசை. கத்தரிகையாற் செய்யும் தொழில் என்க. நீரின் - நீர்மையால். ஏத்துபு - ஏத்தி; தொழுது. கண்ணியான் - நாவிதன். ( 123 )
    ------------

      வேறு
      2501. அன்னப் பெடைநடுக்கி யசைந்து
      தேற்றா நடையாளு
      மன்னர் குடைநடுக்கும் மாலை
      வெள்வேன் மறவோனு
      மின்னு மணிக்குடத்தின் வேந்த
      ரேந்தப் புனலாடிப்
      பொன்னங் கடிமலருந் துகிலுஞ்
      சாந்தும் புனைந்தாரே.

    பொருள் : அன்னப் பெடை நடுக்கி - அன்னப் பெடையை அஞ்சுவித்து; அசைந்து தேற்றா நடையாளும் - இளைத்து (நடக்கின்றாள் என்று) பிறரைத் தெளிவியாத நடையை உடைய இலக்கணையும்; மன்னர்குடை நடுக்கும் மாலை வெள்வேல் மறவோனும் - பகை மன்னரின் குடையை அச்சுறுத்தும், மாலையணிந்த வேலையுடைய சீவகனும்; மின்னும் மணிக்குடத்தின் வேந்தர் ஏந்த - ஒளிரும் மணிக்குடத்திலே வேந்தர்கள் நீரை ஏந்த; புனல் ஆடி - நீராடி; பொன் அம் கடிமலரும் துகிலும் சாந்தும் புனைந்தார் - பொன்னணிகளையும் மணமலரையும் துகிலையம் சாந்தையும் அணிந்தார்கள்.

    விளக்கம் : அசைந்து - இளைத்து. பிறரைத் தேற்றாநடை என்க. மன்னர் - பகைமன்னர். நடுக்கும் - நடுங்கச் செய்யும். மறவோன் - சீவகன். வேந்தர் குடத்தின் ஏந்த அடி என்க. ( 124 )
    ------------

      2502. எஞ்சுற்ற மென்றிரங்கா தாக
      மெல்லாங் கவர்ந்திருந்து
      தஞ்சுற்றம் வேண்டாத முலைக்கீழ்
      வாழ்வு தளர்கின்ற
      நஞ்சுற்ற வேனெடுங்கட் பாவை
      நல்கூர் சிறுநுசுப்பிற்
      கஞ்சுற் றுழிப்புலர்ந்தாங் கணிந்தா
      ரம்ம மணிவடமே.

    பொருள் : எம் சுற்றம் என்று இரங்காது - எம் உறவு என்று அருளாமல்; ஆகம் எல்லாம் கவர்ந்திருந்து - அந்த மார்பின் இடத்தையெல்லாம் கைக்கொண்டு அடிபரந்து; தம் சுற்றம் வேண்டாத - தம் உறவுட்பட விரும்பாத கொடியனவாகிய; முலைக்கீழ் வாழ்வு தளர்கின்ற - முலைகளின் கீழேயிருந்து குடிவாழ்க்கை தளர்கின்ற; நஞ்சு உற்ற வேல் நெடுங்கண் பாவை நல்கூர் சிறு நுசுப்பிற்கு - நஞ்சுடைய வேலனைய நீண்ட கண்களையுடைய இலக்கணையின் வறிய சிறிய இடைக்கு; அஞ்சுற்றுழிப் புலர்ந்தாங்கு - அஞ்சின இடத்தே விடிந்தாற் போல; மணிவடம் அணியிந்தார் - மணிவடத்தை இடையைச் சுற்றி அணிந்தார்.

    விளக்கம் : அம்ம : இத் தீங்கினைக் கேட்பீராக! இடம் தந்து தோற்றுவித்தலின் மார்பை முலைகட்குச் சுற்றம் என்றார். அஞ்சுதலாவது சுற்றத்தையே வருத்துங் கொடுங்கோன்மை மிக்க முலைகளின் கீழ்க் குடியிருந்தால் இறந்துபடுவோமென்று அஞ்சுதல். மணிவடத்தின் ஒளி இருளை ஓட்டுகலின் அதனை அணிந்து விடிந்தாற்போல இருந்தது. இடையைச் சுற்றி அணிதலின் தளையிட்டாராயிற்று. பாவையது நுசுப்பு, நல்கூர் நுசுப்பு என்க. ( 125 )
    ------------

      2503. சுடுமண் மிசைமாரி சொரியச்
      சூழ்ந்து சுமந்தெழுந்து
      நெடுநன் னிமிராவி நாறு
      நெய்தோய் தளிர்மேனி
      துடிநுண் ணிடைப்பெருந்தோட் டுவர்வா
      யேழை மலர்மார்பன்
      கடிநன் மலர்ப்பள்ளி களிப்பக்
      காமக் கடலாழ்ந்தான்.

    பொருள் : மாரி சுமந்து எழுந்து சூழ்ந்து சுடுமண் மிசை சொரிய - மாரி நீரைச் சுமந்து எழுந்து உலகை வலமாக வந்து வெங்கார் மண்ணிலே சொரிய; நிமிர் நெடுநல் ஆவி நாறும் - எழுகின்ற மிகுந்த நறிய ஆவிபோல நாறுகின்ற; நெய்தோய் தளிர் மேனி - நெய்யில் முழுகிய தளிர்போலும் மேனியையும்; துடி நுண் இடை - துடிபோலும் நுண்ணிய இடையையும்; பெருந்தோள் - பெரிய தோளையும்; துவர்வாய் - சிவந்த வாயையும் உடைய; ஏழை - இலக்கணை; கடிநல் மலர்ப் பள்ளி களிப்ப - மணமுடைய அழகிய மலரணையிலே களிக்கும்படி; மலர் மார்பன் காமக் கடல் ஆழ்ந்தான் - விரிந்த மார்பன் காமக் கடலிலே முழுகினான்.

    விளக்கம் : எழுந்த என்றும் பாடம். சுடுமண் - ஞாயிற்றின் வெப்பத்தால் நன்கு சுடப்பட்ட மண். இதனை வெங்கார்மண் என்பது இன்றும் வழக்கிலுளது. வெங்கார் மண்ணிலே ஞெரேலென மழைபொழியுங்கால் ஓர் ஆவி தோன்றி மணப்பது இயல்பு. இம்மணம் சிறந்த மகளிர் மேனி மணத்திற்கு உவமை. துடி - உடுக்கை. துவர் - பவளம். ஏழை; இலக்கணை. மார்பன் : சீவகன்
    (126 )
    ------------

      வேறு
      2504. வழக்கு தாரவன் மார்பிடை மட்டுகப்
      புழுங்கு கோதைபொற் பின்றிறம் பேசலாம்
      விழுங்கு மேகம் விடாது தழீஇக்கிடந்
      தொழிந்த மின்னுக் கொடியொத் தொழிந்திட்டாள்.

    பொருள் : வழங்கு தாரவன் மார்பிடை - உலகம் புகழுந் தாரணிந்த சீவகனின் மார்பிலே (தங்கிய); மட்டு உகப் புழுங்கு கோதை - மட்டைச் சிந்துதற்குப் புழுங்குங் கோதை போல்வாளுடைய; பொற்பின் திறம் பேசலாம் - அழகின் கூற்றைச் சிறிது உவமை கூறலாம்; விழுங்கும் மேகம் விடாது தழீஇக் கிடந்து - தன்னை உள்ளடக்குதற்குரிய முகிலை உள்ளடக்கி மாட்டாமல் புறத்தே தழுவிக் கிடத்தலாலே; ஒழிந்த மின்னுக் கொடி ஒத்து ஒழிந்திட்டாள் - பழைய தன்மையை ஒழிந்ததொரு மின்னையொத்துத் தங்கினாள்.

    விளக்கம் : உலகம் கொண்டாடப்படுதலின் வழங்கு தாரவன் என்றார். மட்டு உகாநிற்கவும் பின்னரும் மட்டையுகுத்தற்குப் புழுங்குவதொரு கோதை என இக் கோதைக்குச் சிறப்புக் கூறினார். புழுக்கம் வேட்கையால் தோன்றும் என்க. ( 127 )
    ------------

      2505. தாம மார்பனுந் தையலு மெய்யுணர்
      வாமி தென்றறி யாது களித்தவர்
      தூமங் கொப்புளிக் குந்துகிற் சேக்கைமேற்
      காம னப்பணைக் கள்ளுக வைகினார்.

    பொருள் : தாம மார்பனும் தையலும் - சீவகனும் இலக்கணையும்; மெய்யுணர்வு ஆம் இது என்று அறியாது - தம் உடம்பினை உணரும் உணர்வாம் இது என்று அறியாமல்; களித்தவர் - (ஒருவர் உடம்பில் ஒருவர் உடம்பு மயங்கிக்) களித்தவர்கள்; தூமம் கொப்பளிக்கும் துகில் சேக்கைமேல் - நறுமணப் புகையை உமிழும் துகில் விரித்த அணைமிசை; காமன் அம்பு அணைகள் உக வைகினார் - காமனுடைய அம்பாலாகிய அணையிலே தேன்சிந்த அமர்ந்தனர்.

    விளக்கம் : மார்பன் : சீவகன். தையல் : இலக்கணை : மெய்யுணர்வு - தம்மூடம்பு என்று உணரும் உணர்ச்சி. மெய்யுணர்வாமிது என்றறியாது என்றது, மெய்மறந்து என்றவாறு. தூமம் - நறுமணப்புகை, சேக்கை - படுக்கை. அப்பணை - அம்பாகிய அணை. காமன் அம்பு - மலரம்பு. ( 128 )
    ------------

      வேறு
      2506. மாதர்தன் வனப்பு நோக்கி
      மகிழ்ந்துகண் ணிமைத்தல் செல்லான்
      காதலித் திருப்பக் கண்கள்
      கரிந்துநீர் வரக்கண் டம்ம
      பேதைமை பிறரை யுள்ளி
      யழுபவர்ச் சேர்த வென்றாள்
      வேதனை பெருகி வேற்கண்
      டீயுமிழ்ந் திட்ட வன்றே.

    பொருள் : மாதர்தன் வனப்பு நோக்கி மகிழ்ந்து - இலக்கணையின் அழகை நோக்கிக் களித்து; கண் இமைத்தல் செல்லான் - கண்களை இமையாதவனாகி; காதலித்திருப்ப - காதலித்திருத்தலால்; கண்கள் கரிந்து நீர்வரக் கண்டு - அவன் கண்கள் கரிந்து நீர்வர, அதனைக் கண்டு; அம்ம! - கேட்பையாக!; பிறரை உள்ளி அழுபவர்ச் சேர்தல் பேதைமை என்றாள் - பிறரை நினைத்தழுபவரைக் கூடுதல் அறியாமை என்றாள்; வேதனை பெருகி வேற்கண் தீ உமிழ்ந்திட்ட. அவ்வளவிலே வருத்தம் மிகுதலின் வேலனைய கண்கள் தீயைச் சொரிந்தன.

    விளக்கம் : வனப்பு நோக்கிக் கண் கரிந்தது; ஆக்கம் பற்றிப் பிறந்த மருட்கை (தொல். மெய்ப். 7. பேர்) என்னும் மெய்ப்பாடு; மருட்கை என்பது வியப்பு. ( 129 )
    ------------

      2507. நாறுசாந் தழித்து மாலை
      பரிந்துநன் கலன்கள் சிந்திச்
      சீறுபு செம்பொ னாழி
      மணிவிர னெரித்து விம்மா
      வேறியு மிழிந்து மூழுழ்
      புருவங்கண் முரிய நொந்து
      தேறுநீர் பூத்த செந்தா
      மரைமுகம் வியர்த்து நின்றாள்.

    பொருள் : சீறுபு - (ஆகவே) சீற்றங் கொண்டு; நாறு சாந்து அழித்து - மணக்கும் சாந்தைத் திமிர்ந்து போக்கி; மாலைபரிந்து - மாலைகளை அறுத்து; நன்கலன்கள் சிந்தி - அழகிய அணிகளைச் சிந்தி; செம்பொன் ஆழி மணிவிரல் நெரித்து - பொன்ஆழி புனைந்த அழகிய விரல்களை நெரித்து; விம்மா - விம்மி; புருவங்கள் ஊழ் ஊழ் ஏறியும் இழிந்தும் முரிய - புருவங்கள் முறைமுறையே ஏறியும் இறங்கியும் முரியும்படி; நொந்து - வருந்தி; தேறுநீர் பூத்த செந்தாமரை முகம் வியர்த்து நின்றாள் - தெளிந்த நீர் துளித்த செந்தாமரை மலர் போன்று முகம் வியர்த்து நின்றாள்.

    விளக்கம் : நாறுசாந்து : வினைத்தொகை. பரிந்து - அறுத்து. சீறுபு - சீறி. விம்மா - விம்மி. ஊழூழ் - முறைமுறையே. முரிய - வளைய வியர்த்த முகத்திற்கு நீர் துளிக்கப்பட்ட தாமரை மலர் உவமை. ( 130 )
    ------------

      2508. இற்றதென் னாவி யென்னா
      வெரிமணி யிமைக்கும் பஞ்சிச்
      சிற்றடிப் போது புல்லித்
      திருமகன் கிடப்பச் சேந்து
      பொற்றதா மரையிற் போந்து
      கருமுத்தம் பொழிப் வேபோ
      லுற்றுமை கலந்து கண்கள்
      வெம்பணி யுகுத்த வன்றே.

    பொருள் : என் ஆவி இற்றது என்னா - என் உயிர் நீங்கியது என்று; எரிமணி இமைக்கும் பஞ்சிச் சிற்றடிப் போது புல்லி - ஒளிரும் மணிகளையுடைய பஞ்சி ஊட்டிய சிற்றடி மலர்களைத் தழுவி; திருமகன் கிடப்ப - சீவகன் கிடக்க; சேந்து பொற்ற தாமரையின் போந்து கருமுத்தம் பொழிபவே போல் - சிவந்து பொலிவுடைய தாமரையினின்றும் புறப்பட்டுக் கரிய தன்மையுடைய முத்துக்கள் சிந்துவன போல; உற்று - ஊடல் தீர்தலைப் பொருந்த; கண்கள் மைகலந்து வெம்பனி உகுத்த - கண்கள் மையைக் கலந்து வெய்யவாகிய பனியை உகுத்தன.

    விளக்கம் : பொற்ற : பொற்பென்னும் உரிச்சொல் திரிந்தது. பொழிதல் ஈண்டு முத்துக்களின் வினை. ஊடல் முழுதும் தீராமையின் வெம்பனியாயிற்று. உற்று - ஊடல் தீர்தலுற எனத் திரிக்க. பொய்ப்ப விடேஎம் என நெருங்கின் தப்பினேன் - என்றபடி சேர்தலும் உண்டு (கனி. 89) என்றாராகலின், அடியில் வணங்கிய பின்னும் ஊடல் தீராது அழுதாள் என்றல் கற்பிற்குப் பொருந்தாது. இளிவே இழவே (தொல். மெய்ப். 5) என்னும் சூத்திரத்தில் அழுகையாவது அவலமும் கருணையும் ஆதலின், கயமலருண் கண்ணாய் என்னும் (37) கலியில், தானுற்றநோயுரைக் கல்லான் பெயரு மன் ..... சேயேன்மன் யானும் துயருழப்பென் என்ற வழிப் பிறன்கண் தோன்றிய இளிவரல் பொருளாக அவலந் தோன்றினாற் போல, இதனையும் பிறன்கண் தோன்றிய இளிவரல் பொருளாகப் பிறந்த கருணையென்று கொள்க வணங்குதல் : அவற்கு இளிவரவு அதனாற் கருணை பிறந்தது. அழுகை ஈண்டுக் கருணை. இதனால் ஊடல் தீரக் கருதினாளாம். ( 131 )
    ------------

      2509. கொண்டபூ ணின்னைச் சார்ந்து
      குலாய்க்கொழுந் தீன்ற கொம்பே
      கண்டுகண் கரிந்து நீரா
      யுகுவது கரக்க லாமே
      பண்டியான் செய்த பாவப்
      பயத்தையார்க் குரைப்பென் றேன்காள்
      வண்டுகாள் வருடி நங்கை
      வரந்தர மொழிமி னென்றான்.

    பொருள் : கொண்ட பூண் நின்னைச் சார்ந்து குலாய்க் கொழுந்து ஈன்ற கொம்பே! - நீ அணிந்த அணி நின்னைச் சார்தலாலே குலாவிக் கொழுந்தீனுதற்குக் காரணமான கொம்பே!; கண்டு - நின்னை விடாமற் பார்த்தலாலே; கண் கரிந்து நீராய் உகுவது சுரக்கலாமே - கண் கரிந்து நீராகச் சிந்துவதை நீ அறியாமற் கரத்தல் இயலுமோ?; தேன்காள்! வண்டுகாள்! - தேன்களே! வண்டுகளே!; பண்டுயான் செய்த பாவப்பயத்தை யார்க்கு உரைப்பேன்? - முன்னர் யான் இயற்றிய தீவினையின் பயனை யார்க்குக் கூறுவேன்?; வருடி - (இவள் காலைத்) தடவி; நங்கை வரம்தர மொழிமின் என்றான் - இந் நங்கை வரமளிக்கக் கூறுமின் என்றான்.

    விளக்கம் : நின்னை விடாமற் பார்த்தலாற் கண் கரிந்து நீர் பெருகியது என்றுரைத்தும், அவளுக்குச், சிதைவு பிறர்க்கின்மை என்னும் மெய்ப்பாடு பிறத்தலின், விடை கொடாமல் நின்றாள், எனவே, அவன் வண்டுகளையும் தேன்களையும் விளித்துக் கூறினான். சிதைவு பிறர்க்கின்மை யாவது : புணரக் கருதி உள்ளஞ் சிதைந்து நிறையழிந்துழிப் புறத்தார்க்குப் புலனாகாமை நெஞ்சினை நிறுத்தல்; பிறர்க்கின்மை யெனவே தலைவன் உணரும். இது கற்பிற்கும் உரித்தென்றார். இம்மெய்ப்பாடு இவட்கு நிகழ்ந்தமை தான் உணர்ந்து, இடையில் வந்த புள்ளை நோக்கி, இனி நுமக்கு எளிது, நீர்ஊடல் தீர்ப்பீராக என்றான் : ஊடற்குக் காரணம் இன்றியும் இத்துணை யெல்லாம் நிகழ்ந்ததற்கு வருந்தினான் ஆதலின். ( 132 )
    ------------

      2510. பூவையுங் கிளியுங் கேட்டுப்
      புழைமுகம் வைத்து நோக்கிக்
      காவலன் மடந்தை யுள்ளங்
      கற்கொலோ விரும்பு கொல்லோ
      சாவம்யா முருகி யொன்றுந்
      தவறில னருளு நங்கை
      பாவையென் றிரத்து மென்ற
      பறவைக டம்முட் டாமே.

    பொருள் : பூவையும் கிளியும் கேட்டு - (அவன் வருத்தத்தைப்) பூவையும் கிள்ளையும் கேட்டு; புழைமுகம் வைத்து நோக்கி - கூட்டின் வாயிலிலே முகத்தை வைத்துப் பார்த்து; தம்முள் தாம் - தம்மிற்றாம்; காவலன் மடந்தை உள்ளம் கல் கொல்லோ? இரும்பு கொல்லோ? - இவ்வரசனின் தேவி மனம் கல்லோ? இரும்போ?; யாம் உருகிச் சாவம் - யாமெனின் இவ்வாறு வேண்டி ஊடல் தீர்ப்பின் தகாதென்று கருதி மனமுருகி இறந்துபடுவோம்; நங்கை! பாவை! ஒன்றும் தவறிலன் அருள் - நங்கையே! பாவையே! சிறிதும் தவறு இலன் அருள்வாய்; என்று இரத்தும் என்ற - என்று வேண்டுவோம் என்றன.

    விளக்கம் : அவள் ஊடல் தீரக் கருதிய தன்மையை அவை தெளியாமையின், இவன் இறந்து படும் எனக்கருதி இங்ஙனம் கூறின.
    ( 133 )
    ------------

      2511. பெற்றகூ ழுண்டு நாளும்
      பிணியழந் திருத்தும் பேதாய்
      முற்றிமை சொல்லி னங்கை
      மூன்றுநா ளடிசில் காட்டாள்
      பொற்றொடி தத்தை யீரே
      பொத்துநும் வாயை யென்றே
      கற்பித்தார் பூவை யார்தங்
      காரணக் கிளவி தம்மால்,

    பொருள் : பேதாய்! - பேதையே!; பெற்ற கூழுண்டு நாளும் மிணி உழந்திருத்தும் - யாம் பெற்ற உணவை உண்டு எப்போதும் கூட்டிலே பிணிப்புண்டு வருந்தியிருப்போம்; முற்றிமை சொல்லின் - (இத் தன்மையுடைய நாம்) அறிவுடைமை கூறின்; பொன் தொடி நங்கை மூன்று நான் அடிசில் காட்டாள் - பொன் வனையலணிந்தவளாகிய நங்கை மூன்று நாள்வரை உணவைக் கண்ணிலுங் காட்டாள்; தத்தையீரே! நும் வாயைப் பொத்தும் - (ஆதலால்) கிளியீரே! நும் வாயை மூடும்; என்று பூவையார் தம் காரணக் கிளவி தம்மால் கற்பித்தார் - என்று பூவையார் தமக்கு மேல் வருங் காரியத்திற்குக் காரணமாகிய மொழிகளாலே கற்பித்தார்.

    விளக்கம் : தந்தையீரே! என்பது இகழ்ச்சியாலும், பூவையார் என்பது சிறப்பினாலும் திணை வழுவமைதியாயின. ( 134 )
    ------------

      2512. பழியொடு மிடைந்த தேனுஞ்
      சீறடி பரவி னாற்கு
      வழிபடு தெய்வ மாகி
      வரங்கொடுத் தருளல் வேண்டு
      மொழிபடைக் களிறு போல
      வுயங்கவு முருகி நோக்காப்
      பிழிசடு கோதை போலாம்
      பெண்டிரைக் கெடப்பி றந்தாள்.

    பொருள் : ஒழிபடைக் களிறுபோல உயங்கவும் - வேல் தைத்து - நின்ற களிறுபோலக் கணவன் வருந்தவும்; உருகி நோக்கா - மனமுருகிப் பாராத; பிழிபடு கோதை போலாம் பெண்டிர் கெடப் பிறந்தாள் - உபாயத்தால் தேனை வாங்கிக் கொள்ளப்படும் கோதை போலேயாம் பரத்தையர் பொல்லாராகும் படி நற்குடியிலே பிறந்தவள்; பழியொடு மிடைந்த தேனும் சீறடி பரவினாற்கு - தன் கணவன் செயல் பழியுடன் கூடியதாயினும் அது தீர அடி பரவினவனுக்கு; வழிபடு தெய்வம் ஆகி வரம் கொடுத்தருளல் வேண்டும் - வழிபடு தெய்வம்போல இருந்து வரத்தைக் கொடுத்தருளுதல் வேண்டும்.

    விளக்கம் : நற்குணமுடைய கிளி, பூவையின் மொழியைக் கேளாமல் இவ்வாறு கூறியது. இது அடுத்த செய்யுளுடன் தொடரும். பரத்தையர் தம்மியல்பு கெட்டுப் பொருள் வேட்கையால் அதன் தன்மையராவர் ஆதலின், ஆம் என்றார். அக் கோதையை உபாயத்தால் நெகிழ்த்துத் தேனை வாங்குதல் போலப் பரத்தையரையும் பொருளால் மனம் நெகிழ்த்து இன்பங் கோடல் வேண்டும். பெண்டிரை : ஐ : அசை. கெட - பொல்லாராக. ( 135 )
    ------------

      2513. ஈன்றதா யானு மாக
      விதனைக்கண் டுயிரை வாழே
      னான்றியான் சாவ லென்றே
      நலக்கிளி நூலின் யாப்ப
      மான்றவண் மருண்டு நக்காள்
      வாழிய வரம்பெற் றேனென்
      றான்றவ னாரப் புல்லி
      யணிநலம் பரவி னானே.

    பொருள் : யானும் ஈன்ற தாயாக - யானும் இவளைப் பெற்ற கொடிய தாயாகும்படி; இதனைக் கண்டு உயிரை வாழேன் - இவளுக்குண்டாம் பழியைக் கண்டு உயிரைச் சுமந்து வாழேன்; யான் நான்று சாவல் - நான் சுருக்கிட்டுக் கொண்டு இறந்து படுவேன்; என்று - என்று கூறி; நலக்கிளி நூலின் யாப்ப - அழகிய கிளி நூலாலே கழுத்தைக் கட்டிக்கொள்ள; மான்றவள் மருண்டு நக்கான் - மயங்கிய இலக்கணை மருண்டு நகைத்தாள்; அவன் வாழிய வரம்பெற்றேன் என்று - (அதுகண்ட) அவன், கிளி வாழிய! வரம்பெற்றேன் என்று கூறி; ஆன்று புல்லி அணிநலம் பரவினான் - அமைந்து தழுவி அழகிய நலத்தைப் பாராட்டினான்.

    விளக்கம் : யானும் : இவட்குப் பிள்ளையாகிய யானும், இதனை - இவன் இறந்தால் இவட்கு உளதாகும் பழியை. வாழிய என்றது கிளியை : இங்ஙனங் கொடியவளைப் பெற்றதால் இவளுடைய தாய் கொடியவளானாள். ( 136 )
    ------------

      2514. நிறையோத நீர்நின்று நீடவமே
      செய்யினும் வாழி நீல
      மறையோ விரிவை வரிநெடுங்க
      ணொக்கிலையால் வாழி நீலங்
      கண்ணொவ்வா யேனுங்
      களித்து நகுதிநின்
      வண்ண மிதுவோ மதுவுண்பார்
      சேரியையோ வாழி நீலம்.

    பொருள் : நீலம்! - நீலமே!; நிறை ஓத நீர் நின்று நீள் தவமே செய்யினும் - நிறைந்த கடல் நீரிலே (ஒரு காலால்) நின்று நீண்ட காலம் தவமே செய்தாலும்; அரிவைகண் ஒக்கிலை நீலம்! - இவள் கண்ணை ஒவ்வாமல் நின்றாய்! நீலமே!; அறையோ! - இதற்கு யான் வஞ்சினங் கூறவேண்டுமோ? (வேண்டா); கண் ஒவ்வாயேனும் களித்து நகுதி - (இங்ஙனம்) நீ கண்ணை ஒவ்வாதிருக்கவும் களித்து நகுகின்றாய்; நின் வண்ணம் இது - நின்சாதி இயல்பு இது; மது உண்பார் சேரியை - கள் குடிப்பார் சேரியிலுள்ளாய்!; நீலம் - நீலமே!

    விளக்கம் : தோற்றாலும் நாணமின்றி நகுதல் நின் சாதியியல்பு! மற்றும் நீகுடியர்சேரியிலிருப்பதாலும் இந்நிலை அடைந்தாய்! (இயற்கைப் பண்பும் நட்புப் பயனும் இந்நிலையைத் தந்தன!) என்கின்றாய் என்றான். வண்ணம் : நிறத்தையும் சாதியையும் குறிக்கும். நிறம் : கருநிறம். வாழி : இகழ்ச்சிக் குறிப்பு. களித்து நகுதி - தேனை உட்கொண்டு மலர்கின்றாய்; செருக்கி நகைக்கின்றாய். இஃது, அறுசீரடியே ஆசிரியத்தளையொடு - நெறிபெற்று வரூஉம் நேரடி முன்னே (தொல். செய் - 64) எனச் செய்யுளியலிற் கலிக்கு அறுசீரடி விதித்தலின், வாழி நீலம் என ஆசிரியத் தளை பெற்ற அறுசீரடிகள், கண்ணொவ்வா யேனும் களித்து நகுதி நின் என்னும் நேரடியின் முன்னும் பின்னும் வந்த அகநிலைக் கொச்சகம். உம்மை யான் வெண்டளையும் வீரவும். பாநிலை வகையே கொச்சகக்கலியென - நூனவில் புலவர் நுவன்றறைந்தனரே தொல் செய். 155) என அகநிலைக் கொச்சகத்திற்கு விதி கூறலின் ஓசை துள்ளியவாறு முணர்க. இனி, ஆசிரியத்துறை என்பார்க்கு ஆகாமை கடவுள் வாழ்த்தாகிய முதற் கவியிற் கூறினாம். ( 137 )
    ------------

      2515. பாண்குலாய்ப் படுக்கல் வேண்டா
      பைங்கிளி பூவை யென்னு
      மாண்பிலா தாரை வைத்தா
      ரென்னுறா ரென்று நக்கு
      நாண்குலாய்க் கிடந்த நங்கை
      நகைமுக வமுத மீந்தாள்
      பூண்குலாய்க் கிடந்த மார்பிற்
      பொன்னெடுங் குன்ற னாற்கே.

    பொருள் : பாண்குலாய்ப் படுக்கல் வேண்டா - நீ வணக்கச் சொல்லாலே வளைத்து எம்மை அகப்படுத்தல் வேண்டா; பைங்கிளி பூவை என்னும் மாண்பு இலாதாரை வைத்தார் என உறார்? - பச்சைக் கிள்ளையும் பூவையும் என்கிற சிறப்பிலாதாரை வளர்த்து வைத்தார் என்ன இளிவரவினை அடையார்?; என்று நக்கு - என்று கூறி நகைத்து; நாண்குலாய்க் கிடந்த நங்கை - நாணம் குலவித் தங்கிய நங்கை; பூண்குலாய்க் கிடந்த மார்பின் பொன்னெடுங் குன்றனாற்கு - அணிகள் குலவிக் கிடந்த மார்பையுடைய நெடிய பொன்மலை போன்ற சீவகற்கு; நகைமுக அமுதம் ஈந்தான் - முறுவல் பூத்தலாகிய அமுதத்தை நல்கினாள்.

    விளக்கம் : சீவகன் இவளுடைய கண்களைப் பாராட்டியதால் இங்ஙனம் கூறி நகைத்தாள். பூவைக்கும் கிளியின் கருத்தேயிருத்தலின் சேர்த்துக் கூறினாள். ( 138 )
    ------------

      2516. நலங்குவித் தனைய மாதர்
      நன்னல மாய வெல்லாம்
      புலம்புவித் தருளி னீங்கிப்
      பகைப்புலம் புக்க வேந்திற்
      கலங்குவித் தனைய நம்பி
      கவர்ந்திடக் கலாப மேங்கச்
      சிலம்புநொந் திரங்கத் தேன்றார்
      பரிந்துதே னெழுந்த தன்றே.

    பொருள் : கலம் குவித்த அனைய நம்பி - கலன்களை யெல்லாங் குவித்தாற் போன்ற நம்பி; நலம் குவித்த அனைய மாதர் நல் நலம் ஆய எல்லாம் - மகளிரின் அழகெலாம் குவித்தாற் போன்ற இலக்கணையின் சிறந்த அழகையெல்லாம்; சிலம்பு நொந்து இரங்க - சிலம்புகள் வருந்தி இரங்க; தேன்தார் பரிந்து - தேனையுடைய தார் பரிய; கலாபம் ஏங்க - மேகலை ஏங்க; பகைப்புலம் புக்க வேந்தின் அருளின் நீங்கி - பகைவர் நாட்டிற் புக்க வேந்தனைப்போல அருளின் நீங்கி; புலம்புவித்துக் கவர்ந்திட - புலம்பச் செய்து கவர்ந்திட; தேன் எழுந்தது - (அது கண்ட) தேனினம் அஞ்சி எழுந்தது.

    விளக்கம் : நம்பிமாதர் நலத்தை யெல்லாம் சிலம்பிரங்கத் தார்பரியப் புலம்புவித்துக் கவர்ந்திட, அம் மாதரும் கலாபமேங்க நம்பி நலத்தைக் கவர்ந்திடத் தேனினம் எழுந்தது - என்பர் நச்சினார்க்கினியர். புலம்புவித்தல் - அவசமாக்குதல். பரிந்து - பரிய : எச்சத் திரிபு. இரங்கல், ஏங்கல் என்பவை ஒலித்தற் பொருள். கலமானது பல நிலங்களிற் பிறந்த பல மணிகளையும் தன்னிடத்திற் சேர்த்தாற்போலப் பலரிடத்துள்ள நற்குணங்கள் யாவும் தான் சேர்ந்தவன் என்றார். ( 139 )
    ------------

      2517. திருநிறக் காம வல்வி
      திருக்கவின் கொண்டு பூத்துப்
      பெருநிறங் கவினி யார்ந்த
      கற்பகம் பிணைந்த தேபோ
      லருநிறக் குருசின் மார்பத்
      தசைந்தன ளலங்கல் வேலு
      நெரிபுறத் தடற்று வாளு
      நீலமு நிகர்த்த கண்ணாள்.

    பொருள் : அலங்கல் வேலும் நெரிபுறத் தடற்று வாளும் நீலமும் நிகர்த்த கண்ணாள் - அலங்கலையுடைய வேலையும் சருச்சரைப்பட்ட புறத்தையுடைய உறையிலிருக்கும் வாளையும் நீல மலரையும் போன்ற கண்ணாள்; திருநிறக் காம வல்லி - அழகிய நிறமுடைய காமவல்லி; திருக்கவின கொண்டு பூத்து - திருவின் அழகைக் கொண்டு மலர்ந்து; பெருநிறம் கவினி ஆர்ந்த கற்பகம் பிணைந்ததேபோல் - நன்னிறத்துடன் அழகுற்ற நிறைந்த கற்பகத்தைப் பிணைந்ததைப் போல; அருநிறக் குரிசில் மார்பத்து அசைந்தனள் - அரிய நிறமுடைய சீவகன் மார்பிலே அசைத் தானே துயின்றாள்.

    விளக்கம் : நெரிவுற்ற தடத்து வாழும் என்ற பாடத்திற்கு, நெரிவுற்ற நீலம் எனப் பொருள் கூறுக; வலிய அலர்த்தின நீலம் எனல் வேண்டும். ( 140 )
    ------------

      வேறு
      2518. மணிக்கண் மாமயிற் சாயன் மாதரு
      மணிக்கந் தன்னதோ ளரச சீயமும்
      பிணித்த காதலாற் பின்னிச் செல்வழிக்
      கணித்த நாள்களேழ் கழிந்த காலையே.

    பொருள் : மணிக்கண் மாமயில் சாயல் மாதரும் - நீலமணிக் கண்களையுடைய மயிலனைய சாயலையுடைய இலக்கணையும்; அணிக்கந்து அன்னதோள் அரச சீயமும் - அழகிய தூண் போன்ற தோளையுடைய, மன்னர்க்குச் சிங்கம் போன்ற சீவகனும்; பிணித்த காதலால் பின்னிச் செல்வுழி - யாப்புற்ற காதலாலே பிணைந்து செல்கையில்; கணித்த நாள்கள் ஏழ்கழிந்த காலை - அறுதியிட்ட நாட்கள் ஏழுங்கழிந்த எட்டாம் நாளிலே,

    விளக்கம் : இப்பாட்டுக் குளகம். மணி - நீலமணி. கண் - புள்ளி. மாதர் : இலக்கணை. அணிக்கந்து - அழகிய தூண். சீயம் - சிங்கம்; என்றது சீவகனை. கணித்த - குறிக்கப்பட்ட. ஏழும் எனல் வேண்டிய முற்றும்மை தொக்கது. ( 141 )
    ------------

      2519. சூட்டுஞ் சுண்ணமு மணிந்து சுந்தர
      மோட்டி யொண்பொனூ லோங்கு தாரொடு
      பூட்டிக் குண்டலம் பொற்பப் பெய்தபின்
      மோட்டு முத்தொளிர் வடம்வ ளாயினார்.

    பொருள் : ஒண்பொன் நூல் ஓங்கு தாரொடு - ஒள்ளிய பொன்னூலுடனும் ஓங்கிய தாருடனும்; சூட்டும் சுண்ணமும் - மலர்ச் சூட்டும் சுண்ணமும் அணிந்து; சுந்தரம் ஓட்டி - சிந்துரப் பொடியைப் பூசி; குண்டலம் பூட்டிப் பெய்தபின் - குண்டலத்தைப் பூட்டி அணிந்த பிறகு, மோட்டு முத்து ஒளிர்வடம் வளாயினார் - பெருமையுற்ற முத்தாலாகிய விளங்கும் மாலையை வளைத்தனர்.

    விளக்கம் : சுந்தரம் - சிந்துரப்பொடி. ஓட்டி - பூசி. பொனூல் - பொன்னூல். மோட்டு முத்து - பருத்த முத்து. வளாயினார் - வளைத்தார். ( 142 )
    ------------

      2520. பானு ரைய்யன பைந்து கிலணிந்
      தானி ரைய்யினத் தலங்க லேறனான்
      மானி ரைய்யினம் மருளு நோக்கினா
      ரூனு யிருணு மொருவ னாயினான்.

    பொருள் : ஆனநிரை இனத்து அலங்கல் ஏறனான் - ஆனிரைத் திரளிலே மாலையணிந்த ஏறு போன்ற சீவகன்; பால் நுரை அன பைந்துகில் அணிந்து - பாலின் நுரை போன்ற தூய ஆடையை அணிந்து; மான்நிரை இனம் மருளும் நோக்கினார் - மான் கூட்டமாகிய திரள மருளும் கண்களையுடைய மகளிரின்; ஊன் உயிர் உணும் ஒருவன் ஆயினான் - ஊனையும் உயிரையும் உண்ணும் ஒப்பற்றவன் ஆனான்.

    விளக்கம் : பானுரைய்யன், தானிரைய்யின், மானிரைய்யின், என மூவிடத்தும் யகர வாற்று வண்ணநோக்கி விரிந்தன. ஏறு - காளை; இனம் - திரள். மகரவொற்று வண்ணத்தால் விரிந்து இனம் மருளு நோக்கினர் என நின்றது. உணும் - உண்ணும். ( 143 )
    ------------

      2521. சுநந்தை தன்மகன் சுடர்பொற் சூழித்தே
      னினங்க வர்ந்துண விலிற்று மும்மதத்
      தநந்த னன்னகை யானை யேறினான்
      குனிந்த சாமரை குளிர்சங் கார்த்தவே.

    பொருள் : சுநந்தை தன் மகன் சுநந்தை மகனாக வளர்ந்த சீவகன்; சுடர்பொன் சூடி - ஒளிவிடும் பொற்சூழியினையும்; தேன் இனம் கவர்ந்து உண விலிற்றும். மும்மதத்து - வண்டுகளின் திரள கவர்ந்து உண்ணும்படி சொரியும் மும்மதத்தினையும்; அநந்தன அன்ன கை - அநந்தன என்னும் பாம்பைப் போன்ற கொடிய கையினையும் உடைய; யானை ஏறினான் - யானையின் மீது அமர்ந்தான்; குனிந்த சாமரை, குளிர்சங்கு ஆர்த்த - (அப்போது) கவரிகள் வீசின; ஒலிக்கும் சங்குகள் ஆர்த்தன.

    விளக்கம் : சுநந்தைகள் - தன் : அசை. மகன் - சீவகன். இலிற்றும் - பிலிற்றும். அநந்தன் - ஆதிசேடன். இது யானைக் கையினுக்குவமை. சாமரை குனிந்த என மாறுக. குனிந்த - வீசின. குளிர் சங்கு : வினைத்தொகை. ( 144 )
    ------------

      வேறு
      2522. இரும்பிடி நூறு சூழ
      விறுவரை நின்ற தேபோற்
      கரும்பொடு காய்நெற் றுற்றிக்
      கருப்புரக் கந்தி னின்ற
      சுரும்புசூழ் மதத்த சூளா
      மணியெனுஞ் சூழி யானைப்
      பெருந்தகைப் பிணையன் மன்னர்
      முடிமிதித் தேறி னானே.

    பொருள் : இரும்பிடி நூறு சூழ இறுவரை நின்றதே போல் - கரிய பிடிகள் நூறு சூழ, பெரிய மலை நின்றதைப்போல; கரும்பொடு காய்நெல் துற்றி - கரும்பையும் காய்த்த நெல்லையும் உண்டு; கருப்புரக் கந்தில் நின்ற - கருப்பூரம் அணிந்த தூணிலே கட்டப்பட்டு நின்ற; சுரும்புசூழ் மதத்த சூளாமணி எனும் சூழி யானை - வண்டுகள் மொய்க்கும் மதத்தையுடைய சூளாமணி என்னப்படும் முகபட்டத்தையுடைய யானையை; பெருந்தகைப் பிணையல் மன்னர் முடிமிதித்து ஏறினான் - பெருமை சான்ற மாலையணிந்த மன்னரின் முடியிலே காலை வைத்து ஏறினான்.

    விளக்கம் : சூளாமணி என்பது யானையின் பெயர் முற்செய்யுளில் யானையின் பெயரும் ஏறின முறையுங் கூறாமையின் இங்குக் கூறினார். ( 145 )
    ------------

      2523. சட்டகம் பொன்னிற் செய்து
      தண்கதிர் வெள்ளி வேய்ந்து
      வட்டநல் வைரம் வாய்ப்ப
      நிறைத்துமேன் மணிகள் சேர்த்திச்
      சுட்டுதற் கரிய முத்தின்
      றொத்துவாய் நாற்ற முந்நீர்ப்
      பட்டவான் பவளக் காம்பின்
      குடைநிழற் பருதி யொத்தான்.

    பொருள் : சட்டகம் பொன்னில் செய்து - சட்டம் பொன்னாலே செய்து; தண்கதிர் வெள்ளி வேய்ந்து - குளிர்ந்த கதிரையுடைய வெள்ளியாலே வேயப்பெற்று; நல் வைரம் வாய்ப்ப வட்டம் நிறைத்து - நல் வைரத்தாலே பொருந்த வட்டத்தை நிறைத்து; மேல் மணிகள் சேர்த்தி - அவ்வட்டத்தின் மேலே முத்து மணிகளை அழுத்தி; சுட்டுதற்கு அரிய முத்தின் தொத்து வாய் நாற்ற - விலையிடுதற்கரிய முத்துத் தொகுதிகள் விளிம்பிலே தொங்கவிடப்பட்டு; முந்நீர்ப்பட்ட வான் பவளக் காம்பின் குடைநிழல் பருதியொத்தான் - கடலிலே தோன்றிய சிறந்த பவளக் காம்பையுடைய குடைநிழலிலே ஞாயிறு போன்றான்.

    விளக்கம் : பொன்னிற் சட்டகம் செய்து என மாறுக. சட்டகம் - சட்டம். சுட்டுதல் - விலைகுறித்தல். தொத்து - தொகுதி. முந்நீர்ப்பட்ட கடலிலே பிறந்த பருதி - ஞாயிறு.
    ------------

      2524. மடற்பனைக் குழாத்திற் பிச்ச
      நிரைத்தன மன்னர் சூழ்ந்து
      புடைக்களி றேறித் திங்கட்
      பொழிகதிர்க் குப்பை யன்ன
      வெடுத்தெறி கவரி வீச
      வியம்பல முழங்கி யார்ப்பக்
      கடற்படை வெள்ளஞ் சூழக்
      காவலன் வீதி சேர்ந்தான்.

    பொருள் : பிச்சம் மடற்பனைக் குழாத்தின் நிரைத்தன - பிச்சங்கள் மடலையுடைய பனைத்திரள்போல நிரைத்தன; புடை மன்னர் களிறு ஏறிச் சூழ்ந்து -(அப்போது) பக்கத்திலே வேந்தர்கள் களிறுகளில் ஏறிச் சூழ்ந்து; திங்கள் பொழிகதிர்க் குப்பை அன்ன எறிகவரி எடுத்து வீச - திங்கள் பொழியும் கதிர்க்குப்பை போல வீசப்படும் கவரியை எடுத்துவீச; இயம் பல முழங்கி ஆர்ப்ப - பல இயங்கள் முழங்கி ஆரவாரிக்க; கடல் படை வெள்ளம் சூழக் காவலன் வீதி சேர்ந்தான் - கடல்போலப் படைப்பெருக்குச் சூழ்ந்து வர வேந்தன் தெருவை அடைந்தான்.

    விளக்கம் : பிச்சம் - பீலிக்குடை. புடை - பக்கம். குப்பை - குவியல். எறிகவரி: வினைத்தொகை. இயம் - இசைக்கருவி. கடல்போன்ற படை. காவலன் - சீவகன்.
    ------------

      2525. அடிநில முறுத னாணி
      யருவருத் தமரி னாலித்
      திடுமயிர் சிறக ராக
      வெழுந்துமேற் பறப்ப போலப்
      படுமழைத் துளியிற் பாய்மாப்
      பரந்தன நிரந்த பொற்றே
      ரிடைநில மின்றி வேழ
      மீண்டின மள்ளர் தொக்கார்.

    பொருள் : அமரின் ஆலித்து - போரில் வந்து முழங்கி; அடிநிலம் உறுதல் அருவருத்து நாணி - அடிநிலம் பொருந்து தலை அருவருத்து நாணி; இடுமயிர் சிறகராக எழுந்து மேல் பறப்ப போல - இட்டமயிர் சிறகுபோலே தோன்ற எழுந்து வானிற் பறப்பனபோல; படுமழைத் துளியின் பாய்மரப் பரந்தன - மழைத்துளிபோல அளவற்றுக் குதிரைகள் பரவின; பொன்தேர் நிரந்த - பொற்றோர்கள் நிரந்தன; இடைநிலம் இன்றி வேழம் ஈண்டின - இடைவெளி யில்லாமல் யானைகள் திரண்டன; மள்ளர் தொக்கார் - வீரரும் குழுமினர்.

    விளக்கம் : மேற் கடற்படை வெள்ளம் என்றார். அப்படை பரந்தபடி யிங்குக் கூறினார். ஆலித்து - முழங்கி. இடுமயிர் : வினைத்தொகை. சிறகர் - சிறகு. பாய்மா - குதிரை. தேர் நிரந்த என மாறுக. மள்ளர் - மறவர். துளி எண்ணிறத்தற்குவமை என்பர் நச்சினார்க்கினியர். அஃதாவது பாய்ந்து செல்லும் சிறந்த குதிரைகள் மழைத்துளிகள் போன்ற எண்ணிறந்தன என்க. ( 148 )
    ------------

      2526. கொழுமடற் பெண்ணை யீன்ற
      குரும்பையுஞ் செப்புங் கொன்ற
      விழைமுலைத் தடத்தி னாடன்
      கணவனைக் காண வேகிக்
      கழுமொலி யரவ வானங்
      கனைபெயல் கடற்பெய் தன்ன
      குழுமொலி யரவ மீண்டிக்
      கொடிநகர் பொலிந்த தன்றே.

    பொருள் : கொழுமடல் பெண்ணை ஈன்ற குரும்பையும் செப்பும் கொன்ற - வளமுடைய மடல் கொண்ட பனையீன்ற குரும்பையையும் செப்பையும் வருத்திய; இழைமுலைத் தடத்தினாள்தன் - அணி புனைந்த முலையாள் இலக்கணையின்; கணவனைக் காண ஏகி - கணவனாகிய சீவகனைக் காணச் சென்று; கழுமு ஒலி அரவ வானம் கனை பெயல் கடல் பெய்த அன்ன - நிறைந்த ஒலியையுடைய முகில் மிகுபெயலைக் கடலிலே பெய்தாற் போன்ற; குழுமு ஒலி அரவம் ஈண்டிக் கொடிநகர் பொலிந்தது - கூடிய பேரொலி திரண்டு கொடியையுடைய நகர் விளக்கமுற்றது.

    விளக்கம் : ஒலியரவம் : ஒருபொருட் பன்மொழி. வானம் கடலிலே பெய்த ஒலியன்ன திரண்ட அரவத்தோடே யீண்டி. பெண்ணை - பனை. இழை - அணிகலன். முலைத்தடத்தினாள்; இலக்கணை. கணவன் : சீவகன். ( 149 )
    ------------

      2527. ஒள்ளிலைச் சூலந் தெண்ணீ
      ருலாமுகில் கிழிக்கு மாடக்
      கொள்கொடிக் குழாத்தி னாலுங்
      கொழுநறும் புகையி னாலுந்
      தெள்ளுறு சுண்ணத் தாலுந்
      தேமலர்த் துகளி னாலும்
      புள்ளினம் பொழுது காணா
      புலம்பிக்கூ டடைந்த வன்றே.

    பொருள் : ஒள் இலைச் சூலம் தெள்நீர் உலாம் முகில் கிழிக்கும் மாடத்து - ஒள்ளிய இலையையுடைய சூலம் தெளிந்த நீர் பரந்த முகிலைக் கிழிக்கும் மாடத்திலே; கொள் கொடிக் குழாத்தினாலும் - கொண்ட கொடித்திரளாலும்; கொழுநறும் புகையினாலும் - வளவிய நல்ல அகிற் புகையினாலும்; தெள்ளுறு சுண்ணத்தாலும் - தெளிந்த சுண்ணப் பொடியாலும்; தேன் மலர்த்துகளினாலும் - தேன் பொருந்திய பூந்துகளாலும்; புள் இனம் பொழுது காணா - பறவைத்திரள் கதிரவனைக் காணாமல்; புலம்பிக் கூடு அடைந்த - வருந்திக் கூட்டை அடைந்தன.

    விளக்கம் : கதிரவன் மறைதலிற் காணாமல் வருந்தின. தெள்நீர் உலாம் முகில் என்பது கடலிலே யுலாவும் முகில் என்றுமாம். உலாவும் என்பது உலாம் என விகாரப்பட்டது. கொள்கொடி : வினைத்தொகை. சுண்ணம் - நறுமணப் பொடி. மலர்த்துகள் - பூந்தாது. காணா - காணாதனவாய். புலம்பி - வருந்தி. ( 150 )
    ------------

      2528. பைந்தொடி மகளிர் பாங்கர்
      பரிந்துநூல் சொரிந்த காசு
      சிந்தின தழலென் றஞ்சிச்
      சிறையன்ன நிலத்தைச் சேரா
      விந்திர கோப மாமென்
      றிளமயில் குனிந்து குத்திச்
      சிந்தையிற் றேம்பத் தாமே
      திருமணி நக்க வன்றே.

    பொருள் : பைந்தொடி மகளிர் பாங்கர் பரிந்து - பைந்தொடி அணிந்த மகளிர் (ஊடியபோது கணவர் மேகலையைப் பற்றுதலால்) அது அற்று; நூல் சொரிந்த காசு - நூல் சொரிந்த மணிகள்; சிந்தின - சிந்தினவற்றை; தழல் என்று அஞ்சி - நெருப்பு என்று அஞ்சி; சிறை அன்னம் நிலத்தைச் சேரா - சிறகுகளையுடைய அன்னம் நிலத்தைச் சேராவாயின; இந்திர கோபமாம் என்று - அவற்றை இந்திர கோபம் என்று எண்ணி; இளமயில் குனிந்து குத்திச் சிந்தையில் தேம்ப - இள மயில்கள் குனிந்து குத்தி, அவை அன்மையின், நெஞ்சாலே வருந்த; திருமணி தாமே நக்க - அழகிய மணிகள் அதற்குத் தாம் நகைத்தாற் போன்று ஒளி வீசின.

    விளக்கம் : அன்னமும் மயிலும் ஆங்கே வளர்ந்தன. ( 151 )
    ------------

      2529. வெள்ளைமை கலந்த நோக்கிற
      கிண்கிணி மிழற்றி யார்ப்பப்
      பிள்ளைமை காதல் கூரப்
      பிறழ்ந்துபொற் றோடு வீழத்
      துள்ளுபு செலபுஇய தோற்றந்
      தொடுகழற் காமன் காமத்
      துள்ளுயி ரறியப் பெண்ணாய்ப்
      பிறந்ததோர் தோற்ற மொத்தார்.

    பொருள் : வெள்ளைமை கலந்த நோக்கின் - கள்ளம் அற்ற நோக்குடன்; கிண்கிணி மிழற்றி ஆர்ப்ப - கிண்கிணிகள் மழலை மொழிந்து ஒலிக்க; பிள்ளைமை காதல் கூர - குழந்தைத் தன்மை யான அன்புமிக ; பொன் தோடு பிறழ்ந்து வீழ - பொன் தோடு கழன்று வீழ; துள்ளுபு செலீஇய தோற்றம் - துள்ளிக்கொண்டு சென்ற தோற்றம்; தொடுகழற் காமன் - தொடுத்த கழலையுடைய காமன்; காமத்து உள் உயிர் அறிய - காமத்தின் இன்பத்தையே நுகர்ந்தறிதற்கு; பெண்ணாய்ப் பிறந்தது ஓர் தோற்றம் ஒத்தார் - பெண்ணாய்ப் பிறந்ததாகிய ஒரு தோற்றத்தைப் போன்றார்.

    விளக்கம் : இச் செய்யுள் முதலாக வேட்கையிலாப் பருவத்தாரும். பிறக்கின்ற பருவத்தாரும், பிறந்த பருவத்தாரும் என மூன்று கூறாக்கிக் கூறுகின்றார். பேதை அல்லை மேதையங் குறுமகள் - பெதும்பைப் பருவத் தொதுங்கினை புறத்தென (அகநா. 7) என்றலின், பேதை வேட்கை பிறவாப் பருவத்தாதலும், பெதும்பை வேட்கை பிறக்கின்ற பருவத்தாதலும் பெற்றாம். இவை ஒழிந்த மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை என்னும் பெயர்கள் வேட்கை பிறக்கின்ற பருவத்துப் பெயர்களாம். அன்றி, அவையும் பல பருவத்தை உணர்த்தும் பெயர்களெனின் : அது முதனூல்களிற் கூறாமையானும், சான்றோர் வேறுபாடு கூறாமல் மகளிர்க்குப் பொதுப் பெயராகச் செய்யுள் செய்தலானும் தேவர்க்கும் அது கருத்தன்றாம். இனி, உலாவிற்கு அங்கமாகப் புதிய நூல்களிற் கூறிய விதி இதற்காகாமையுணர்க. இச் செய்யுள் வேட்கை பிறவாப் பருவத்தாரைக் கூறிற்று. ( 152 )
    ------------

      2530. தன்னெறி வளரக் காமன்
      றான்முலை யிரண்டு மாகி
      முன்னரே வளர்கின் றாற்போன்
      முகிழ்முலை முத்த மேந்திப்
      பொன்னெறி மணியிற் பொங்கிக்
      குழல்புறம் புடைப்ப வோடிப்
      பின்னிறீஇ வைத்த போலப்
      பெதும்பையர் விதும்பி நின்றார்.

    பொருள் : தன் நெறி வளர - தன் கொள்கை உலகிலே வளர்தற்கு; காமன் தான் முலை இரண்டும் ஆகி - காமன் தான் இரண்டு முலைகளும் ஆகி; முன்னரே வளர்கின்றாற் போல் - முதலிலிருந்தே வளர்வதைப் போல; முகிழ் முலை முத்தம் ஏந்தி - அரும்பிய முலைகளிலே முத்துக்களை அணிந்து; பொன் எறி மணியின் பொங்கி - பொன்னிலே வந்து தாக்கும் நீலமணி போலக் கிளர்ந்து; குழல் புறம் புடைப்ப ஓடி - குழல் சென்று முதுகிலே மோதும்படி ஓடி; பின் நிறீஇ வைத்த போல - பின்னும் தலை நிறுத்தி வைத்தாற் போல; பெதும்பையர் விதும்பி நின்றார் - பெதும்பையர் மனம் அசைந்து நின்றனர்.

    விளக்கம் : போல் முகிழ்ந்த எனக் கூட்டுக. எறிதல் : திரை எறிதல் போல நின்றது. பின்னும் தலை நிறுத்தி வைத்தாற் போல என்றது சேர நிறுத்தினாற் போல நின்றமை கூறிற்று. இனிக் காமன்றான் தன் நெறி வளர முலையிரண்டும் தனக்குண்டாய் வளர்கின்றாற்போல நின்றார் என்றும் உரைப்ப. நச்சினார்க்கினியர், முன்னரே என்பதைப் பின்னுக்குக் கொணர்ந்து, முன்னரே நின்றார் என்றியைப்பர். பெதும்பைப் பருவம் மங்கைப் பருவத்திற்கு முற்பட்டதாய் வேட்கை பிறக்கும் பருவமாய் நின்றதாதலின், காமனும் வேட்கை பிறப்பிக்க முன்னரே வளர்கின்றான் என்பது பொருத்தமாக இருக்கவும், பின்னுக்குக் கொண்டு வந்து கூட்டுவதன் காரணம் விளங்கவில்லை. ( 153 )
    ------------

      2531. அணிநிலா வீசு மாலை
      யரங்குபுல் லென்னப் போகித்
      துணிநிலா வீசு மாலைப்
      பிறைநுதற் றோழி சேர்ந்து
      மணிநிலா வீசு மாலை
      மங்கையர் மயங்கி நின்றார்
      பணிநிலா வீசும் பைம்பொற்
      கொடிமணி மலர்ந்த தொத்தார்.

    பொருள் : அணி நிலா வீசும் மாலை அரங்கு புல்லெனப் போகி - தாம் ஆடுகின்ற அழகிய நிலவு வீசும் மாலையையுடைய அரங்கு வறிதாகச் சென்று; துணி நிலா வீசும் மாலை பிறை நுதல் தோழி சேர்ந்து - தெளிந்த ஒளியை வீசும் மாலைப் பிறையனைய நெற்றியை யுடைய தோழியைத் தழுவியவாறு; நிலா வீசும் மணி மாலை மங்கையர் மயங்கி நின்றார் - ஒளிவீசும் மணிமாலை யணிந்த மங்கையர் மயங்கி நின்றனர்; பணி - (பிறகொடிகள்) தாழ்தற்குரியவான; நிலா வீசும் பைம்பொன் கொடி - ஒளி யுமிழும் பைம் பொன்னாலாகிய கொடி; மணி மலர்ந்தது ஒத்தார் - மணிகளை மலர்ந்தாற் போன்றார்.

    விளக்கம் : பணி கொடி என்க. பணி - பரத்தலுமாம். இது சிறிது வேட்கை பிறந்து மயங்கியவர்களைக் குறிக்கின்றது. ( 154 )
    ------------

      2532. வள்ளுகிர் வரித்த சாந்தின் வனமுலை நோக்கி னாரை
      யுள்ளுயி ருண்ணுங் கூற்றி னுடன்றுகண் கரிந்து பொங்கக்
      கள்ளுயி ருண்ணு மாலைக் கதுப்பொரு கையி னேந்தி
      நள்ளிருள் விளக்கிட் டன்ன நங்கைமார் மல்கி னாரே.

    பொருள் : வள் உகிர் வரித்த சாந்தின் வனமுலை - கூரிய நகத்தாலே எழுதின சாந்தையுடைய அழகிய முலைகள்; நோக்கினாரை உள் உயிர் உண்ணும் கூற்றின் - தம்மைப் பார்த்தவரை உயிருண்ணும் கூற்றுக்களைப்போல; உடன்று கண் கரிந்து பொங்க - சினந்து கண் கருகிப் பொங்க; மாலைக்கள் உயிர் உண்ணும் கதுப்பு ஒரு கையில் ஏந்தி - மாலையிலுள்ள தேனின் உயிரைப் பருகும் (குலைந்த) கூந்தலை ஒரு கையிலே ஏந்தி; நள் இருள் விளக்கிட்ட அன்ன - நள்ளிருளிலே விளக்கிட்டாற் போன்று; நங்கைமார் மல்கினார் - நங்கையர் நிறைந்தனர்.

    விளக்கம் : சிவத்தலும் கருகலும் சினத்தின் குறிகள். கதுப்பையேந்துதலின் இருளிலே விளக்கிட்டாற் போன்றனர்; செறிந்த இருளுக்கு விளக்கிட்டாற் போலும் நங்கையர் எனினும் ஆம். இதுமுதலாக வேட்கை மிக்காரைக் கூறுகின்றார். ( 155 )
    ------------

      2533. மட்டொளித் துண்ணு மாந்தர்
      மாண்புபோன் மறைந்து வண்ணப்
      பட்டொளித் தொழிய வல்குற்
      பசுங்கதிர்க் கலாபந் தோன்றக்
      குட்டநீர்க் குவளைக் கண்கள்
      விருந்துண விரும்பி நின்றா
      ரட்டுந்தே னணிந்த மாலைப்
      பவளக்கொம் பணிந்த தொத்தார்.

    பொருள் : அட்டும் தேன் அணிந்த மாலைப் பவளக் கொம்பு அணிந்தது ஒத்தார் - ஒழுகுந் தேன் பொருந்திய மாலையையுடையதொரு பவளக் கொம்பை ஒப்பனை செய்த தன்மையை ஒத்த அம் மகளிர்; அல்குல் வண்ணப்பட்டு ஒளித்து ஒழியப் பசுங்கதிர்க் கலாபம் தோன்ற - தம்மல்குலிடத்துடுத்த நிறமிக்க பட்டாடை மறைப்பவும் மறையாமல் பசிய கதிரையுடைய மேகலையணி புறத்தே தோன்ற நிற்ப; மட்டு ஒளித்து உண்ணும் மாந்தர் மாண்புபோல் மறைந்து - கள்ளை மறைந்திருந்து பருகுங் களிமாக்கள் மாண்பு போன்று; குட்ட நீர்க்குவளைக் கண்கள் விருந்துண - ஆழமான நீரிலுள்ள குவளைபோலும் தங் கண்கள் இவனிடத்துப் புதுமையை அவனறியாதபடி கரந்துண்ணும்படி; விரும்பி நின்றார் - விரும்பியே நின்றார்.

    விளக்கம் : கள்ளைக் கரந்துண்ணு மாக்கள் கரக்கவுந் தோன்று மாறு போல, மேகலை வண்ணப்பட்டிலே ஒளித்துக் கிடவா நிற்கவும் சிறிது தோன்றுற என்க என்பர் நச்சினார்க்கினியர். ( 156 )
    ------------

      2534. பெரும்பொரு ணீதிச் செங்கோற்
      பெருமக னாக்கம் போலப்
      பரந்திட மின்றி மேலாற்
      படாமுலை குவிந்த கீழா
      லரும்பொரு ணீதி கேளா
      வரசனிற் சுருங்கி நந்து
      மருங்குநொந் தொழிய வீதி
      மடந்தைய ரிடங்கொண் டாரே.

    பொருள் : பெரும் பொருள் நீதிச் செங்கோல் பெருமகன் ஆக்கம் போல - பெரிய பொருளாகிய அறம் பொருந்திய செங்கோலையுடைய பெருமகனின் ஆக்கம் பால; மேல் இடமின்றிப் பரந்து - மேலே மார்பில் இடமின்றாம்படி பரந்து; படாமுலை குவிந்த சாயாத முலைகள் குவிந்தன; கீழ் - கீழே; அரும் பொருள் நீதி கேளா அரசனின் சுருங்கி நந்தும் மருங்கு - அரிய பொருளாகிய அறனைக் கேளாத அரசனைப் போல் சுருங்கிக் கெட்ட இடை; நொந்து அழிய - வருந்துமாறு; மடந்தையர் வீதி இடம் கொண்டார் - மடந்தையர்கள் தெருவை இடமாகக் கொண்டனர்.

    விளக்கம் : இது முதலாக மூன்று செய்யுட்கள் பின்பு வந்தோரைக் குறிக்கின்றன. ஆல் இரண்டும் அசைகள். பெரும் பொருள் ஆகிய நீதி என்க. மேலால், கீழால் என்பவற்றுள் ஆல்கள் : அசைகள். நந்தும் - மெலிந்த, மடந்தையர் வீதியிடங் கொண்டார் என்க.
    ( 157 )
    ------------

      2535. செல்வர்க்கே சிறப்புச் செய்யுந்
      திருந்துநீர் மாந்தர் போல
      வல்குற்கு முலைக்கு மீந்தா
      ரணிகல மாய வெல்லா
      நல்கூர்ந்தார்க் கில்லை சுற்ற
      மென்றுநுண் ணுசுப்பு நைய
      வொல்கிப்போய் மாடஞ் சேர்ந்தா
      ரொருதடங் குடங்கைக் கண்ணார்.

    பொருள் : செல்வர்க்கே சிறப்புச் செய்யும் திருந்து நீர் மாந்தர் போல - செல்வமுடையவர்க்கே மேலும் வேண்டுஞ் சிறப்புப் புரியும் பொல்லாத தன்மையுடைய மக்களைப்போல; அணிகலம் ஆய எல்லாம் - பூண்களாகிய எல்லாவற்றையும்; அல்குற்கும் முலைக்கும் ஈந்தார் - அல்குலுக்கும் முலைக்குங் கொடுத்தனர்; நல்கூர்ந்தார்க்குச் சுற்றம் இல்லை என்று - வறியவர்க்குச் சுற்றம் இல்லை என்று; நுண் நுசுப்பு நைய - நுண்ணிய இடை வருந்த; ஒல்கிப் போய் - நுடங்கிச் சென்று; ஒரு தடம் குடங்கை கண்ணார் மாடம் சேர்ந்தார் - ஒரு பெரிய குடங்கை போலும் கண்ணினார் மேனிலத்தை அடைந்தார்.

    விளக்கம் : திருந்து நீர் மாந்தர் என்றது இகழ்ச்சி. செல்வரை எல்லாருஞ் செய்வர் சிறப்பு என்றார் வள்ளுவனாரும் (குறள். 752). நல்கூர்ந்தார்க்கில்லை சுற்றம் என்பது நுசுப்பின் கூற்றென்க. ஒரு குடங்கைத் தடங்கண்ணார் என மாறினுமாம். அல்குற்கும் முலைக்கும் செல்வர் உவமை; நுசுப்பிற்கு நல்கூர்ந்தார் உவமை. ( 158 )
    ------------

      2536. கார்வளர் மின்னு வீசுங்
      குண்டலங் காய்பொ னோலை
      யேர்வளர் பட்ட மேற்ப
      வணிந்திருள் சுமந்து திங்க
      ணீர்வளர் நீலம் பூத்து
      நிரைத்தபோ னிரைத்த மேலால்
      வார்வளர் முலையி னார்த
      மாழைவாண் முகங்கண் மாதோ.

    பொருள் : திங்கள் - பல திங்கள்கள்; கார் வளர் மின்னு வீசும் குண்டலம் - காரிலே தோன்றிய மின்னை வீசுகின்ற குண்டலமும்; காய் பொன் ஓலை - காய்ந்த பொன்னால் ஆன ஓலையும்; ஏர் வளர் பட்டம் - அழகு வளரும் பட்டமும்; ஏற்ப அணிந்து - பொருந்த அணிந்து; இருள் சுமந்து - இருளைச் சுமந்து; நீர வளர் நீலம் பூத்து - நீரில் தோன்றும் நீலத்தை மலர்ந்து; நிரைத்த போல் - நிரைத்தன போல; வார்வளர் முலையினார்தம் மாழை வாள் முகங்கள் - வாரில் வளரும் முலையினாருடைய இளைய ஒளி பொருந்திய முகங்கள்; மேலால் நிரைத்த - மேனிலத்தே நிரைத்தன.

    விளக்கம் : கார் - முகில். காய் பொன்னோலை என்க; வினைத்தொகை. ஏர் - அழகு. இருள் - கூந்தலுக்கும், திங்கள் முகத்திற்கும், நீலம் கண்களுக்கும் உவமைகள் என்க. மாழை - இளைமை. ( 159 )
    ------------

      2537. குறையணி கொண்ட வாறே
              கோதைகா றொடர வோடிச்
      சிறையழி செம்பொ னுந்தித்
              தேன்பொழிந் தொழுக வேந்திப்
      பறையிசை வண்டு பாடப்
              பாகமே மறைய நின்றார்
      பிறையணி கொண்ட வண்ணல்
              பெண்ணொர்பால் கொண்ட தொத்தார்.

    பொருள் : குறை அணி கொண்ட ஆறே - (செம்பாதி) குறையாகப் பூண் அணிந்த அளவிலே ; கோதை கால் தொடர ஓடி - (தொடுத்துக்கொண்டிருந்த) கோதைகள் தம்மிற் பிணங்க ஓடி; செம்பொன் உந்திச் சிறையழி தேன் பொழிந்து ஒழுக ஏந்தி - செம்பொன் உந்தியிலே வரம்பு கடந்த தேன் பொழிந்தொழுக அக்கோதையை ஏந்தி; பறை இசை வண்டு பாட - பறந்து ஒலிக்கும் வண்டுகள் பாட; பாகமே மறைய நின்றார் - செம்பாதி அணியாத நாணத்தாலே ஒரு பாகம் மறைய நின்றவர்கள்; பிறை அணி கொண்ட அண்ணல் - பிறையணிந்த பெருமான்; பெண் ஒர்பால் கொண்டது ஒத்தார் - ஒரு பாலிலே கொள்ளப்பட்ட பெண்ணை யொத்தார்.

    விளக்கம் : பறை - பறத்தல். குறையணி - அரைகுறையான ஒப்பனை. கோதை - மாலை. கால் தொடர்தல் : ஒரு சொல். பிணங்குதல் என்க. உந்தி - கொப்பூழ். அக்கோதையை ஏந்தி என்க. பறத்தலையும் இயையையும் உடைய வண்டென்க. அண்ணல் : சிவபெருமான். அண்ணல் ஓர்பால் கொண்ட பெண் ஒத்தார் என்க. ( 160 )
    ------------

      2538. பொன்னரி மாலை பூண்டு
              பூஞ்சிகை குலாவி முன்கை
      மின்னரிச் சிலம்பு தொட்டு
              விருப்பொடு விரைந்து போவான்
      கன்னிய ராடி நோக்கித்
              தம்மைத்தாங் கண்டு நாணிப்
      பின்னவை யணிந்து செல்வா
              ரிடம்பெறா தொழிந்து போனார்.

    பொருள் : விருப்பொடு விரைந்து போவான் - (சீவகனைக் காணும்) விருப்பாலே விரைந்து போதற்கு; பொன்னரி மாலை பூண்டு - பொன்னரி மாலையைக் (கழுத்திலே) பூண்டு; பூஞ்சிகை குலாவி - அழகிய கூந்தலை வறிதே முடித்து; முன்கை - மின் அரிச் சிலம்பு தொட்டு - முன் கையிலே ஒளியுடைய, பரலணிந்த சிலம்பை அணிந்து (நின்ற); கன்னியர் ஆடி நோக்கி - பெண்கள் கண்ணாடியைப் பார்த்து; தம்மைத் தாம் கண்டு நாணி - தம்மை அதிலே கண்டு நாணுற்று; பின் அவை அணிந்து செல்வார் - பிறகு, அவற்றை அணிந்து செல்கின்றவர்கள்; இடம்பெறாது ஒழிந்து போனார் - இடம் கிடையாமல் தவிர்ந்து போனார்.

    விளக்கம் : சிகையிலே சூட்டுதற்குரிய பொன்னரி மாலையைக் கழுத்திலே பூண்டு என்பது பூண்டு என்னும் வினையாற் போந்தது. அடியிலணிதற்குரிய சிலம்பை முன்கையிலிட்டு என்க. ஆடி - கண்ணாடி. பின் அவற்றை அவற்றிற்குரிய விடத்தே அணிந்து என்க. ( 161 )
    ------------

      2539. முத்துலாய் நடந்த கோல
              முலைமுதன் முற்ற மெல்லாம்
      வித்திய வேங்கை வீயும்
              விழுப்பொனும் விளங்கக் காமத்
      தொத்துநின் றெரிந்து கண்டார்
              கண்சுடச் சுடர்ந்து நின்றா
      ரொத்தொளிர் காம வல்லி
              யொருங்குபூத் துதிர்ந்த தொத்தார்.

    பொருள் : காமத் தொத்து நின்று எரிந்து கண்டார் கண் சுடச் சுடர்ந்து நின்றார் - காமத் தீயின் கொத்து நின்று எரிந்து சுடுதலாலே, கண்டவர் கண்களைச் சுட நின்ற மகளிர்; முத்து உலாய் நடந்த கோல முலை முதல் முற்றம் எல்லாம் - முத்துக்கள் உலவி நடந்த, அழகிய முலை தோன்றற்குக் காரணமான இடம் எல்லாம்; வித்திய வேங்கை வீயும் விழுப்பொனும் விளங்க - விதைத்த வேங்கை மலரும் சிறந்த பொன்னும் போலப் பசலை விளங்குதலால்; ஒத்து ஒளிர் காமவல்லி ஒருங்கு பூத்து உதிர்ந்தது ஒத்தார் - ஒப்புற விளங்கும் காமவல்லிகள் ஒருங்கே பூத்து உதிர்ந்தது போன்றார்.

    விளக்கம் : அலர்ந்த காமவல்லியை ஒத்தார் எனச் சுட்டுப் பெயராக்கும் நச்சினார்க்கினியர், இனி, பசந்த தம்மை நோக்கினார் கண் சுடும் படி நின்றார். வல்லிபூத்துப் பொலிவழிந்த தன்மையை ஒத்தார் என்றும் உரைப்ப என்றுங் கூறுவார். இத்துணையும், மணநிலை வகையிற் பிறந்த பெண்பாலாரையும் பரத்தையரையும் கூறினார். இது, மக்கள் வகையான் காமப் பொருட் பகுதி பற்றி முன்னோர் கூறிய குறிப்பு வகையாள் வந்த செந்துறைப் பாடாண்பகுதியாம். ( 162 )
    ------------

      2540. உகிர்வினை செய்து பஞ்சி
              யொள்ளொளி யரத்த மூட்டி
      யகில்கம ழங்கை சேப்ப
              வரிவைய ரலங்க றாங்கி
      வகிர்படு மழைக்கண் சின்னீர்
              மாக்கய லெதிர்ந்த வேபோன்
      முகில்கிழி மின்னி னோக்கி
              முரிந்திடை குழைந்து நின்றார்.

    பொருள் : அரிவையர் - மகளிர்; உகிர் வினை செய்து - உகிரைச் சீவி; பஞ்சி ஒள் ஒளி அரத்தம் ஊட்டி - பஞ்சியினாலே சிறந்த ஒளியையுடைய செந்நிறக் குழம்பை ஊட்டி; அகில் கமழ் அங்கை சேப்ப அலங்கல் தாங்கி - அகில்கமழும் அங்கை சிவக்கும்படி மாலையை ஏந்தி; வகிர்படு மழைக்கண் சின்னீர் மாக்கயல் எதிர்ந்தவே போல் - மாவடு போலும் மழைக்கண் சிறிது நீரைக் கயல் எதிர்ந்தன போல; முகில் கிழி மின்னின் நோக்கி - முகிலைக் கிழிக்கின்ற மின்னெனப் பார்த்து; இடை முரிந்து குழைந்து நின்றார் - இடை ஒசிந்து கலங்கி நின்றார்.

    விளக்கம் : இது முதலாகக் கற்புடை மகளிரைக் கூறுகின்றார். இடை குழைந்து நின்றாரெனவே மனக் குழைவின்றி நின்றாரென்பது பெறப்பட்டது. ( 163 )
    ------------

      2541. முனித்தலைக் கண்ணி நெற்றிச்
              சிறார்முலை முழாலிற் பில்கிப்
      புனிற்றுப்பால் பிலிற்றித் தேமா
              வடுவிறுத் தாங்குப் பாய
      நுனிந்துக்கண் ணரக்கி நோக்கா
              தொசிந்துநின் றார்க ளன்றே
      கனிப்பொறை மலிந்து நின்ற
              கற்பகப் பூங்கொம் பொத்தார்

    பொருள் : முனித்தலைக் கண்ணி நெற்றிச் சிறார் முலை முழாலின் - முனிவர் தலைபோலும், தலையையும் மலர்க்கண்ணி முடிந்த நெற்றியையும் உடைய சிறுவர், முலையிலே சேர்தலால்; புனிற்றுப் பால் பில்கித் தேமா வடு இறுத்தாங்குப் பிலிற்றிப் பாய - ஈன்ற அணிப்பாற் பாலூறித் தேமாவின் வடுவை இறுத்தாற்போலக் கொப்புளித்துப் பாய; கண் அரக்கி நுனித்து நோக்காது ஒசிந்து நின்றார் - கண்களை அமுக்கி அரசனைக் கூர்ந்து நோக்காமல் நாணி நின்றவர்கள்; கனிப் பொறை மலிந்து நின்ற கற்பகப் பூங்கொம்பு ஒத்தார் - கனியாகிய சுமைமிகுந்து நின்ற கற்பக மலர்க்கொம்பைப் போன்றனர்.

    விளக்கம் : கனியாகிய சுமை மிக்கதொரு கற்பகமெனவே புதல்வனாகிய பயனைக் கொடுத்தாரென்பது பெறப்பட்டது. கற்பு மிகுதியால் தம் கணவர்க்குச் செல்வம் எல்லாந் தருவாரெனற்குக் கற்பகங் கூறினார். முனித்தலைப் புதல்வர் (புறநா. 250). ( 164 )
    ------------

      2542. அவிரிழை சுடர முல்லை யலங்கலங் கூந்தல் சோரத்
      தவிர்வெய்ய காமந் தாங்கித் தடமுலைக் கால்கள் சாய
      விவர்தரு பிறவி யெல்லா மின்னமா கென்று நின்றார்
      சுவர்செய்தாங் கெழுதப் பட்ட துகிலிகைப் பாவை யொத்தார்.

    பொருள் : அவிர் இழை சுடர - விளங்கும் அணிகலன் ஒளிர; முல்லை அலங்கல் அம் கூந்தல் சோர - முல்லைக் கண்ணி அணிந்த கூந்தல் சோர; தவிர வெய்ய காமம் தாங்கித் தட முலைக் கால்கள் சாய - நீங்கிய கொடிய காமத்தையுடையராய்ப் பெரிய முலைக்கால்கள் சாய்வுற; இவர் தரு பிறவி எல்லாம் இன்னம் ஆக என்று நின்றார் - இனி மேவும் பிறவிகளிலெல்லாம் இத்தன்மையேம் ஆகுக என்று கூறி நின்றவர்; சுவர் செய்து ஆங்கு துகிலிகை எழுதப்பட்ட பாவை ஒத்தார் - சுவரமைத்து அதிலே துகிலிகையால் வரையப்பட்ட பாவையைப் போன்றனர்.

    விளக்கம் : முல்லை கற்பிற்குச் சூடினார். தவிர் வெய்ய காமம் என்பது காமம் இன்மையைக் குறிக்கின்றது. இன்னமாக; பிறக்கும் பிறவி எல்லாம் நீ காக்கின்ற உலகிலே இங்ஙனம் இனிது உறைவோமாக. பாவை; கொண்டநிலை தான் கெடுமளவும் குலையாத தன்மை போல. அவர் தாம் கொண்ட கற்பும் குலையாதிருத்தலின், பாவை என்றார். ( 165 )
    ------------

      2543. வேரிநா றலங்கன் மாலை மின்னிழை மயங்கி யெங்கும்
      பூரித்துப் புதவந் தோறுங் குவளையு மரையும் பூத்துப்
      பாரித்துப் பைம்பொ னாகருலகிவண் வீழ்ந்த தேபோன்
      மாரிமா மயில னாரு மைந்தரு மயங்கி னாரே.

    பொருள் : பைம்பொன் நாகர் உலகு பாரித்து இவண் வீழ்ந்ததேபோல் - பொன்னுலகத்தவரும் நாகருலகத்தவரும் பரந்து வந்து இவ்விடத்தை விரும்பின தன்மை போல; எங்கும் வேரி நாறு அலங்கல் மாலை மின் இழை மயங்கி - நகரெங்கும் தேன் மணக்கும் அலங்கலாகிய மாலையும் ஒளிவிடும் அணிகலனுங் கலந்து; புதவந் தோறும் குவளையும் மரையும் பூரித்துப் பூத்து - வாயில் தோறும் குவளைமலரும் தாமரை மலரும் பூரிப்புடன் மலர்ந்து; மாரி மாமயில் அனாரும் மைந்தரும் மயங்கினார் - முகில் கண்டமயில் போன்ற மங்கையரும் மைந்தரும் கலந்து நின்றனர்.

    விளக்கம் : குவளை மகளிர் கண்களுக்கும் தாமரை ஆடவர் கண்களுக்கும் கொள்க. அன்றி மகளிர் முகத்திற்குத் தாமரையும் கண்கட்குக் குவளையுங் கொள்ளினும் பொருந்தும். தம்மைக் காக்கும் அரசனாதலின் இருபாலாரும் அன்பு மிகுதியால் உடன் வந்தனர். ( 166 )
    ------------

      2544. கோதைதாழ் குடையி னீழற் கொற்றவன் பருதி யாக
      மாதரார் முகங்க ளென்னுந் தாமரை மலர்ந்த தெண்ணீர்க்
      காதநான் ககன்ற பொய்கைக் கடிநகர் குவளை பூத்துப்
      பேதுறு கின்ற போன்ற பெருமழைக் கண்கண் மாதோ.

    பொருள் : கோதை தாழ் குடையின் நீழல் கொற்றவன் பருதி ஆக - மாலை தாழுங் குடையின் நிழலில் உள்ள சீவக மன்னன் ஞாயிறாகக் கொண்டு; மாதரார் முகங்கள் என்னும் தாமரை மலர்ந்த - பெண்டிர்களின் முகங்களாகிய தாமரை மலர்கள் மலர்ந்தன; காதம் நான்கு அகன்ற கடிநகர் தெண்ணீர்ப் பொய்கை - நான்கு காதமளவும் அகன்ற கடிநகராகிய இத் தெளிநீர்ப் பொய்கையிலே; பெரு மழைக் கண்கள் - பெரிய மழைக் கண்கள்; குவளை பூத்துப் பேதுறுகின்ற போன்ற - (அத்தாமரை மலரிடையே) குவளை மலர்ந்து இனிமையுற்று மயங்குதல் போன்றன.

    விளக்கம் : காவிரிப் பூம்பட்டினத்தையும் நான்கு காதப் பரப்புடையதாகக் கூறியுள்ளனர். காத நான்குங் கடுங்குரல் எழுப்பி (சிலப். 5 : 133). ( 167 )
    ------------

      2545. மாந்தரு மாவுஞ் செல்ல மயங்கிமே லெழுந்த நீறு
      தேந்தரு கோதை யார்தந் தெண்மட்டுத் துவலை மாற்ற
      வாய்ந்தபொன் னகர மெங்கு மணிகல வொளியி னாலே
      காய்ந்துகண் கலக்கப் பூத்த கற்பக மொத்த தன்றே

    பொருள் : மாந்தரும் மாவும் செல்ல மயங்கி மேல் எழுந்த நீறு - மக்களும் புரவிகளும் செல்வதாலே மயங்கி மேலே எழுந்த துகளை; தேன் தரு கோதையார்தம் தெள்மட்டுத் துவலை மாற்ற - தேன் பொருந்திய மாலையணிந்த மகளிர் வீசுகின்ற பூவில் உள்ள தேன் துளி மாற்ற; ஆய்ந்த பொன் நகரம் எங்கும் அணிகல ஒளியினாலே - ஆய்வுற்ற பொன்னையுடைய நகரம் எங்கும் மைந்தர்கள் எல்லோரும் அரசன்முன் வீசுகின்ற அணி கலன்களின் ஒளியாலே; காய்ந்து கண் கலக்கப் பூத்த கற்பகம் ஒத்தது - வானுலகக் கற்பகத்தைக் காய்ந்து எதிர்ப்பட்ட அளவிலே கொடுத்ததொரு கற்பகத்தை ஒத்தது.

    விளக்கம் : பொன்னகர் கற்பகத்தை ஒத்தது, அணிகலவொளி நகரம் எங்கும் நிறைந்தது என்பதனால் மைந்தர்கள் அணிகலன்களை வீசினர் என்பது பெறப்படும், கண்கலக்க - எதிர்ப்பட்ட, பொன்னுலகக் கற்பகம் கேட்ட பின்னரே கொடுக்கும் : இக் கற்பகங்கள் கண்ட அளவிலே கொடுத்தன. அரசன்முன் மகிழ்ச்சியினால் அணிகலன்களை எறிந்தனர். பூத்த கற்பகம் எனவே கொடை கொள்க.
    ( 168 )
    ------------

      2546. பெண்பெற்ற பொலிசை பெற்றார்
              பிணையனார் பெரிய யாமுங்
      கண்பெற்ற பொலிசை பெற்றா
              மின்றெனக் கரைந்து முந்நீர்
      மண்பெற்ற வாயுள் பெற்று
              மன்னுவாய் மன்ன வென்னாப்
      புண்பெற்ற வேலி னான்மேற்
              பூமழை தூவி னாரே.

    பொருள் : பிணையனார் பெண்பெற்ற பொலிசை பெற்றார் - மான்பிணையனைய வீரமகளும் திருமகளும் பெண் தன்மையைப் பெற்றபேறு பெற்றனர்; பெரிய யாமும் இன்று கண் பெற்ற பொலிசை பெற்றாம் எனக் கரைந்து - (கற்பினால்) அவர்களினும் மேம்பட்ட யாமும் இன்று கண் பெற்றதனாற் பெற்ற பேறு பெற்றோம் என்று வாயாரக் கூறி; மன்ன! - மன்னனே; முந்நீர் மண்பெற்ற ஆயுள் பெற்று மன்னுவாய் என்னா - கடலும் நிலமும் பெற்ற ஆயுளைப் பெற்று நீ வாழ்வாயாக என்று வாழ்த்தி; புண் பெற்ற வேலினான் மேல் பூ மழை தூவினார் - புண் பொருந்திய வேலான் மேல் மலர்மாரி பெய்தனர்.

    விளக்கம் : உப்பும் உலகும் உள்ளளவும் வாழ்வீர் என்பது உலக வழக்கு. வீரமகளும் திருமகளும் விடாமல் இவனிடம் உறைதலின் பெண்பெற்ற பேறு பெற்றாராயினார். இங்ஙனம் நீடுவாழ்கென வாழ்த்துதற்கு உரியோர் கற்புடை மகளிர். ஏனையோர் வாழ்த்துதலிற் பயனின்றாம். இத்துணையும் உயர்குடிப் பிறந்தோர் உறையும் தெருவைக் கூறினார். ( 169 )
    ------------

      வேறு
      2547. சுண்ணமேற் சொரிவார் தொழுதுதொங்கல் வீழ்ப்பார்
      தண்ணென் சந்தனநீ ரார்ந்துதேன் றுளும்பும்
      வண்ணப்பந் தெறிவார் வளையொலிப்ப வோச்சிக்
      கண்ணியிட் டெறிவார் கலவைநீர் தெளிப்பார்.

    பொருள் : சுண்ணம் மேல் சொரிவார் - சுண்ணப் பொடியை அரசன் மேலே வீசுவார்; தொங்கல் தொழுது வீழ்ப்பார் - மாலையைத் தொழுது வீழ்த்துவார்; தண் என் சந்தன நீர் ஆர்ந்து - குளிர்ந்த சந்தனமும் பனிநீரும் நிறைந்து; தேன் துளும்பும் வண்ணப் பந்து எறிவார் - தேன் ததும்பும் அழகிய மலர்ப்பந்தை வீசுவார்; வளைஒலிப்ப ஓச்சி - வளையல்கள் ஒலிக்க வீசி; கண்ணி இட்டு எறிவார் - மலர்க்கண்ணியை எறிவார்கள்; கலவை நீர் தெளிப்பார் - பசுங் கூட்டையும் பனி நீரையும் கூட்டித் துருத்தி முதலியவற்றால் தெளிப்பாராயினார்.

    விளக்கம் : தொங்கல் - மலர்மாலை. தண்ணென் : குறிப்பு மொழி, ஆர்ந்து - நிறைந்து; நிறையப்பட்டு என்க. கண்ணி - ஒருவகை மாலை. இட்டெறிவார் : ஒருசொல். கலவை நீர் பல்வேறு நறுமணமுங் கலந்த நீர். ( 170 )
    ------------

      2548. முந்துசூர் தடிந்த முருகனம்பி யென்பா
      ரைந்துருவ வம்பி னநங்கனென் றயர்வார்
      கந்துகன் வளர்த்த சிங்கங்காண்மி னென்பார்
      சிந்தையிற் களிப்பார் சேணெடிய கண்ணார்.

    பொருள் : சேண் நெடிய கண்ணார் - மிகவும் நீண்ட கண்ணினரான மகளிர், நம்பி முந்து சூர் தடிந்த முருகன் என்பார் - இந் நம்பி முன்னர்ச் சூரனை வீழ்த்திய முருகன் என்பார்; ஐந்து உருவ அம்பின் அநங்கன் என்று அயர்வார் - ஐந்து அழகிய அம்புகளையுடைய காமனே இவன் என்று வருந்துவார்; கந்துகன் வளர்த்த சிங்கம் காண்மின் என்பார் - கந்துக்கடன் வளர்த்த சிங்கம் போன்றவனைக் காணுங்கோள் என்பார்; சிந்தையில் களிப்பார் - மன மகிழ்வு கொள்வார்.

    விளக்கம் : முந்து என்றது பண்டைக்காலத்தே என்றவாறு. சூர் - சூரபன்மா. இந் நம்பி முருகன் என்பார் என மாறுக. நம்பி : சீவகன். ஐந்தம்பு உருவ அம்பு என இயைக்க. மலரம்பு என்பது தோன்ற உருவ அம்பு என்றார். அநங்கன் - காமன்; உருவமில்லாதவன் என்னும் பொருட்டு. சேண்நெடிய - மிக நீண்ட என்க. ( 171 )
    ------------

      2549. தேசிக முடியுந் திருந்துபட் டுடையும்
      பாசமாக நின்று பன்மலர்க் கழுநீர்
      மூசிவண் டிமிரும் மொய்யலங்க றாழக்
      காசில் காமஞ்செப்பிக் கண்ணினா லிரப்பார்.

    பொருள் : தேசிக முடியும் திருந்து பட்டு உடையும் - (சீவகனுடைய) ஒளி தவழும் முடியும் விளங்கும் பட்டாடையும்; பாசம் ஆக நின்று - (தம்மைப் போகாமற்) பிணிக்கும் கயிறு என்று கருதி நின்று; வண்டு மூசி இமிரும் பல் மலர்க் கழுநீர் மொய் அலங்கல் தாழ - வண்டுகள் மொய்த்து முரலும் பல கழுநீர் மலர்களால் ஆன மாலை தாழ; காசு இல் காமம் கண்ணினான் செப்பி - தம் குற்றமற்ற காமத்தைக் கண்களாற் கூறி; இரப்பார் - வேண்டுவார் சில மகளிர்.

    விளக்கம் : தேசிகம் - ஒளி. பாசம் - கயிறு. பல் கழுநீர் மலர் என்க. கழுநீர் மலர் அலங்கல் வண்டிமிரும் மொய்யலங்கல் என இயைக்க. காசு - குற்றம். ( 172 )
    ------------

      2550. வண்டறைந்த தாரான் வண்ணங்கண்ட பின்றைக்
      கண்டிலேனென் மாமை கைவளையொ டென்பா
      ரொண்டொடி யிவன்றன் னுருவுகண்டு வாழ்வார்
      பெண்டிராய்ப் பிறந்தார் பெரியர்போத வென்பார்.

    பொருள் : வண்டு அறைந்த தாரான் வண்ணம் கண்ட பின்றை - வண்டுகள் இசைக்கும் மாலையானின் அழகைக் கண்ட பிறகு; என் மாமை கைவளையோடு கண்டிலேன் என்பார் - என் மாமையையும் கைவளையையும் காண்கிலேன் என்பார் சில மகளிர்; ஒண்டொடி - ஒள்ளிய வளையலையுடையாய்!; இவன்தன் உருவு கண்டு வாழ்வார் - இவனுடைய உருவத்தைக் கண்டு வாழ்வாராகி; பெண்டிராய்ப் பிறந்தார் - பெண்களாய்ப் பிறந்தவர்கள்; போதப்பெரியர் என்பார் - மிகவும் மேன்மையுடையோர் என்பார் சில மகளிர்.

    விளக்கம் : உருவுகண்டு வாழும் பெண்டிர் பெரியர் எனவே, யாமும் பெரியம் என்றாராம். மற்றும், உருவு கண்டு வாழ்வார் பெரியர் எனவே நுகரும் மகளிர் தவத்தால் மிகப் பெரியரென்றும் அத்தகைய தவத்தை யாமும் செய்தல் வேண்டும் எனவும் கூறினாராயிற்று. ( 173 )
    ------------

      வேறு
      2551. கொழித்திரை யோத வேலிக்
              குமரனைப் பயந்த நங்கை
      விழுத்தவ முலக மெல்லாம்
              விளக்கிநின் றிட்ட தென்பார்
      பிழிப்பொலி கோதை போலாம்
              பெண்டிரிற் பெரிய ணோற்றாள்
      கழித்துநின் றறாத கற்பிற்
              சுநந்தையே யாக வென்பார்.

    பொருள் : கொழித்து இரை ஓத வேலி - முத்து முதலியவற்றைக் கொழித்து ஆரவரிக்கும் கடல் சூழ்ந்த உலகிலே; குமரனைப் பயந்த நங்கை விழுத்தவம் - சீவகனைப் பெற்ற விசயையின் சிறந்த தவம்; உலகம் எல்லாம் விளக்கி நின்றிட்டது என்பார் - உலகமெங்கும் விளக்கி நிலைபெற்றது என்பர் சில மங்கையர்; பிழிப்பொலி கோதைபோலாம் பெண்டிரில் பெரியன ஆக நோற்றாள் - தேன்பிழியையுடைய கோதையைப் போன்ற பெண்களிற் பெரியளாக நோற்றவள்; சுழித்து நின்று அறாத கற்பின் சுநந்தையே என்பார் - நிலையாக நின்று நீங்காத கற்பினை யுடைய சுநந்தையே என்பார்.

    விளக்கம் : சுழித்தல் வேறிடத்தின்றி நிற்றல். அறாத கற்பு - அருட் கற்பு. ஓதவேலி : அன்மொழித்தொகை : உலகம். குமரன் : சீவகன். பயந்த நங்கை என்றது விசயையை. பிழி - தேன். பெரியளாக நோற்றவள் என்க. ( 174 )
    ------------

      2552. சாந்தகங் கிழிய மாலைத்
              தடமுலை ஞெமுங்கப் புல்லிச்
      சேர்ந்தெழு நங்கை மாரே
              திருநங்கை மார்க ளல்லார்
      கூந்தலு முலையு முத்துங்
              கோதையுஞ் சுமந்து நைவான்
      போந்தவந் நங்கை மார்கள்
              பொய்ந்நங்கை மார்க ளென்பார்.

    பொருள் : சாந்து அகம்கிழிய மாலைத் தடமுலை ஞெமுங்கப் புல்லி - சாந்தை அணிந்த மார்பு கிழியும்படி மாலையணிந்த பெரிய முலைகள் அழுந்தத் தழுவி; சேர்ந்து எழும் நங்கைமாரே திரு நங்கைமார்கள் - கலந்து எழுகின்ற மாதர்களே நல்வினை செய்த மாதர்கள்; அல்லார் - மற்றைய மாதர்கள்; கூந்தலும் முலையும் முத்தும் கோதையும் சுமந்து நைவான் - கூந்தலையும் முலைகளையும் முத்தையும் மாலையையும் சுமந்து வருந்த; போந்த அந் நங்கைமார்கள் பொய்ந் நங்கைமார்கள் என்பார் - பிறந்த அம் மாதர்கள் பொய்யான மாதர்கள் என்றுரைப்பர்.

    விளக்கம் : வடிவு மாத்திரையாய்ப் பயன் பெறாமையின், பொய்ந் நங்கைமார்கள் என்றார். அகம் : ஆகம் என்பதன் விகாரம்.(175)
    ------------

      2553. இடம்பட வகன்று நீண்ட
              விருமலர்த் தடங்க ணென்னுங்
      குடங்கையி னொண்டு கொண்டு
              பருகுவார் குவளைக் கொம்பி
      னுடம்பெலாங் கண்க ளாயி
              னொருவர்க்கு மின்றி யேற்ப
      வடங்கவாய் வைத்திட் டாரப்
              பருகியிட் டீமி னென்பார்.

    பொருள் : இடம்பட அகன்று நீண்ட இரு மலர்த் தடங்கண் என்னும் - இடம்பெற அகன்று நீண்ட இரண்டு மலர்க் கண்களாகிய; குடங்கையின் நொண்டு கொண்டு பருகுவார் - உள்ளங் கைகளாலே முகந்து கொண்டு பருகுவார்; குவளைக் கொம்பின் உடம்பெலாம் கண்கள் ஆயின் - குவளையை மெய்ம்முழுதும் பூத்ததொரு கொம்புபோலே உடம்பெலாம் பொருந்தக் கண்களானால்; ஒருவர்க்கும் இன்றி - இவர்கள் ஒருவர்க்கும் இல்லையாம்படி; அடங்க ஏற்ப - இவன் மெய்ம் முற்றும் அக் கண்களிடத்தே வந்து நிறைய; வாய் வைத்திட்டு ஆரப் பருகியிட்டீமின் என்பார் - அதனை இட்டு வைத்துப் பொருந்த நுகருமின் என்றுரைப்பர்.

    விளக்கம் : இட்டீமின் : வினைத்திரிசொல். இரு கண்களால் நுகர முடியாதென்பார், உடம்பெலாங் கண்களாயின் என்றார். ( 176 )
    ------------

      2554. முலைமுத றுறத்த வன்றே
              மூரித்தா ளாளி யானைத்
      தலைநிலம் புரள வெண்கோ
              டுண்டதே போன்று தன்கைச்
      சிலையிடம் பிடித்த ஞான்றே
              தெவ்வரைச் செகுத்த நம்பி
      நிலவுமிழ் குடையி னீழற்
              றுஞ்சுக வைய மென்பார்.

    பொருள் : மூரித்தாள் ஆளி - வலிய கால்களையுடைய ஆளி; முலைமுதல் துறந்த ஞான்றே - பால் பருகுதலை மறந்த அப்போதே; யானைத் தலை நிலம் புரள வெண்கோடு உண்டதே போன்று - யானையின் தலை நிலத்தே புரளும்படி அதன் கோட்டைப் பற்றி உண்டதைப்போல; தன் கையிடம் சிலை பிடித்த ஞான்றே - தன் கையிலே வில்லைப் பற்றி (நிரைமீட்ட) அன்றே; தெவ்வரைச் செகுத்த நம்பி - பகைவரைக் கொன்ற நம்பியினது; நிலவு உமிழ் குடையின் நீழல் வையம் துஞ்சுக என்பார் - ஒளிய உமிழும் குடை நிழலிலே இவ்வுலகு தங்குக என்பார்.

    விளக்கம் : தெவ்வர் என்ற பன்மை பிள்ளைகள் நூற்றுவரையுங் கருதி. வேடர் பகைவரல்லர் என்பது ஆண்டே விளக்கப்பட்டது. யானைக்குக் கோட்டைப் பறித்த பின்னரும் சிறிது பொழுது பதைத்து உயிர் போகுமாறுபோல, நிரைமீட்ட அன்று தொட்டும் இவன் நமக்குப் பகையாவன் என்னுங் கருத்துடன் பதைத்துப் பட்டான் என்று தாம் கருதி யிருந்தமை கூறினார். அவன் பதைத்தமை, வாளுற்ற புண்ணுள் வடிவே லெறிந்திற்றதே போல் (சீவக. 455) என்றதனான் உணர்க. ( 177 )
    ------------

      வேறு
      2555. இந்நகரப் புறங்காட்டி லிவன்பிறந்த வாறுந்
      தன்னிகரில் வாணிகனிற் றான்வளர்ந்த வாறுங்
      கைந்நிகரில் வேந்தர்தொழப் போந்ததுவுங் கண்டா
      லென்னைதவஞ் செய்யா திகழ்ந்திருப்ப தென்பார்.

    பொருள் : இவண் இந்நகரப் புறங்காட்டிற் பிறந்த ஆறும் - இவன் இந் நகரச் சுடுகாட்டிலே பிறந்தபடியும்; தன்நிகர் இல்வாணிகன் இல் தான் வளர்ந்தஆறும் - தன் குலத்திற்கு ஒவ்வுதல் இல்லாத வாணிகன் இல்லிலே தான் வளர்ந்தபடியும்; கைநிகர் இல் வேந்தர் தொழப் போந்ததுவும் கண்டால் - ஒழுக்கத்திற்கு ஒப்பில்லாத அரசர்கள் தொழவந்த தன்மையும் பாக்கின; தவம் செய்யாது இகழ்ந்திருந்த தன்மை என் என்பார் - (நல்லறிவுடையோர்) தவம்புரியாமல் இகழ்ந்திருப்பது என்னை? என்பார்.

    விளக்கம் : பொன்னகர் எனவும் பாடம். கண்டார் கூற்றாதலின் பிள்ளையார் குலத்திற்கு ஒவ்வாத வாணிகன் என்றார். (பிள்ளையார் : சீவகன்.) ( 178 )
    ------------

      2556. பெருமுழங்கு திரைவரைக ணீந்திப்பிணி யுறினுந்
      திருமுயங்க லில்லையெனி னில்லைபொரு ளீட்ட
      மொரு முழமுஞ் சேறலில ரேனும் பொரு ளூர்க்கே
      வரும்வழிவி னாயுழந்து வாழ்கதவ மாதோ.

    பொருள் : முழங்கு பெருந்திரை வரைகள் நீந்திப் பிணியுறினும் - முழங்குகின்ற பெருங்கடலையும் மலைகளையுங் கடந்து வருந்தினும்; திருமுயங்கல் இல்லையெனின் பொருள் ஈட்டம் இல்லை - நல்லூழ் கூடுதல் இல்லையாயிற் பொருள் தேடுதல் இல்லை யாம்; ஒரு முழமும் சேறல் இலரேனும் - ஒருமுழ நீளமும் செல்லுதல் இலராயினும்; பொருள் உழந்து வழிவினாய் ஊர்க்கே வரும் - (நல்வினை யிருப்பின்) பொருள் உழந்து தானே வழி கேட்டு அவர் இருந்த ஊர்க்கே வரும்; தவம் வாழ்க! - ஆகவே தவம் வாழ்க.

    விளக்கம் : கடத்தற் கருமையின், வரையையும் நீந்தி என்றார். தந்தை முறையால் தேடிய பொருள் தானே வந்து இவனுக்கு எய்திற்றென்றார். ( 179 )
    ------------

      2557. நஞ்சு குடித் தாலுநவை யின்றுதவ நின்றா
      லஞ்சியொளித் தாலுமா ணில்லைதவ முலந்தாற்
      குஞ்சரத்தின் கோட்டிடையு முய்வர்தவ மிக்கா
      ரஞ்சலில ரென்றுமற னேகளைக ணென்பார்.

    பொருள் : நஞ்சு குடித்தாலும் தவம் நின்றால் நவை இன்று - நஞ்சைப் பருகினும் தவம் இருந்தாற் கெடுதி இன்று; தவம் உலந்தால் அஞ்சி ஒளித்தாலும் அரண் இல்லை - தவம் கெட்டால் அஞ்சி மறைந்தாலும் அரண் இல்லை; தவம் மிக்கார் குஞ்சரத்தின் கோட்டிடையும் உய்வர் - தவம் மிகுந்தவர் யானையது கோட்டின் இடையேயும் உட்பட உய்ந்துபோவர்; என்றும் அறனே களைகண் என்பார் அஞ்சல் இலர் - எப்போதும் அறனே ஆதரவு என்பவர் எதற்கும் அஞ்சமாட்டார்.

    விளக்கம் : தன்னை ஆக்கிய சச்சந்தனைக் கொன்றும் கட்டியங்காரன் அரசாண்டிருந்ததனால், நஞ்சு குடித்தாலும் தவம் நின்றால் நவையின்றாம் என்றார், தாமரை வியூகம் வகுத்து அதனுள்ளிருந்தும் அவன் பட்டமை கருதி, அஞ்சி ஒளித்தாலும் தவம் உலந்தால் அரண் இல்லை என்றார். சீவகன் யானையால் இடறுண்டிறக்கவேண்டும் என்று கட்டியங்காரன் கருதினும் சீவகன் உய்ந்தமை கருதித், தவம் மிக்கார் கோட்டிடையினும் உட்பட உய்வர் என்றார். களைகண் : முதுகண் என்றாற் போலும் வழக்கு, முதுகண் - காப்பாக இருக்கும் முதியவர். முற்றிழை மகளிர்க்கு மதுகணாம் என்பது பெருங்கதை (1. 36 : 189). ( 180 )
    ------------

      2558. முரல்வாய சூற்சங்க முடமுட்
              டாழை முகைவிம் முங்
      கரைவாய முத்தீன்று கானன்
              மேயுங் கடற்சேர்ப்ப
      னுரைவாய் நகர்பரவப் போகி
              யொண்பொ னெயிழ்சூழ்ந்த
      விரைவாய் பூம்பிண்டி வேந்தன்
              கோயிற் கெழுந்தானே.

    பொருள் : முடமுள் தாழை முகை விம்மும் கரைவாய் கானல் - வளைந்த முள்ளையுடைய தாழையின் அரும்பு மலர்கின்ற கரையை இடத்தே உடைய கானலிலே; முரல்வாய் சூல் சங்கம் முத்துஈன்று மேயும் கடல் சேர்ப்பன் - ஒலிக்கும் வாயையுடைய, சூல்கொண்ட சங்கு முத்துக்களை யீன்று, (வருத்தம் இன்றித் தானே போய்) மேய்கின்ற; கடல் சேர்ப்பன் - கடலையுடைய சேர்ப்பன்; உரைவாய நகர் பரவ - புகழிடத்ததாகிய நகர் வாழ்த்த; போகி - வலமாகப் போகி; ஒண் பொன் எயில சூழ்ந்த - சிறந்த பொன் மதில் சூழ்ந்த; விரைவாய் பூம்பிண்டி வேந்தன் கோயிற்கு எழுந்தான் - மணம் மாறாது பொருந்திய மலர்ப்பிண்டி வேந்தனாகிய அருகன் கோயிலுக்கு எழுந்தான்.

    விளக்கம் : சங்கு முத்தை யீன்று வருத்தம் இன்றித் தானே மேயும் எனவே, தன் பிள்ளைக்குச் செவிலியாய்த் தாழை முகை வளர்க்குமென்று கருதிற்றெனத் தோன்றல்காண்க; சங்கு தாழையின் முகைக்கு உவமை. உரையிடத்தனவாகிய நகர்; நிலநாவின் திரிதரூஉம் என்றாற் போல. தெய்வத்தால் அசோகு விரைமாறாமல் நிற்கும். ( 181 )
    ------------

      2559. அருகு மயில்கவ வன்ன
              மேங்கக் குயில்கூவக்
      குருகு பொறையுயிர்க்குங் கொடுமுட்
              டாழை வெண்டோட்டு
      முருகு பொறையுயிர்க்கு மொய்பூங்
              காவிற் படைநீக்கித்
      திருகு கனைகழலான் செம்பொற்
              கோயில் சேர்ந்தானே.

    பொருள் : அருகு மயில் அகவ - அருகே நின்று மயில் அகவவும்; அன்னம் ஏங்க - அன்னம் ஏங்கவும்; குயில் கூவ - குயில் கூவவும்; குருகு பொறை உயிர்க்கும் - நாரை முட்டை யிடுகின்ற; கொடுமுள் தாழை வெண் தோட்டு முருகு பொறை உயிர்க்கும் மொய்பூங்காவில் - கொடிய முள்ளையுடைய தாழை தன் வெள்ளிய இதழிலே சுமந்திருந்த தேனாகிய சுமையைச் சொரியும் மலர் நிறைந்த பொழிலிலே; படைநீக்கி - படையை நிறுத்திவிட்டு; செம்பொன் கோயில் திருகு கனைகழலான் சேர்ந்தான் - அருகன் கோயிலைத் திருகிய, ஒலிக்குங் கழலணிந்த சீவகன் அடைந்தான்.

    விளக்கம் : மயிலும் அன்னமும் குயிலும் கூவக் குருகு பொறை உயிர்க்குங்கா வெனவே, குருகின்வருத்தத்திற்கு அவைகளும் வருந்தின என்பது தோன்றிற்று. ( 182 )
    ------------

      2560. திறந்த மணிக்கதவந் திசைக
              ளெல்லா மணந்தேக்கி
      மறைந்த வகிற்புகையான் மன்னர்
              மன்னன் வலஞ்செய்து
      பிறந்தே னினிப்பிறவேன் பிறவா
              தாயைப் பெற்றேனென்
      றிறைஞ்சி முடிதுளக்கி யேத்திக்
              கையாற் றொழுதானே.

    பொருள் : மணிக் கதவம் திறந்த - (அப்போது) மணிகள் இழைத்த கதவுகள் திறந்தன; திசைகள் எல்லாம் அகிற் புகையான் மணம் தேக்கி மறைந்த - எல்லாத் திசைகளும் அகிற் புகையின் மணம் நிறைந்து மறைந்தன; மன்னர் மன்னன் வலம் செய்து - (அவ்வளவில்) அரசர்க்கரசன் வலம் வந்து; பிறவா தாயைப் பெற்றேன் - பிறவாத நின்னைப் புகலடைந்தேன் ஆதலால்; பிறந்தேன் இனிப் பிறவேன் என்று - இதுகாறும் எண்ணிறந்த பிறவிகளிலேயும் பிறந்துழன்றேன், இனிப் பிறவேன் என்றுரைத்து; முடிதுளக்கி இறைஞ்சி ஏத்திக் கையால் தொழுதான் - முடியைத் தாழ்த்தி வணங்கி ஏத்தியவாறு கையால் தொழுதான்.

    விளக்கம் : ஏத்தி : நிகழ்காலமுணர்த்தியது. அரசன் வருங்காலத்துப்பிறர் புகுதாமற் கதவடைத்து அவனுக்குத் திறத்தல் இயல்பு. அகிற்புகை மணத்தினோடு நிறைதலினாலே திசைகள் மறைந்தன. ( 183 )
    ------------

      வேறு
      2561. திருமறு மார்பினை திலகமுக் குடையினை
      யருமறை தாங்கிய வந்தணர் தாதையை
      யருமறை தாங்கிய வந்தணர் தாதைநின்
      னெரிபுரை மரைமல ரிணையடி தொழுதும்.

    பொருள் : திருமறுமார்பினை - திருமகளாகிய மறுவையுடைய மார்பினையுடையாய்; திலகமுக் குடையினை - மேலான முக்குடையுடையாய்; அருமறை தாங்கிய அந்தணர் தாதையை - முதன்மையான அரிய மறையை முற்றக் கற்ற அந்தணர்க்குத் தாதையியல்புடையாய்; அருமறை தாங்கிய அந்தணர் தாதைநின் - அத்தகைய நின்னுடைய; எரிபுரை மரைமலர் இணையடி தொழுதும் - நின்னுடைய, அழலொக்கும் தாமரை மலர் போன்ற இணையடிகளைத் தொழுகின்றோம்.

    விளக்கம் : தொழுதும் எனும் உளப்பாடு மற்றைய மக்களையும் கருதிற்று. உம்மொடு வரூஉம் கடதற (தொல். வினை. 5) நிகழ்கால முணர்த்தல் காலமயக்கு. எரிபுரைமலரடி என்றார் பிறவியைச்சுடுதலின், அன்றி மலரின் நிறத்திற் காக்கலுமாம். ( 184 )
    ------------

      2562. உலகுணர் கடவுளை யுருகெழு திறலினை
      நிலவிரி கதிரணி நிகரறு நெறியினை
      நிலவிரி கதிரணி நிகரறு நெறியைநின்
      னலர்கெழு மரைமல ரடியிணை தொழுதும்.

    பொருள் : உலகு உணர் கடவுளை - உலகறியுங் கடவுளியல் புடையாய்; உருகெழு திறலினை - அச்சுறுத்தும் வரம்பிலாற்றல் உடையாய்; நிலவிரி கதிர் அணி நிகர் அறு நெறியினை - நிலவின் கதிர் போன்ற தூய ஒப்பற்ற நெறியையுடைய; நிலவிரி கதிர் அணி நிகர்அறு நெறியை நின் - அத்தகைய நின்னுடைய; அலர்கெழு மரைமலர் அடியிணை தொழுதும் - மலர்தல் பொருந்திய தாமரை மலர் போன்ற இணையடிகளை வணங்குகின்றோம்.

    விளக்கம் : அணி : உவமஉருபு. நிலவின் கதிர் போன்ற நெறி : சுக்கிலத் தியானம். ( 185 )
    ------------

      2563. மறுவற வுணர்ந்தனை மலமறு திகிரியை
      பொறிவரம் பாகிய புண்ணிய முதல்வனை
      பொறிவரம் பாகிய புண்ணிய முதல்வநின்
      னறைவிரி மரைமலர் நகுமடி தொழுதும்.

    பொருள் : மறுஅற உணர்ந்தனை - குற்றமற உணர்தலுடையாய்; மலம் அறு திகிரியை - குற்றமற்ற ஆழியையுடையாய்; பொறி வரம்பு ஆகிய புண்ணிய முதல்வனை - பொறிகட்கு எல்லையாகிய புண்ணியத்திற்குக் காரணமாகிய தன்மையை உடையாய்; பொறி வரம்பு ஆகிய புண்ணிய முதல்வ! நின் - அத்தகைய நின்னுடைய; நறைவிரி மரைமலர் நகும் அடி தொழுதும் - தேன் விரியும் தாமரை மலர் போன்ற அடிகளைத் தொழுகின்றனம்.

    விளக்கம் : இவை மூன்றும் தாழம்பட்ட ஓசையும் முடுகியலுமாய் ஒரு பொருள்மேல் மூன்றடுக்கிக் கந்தருவ மார்க்கத்தான் இடைமடக்கிய தேவபாணித் தாழிசைக் கொச்சக ஒருபோகு. திகிரி - அறவாழி. பொறியுணர் வடங்கிய விடத்தே உணரப் படுபவன் ஆகலின் பொறி வரம்பாகிய புண்ணிய முதல்வனை என்றார். இந்திரியங்கட்கு வரம்பாகிய முதல்வன் என்றது, அவற்றிற்கு அவ்வருகு பட்டிருக்கின்ற முதல்வன் என்றவாறு என்பர் நச்சினார்க்கினியர். ( 186 )
    ------------

      2564. நந்தா விளக்குப் புறமாகென நான்கு கோடி
      நொந்தார்க் கடந்தான் கொடுத்தான் பின்னை நூறு மூதூர்
      கந்தார் கடாத்த களிறுங்கொடித் தேர்க ணூறுஞ்
      செந்தா மரைமே னடந்தானடி சேர்த்தி னானே.

    பொருள் : நொந்தார்க் கடந்தான் - பகைவரை வென்ற அம்மன்னன்; நந்தா விளக்குப் புறம் ஆக என நான்கு கோடி கொடுத்தான் - (இறைவற்குத்) தூண்டாவிளக்குப் பொருளாக என்று நான்கு கோடி கொடுத்தான்; பின்னை - மேலும், நூறு மூதூர் - நூறு பழம்பதிகளையும்; கந்துஆர் கடாத்த (நூறு) களிறும் - தூணிற் கட்டுதல் பொருந்திய நூறு களிறுகளையும்; கொடித் தேர்கள் நூறும் - கொடியையுடைய தேர்கள் நுற்றையும்; செந்தாமரைமேல் நடந்தான் அடிசேர்த்தினான் - மலர்மேல் நடந்த அருகனடிக்கு வழிபாட்டிற்குக் கொடுத்தான்.

    விளக்கம் : நொந்தார் - பகைவர். நொந்தார்க் கடந்தான் என்றது சீவகனை. விளக்குப்புறம் - திருவிளக்கெரித்தற் பொருட்டுக் கொடுக்குங் கொடைப் பொருள். கந்து - தூண். செந்தாமரைமேனடந்தான்; அருகக் கடவுள். ( 187 )
    ------------

      2565. வாடாத மாலை மணிமாலைபொன் மாலை முத்த
      நீடார மாலை நிழன்மாண்ட பவழ மாலை
      மாடார்ந் திழியு மருவிம்மலர் பொற்ப வேற்றிக்
      கூடார்க் கடந்தான் வலங்கொண்டிடஞ் சென்று புக்கான்.

    பொருள் : வாடாத மாலை - வாடாத மாலைகளாகிய; மணி மாலை பொன்மாலை முத்தம் நீடுஆர மாலை - மணிமாலையும் பொன் மாலையும் நீண்ட முத்து மாலையும்; நிழல் மாண்ட பவழ மாலை - ஒளிவிடும் பவழ மாலையும்; மாடு ஆர்ந்து இழியும் அருவி மலர் - பக்கத்திலே நிறைந்து இறங்கும் அருவி நீரும் மலரும்; பொற்ப ஏற்றி - அழகுறத் திருவடியிற் சேர்த்து; கூடாரக் கடந்தான் - பகைவரை வென்ற அம் மன்னன்; இடம் சென்று புக்கான் - தன் இருக்கையைப் போய்ச் சேர்ந்தான்.

    விளக்கம் : வாடாத மாலைகளாகிய என்க. நிழல்மாண்ட - ஒளியால் மாட்சிமைப்பட்ட. மாடு - பக்கம். அருவிம்மலர் : மகரம் வண்ண நோக்கி விரிந்தது. பொற்ப - பொலிவுற. கூடார் - பகைவர். இடம் - தன்னிடமாகிய அரண்மனை. ( 188 )
    ------------

      வேறு
      2566. உலமரு நெஞ்சி னொட்டா மன்னவ ரூர்ந்த யானை
      வலமருப் பீர்ந்து செய்த மணிகிளர் கட்டி லேறி
      நிலமகள் கணவன் வேந்தர் குழாத்திடை நிவந்தி ருந்தான்
      புலமகள் புகழப் பொய்தீர் பூமகட் புணர்ந்து மாதோ.

    பொருள் : நிலமகள் கணவன் - உலக மன்னவன்; உலமரு நெஞ்சின் ஒட்டா மன்னவர் ஊர்ந்த யானை - கலங்கும் மனமுடைய பகைவேந்தர்கள் ஏறிவந்த யானையின்; வலம் மருப்பு ஈர்ந்து செய்த மணிகிளர் கட்டில் ஏறி - வென்றியையுடைய கொம்பினை அறுத்துச் செய்த மணிகள் இழைத்த கட்டிலில் அமர்ந்து; புலமகள் புகழப் பொய்தீர் பூமகள் புணர்ந்து? நாமகள் புகழக் குற்றம் அற்ற திருமகளைப் புணர்ந்து; வேந்தர் குழாத்திடை நிவந்து இருந்தான் - மன்னர் திரளினிடையே மேம்பட இருந்தான்.

    விளக்கம் : நிவந்து என்றார் அரசரில் தான் மேலாக இருத்தலின். ( 189 )
    ------------

      2567. எத்துணைத் தவஞ்செய் தான்கொ
              லென்றெழுந் துலக மேத்த
      வித்திய புகழி னாற்கு
              விருந்தர சியற்றி நாடு
      மொத்தன னல்கித் தன்னை
              யுழந்தனள் வளர்த்த தாய்க்குச்
      சித்திரத் தேவிப் பட்டந்
              திருமக னல்கி னானே.

    பொருள் : எத்துணைத் தவம் செய்தான் கொல் என்று எழுந்து உலகம் ஏத்த - இவன் எவ்வளவு தவம் புரிந்தானோ என்று எடுத்து உலகம் புகழ; வித்திய புகழினாற்கு - நட்ட புகழையுடைய கந்துக்கடனுக்கு; விருந்து ஒத்தனன் அரசு இயற்றி - புதிய அரசுரிமையை மனம் விரும்பி நல்கி; நாடும் நல்கி - நாட்டையும் கொடுத்து; தன்னை உழந்தனள வளர்த்த தாய்க்கு - தன்னை வருந்தி வளர்த்த சுநந்தைக்கு; சித்திரத் தேவிப்பட்டம் - நன்றாகிய தேவி என்னும் பட்டத்தையும்; திருமகன் நல்கினான் - சீவகன் கொடுத்தனன்.

    விளக்கம் : அந்தணா ளர்க்கு அரசுவரைவின்றே (தொல். மரபு. 82); என்பதனால், ஈண்டு அளித்தது குறுநில மன்னர்க்குரிய அரசாயிற்று ; முடியுடை வேந்தனாந்தன்மை வணிகனுக்கில்லையாதலின் என்பர் நச்சினார்க்கினியர். ( 190 )
    ------------

      2568. இனக்களி யானை மன்ன
              ரிளவுடை யானென் றேத்தத்
      தனக்கிளை யானை நாட்டித்
              தான்றனக் கென்று கூறிச்
      சினக்களி யானை மன்னர்
              மகளிரைச் சேர்த்தி நம்பன்
      மனக்கினி துறைக வென்று
              வளங்கெழு நாடு மீந்தான்.

    பொருள் : தனக்கு இளையானை - தனக்குத் தம்பியாகிய நந்தட்டனை; இள உடையான் என்று - இளவரசன் என்று; இனக்களி யானை மன்னர் ஏத்த - திரளாகிய களிறுகளையுடைய மன்னர் புகழ்; நாட்டி - நிலைநிறுத்தி; தான் தனக்கு என்று கூறி - இரப்பறியாத அவன் தனக்குச் செய்ய வேண்டும் என்று இரந்து கூறி; சினக்கிளி யானை மன்னர் மகளிரைச் சேர்த்தி - சீற்றமுடைய மதகளிறுகளையுடைய மன்னரின் மகளிரை மணம் புரிவித்து; நம்பன் மனக்கு இனிது உறைக என்று - நந்தட்டன் மனமகிழ்ந்து வாழ்க என வாழ்த்தி; வளம்கெழு நாடும் ஈந்தான் வளம் பொருந்திய நாடுகளையும் நல்கினான்.

    விளக்கம் : நச்சினார்க்கினியர், மன்னர் மகளிரை மணம் புணர்த்தியதையும் நாடுகளை நல்கியதையும் நபுல விபுலர்க்குச் செய்தான் என்பர். செய்யுளிற் சிறிதும் அதற்கு இடமில்லை. மன்னர் மகளிரை எனப் பன்மையாற் கூறியுள்ளாரே எனின், ஒருவன் பல பெண்களை மணத்தல் அக்கால இயல்பென்க. போரில் விபுலன் பட்டான் என்றும் நம்பன் என்றது நபுலனை யென்றும் அவனுக்கு மகளிரைச் சேர்த்தினான் என்றும் நச்சினார்க்கினியர்க்கு முன்னிருந்தோர் கூறுவதாகத் தெரிகிறது. இதனை, அன்றி, விபுலன் பட்டான் என்று கூறுவார் நம்பனென்றதனை, நபுலனுக்காக்கி அவனுக்கு மகளிரைச் சேர்த்தி என்ப என்று கூறுவதாற் காண்க. ( 191 )
    ------------

      2569. ஆழ்கடல் வையத் தில்லா
              வருநிதி யரசு நல்ல
      சூழ்மணி யாழி செம்பொற்
              சூட்டொடு கண்ணி காதற்
      றோழர்கட் கருளித் தொல்லை
              யுழந்தவர் தம்மைத் தோன்ற
      வாழ்கென நிதியு நாடு
              மன்னவன் கொடுப்பித் தானே.

    பொருள் : மன்னவன் காதல் தோழர்கட்கு - சீவக மன்னன் தன் அன்புடைத் தோழர்களுக்கு; ஆழ்கடல் வையத்து இல்லா அருநிதி அரசும் - ஆழ்ந்த கடல் சூழ்ந்த உலகில் பிறர்க்கு இல்லாத அரிய செல்வமாகிய அரசையும்; நல்ல சூழ்மணி ஆழி - நல்ல மணியிழைத்த ஏனாதி மோதிரத்தையும்; செம்பொன் சூட்டொடு கண்ணி - செம்பொன்னாற் செய்த பட்டத்தையும் கண்ணியையும்; அருளி - கொடுத்து; தொல்லை உழந்தவர் தம்மை - முதலில் தனக்காகத் துன்பம் உற்றவர்களை; தோன்ற வாழ்க என - விளங்க வாழ்க என்று; நிதியும் நாடும் கொடுப்பித்தான் - செல்வமும் நாடும் அமைச்சரைக் கொண்டு கொடுப்பித்தான்.

    விளக்கம் : அருநிதியும் அரசும் எனினுமாம். மணியாழி என்றது அரசனாற் கொடுக்கப்படும் பட்டத்திற்கு அறிகுறியாகிய ஏனாதி மோதிரத்தை. தோழர் - பதுமுகன் முதலியோர். ( 192 )
    ------------

      2570. வளர்த்தகைத் தாயர் தம்மை
              வருகென வருளித் தங்கள்
      கிளைக்கெலாஞ் சிறப்புச் செய்து
              கேட்டவர் மருள வைந்தூர்
      விளைத்துள கெடாத வைக
              லாயிர மிறுப்புத் தண்டக்
      கொளக்கொடுத் தயா வுயிர்த்தான்
              கொற்றவ னென்ப வன்றே.

    பொருள் : வளர்த்த கைத் தாயர் தம்மை - தன்னை வளர்த்த செவிலித்தாயர்களை; வருக என அருளி - வருக என்று அழைத்து; தங்கள் கிளைக்கு எலாம் சிறப்புச் செய்து - அவர்களுடைய உறவினர்க்கெல்லாம் சிறப்பு நல்கி; கேட்டவர் மருள - கேட்டோர் மயங்கும்படி; ஐந்து ஊர் - ஐந்தூர்களை; விளைத்து உள கெடாத வைகல் ஆயிரம் இறுப்புத் தண்டக் கொளக்கொடுத்து - உலகில் விளைதற்குள்ளனவற்றை யெல்லாம் விளை வித்துக் கெடாத, நாடோறும் ஆயிரம் பொன் இறுப்புத்தண்டத் தக்கவாகக் கொள்ளும்படி கொடுத்து; கொற்றவன் அயாவுயிர்த் தான் - அரசன் இளைப்பாறினான்.

    விளக்கம் : என்ப : அன்று ஏ : அசைகள். கைத்தாயர் - செவிலித்தாயர். தங்கள் என்றது அவர்கள் என்னும் சுட்டுப்பொருட்டாய் நின்றது. உள விளைத்துவைகல் ஆயிரம் இறுப்புத் தண்டக் கெடாத ஊர் ஐந்து கொடுத்து என இயைக்க. கொற்றவன் : சீவகன்.(193)
    ------------

      2571. கைத்தல மந்தி கொண்ட
              கைமகப் போன்று தன்கட்
      பத்திமை விடாது மேனாட்
              படைக்கல நவின்ற பொற்றேர்
      மைத்துன மன்னர்க் கெல்லாம்
              வளநிதி மணிசெய் மான்றேர்
      தத்துநீர் மிசைச்சென் மாவுந்
              தவழ்மதக் களிறு மீந்தான்.

    பொருள் : மந்தி கைத்தலம் கொண்ட - மந்தியைக் கையாலே தழுவிக் கொண்ட; கைமகப் போன்று - ஒழுக்கத்தை யுடைய மகவைப்போல; தன் கண் பத்திமை விடாது - தன்னிடம் பத்தியை விடாமல்; மேல் நாள் படைக்கலம் நவின்ற - முற்காலத்தே படைக்கலம் பயின்ற; பொன்தேர் மைத்துன மன்னர்க்கு எல்லாம் - பொற்றேரையுடைய மைத்துன வேந்தர் கட்கெல்லாம்; மணிசெய் மானதேர் மணிகள் இழைத்த குதிரைபூட்டிய தேரையும்; தத்தும் நீர்மிசைச் செல்மாவும் - அலையுடைய நீரின்மேற் செல்லும் குதிரையையும்; தவழ்மதக் களிறும் ஈந்தான் - தவழும் மதமுடைய களிற்றைங் கொடுத்தான்.

    விளக்கம் : மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும் - அவையும் அன்ன அப்பா லான, (தொல். மரபு. 14) - என்றாராதலின் மகவு என்றார். மான் தேரும் என உம்மை விரிக்க. மைத்துன மன்னர்! உலோகபாலன் விசயன் முதலோர். ( 194 )
    ------------

      2572. கோமகன் கோல மான்றேர்க்
              கோவிந்த னென்னுங் கொய்தார்
      மாமற்கு மடங்க லாற்றற்
              கட்டியங் கார னென்ற
      தீமக னுடைய வெல்லாந்
              தேர்ந்தனன் கொடுத்துச் செல்வ
      னோவலில் கறவை யொத்தா
              னுலோகபா லற்கு மாதோ.

    பொருள் : கோமகன் கோல மான்தேர்க் கோவிந்தன் என்னும் கொய்தார் மாமற்கு - கோமகனாகிய அழகிய குதிரை பூட்டிய தேரையுடைய கோவிந்தன் என்னும் மாமனுக்கு; மடங்கல் ஆற்றல் கட்டியங்காரன் என்ற தீமகனுடைய எல்லாம் தேர்ந்தனன் கொடுத்து - கட்டியங்காரனென்னும் தீயவனுடைய வற்றையெல்லாம் ஆராய்ந்து கொடுத்து; செல்வன உலோகபாலற்கு ஓவல்இல் கறவை ஒத்தான் - செல்வனாகிய சீவகன் உலோகபாலன் என்னும் வேந்தனுக்கு ஒழிவின்றி நல்கும் கறவையைப் போன்றான்.

    விளக்கம் : கோமகன் ஆகிய கோவிந்தன் என்க. மடங்கல் - சிங்கம். தீமகன் - தீயவன். தேர்ந்தனன் : முற்றெச்சம். செல்வன் : எழுவாய்; சீவகன். ஓவல் - ஒழிதல். கறவை - கறக்கும் ஆள். மாது, ஓ : அசைகள். ( 195 )
    ------------

      2573. பேரிடர் தன்க ணீக்கிப்
              யாய தோழற்
      கோரிடஞ் செய்து பொன்னா
              லவனுரு வியற்றி யூரும்
      பாரிடம் பரவ நாட்டி
              யவனது சரிதை யெல்லாந்
      தாருடை மார்பன் கூத்துத்
              தான்செய்து நடாயி னானே.

    பொருள் : தன்கண் பேரிடர் நீக்கிப் பெரும்புணை ஆய தோழற்கு - தன்னிடம் பேரிடரை நீக்கிப் பெரிய புணையாக இருந்த தோழனாகிய சுதஞ்சணனுக்கு; ஓர் இடம் செய்து - ஒரு கோயிலைக் கட்டி; அவன் உரு பொன்னால் இயற்றி - அவன் உருவத்தைப் பொன்னாற் செய்து; பாரிடம் பரவ ஊரும் நாட்டி - உலகம் வாழ்த்த ஊரும் கொடுத்து; அவனது சரிதை எல்லாம் கூத்துத் தான் செய்து - அவனுடைய வரலாற்றை யெல்லாம் கூத்தாகத் தான் அமைத்து; தார் உடை மார்பன் நடாயினான் - மாலையணிந்த மார்பனாகிய சீவகன் நடத்தினான்.

    விளக்கம் : பேரிடர் என்றது. கட்டியங்காரனால் கொலையுண்ணலை. தனது துன்பக்கடலுக்குத் தெப்பமாகிய என்க. தோழன் : சுதஞ்சணன். இடம் - ஈண்டுக் கோயில். பாரிடம் : ஆகுபெயர். சரிதை - வரலாறு. ( 196 )
    ------------

      2574. ஊன்விளை யாடும் வைவே லுறுவலி சிந்தித் தேற்பத்
      தான்விளை யாடி மேனா ளிருந்ததோர் தகைநல் லாலைத்
      தேன்விளை யாடு மாலை யணிந்துபொற் பீடஞ் சேர்த்தி
      யான்விளை யாடு மைந்தூ ரதன்புற மாக்கி னானே.

    பொருள் : ஊன் விளையாடும் வைவேல் உறுவலி சிந்தித்து - ஊன் பழகும் கூரிய வேலேந்திய மிகுவலியுடைய சீவகன் மேலும் ஆராய்ந்து; மேல்நாள் தான் விளையாடி இருந்தது. ஓர் தகை நல் ஆலை - முற்காலத்தில் தான் விளையாடியிருந்ததாகிய ஒரு தகுதியுடைய ஆலமரத்தை; தேன் விளையாடும் மாலை ஏற்ப அணிந்து - வண்டுகள் பழகும் மாலையைப் பொருந்த அணிந்து; பொன் பீடம் சேர்த்தி - பொன்னாற் பீடம் அமைத்து; ஆன் விளையாடும் ஐந்து ஊர்அதன்புறம் ஆக்கினான் - ஆக்கள் விளையாடும் ஐந்து ஊர்களை அதற்கு இறையிலி யாக்கினான்.

    விளக்கம் : அதன் நிழலிலே ஆனிரை தங்குதலும் பால் சொரிதலும் அறமாமென்ப. ( 197 )
    ------------

      வேறு
      2575. கொட்ட மேகம ழுங்குளிர் தாமரை
      மொட்டின் வீங்கிய வெம்முலை மொய்குழ
      லட்டுந் தேனழி யும்மது மாலையார்
      பட்ட மெண்மரும் பார்தொழ வெய்தினார்.

    பொருள் : கொட்டமே கமழும் - மணமே கமழ்கின்ற; குளிர் தாமரை மொட்டின் வீங்கிய வெம்முலை - குளிர்ந்த தாமரை மொட்டைப் போலப் பருத்த வெம்முலைகளையும்; மொய் குழல் - நெருங்கிய கூந்தலையும்; அட்டும் தேன் அழியும் மது மாலையார் - சொரியும் தேன் அழியும் மாலையணிந்த மங்கையர்; எண்மரும் பட்டம் பார்தொழ எய்தினார் - எண்மரும் பார்தொழுமாறு பட்டம் பெற்றனர்.

    விளக்கம் : கொட்டம் - மணம். மொட்டு - அரும்பு. மொய்குழல் : வினைத்தொகை. மதுமாலை என்புழி - மது, அடைமொழி மாத்திரையாய் நின்றது. பார்தொழ எண்மரும் பட்டம் எய்தினார் என்க. ( 198 )
    ------------

      2576. பஞ்சி சூழல்குற் பல்வளை வீங்குதோள்
      வஞ்சி நுண்ணிடை வம்பணி வெம்முலை
      விஞ்சை யன்மகள் சீறடி வீழ்ந்தன
      ரஞ்சி லோதிய ரும்பவிழ் கோதையார்.

    பொருள் : அம் சில் ஓதி அரும்பு அவிழ் கோதையார் - அழகிய சிலவாகிய கூந்தலையும் அரும்பு மலருங் கோதையினையும் உடைய குணமாலை முதலிய எழுவரும்; பஞ்சி சூழ் அல்குல் - ஆடையணிந்த அல்குலையும்; பல்வளை வீங்கு தோள் - பல வளையல்களை அணிந்த பருத்த தோளையும்; வஞ்சி நுண் இடை - வஞ்சிக்கொடி போன்ற நுண்ணிய இடையையும்; வம்பு அணிவெம்முலை - கச்சணிந்த வெம்முலையையும் உடைய; விஞ்சையன் மகள் சீறடி வீழ்ந்தனர் - தந்தையின் சிற்றடிகளிலே விழுந்து வணங்கினர்.

    விளக்கம் : பஞ்சி - ஈண்டு ஆடை. வஞ்சி - கொடி. வம்பு - கச்சு. விஞ்சையன் மகள் : காந்தருவதத்தை. கோதையார் என்றது ஏனைய மனைவிமார் எழுவரையும். ( 199 )
    ------------

      2577. வீடி லைந்தரைக் கோடி விருத்திமே
      னாடி யாயிர நாடொறு நங்கைமார்க்
      காடு சாந்தடி சிற்புற மாக்கினான்
      கோடு வாலொளிக் குங்குமக் குன்றனான்.

    பொருள் : நங்கைமார்க்கு - அம் மங்கையர்க்கு; வீடு இல் ஐந்தரைக் கோடி விருத்தி - கெடாத ஐந்தரைக் கோடி பொன் வாழ்க்கைப் பொருளும்; மேல் நாடி ஆடு சாந்து அடிசில் - மேலும் அவர்க்கு அண்ணிதாக வேண்டும் என்று சாந்துக்கும் உணவுக்கும்; நாடொறும் ஆயிரம் - நாளொன்றுக்கு ஆயிரம் பொன்னுக்குரியதாம்படி; கோடு வால் ஒளிக் குங்குமக் குன்றனான் நுடங்கும் அழகிய ஒளியுடைய, குங்குமக் குன்று போன்றவன்; புறம் ஆக்கினான் - இறையிலி நிலமாக நல்கினான்.

    விளக்கம் : வீடு - விடுதலுமாம். விருத்தி - (வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்) சீவிதம். ஆடு - அடுத்திருப்பது. ஆடு - ஆடுதலுமாம். அடிசில் - உணவு. புறம் - இறையிலி. குன்றனான் : சீவகன். ( 200 )
    ------------

      2578. ஆனை மும்மத மாடிய காடெலா
      மானை நோக்கியர் வாய்மது வாடின
      வேனன் மல்கிவெண் டேர்சென்ற வெந்நிலம்
      பானன் மல்கிவெண் பாலன்னம் பாய்ந்தவே.

    பொருள் : ஆனை மும்மதம் ஆடிய காடு எலாம் - யானையின் மும்மதம் ஆடிய காடுகள் எல்லாம்; மான் நை நோக்கியர் வாய் மது ஆடின - மான் வருந்தும் பார்வையுடைய மகளிரின் வாயிலிருந்து கொப்பளித்த தேன் ஆடின; வேனல் மல்கி வெண்தேர் சென்ற வெம் நிலம் - கோடை நிறைந்து பேய்த்தேர் சென்ற வெப்பம் மிக்க நிலம்; பானல் மல்கி வெண்பால் அன்னம் பாய்ந்த - குவளை நிறைந்து வெண்மையான பால் போன்ற நிறமுடைய அன்னப் பறவைகள் பரவின.

    விளக்கம் : காடு கெடுத்து நாடாக்கினான் என்க. புறவே, ஒள்ளிழை மகளிரொடு மள்ளர்மேன (பதிற். 13) என்றார் பிறரும். மும்மத யானையாடிய காடு எனினுமாம். மான் நை நோக்கியர் எனக் கண்ணழித்துக் கொள்க. நைநோக்கியர் : வினைத்தொகை. வேனல் - வேனில், வெண்டேர் - பேய்த்தேர். பானல் - குவளை. ( 201 )
    ------------

      2579. மாரி மல்கி வளங்கெழு மண்மகள்
      வாரி மல்கி வரம்பில ளாயினா
      ளாரி யாவடி சிற்றளி யானெய்வார்ந்
      தேரி யாயின வெங்கணு மென்பவே

    பொருள் : மாரி மல்கி - மழை நிறையப் பெய்து; வளம் கெழு மண்மகள் வாரி மல்கி வரம்பு இலள் ஆயினாள் - வளம் பொருந்திய நிலமகள் விளைவு நிறைந்து எல்லையைக் கடந்தாள்; ஆரியா - அதற்கு மேலாக; அடிசில் தளி ஆன் நெய் வார்ந்து - மடைப் பள்ளியினின்றும் ஆவின் நெய் ஒழுகுதலால்; எங்கணும் ஏரி ஆயின என்ப - எவ்விடமும் ஏரிகளாயின என்பர்.

    விளக்கம் : மாரி - மழை. மண்மகள் - நிலம். வாரி - வருவாய். ஆரி - மேல். ஆக, ஈறு கெட்டு ஆ என நின்றது. அடிசிற்றளி - மடைப் பள்ளி. ஆனெய் - பசுவின் நெய். ஆனெய் வார்ந்து ஏரியாயின என்றதனால் பசுக்கள் மிக்குப் பால் சுரந்தன என்பது பெற்றாம். ( 202 )
    ------------

      2580. ஏக வெண்குடை யின்னிழற் றண்ணளி
      மாக மாய்க்கட லெல்லை நிழற்றலாற்
      போக பூமியும் பொன்கிளர் பூமியு
      நாகர் நாகமு நாணி யொழித்தவே.

    பொருள் : ஏக வெண் குடை மாகமாய்க் கடல் எல்லை தண் அளி இன் நிழல் நிழற்றலால் - தனியாகவே வெண்கொற்றக் குடை வானாகப் பரவி உலகிடைத் தண்ணிய அருளாகிய இனிய நிழலை நிழற்றுதலால்; போக பூமியும் பொன்கிளர் பூமியும் நாகர் நாகமும் - உத்தர குருவும் பொன் கிளரும் வானவருலகும் நாகருடைய நாகலோகமும்; நாணி ஒழித்த - நாணுற்றுத் தம் பெருமையை விட்டன.

    விளக்கம் : ஏகவெண்குடை - ஒற்றைக்குடை. போகபூமி - உத்தர குரு. பொன்கிளர் பூமி - வானவர் உலகம். நாகர் நாகம் - நாகர்கள் உறையும் நாகலோகம். தம் பெருமையை ஒழித்த என்க. ( 203 )
    ------------

      2581. வண்டு மேய்ந்து வரிமுரல் பூஞ்சிகைக்
      கெண்டை வென்றகண் ணார்களுங் கேள்வரு
      முண்டு மூத்திடை யூறிலர் சேறலாற்
      பண்டை யூழியிற் பார்மலி வுற்றதே.

    பொருள் : வண்டு மேய்ந்து வரி முரல் - வண்டுகள் தேனைப் பருகி இசை பாடுகின்ற; பூஞ்சிகைக் கெண்டை வென்ற கண்ணார்களும் - பூவணிந்த கூந்தலையுடைய கெண்டையை வென்ற கண்ணியரும்; கேள்வரும் - அவர்தம் காதலரும்; உண்டு மூத்து இடையூறு இலர் சேறலால் - நுகர்ச்சி பெற்று முறையே முதிர்ந்து (மக்களாயுளில்) இடையூறில்லாமற் செல்லுதலாலே; பண்டை ஊழியின் பார் மலிவுற்றது - நிலவுலகு முதலூழி போல நிறைவு பெற்றது.

    விளக்கம் : வரி - இசைப்பாடல். முரலுதற்கிடமான பூஞ்சிகை என்க. கேள்வர் - அவர்தம் கணவன்மார். பண்டையூழி - முகலூழி; அது கிருதயுகம். பார் உலகம் முதலூழியில் மாந்தர் நிறைவாழ் நாளுடன் குறைவொன்றுமின்றி வாழ்ந்தனரென்ப. ( 204 )
    ------------

      வேறு
      2582. செருநாடு செஞ்சுடர்வேற்
              றிருகுசெம்பொற் கனைகழற்காற்
      றிருநாடு தேம்பைந்தார்ச்
              செல்வன்செவ்வி பெறாதொழிந்து
      பெருநாட் டருங்கலங்கள்
              சுமந்துபேரு மிடம்பெறாஅ
      தொருநாட் டரசுணங்க
              வுரவோன்கொற்ற முயர்ந்ததே.

    பொருள் : செரு நாடு சஞ்சுடர் வேல் - போரினைத் தேடும் செவ்வொளி தவழும் வேலையும; செம்பொன் கனைகழல் கால் - பொன்னாலான ஒலிக்குங் கழலணிந்த காலையும், திருநாடு தேன் பைந்தார்ச் செல்வன் - திருமகள் நாடும் தேன் துளிக்கும் பைந்தாரையும் உடைய சீவகனது; செவ்வி பெறாது ஒழிந்து - சமயம் பெறாமையாற் காட்சி ஒழிந்து; பெருநாட்டு அருங்கலங்கள் சுமந்து - தம் பெரிய நாட்டின் அரிய கலன்களைச் சுமந்தவாறு; பேரும் இடம் பெறாது - அசையும் இடங் கிட்டாமல்; ஒரு நாட்டு அரசு உணங்க - ஒரு நாட்டிற்கு வேண்டும் அரசர்கள் வருந்தி நிற்கும்படி; உரவோன் கொற்றம் உயர்ந்தது - சீவகன் வெற்றி மேம்பட்டது.

    விளக்கம் : நாட்டு : நிலை யெனினும் ஆம். செரு போர். செருநாடுதற்குக் காரணமான வேல் என்க. திரு : திருமகள். வெற்றித்திரு வென்க. உணங்க வருந்த. உரவோன் - சீவகன். கொற்றம் - வெற்றி; அரசுரிமையுமாம். ( 205 )
    ------------

      வேறு
      2583. வலையவர் முன்றிற் பொங்கி வாளென வாளை பாயச்
      சிலையவர் குரம்பை யங்கண் மானினஞ்சென்று சேப்ப
      நிலைதிரிந் தூழி நீங்கி யுத்தர குருவு மாகிக்
      கொலைகடிந் திவற வின்றிக் கோத்தொழி னடத்து மன்றே.

    பொருள் : வலையவர் முன்றில் பொங்கி வாள் என வாளை பாய - வலையவரின் வாயிலிலே கிளர்ந்து வாள் போல வாளைதுள்ள; சிலையவர் குரம்பை அங்கண் மானினம் சென்று சேப்ப - வேடர் குடிசையிலே மானினம் சென்று தங்க; கொலை கடிந்து - கொலை நீக்கி; நிலை திரிந்து ஊழி உத்தர குருவும் ஆகி - உலகம் தன் நிலை திரிந்து இவ்வூழியிலே வேறுபட்டு உத்தர குருவும் ஆகி, இவறல் இன்றி - பேராசையும் இல்லாமல்; கோத்தொழில் நடத்தும் - அரசியலைச் சீவகன் நடத்துவானானான்.

    விளக்கம் : வாளை முன்றிலிற் பாயினும் வலையர் பற்றாராய், மானினம் தம் குரம்பையிலே தங்கினும் வேடர் கொல்லாராய்க் கொலை கடிந்தான். அதனாலே இவ்வூழியின் நிலை திரிந்தது. இச்செய்யுளோடு,

      கிளை கலித்துப் பகைபேணாது
      வலைஞர் முன்றில் மீன்பிறழவும்
      விலைஞர் குரம்பை மாவீண்டவும்
      கொலைகடிந்தும்“,(196 - 99)

    எனவரும் பட்டினப்பாலை ஒப்புநோக்கற்பாலது. ( 206 )
    ------------

      வேறு
      2584. கதங்கனல் யானை நெற்றிக்
              கட்டிய பட்ட மேபோன்
      மதங்கமழ் கோதை யல்குன்
              மனாக்கிடந் திமைத்துக் காமப்
      பதம்பல பார்க்குஞ் சாயற்
              பாவைமற் றநங்க மாலை
      விதம்படக் கருதி மாதர்
              விளைத்தது விளம்ப லுற்றேன்.

    பொருள் : கதம் கனல் யானை நெற்றி கட்டிய பட்டமே போல் - சீற்றத்தினால் அழலும் யானையின் நெற்றியிலே கட்டிய பட்டத்தைப் போல; அல்குல் மனாக் கிடந்து இமைத்து - அல்குலிலே மணி கிடந்து இமைக்கப்பட்டு; காமப் பதம் பல பார்க்கும் - காமத்தை யுண்டாக்கும் செவ்வி பலவற்றையும் பார்க்கின்ற; மதம் கமழ் கோதை - மிகுதியான மணம் கமழும் மலர் மாலையையும்; சாயல் - மென்மையினையும் உடைய; பாவை மற்று அநங்க மாலை - தேசிகப் பாவை அந்த அநங்கமாலையின்; விதம்படக் கருதி கூற்றிலே தான்படக் கருதி; மாதர் விளைத்தது விளம்பல் உற்றேன் - அவள் நிகழ்த்தியதைக் கூறலுற்றேன்.

    விளக்கம் : என்பது, பதுமையாருடன் கூட அழைத்துக் கொள்ளல் முறை யன்மையின், பின்பு அழைக்கக் கருதியிருந்த தேசிகப்பாவை, சீவகன் தன்னிடத்தே அன்பின்மையின், தன்னை மறந்தானெனக் கருதித் தானே வந்தவள், சீவகன் கருத்தறியாமல், அவன் அநங்க மாலையை நினைத்துக் கொண்டிருக்கிறானெனக் கருதி, அவள் தோழியைப் போல் ஓலை கொண்டு வந்தாளாக நடித்ததொரு செய்தியைக் கூறுகின்றார். தானுடைய முல்லை யெல்லாம் தாது உகப் பரித்திட்டானே (சீவக. 686) எனவே, அவளைக் கட்டியங்காரன் கூடியது பெற்றாம். அதனாற் சீவகன் அவளைப் புணர்ந்தானெனக் கூறுதல் ஆசிரியர்க்குக் கருத்தன்றென்க. ( 207 )
    ------------

      வேறு
      2585. ஈர்ந்தண் கோதை யிளையார்குழாத்திடை
              யாளெங்கோனடி சேர்வலென்
      றார்ந்த செந்தா மரைமுகத்தினா
              ளடிகள்வந்தீங் ககன்கடை யுளாள்
      சார்ந்த சாயற் றடமாமுலைத்
              தையல்வல்லே வருகென் றான்
      சேர்ந்து மன்னர் முடிவைரவிற்
              றிளைக்குஞ் செம்பொற் செறிகழலினான்.

    பொருள் : அடிகள்! - அடிகளே!; ஆர்ந்த செந்தாமரை முகத்தினாள் - நிறைந்த செந்தாமரை போலும் முகத்தினையுடைய; ஈர்ந்தண் கோதை - சாலவுந் தண்மை பொருந்திய கோதையா ளொருத்தி; இளையார் குழாத்திடையாள் வந்து - தோழிகளின் திரளிடத்தளாய் வந்து; எங்கோன் அடிசேர்வல் என்று - எம் மரசன் அடிகளைக் காண்பேன் என்று; இங்கு அகன் கடையுளாள் - இக் கோயிலின் பெரிய வாயிலில் நிற்கிறாள் (என்று வாயிலோன் கூற); சேர்ந்த மன்னர் முடி வைரவில் திளைக்கும் - வணங்கும் மன்னர் முடி சேர்தலாலே வைரத்தின் ஒளி பயிலுகின்ற; செம்பொன் செறி கழலினான் - பொன்னாற் செறிவுற்ற கழலணிந்த சீவகன்; சார்ந்த சாயல் தடமாமுலைத் தையல் வல்லே வருக என்றான் - (அவ்வாறு) வந்த சாயலையும் பெரிய முலையையும் உடைய அவள் விரைய வருவாளாக என்றான்.

    விளக்கம் : நாம் அழைப்பதற்கு முன்னே தேசிகப் பாவை வந்தாள் என்று உணர்தலின், வல்லே வருக என்றான். அன்றி, அநங்கமாலையை வல்லே வருக என்றானாயின், அவள் எக்காலத்து வருவாள் என்று அவள் வரவை விரும்பியிருந்தானாம். ஆகவே, அவளைத் தீண்டி ஒப்பனை செய்தலின், தனக்கு நிகழ்ந்த வேட்கையைக் கட்டியங்காரற்கஞ்சிக் கரந்திருந்து, அவன் அவளை வலிதிற் கொண்டு போதற்கும் பொறுத்திருந்தானாம். அவ்வாறாயின், அவள் வீரத்திற்கிழுக்காம். ( 208 )
    ------------

      2586. அருவிலை நன்கலஞ் செய்போர்வை
              யன்னநாண வடியொதுங்கிச்சென்
      றுருவ மொவ்வா தொசியுநுசுப்
              பொல்கிக்கோமா னடிதொழுதபின்
      மருவின் சாயன் மணிமெல்விரல்
              கூப்பியோலை மரபினீட்ட
      விரவி யென்ன விளங்குமொளி
              யிறைவன் கொண்டாங் கதுநோக்குமே.

    பொருள் : அருவிலை நன்கலம் செய்போர்வை - அரிய விலைபெற்ற நல்ல கலன்களைப் புறத்தே காட்டும் மெல்லிய போர்வையுடன்; அன்னம் நாண அடி ஒதுங்கிச் சென்று - அன்னமும் வெள்க அடியிட்டு ஒதுங்கி நடந்து; உருவம் ஒவ்வாது ஒசியும் நுசுப்பு ஒல்கி - தன் பழைய உருவம் புலப்படாமல், ஒடியும் இடை நுடங்க; கோமான் அடி தொழுதபின் - அரசன் அடியை வணங்கின பிறகு; மருவு இன்சாயல் - பொருந்திய இனிய சாயலாள்; மணி மெல்விரல் கூப்பி ஓலைநீட்ட - அழகிய மெல்லிய விரலைக் கூப்பி ஓலையை நீட்ட; இரவி என்ன விளங்கும் ஒளி இறைவன் - ஞாயிறுபோல விளங்கும் ஒளியையுடைய இறைவன்; கொண்டு ஆங்கு அது நோக்கும் - கையிற் கொண்டு அங்கே அதனைப் படிக்கலுற்றான்.

    விளக்கம் : நோக்கும் என்பதனைப் பெயரெச்சமாக்கி, நோக்கும் இறைவன் எனக் குளகம் ஆக்குவர் நச்சினார்க்கினியர். அருவிலைப் போர்வை, நன்கலம் செய் போர்வை என இயைக்க. நன்கலத்தைப் புறத்தே காட்டும் நுண்போர்வை என்றவாறு. அன்னமும் எனல் வேண்டிய உம்மை விகாரத்தால் தொக்கது. ஒல்கி - ஒல்க. கோமான் - சீவகன்; மருவின்சாயல் என்றது தேசிகப்பாவையை. இரவி - ஞாயிறு இறைவன் : சீவகன். அது அவ்வோலையை.( 209 )
    ------------

      2587. அடிகள் கண்டாங் குவந்தருளுக
              வநங்கமாலை யடிவீழ்ச்சிமுன்
      கொடிய வேலான் கொதித்தரங்கி
              னீக்கிக்கோயிற் சிறைவைத்தபின்
      கடிசெய் பைந்தார்க் கமழ்மாலைவேற்
              கந்து கற்குச் சிறுவயானிப்
      படிய னல்காய் பசுமணிகள்வேய்ந்
              தோங்கும்பைம்பொற் செறிகழலினாய்.

    பொருள் : அநங்கமாலை அடிவீழ்ச்சி அடிகள் கண்டு ஆங்கு உவந்தருளுக - அநங்கமாலை அடியிலே வீழ்ந்து வணங்கு வதை அடிகள் கண்டு மகிழ்ந்தருளுக; முன் கொடிய வேலான் கொதித்து - முன்னர்க் கொடியவனான கட்டியங்காரன் மனங் கொதித்து; அரங்கின் நீக்கிக் கோயில் சிறை வைத்தபின் - அரங்கினின்றும் நீக்கிக் கோயிலிலே சிறைப்படுத்திய பிறகு; கடிசெய் பைந்தார்க் கமழ்மாலை வேல் கந்துகற்குச் சிறுவ! - மணம் பொருந்திய தாரினையும் மணங்கமழும் மாலையணிந்த வேலினையும் உடைய கந்துகன் மகனே!; அனல்வாய் பசு மணிகள் வேய்ந்து ஓங்கும் பைம்பொன் செறிகழலினாய்! - அனலைக் காய்ந்த மணியும் புதிய மணியும் வேய்ந்து மேம்படும் பொன்னாற் செறிந்த கழ்லுடையாய்!; யான் இப்படி - என்று யான் இவ்வாறு.

    விளக்கம் : இப்பாட்டுக் குளகம். மாலை வேலிற்கு அடை. அடிகள் : விளி. ஆங்கு : அசை. வேலான் : கட்டியங்காரன். அரங்கு - கூத்தாடு களம். கடி - மணம். சிறுவ என்று என வருவித்துக்கொள்க. ( 210 )
    ------------

      2588. என்ன நாளு மரற்றப்பொறான்
              விடுப்பப்போகி யினமழைகண்மொய்த்
      தன்னந் துஞ்சு மடிக்குடிலினுள்
              ளன்றியான் கொண்ட நாடகத்தினைத்
      துன்னி நம்பி யுருவுதீட்டித்
              தொங்கல்வேய்ந்து தொழுதாற்றநீ
      மன்னர் மன்ன மதிதோய்குடையாய்
              மகளிர்காம மறைத்தொழி தியோ.

    பொருள் : என்ன நாளும் அரற்றப் பொறான் விடுப்பப் போகி - எல்லா நாளினும் புலம்பப் பொறானாகி என்னை அவன் விடுவிப்ப, யான் சென்று; இன மழைகள் மொய்த்து அன்னம் துஞ்சும் அடிக்குடிலினுள் அன்றி - திரளான முகில்கள் மொய்த்து அன்னம் துயிலும் அடிச் சேரியிலே இருந்ததன்றி; யான் கொண்ட நாடகத்தினைத் துன்னி - யான் ஆடின நாடகத்தைத் தான் பொருந்திப் பார்த்தாய்போல; நம்பி உருவு தீட்டி - நம்பியாகிய நின் வடிவை எழுதி; தொங்கல் வேய்ந்து தொழுது ஆற்ற - மாலையணிந்து வணங்கிச் செல்லவும்; மன்னர் மன்ன! - அரசர்க்கரசனே!; மதிதோய் குடையாய்! - திங்களனைய குடையாய்!; நீ மகளிர் காமம் மறைத்து ஒழிதியோ? - நீ மாதர்களிடத்திற் காமத்திற் புலப்படாமல் ஒளித்து அதனைத் தவிர் கின்றாயோ?

    விளக்கம் : இப் பாட்டும் அடுத்த பட்டுடன் தொடரும். ஒழிதியோ என்று தொழுது ஆற்ற எனப் பிற்கூட்டுவர் நச்சினார்க்கினியர்.
    பொறானாகி விடுப்ப என்க. அடிக்குடில் - அடிச்சேரி. துன்னி - துன்ன. நம்பி : முன்னிலைப்படர்க்கை. தொங்கல் - மாலை. குடையாய் நீ என இயைத்துக்கொள்க. ஆற்ற என்பதற்கு ஒருவாறு யான் ஆற்றியிருப்பவும் எனினுமாம். ( 211 )
    ------------

      2589. கண்க டுஞ்சா கதிர்முத்தமே
              காலுங்கையார் வளைகழலுமாற்
      பண்கொள் சொல்லார் மாமைநீங்கிப்
              பைம்பொன் போர்த்த படாமுலைகளு
      மண்கொள் வேன்மன்னர் நண்பின்மையை
              வையக்கெல்லா முடனறையவோ
      பெண்க ளாவி விடுத்ததொழிபவோ
              பெரியோர்நண்படைந் தார்பெயர்பவோ.

    பொருள் : கண்கள் துஞ்சா கதிர்முத்தமே காலும் - கண்கள் துஞ்சாதனவாகி ஒளிரும் முத்துக்களையே உமிழும்; கைஆர் வளை கழலும் - கையில் நிறைந்த வளைகள் கழலும்; பண்கொள் சொல்லார் மாமை நீங்கி - பண்கொண்ட சொல்லாருக்குரிய பொன்னிறம் நீங்கி; படாமுலைகளும் பைம்பொன் போர்த்த - சாயாத முலைகளும் புதிய பசலை போர்த்தன; மண்கொள் வேல் மன்னர் நண்புஇன்மையை - நிலங்கொண்ட வேலேந்திய வேந்தரின் நட்பின்மையை; வையக்கு எல்லாம் உடன் அறையவோ! - உலகுக்கெல்லாம் உடனே பறையறையவோ?; பெண்கள் ஆவி விடுத்து ஒழிபவோ? - மகளிர் உயிர் அவரைக் கைவிட்டுப் போக அமையுமோ? ; பெரியோர் நண்பு அடைந்தார் பெயர்பவோ? - பெரியோருடைய நட்பைப் பெற்றவர் விட்டு நீங்க அமையுமோ?

    விளக்கம் : துஞ்சாதனவாகி முத்தம் காலும் என்க. முத்தம் - கண்ணீர்த்துளி ஆல் - அசை, மாமை - பொன்னிறம். பொன்போர்த்த - பசலைபூத்தன. வையக்கு - வையத்திற்கு. நண்பின்மை - நட்புப்பண் பின்மையை. ( 212 )
    ------------

      2590. அறனிழலா யுலகளிக்கு நின்னார
              மாலையணி வெண்குடைப்
      புறனிழலி னயலேனோ யான்புல்லா
              மன்னர்நிணம் பொழியும்வேன்
      மறனிழன் மதயானையாய் வந்தவென்
              றோழி வாமலேகை
      திறனழி யாமையின்னே விடுத்தருளுக
              தேர்வேந்தர் வேந்தனே.

    பொருள் : புல்லா மன்னர் நிணம் பொழியும் வேல் - பகை மன்னரின் நிணத்தைப் பெய்யும் வேலையும்; மறன் நிழல் மத யானையாய்! - வீரத்தின் ஒளியையுடைய மதகளிற்றினையும் உடையாய்!; தேர்வேந்தர் வேந்தனே! - தேரையுடைய வேந்தருக்கு வேந்தனே!; அதன் நிழலாய் உலகு அளிக்கும் - அறத்தின் ஒளியாக உலகைக் காக்கின்ற; நின் ஆர மாலை அணி வெண்குடைப் புறன்நிழலின் அயலேனோ யான்? - நின் முத்தமாலை அணிந்த வெண்குடையிடத்துள்ள நிழலுக்குப புறத்தேனோ யான்?; வந்த என் தோழி வாமலேகை - (இம்முடங்கலைக் கொண்டு) அங்கு வந்த என் தோழி வாமலேகை யென்பாளின்; திறன் அழியாமை இன்னே விடுத்தருளுக - தகுதி கெடாமல் இப்போதே விடுத்தருளுக.

    விளக்கம் : அடிகள் என்று தொடங்கும் (2587) செய்யுள் முதல் இதுவரையுள்ள பொருள்கள் தேசிகப்பாவை கொணர்ந்த முடங்கலில் உள்ளவை. இவன் அநங்கமாலையை உட்கொண்டிருப்பானாகக் கருதி, இவற்கு அவள் எழுதின ஓலைகொண்டு வந்தாளொரு தோழியாத் தேசிகப் பாவை நடித்தாள். இதனால் தன் வேட்கையை அறிவித்தாளாயினாள் ( 213 )
    ------------

      2591. புள்ளும்யாழுங் குழலுமேங்கப்
              புனைந்துவல்லா னினைந்தியற்றிய
      பள்ளிச்செம்பொற் படையமளிமேன்
              மழலைமணியாழ் தான்வெளவிக்
      கொள்ளுந் தீஞ்சொ லலங்காரப்பூங்
              கொடியைப்புல்லி மணிக்குவட்டினை
      யெள்ளிவீங்கித் திரண்டதோண்மேற்
              குழைவில்வீச விருந்தானே.

    பொருள் : புள்ளும் யாழும் குழலும் ஏங்க - (தேசிகப் பாவையின் கையில் உள்ள) வளையும் யாழும் குழலும் ஒலிக்க இசையை நுகர்ந்து; வல்லான் நினைந்து புனைந்து இயற்றிய - வல்லானொருவன் சிந்தித்து அணிந்து இயற்றிய; பள்ளி - பள்ளியிலே; செம்பொன் படை அமளிமேல் - செம்பொன்னாற் படுத்த அணையின் மேலே; மழலை மணியாழ் தான் வெளவிக் கொள்ளும் தீஞ்சொல் அலங்காரப் பூங்கொடியை - மழலை பொருந்தியதும், அழகிய யாழ்தான் கருதிக்கொள்ளும் தகையது ம் ஆன இனிய மொழியையுடைய, ஒப்பனை செய்யப்பட்ட மலர்க்கொடி போல் வாளை; மணிக் குவட்டினை எள்ளி வீங்கித் திரண்ட தோள்மேல் புல்லி - மணிகளிழைத்த மலையை இகழ்ந்து பருத்துத் திரண்ட தோளிலே தழுவி; இருந்தான் - அமர்ந்திருந்தான்.

    விளக்கம் : புள் - வளை. புட்கை போகிய புள்தலை மகார் (மலைபடு 253) என்றார். தாளத்தை ஒற்றுதலின் வளையொலித்தன.(214)
    ------------

      2592. அங்கைசேப்பக் குருகிரங்க
              வலங்கலம்பூங் குழறுயல்வர
      மங்கைநல்லார் பவழவம்மி
              யரைத்தசாந்த மலர்பெய்மாலை
      பொங்குதூமக் கொழுமென்புகை
              புரிந்தபஞ்ச முகவாசமுந்
      தங்குதாம மார்பினாற்குந்
              தையலாட்குங் கொண்டேந்தினாரே.

    பொருள் : அங்கை சேப்ப - உள்ளங்கை சிவப்ப; குருகு இரங்க - வளை ஒலிக்க; அலங்கல் அம் பூங்குழல் துயல்வர - மாலையணிந்த அழகிய மலர்க்குழல் அசைய; மங்கை நல்லார் - பெண்கள்; பவழ அம்மி அரைத்த சாந்தம் - பவழ அம்மியின் மேல் அரைத்த சாந்தினையும்; மலர்பெய் மாலை - மலர் மாலையையும் தூமம் பொங்கு கொழுமென் புகை - தூமமூட்டியிலே பொங்குகின்ற உயர்ந்த மெல்லிய புகையையும்; புரிந்த பஞ்சமுக வாசமும் - விரும்பிய ஐந்து முகவாசங்களையும்; தாமம் தாங்கும் மார்பினாற்கும் தையலாட்கும் கொண்டு ஏந்தினார் - மாலை தங்கிய மார்பினானுக்கும் தேசிகப் பாவைக்கும் எடுத்து ஏந்தினார் (மங்கையர்).

    விளக்கம் : அங்கை - அகங்கை; உள்ளங்கை. சேப்ப - சிவப்ப; குருகு - வளையல். அரைத்த - அரைக்கப்பட்ட. தூமம் - தூமமூட்டி; ஆகுபெயர். மார்பினான் : சீவகன். தையலாள் : தேசிகப்பாவை. ( 215 )
    ------------

      2593. அருளுமாறென்னை யநங்கமாலை
              யடித்திதோழி யன்றோவெனத்
      தெருளலான்செல்வக் களிமயக்கினாற்
              றிசைக்குமென்னறி வளக்கியகருதி
      மருளிற்சொன்னாய் மறப்பேனோயா
              னின்னையென்ன மகிழைங்கணை
      யுருளுமுத்தார் முகிழ்முலையினா
              ளுள்ளத்துவகை தோற்றினாளே.

    பொருள் : அருளும் ஆறு என்னை - நீ என்னை அருளுவதற்குக் காரணம் என்ன?; அநங்கமாலை அடித்தி தோழி அன்றோ என - (யான்) அநங்கமாலையாகிய அடித்தியின் தோழி அன்றோ என்று (நகைமொழி) நவில; செல்வக் களிமயக்கின் தெருளலான் - செல்வக் களிப்பின் மயக்கத்தாலே என்னைத் தெளியான் (என்று); நால் திசைக்கும் என் அறிவு அளக்கிய கருதி - நாற்றிசைக்கும் என் அறிவை அளந்து காட்ட எண்ணி; மருளின் சொன்னாய் - பேதைமையாற் கூறினை; யான் நின்னை மறப்பனோ என்ன - யான் உன்னை மறப்பேனோ என்ன?; மகிழ் ஜங்கணை - மகிழும் ஜங்கணையையும் தன்னிடத்தே கொண்ட; உருளும் முத்துஆர் முகிழ் முலையினாள் உள்ளத்து உவகை. தோற்றினாள் - உருள்கின்ற முத்துக்கள் பொருந்திய அரும்பு முலையினாள் மனத்திலே மகிழ்வு காட்டினாள்.

    விளக்கம் : மயக்கின் : இன் : ஏதுப் பொருட்டு; அறிவை அளந்து காட்ட எனவே, குறிப்பான் அறிவின்மையையே ஈண்டுக் காட்டிற்று. இனி, ஆற்றிசைக்கும் என்று பாடம் ஓதி, மயக்கினால் தெருளலான் என்று கருதி, நன்னெறியிலே இசைக்கும் என்னறிவை அளக்கிய என்றுமாம். திகைக்கும் என்று பாடமாயின,. மயக்கினால் திகைக்கும் தெருளலான் என்க. யான் நின்னை மறப்பேனோ எனவே தேசிகப் பாவையே யாயினாள். காமன் ஜங்கணையைத் தன்னிடத்தே உடைய தேசிகப் பாவை யெனவே வேட்கையைத் தான் நிகழ்த்துவாளாயிற்று. தோற்றினாள் எனச் சினைவினை முதலொடு முடிந்தது. ( 216 )
    ------------

      2594. முறுவற்றிங்கண் முகவரங்கின்மேன்
              முரிந்துநீண்ட புருவக்கைக
      ணெறியின்வட்டித்து நீண்டவுண்கண்
              சென்றும்வந்தும் பிறழ்ந்துமாடப்
      பொறிகொள்பூஞ் சிலம்புமேகலைகளும்
              புணர்ந்தவின்னியங்க ளார்ப்பவேந்த
      னறியுநாடகங் கண்டான்பைந்தா
              ரலர்ந்துமாதர் நலங்குழைந்ததே.

    பொருள் : பொறிகொள் பூஞ்சிலம்பும் மேகலைகளும் புணர்ந்த இன் இயங்கள் ஆர்ப்ப - பூவேலை பொறித்த சிலம்பும் மேகலைகளும் கூடிய இனிய இயங்கள் ஆர்ப்பவும்; முறுவல் திங்கள்முக அரங்கின் மேல் - முறுவலையுடயதொரு திங்களாகிய முக அரங்கின் மிசை; முரிந்து நீண்ட புருவக் கைகள் நெறியின் வட்டித்து - ஒசிந்து நீண்ட புருவமாகிய கைகளை முறைப்படி சுழற்றி; நீண்ட உண்கண் சென்றும் வந்தும் பிறழ்ந்தும் ஆட - நீண்ட, மைதீட்டிய கண்கள் சென்றும் வந்தும் மாறியும் ஆட ;வேந்தன் அறியும் நாடகம் கண்டான் - சீவகன் முன்னர் அவளிடத்தே கண்ட நாடகத்தை (மீட்டும்) கண்டான்; பைந்தார் அலர்ந்து மாதர் நலம் குழைந்தது - (அப்போது) அவனுடைய பைந்தார் அலர்ந்து, அவளுடைய நலம் நெகிழ்ந்தது.

    விளக்கம் : நெறியின் - புணர்ச்சிக் காலத்து நிகழும் முறையானே. அவன் தொழிலாற் சிலம்பும், அவள் தொழிலால் மேகலையும் ஆர்த்தன. அறியும் நாடகம் எனவே, முன் புணர்ந்த தேசிகப் பாவையே ஆயிற்று. ( 217 )
    ------------

      2595. நான்மருப்பின் மதயானை
              நறியபைந்தா மரைமடந்தையைத்
      தேன்மதர்த்த திளைத்தாங்கவன்
              றிருவின்சாய னலங்கவர்ந்தபி
      னூன்மதர்த்த வொளிவேற்கண்
              ணார்பரவவிவ்வா றொழுகுமன்றே
      வானகத்து நிலத்துமில்லா
              வண்ணமிக்க மணிப்பூணினான்.

    பொருள் : நான் மருப்பின் மதயானை - நான்கு மருப்புக்களையுடைய ஜராவதத்தின் மேலே; நறிய பைந்தாமரை மடந்தையை - (உள்ள பொய்கையிலே) மணமுடைய பைந்தாமரையில் உள்ள திருமகளை; தேன் மதர்ப்பத் திளைத்தாங்கு - வண்டுகள் மகிழத் திளைத்தாற்போல; அவள் திரு இன் சாயல் நலம் கவர்ந்தபின் - அவளுடைய அழகிய இனிய சாயலாகிய நலத்தை நுகர்ந்த பிறகு; வானகத்தும் நிலத்தும் இல்லா வண்ணம் மிக்க மணிப்பூணினான் - வானிலும் நிலத்திலும் இல்லாத, அழகு மிக்க மணிக்கலத்தான்; ஊன் மதர்த்த ஒளி வேல் கண்ணார் பரவ - (தம்மை நோக்கினார்) உடம்பு மதர்த்தற்குக் காரணமான, ஒளியையுடைய வேல்போலுங் கண்ணார் புகழ; இவ்வாறு ஒழுகும் - மேலும் இவ்வாறு நடப்பானாயினான்.

    விளக்கம் : நச்சினார்க்கினியர், நான் மருப்பின் மதயானையென்பது, யானை யிரண்டினை யுணர்த்திற்று என்று விளக்கங் கூறி, இரண்டானை பக்கத்தே நின்று நீரைச் சொரிய நடுவே தாமரைப் பூவிலேயிருந்த திருமகள் என்று பொருள் கூறுவர்: வரிநுதல் எழில் வேழம் பூநீர்மேற் சொரிதரப் - புரிநெகிழ் தாமரை மலரங்கண் வீறெய்தித் - திருநயந்திருந்தன்ன (கலி. 44) என்றார் பிறரும் என மேற்கோள் காட்டுவர். அவர், மேலும், இனி, ஐராவதத்தின் மேலே பொய்கையாயதில் தாமரையிலே யிருக்கும் திரு என்பாருமுளர் என்பார், ஐராவதத்தின்மேற் பொய்கையில் மலர்ந்த தாமரையில் திருமகள் இருப்பதாக ஸ்ரீ புராணங் கூறும் என்பர். பொலம் பூங்காவும் புனல் யாற்றுப் பரப்பும் - இலங்கு நீர்த் துருத்தியும் இளமரக்காவும் - அரங்கும் பள்ளியும் ஒருங்குடன் பரப்பி - ஒருநூற்று நாற்பது யோசனை விரிந்த - பெருமால் களிற்று (சிலப். 25 : 12 - 19) அரும்பதவுரை. வானிலும் நிலத்திலும் இல்லாதவன் என்றார் பிறன் தாரம் விரும்பாத பண்புடைமையின். ( 118 )
    ------------

      வேறு
      2596. நரம்புமீ திறத்தல் செல்லா
              நல்லிசை முழவும் யாழு
      மிரங்குதீங் குழலு மேங்கக்
              கிண்கிணி சிலம்பொ டார்ப்பப
      பரந்தவா ணெடுங்கட் செவ்வாய்த்
              தேசிகப் பாவை கோல
      வரங்கின்மே லாடல் காட்டி
              யரசனை மகிழ்வித் தாளே.

    பொருள் : பரந்த வாள் நெடுங்கண் செவ்வாய்த் தேசிகப் பாவை - பரவிய ஒளியுடைய நீண்ட கண்களையும் செவ்வாயையும் உடைய தேசிகப் பாவை; நரம்பு மீது இறத்தல் செல்லா - நரம்பின் ஓசையைத் தப்பாத; நல்லிசை முழவும் யாழும் இரங்கு தீங்குழலும் ஏங்க - இன்னிசை தரும் முழவும் யாழும் ஒலிக்கும் இனிய குழலும் இயம்ப; கிண்கிணி சிலம்பொடு ஆர்ப்ப - கிண்கிணியும் சிலம்பும் ஒலிக்க; அரங்கின்மேல் ஆடல் காட்டி - கூத்தரங்கிலே தன் ஆடலைக் காண்பித்து; அரசனை மகிழ்வித்தாள் - வேந்தனைக் களிப்பூட்டினாள்.

    விளக்கம் : இடக்கண் இளியா வலக்கண் குரலா - நடப்பது தோலியற் கருவி ஆகும் என்றார். ( 219 )
    ------------

      2597. கடற்படை மன்னர் தம்மைக்
              காதலின் விடுத்துக் காமன்
      றொடுத்தகோன் மார்பிற் றங்கத்
              தூமலர்க் கொம்ப னாளை
      வடித்தவின் னமிர்தி னாரப்
              பருகலின் மழைக்கட்செவ்வாய்
      துடித்துவண் டுண்ணத்தூங்குஞ்
              செந்தளி ரொத்ததன்றே.

    பொருள் : கடல்படை மன்னர் தம்மைக் காதலின் விடுத்து - கடல் போன்ற படையையுடைய வேந்தர்களை அன்புடைன் விடுத்த பிறகு; காமன் தொடுத்த கோல்மார்பில் தங்க - காமன் விடுத்த கணை மார்பிலே முழுகுதலின்; தூமலர்க் கொம்பு அனாளை - தூய மலர்க்கொம்பு போன்ற தேசிகப் பாவையை; வடித்த இன் அமிர்தின ஆரப்பருகலின் - தெளிவித்த இனிய அமிர்தத்தைப் பருகுதல்போல உளம் நிறைய நுகர்ந்த தால்; மழைக்கண் செவ்வாய் துடித்து - மழைக்கண்ணாளின் செவ்வாய் துடித்து; வண்டு உண்ணத் தூங்கும் செந்தளிர் ஒத்தது - வண்டுகள் உண்ணத் தூங்கும் சிவந்த தளிரைப் போன்றது.

    விளக்கம் : வண்டு அதரத்தில் வடுவிற்கு உவமை; இல்பொருளுவமை. இசையும் கூத்தும் காமத்தை வளர்க்கும் கருவிகளாதலிற் பின்னர்ப் புணர்ச்சி கூறினார். ( 220 )
    ------------

      2598. இளமையங் கழனிச் சாய
              லேருழு தெரிபொன்வேலி
      வளைமுயங் குருவ மென்றோள்
              வரம்புபோய் வனப்புவித்திக்
      கிளைநரம்பிசையுங் கூத்துங்
              கேழ்த்தெழுந் தீன்றகாம
      விளைபய னினிதிற் றுய்த்து
              வீணைவேந் துறையுமாதோ.

    பொருள் : எரிபொன் வேலி - ஒளிரும் பூணாகிய வேலி சூழ்ந்த; இளைமை அம் கழனி இளமையாகிய கழனியிலே; சாயல் ஏர் உழுது - தன் சாயலாகிய ஏராலே உழுது; வளை முயங்கு உருவம் மென்தோள் வரம்புபோய் - வளை பொருந்திய அழகிய மென்தோளாகிய வரம்பு சூழ்போகச் செய்து; வனப்பு வித்தி - தன் வனப்பை விதைத்தலால்; கிளை நரம்பு இசையும் கூத்தும் கேழ்த்தது எழுந்து ஈன்ற - கிளை நரம்புகளை யாழிசையும் கூத்துமாக நிறங்கொண்டெழுந்து ஈன்ற; காம விளைபயன் - பின்பு ஈன்ற காமமாகிய வினைவின் பயனை; வீணை வேந்து உறையும் - யாழ் வால்லோன்ஒழுகினான்.

    விளக்கம் : தனது சாயலால் விளைந்த அழகைக் கண்ட அளவில் காமவேட்கை விளைவித்தற்குக் கூத்தையும் பாட்டையும் நடத்துதலின் பிறந்தது காமம் என்க. ( 221 )

    இலக்கணையார் இலம்பகம் முற்றிற்று.
    -------------------

This file was last updated on 26 July 2019.
Feel free to send the corrections to the .